Sunday, May 28th, 2017

விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதில் முரண்பட்டுக்கொண்ட தமிழ் கட்சிகள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 08

Published on December 24, 2016-8:34 pm   ·   No Comments

kumakuruparan-and-vinayagamoorthyஇந்திய இராணுவ காலத்தில் விடுதலைப்புலிகளுடன் மோதிய தமிழ் இயக்கங்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமே முதன்மையானதாகும்.

எனினும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சுரேஷ் அணி, வரதர் அணி என இரண்டாக பிரிந்த பின்னர் சுரேஷ் அணி சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதை நிறுத்தியதை அடுத்து விடுதலைப்புலிகளின் தாக்குதல் சுரேஷ் அணியின் பக்கம் திரும்பவில்லை.

இந்நிலையிலேயே தமிழ் கட்சிகளின் கூட்டில் இணைந்து கொள்ள விரும்பம் கொண்டிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் கொக்கட்டிச்சோலையில் உள்ள விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் கரிகாலனை சந்திக்க சென்றார்.

கொக்கட்டிச்சோலை பொதுமக்கள் குடியிருப்பை அண்டி அரசியல் பிரிவு அலுவலகம் இருப்பதால் அங்கு சீருடையில் போராளிகள் பொறுப்பாளர்கள் தளபதிகள் நிற்பது குறைவு.
ஆனால் அன்று அரசியல் பிரிவு அலுவலகத்தை அண்டிய பகுதியில் சீருடையில் பெருந்தொகையான போராளிகள் ஆயுதங்களுடன் நிறுத்தப்பட்டிருந்தனர்.  தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அனைவரும் முழுமையான சீருடையில் ( இராணுவ உடையில் ) காணப்பட்டனர்.

மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பொறுப்பாளர் கரிகாலன் சுரேஷ் பிரேமச்சந்திரனை சந்தித்தார். இந்த சந்திப்பில் தளபதிகள், மற்றும் பொறுப்பாளர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.
மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் சிலரும் அங்கு சென்றிருந்தனர். விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவினரும் புலனாய்வு பிரிவினருமே இச்சந்திப்பு தொடர்பான படங்களை எடுத்தனர்.
மட்டக்களப்பு ஊடகவியாளர்கள் இச்சந்திப்பு தொடர்பான செய்திகளை தமது ஊடகங்களுக்கு அனுப்பவில்லை.

ஆனால் சந்திப்பு நடைபெற்று அடுத்து ஞாயிறு சண்டை ரைம்ஸ் பத்திரிகையில் முன்பக்கத்தில் கரிகாலன் சுரேஷ் பிரேமச்சந்திரன் சந்தித்த படம் வெளியாகியிருந்தது.  ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவரும், எல்.ரி.ரி.ஈ மட்டக்களப்பு அரசியல் பொறுப்பாளரும் சந்திப்பு என்ற தலைப்பில் அச்செய்தி வெளியாகியிருந்தது.

அந்த சந்திப்பை விடுதலைப்புலிகள் மட்டுமே படம் பிடித்தனர். எனவே அவர்கள் ஊடாகவே அப்படம் சண்டேரைம்ஸ் பத்திரிகைக்கு சென்றிருக்கலாம். அதனை தொடர்ந்து கொழும்பில் உள்ள சிங்கள ஆங்கில தமிழ் பத்திரிகைகள் அந்த படத்தை பிரசுரித்திருந்தன. எதிரும் புதிருமாக மோதிக்கொண்டிருந்தவர்கள் சந்தித்து கொண்டது தென்னிலங்கையில் மட்டுமல்ல தமிழ் மக்களுக்கு கூட ஆச்சரியமாக இருந்தது. இந்த படத்தை இந்திய பத்திரிகைகளும் பிரசுரித்திருந்தன.

இதற்கு முன்னர் செல்வம் அடைக்கலநாதனுடனான சந்திப்பை வெளிப்படுத்தாத விடுதலைப்புலிகள் சுரேஷ் பிரேமச்சந்திரனின் சந்திப்பை ஏன் வெளிப்படுத்தினர் என்பது புதிராகவே இருந்தது.

இதை தொடர்ந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் தலைவர் அ.விநாயகமூர்த்தி 2001ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மட்டக்களப்பிற்கு வந்திருந்தார். மட்டக்களப்பு ஆஞசநேயர் மரக்காலை உரிமையாளர் சண்முகம் மீது விடுதலைப்புலிகளுக்கு உதவினார் என பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் சண்முகத்திற்காக சட்டத்தரணி விநாயகமூர்த்தி ஆஜராகி இருந்தார். அவர் அப்போது யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

நீதிமன்றத்தில் சந்தித்த விநாயகமூர்த்தி அவர்கள் அன்று மாலை தான் தங்கியிருக்கும் மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள வீட்டிற்கு வருமாறு கூறியிருந்தார். நானும் நடேசனும் சென்றிருந்தோம்.

பொதுவான அரசியல் விடயங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த பின் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பலமான அரசியல் தலைமையாக இயங்க வேண்டியதன் அவசியம் பற்றியும் 2000ஆம் ஆண்டு தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றதால் ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றியும் பேசினோம்.

ஆனால் இதுபற்றி தன்னால் ஒரு முடிவும் சொல்ல முடியாது, கட்சி உறுப்பினர்களுடன் பேசியே இதுபற்றி முடிவை சொல்ல முடியும் என கூறியிருந்தார்.

இதேவேளை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் அரசியல் கருத்தரங்குகளை நடத்தி வந்தது. உலக பத்திரிகையாளர் தினத்தை முன்னிட்டு 2001 மே 06ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை மண்டபத்தில் கருத்தரங்கு ஒன்றினை நடத்தியது.

எனது தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அப்போது இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த பி.மாணிக்கவாசகம், டி.சிவராம், சண்டேலீடர் பத்திரிகையை சேர்ந்த ஊடகவியலாளர் ஜே.எஸ்.திசநாயகம், சட்டத்தரணி பி.பிறேம்நாத் ஆகியோர் உரையாற்றினர்.

இதனை தொடர்ந்து 2001 செப்டம்பர் 22ஆம் திகதி சனிக்கிழமை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் நடத்திய கருத்தரங்கிற்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மாவை சேனாதிராசாவை அழைத்திருந்தோம். மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலை மண்டபத்தில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் செயலாளர் சண்.தவராசா தலைமை தாங்கினார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம், பொன். செல்வராசா உட்பட கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த கருத்தரங்கு முடிந்த பின் மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய கலாசாலையின் வகுப்பறை ஒன்றில் மாவை சேனாதிராசா, ஜோசப் பரராசசிங்கம், செல்வராசா ஆகியோருடனான சந்திப்பு இடம்பெற்றது. இதில் குறிப்பிட்ட சிலர் மட்டும் கலந்து கொண்டனர். இதில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் நடக்க இருக்கும் தேர்தலில் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிடுவதால் ஏற்படும் பின்னடைவுகள் பற்றியும் தமிழர் விடுதலைக் கூட்டணியினருக்கு கூறப்பட்டது. தமிழ் கட்சிகளின் கூட்டில் இணைந்து கொள்வதில் பிரச்சினை இல்லை, ஆனால் தமிழ் இயக்கங்கள் மீது மக்கள் வெறுப்படைந்திருக்கிறார்கள். அவர்களுடன் நாங்கள் சேர்ந்தால் எப்படி மக்கள் எங்களை ஏற்றுக்கொள்வார்கள் என ஜோசப் பரராசசிங்கம் தெரிவித்தார்.

தமிழ் இயக்கங்கள் செய்த படுகொலைகளை எப்படி தமிழ் மக்கள் மறப்பார்கள். அப்படி பட்டவர்களுடன் நாங்கள் எப்படி சேர்வது என ஜோசப் பரராசசிங்கம் கூறினார். இதனால் கோபமடைந்த சிவராம் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார். தொடர்ந்து நடந்த உரையாடலில் மாவை சேனாதிராசா எதிர்காலத்தில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார். இந்த விடயத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச்சபையில் பேசி ஒரு முடிவுக்கு வருவோம் என்றும் கூறினார்.

இந்நிலையில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்ற பேச்சு கொழும்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்திருந்தது.

2001 ஒக்டோபர் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி தலைவர் அ.விநாயகமூர்த்தி, செயலாளர் ந.குமரகுருபரன் ஆகியோரை கொழும்பில் குமார் பொன்னம்பலத்தின் வீட்டில் சிவராம், கெனடி விஜயரத்தினம், ஜே.எஸ்.திசநாயகம், எஸ்.ஜெயானந்தமூர்த்தி ஆகியோர் சந்தித்தனர்.   திருமதி குமார் பொன்னம்பலம் அவ்வீட்டில் இருந்த போதிலும் அப்பேச்சுகளில் கலந்து கொள்ளவில்லை.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட கெனடி விஜயரத்தினம் பின்வருமாறு கூறுகிறார்…

தமிழ் கட்சிகள் ஒரே அணியில் போட்டியிட்டாலும் தமது கட்சியின் சின்னமான சைக்கிள் சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று நிபந்தனையை விநாயகமூர்த்தி முன்வைத்தார். தமது கட்சியே மூத்த கட்சி என்றும் ஏனைய கட்சிகளான தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகியன பிற்பட்ட காலத்தில் வந்த இளைய கட்சிகள் என்றும் எனவே மூத்த கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியே தமிழ் கட்சிகளுக்கு தலைமை தாங்க வேண்டும் என்றும் தமது கட்சியின் கீழ் தமது கட்சி சின்னத்திலேயே அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிட வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார்.

இது எப்படி சாத்தியமாகும், கிழக்கில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் ஒரு போதும் வெற்றி பெற்றதும் கிடையாது, வடக்கிலேயே தேர்தல்களில் போட்டியிட்டு வந்திருக்கிறது. இந்நிலையில் இது நியாயமற்ற கோரிக்கை என சிவராமும் ஏனையவர்களும் கூறினர். இதன் பின்னர் அப்படியானால் யாழ். மாவட்டத்தில் தமது கட்சி சின்னத்தில் தமிழ் கட்சிகள் போட்டியிடலாம், ஏனைய மாவட்டங்களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னத்தில் போட்டியிடலாம். இதற்கு சம்மதிக்கவில்லை என்றால் தமது கட்சி யாழ்ப்பாணத்தில் தனித்து போட்டியிடும் என விநாயகமூர்த்தி கூறினார்.

இந்நிலையில் சிவராமுக்கும் விநாயகமூர்த்திக்கும் இடையில் வாக்குவாதம் முற்றியது. இதனால் கோபமடைந்த சிவராமும், திசநாயகமும் எழுந்து சென்று வெளியில் பேசிக்கொண்டிருந்தனர்.
விநாயகமூர்த்தி அடிக்கடி எழுந்து சென்று உள்ளே இருந்த திருமதி குமார் பொன்னம்பலத்திடம் பேசிவிட்டு வந்தார்.

தமிழ் கட்சிகளை இணைப்பது உறுதியாகி விட்டது. நீங்கள் இதற்கு முட்டுக்கட்டை போட்டால் அதன் விளைவுகளை நீங்கள் சந்திக்க வேண்டி வரும் என நான் ( கெனடி) கூறியபோது விநாயகமூர்த்தி பதற்றம் அடைந்தவராக காணப்பட்டார். நாங்களும் எழுந்து வந்து விட்டோம் என கெனடி கூறினார்.

ஆனால் குமரகுருபரன் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் திம்பு கோட்பாடு, தன்னாட்சி என்பவற்றோடு விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தாம் வலியுறுத்திய போது கோபமடைந்த சிவராம் எழுந்து சென்று விட்டார் என தெரிவித்திருந்தார்.

ஆனால் இரு தினங்கள் கழித்து தாம் யாழ்ப்பாணத்தில் தனித்தே போட்டியிடப் போவதாக வானொலி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அ.விநாயகமூர்த்தி அறிவித்தார். இதனால் தமிழ் கட்சிகள் ஒரே அணியில் இணையும் முயற்சிகளில் இழுபறிகள் தொடர்ந்தன.

இவ்வேளையில் கொழும்பில் உள்ள தமிழ் பிரமுகர்களும் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் தமது ஒத்துழைப்புக்களை வழங்கினர்.

நான்கு கட்சிகளையும் அழைத்து பேசுவதற்காக கொழும்பு பம்பலப்பட்டி சரஸ்வதி மண்டபத்தில் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. கொழும்பில் உள்ள தமிழ் பிரமுகர்கள் தான் இதனை ஏற்பாடு செய்தனர். இக்கூட்டத்தில் கொழும்பு இந்துமா மன்றத்தலைவர் கைலாசபிள்ளை, கந்தையா நீலகண்டன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்திற்கான கொழும்பு அலுவலக திட்ட உத்தியோகத்தராக இருந்த நிமலன் கார்த்திகேயன், தில்லைக்கூத்தன், ஜெயபாலசிங்கம், வடிவேற்கரசன், ஆகியோருடன் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ( சுரேஷ் அணி ) ஆகிய கட்சிகளின் தலைவர்கள் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திலேயே நான்கு கட்சிகளுக்கிடையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வது, தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள், பற்றி ஆராயப்பட்டது.

தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள், தாயகக்கோட்பாடு, விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் வலியுறுத்தியது.

தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள், தாயகக்கோட்பாடு என்பனவற்றை தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்ந்துக் கொண்டாலும் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என சிலர் வாதிட்டனர். இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சிரேஷ்ட உபதலைவராக இருந்த ஆனந்தசங்கரி முக்கியமானவர். விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்றால் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் யார், அவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் இல்லையா என்ற கேள்வியை எழுப்பினார். அவர் இன்றுவரை அக்கொள்கையிலிருந்து மாறவில்லை.

விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் என்பதற்கு ரெலோ தலைவர் என்.சிறிகாந்தாவும் எதிர்ப்பு தெரிவித்தார்.

நான்கு கட்சிகளும் இணைந்து ஒரு கட்சியாக தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்வதா அல்லது நான்கு கட்சிகளும் கூட்டாக இயங்குவதென ஒப்பந்தம் செய்து அதனை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பதா என்ற விவாதமும் இடம்பெற்றது.

1976ல் தமிழ் கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி என்ற புதிய கட்சியை ஸ்தாபித்து அதனை ஒரு கட்சியாக பதிவு செய்ததால் அக்கட்சியில் ஏற்கனவே இருந்த தமிழரசுக்கட்சி உட்பட ஏனைய கட்சிகள் செயலிழந்து போயின. அதுபோல புதிய கட்சி ஒன்று உருவாக்கப்பட்டால் இதில் இணையும் கட்சிகள் எதிர்காலத்தில் செயலிழந்து மறைந்து போய்விடும். ஓவ்வொரு கட்சிக்கும் உறுப்பினர்கள் தொண்டர்கள் இருப்பார்கள். எனவே நான்கு கட்சிகளும் தங்கள் தங்கள் கட்சிகளின் தனித்துவங்களை பேணி அக்கட்சிகளை தொடர்ந்து நடத்தலாம். தேர்தல் உட்பட பொது விடயங்களில் ஒன்றாக செயல்படலாம் என்றும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டது. தனியான ஒரு கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வதில்லை என்றும் நான்கு கட்சிகளின் கூட்டாக இயங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இறுதியில் நான்கு கட்சிகளும் ஒப்பந்தம் செய்து தேர்தல் ஆணையாளருக்கு அறிவிப்பது என முடிவாகியது. ஆனால் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற விடயத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் உறுதியாக இருந்தது. ஏனைய கட்சிகள் அதனை எதிர்த்து வந்தன. இது பெரும் பிரச்சினையாக காணப்பட்டது.

இந்த பிரச்சினைக்கு மாற்று யோசனை ஒன்றை தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆர்.சம்பந்தன் முன்வைத்தார். ( தொடரும் )
( இரா.துரைரத்தினம் )0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
Jaffna Journalists. 2

ஊடகத்துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப்பொருளில் யாழ். ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு [May 28, 2017]

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் "தமிழ் கார்டியன்" ஊடக நிறுவனம் ...
IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
blood

மலையகத்தில் சீரற்ற காலநிலை- மகாவலி ஆறு பெருக்கெடுப்பு. [May 27, 2017]

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...
Arular

இனப்படுகொலைக்காக அரசாங்கத்தை தண்டிப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை- ஈரோஸ் அருளர் குற்றச்சாட்டு VIDEO [May 26, 2017]

தமிழீழம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கு ...
IMG_5473

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்- அடிக்கல் நாட்டப்பட்டது. VIDEO [May 26, 2017]

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ...
North province

வடமாகாண பட்டதாரிகளின் செயலுக்கு வடமாகாணசபை கண்டனம். [May 25, 2017]

வடமாகாண சபையின் வாயில் கதவு களை மூடி மாகாணசபை உறுப்பினர்களை ...
North province

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை முலமைச்சரின் கையில். [May 25, 2017]

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ...
kansa

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. [May 25, 2017]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய ...