Sunday, May 28th, 2017

கொழும்பில் நான்கு தமிழ் கட்சிகள் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்- தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 09

Published on December 31, 2016-6:24 pm   ·   No Comments

tna-in-mou-01பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடந்த கூட்டத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக கொள்ளுப்பிட்டியில் உள்ள தொழிலதிபர் எஸ்.வடிவேற்கரசன் அவர்களின் வீட்டில் சந்திப்புக்கள் நடைபெற்றன.

விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும், அவ்வாறு கூறிப்பிட தேவையில்லை என ஏனைய கட்சிகளும் முரண்பட்டுக் கொண்டிருந்தன.

இந்த பிரச்சினையை தீர்ப்பதற்காக வடிவேற்கரசனின் வீட்டிற்கும் குமார் பொன்னம்பலத்தின் வீட்டிற்கும் தான் மாறி மாறி ஓடித்திரிந்ததாக அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் நல்லையா குமரகுருபரன் தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.

இறுதியாக விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என குறிப்பிடாவிட்டாலும் தமிழ் மக்களின் முக்கிய அரசியல் அமைப்பு என குறிப்பிடலாம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆர்.சம்பந்தன் ஆலோசனை கூறினார்.

இந்த ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்பட்டு 2001ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற விடயம் சேர்க்கப்படவில்லை ( ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 2004ஆம் ஆண்டு தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப்புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்ற விடயம் சேர்க்கப்பட்டிருந்தது. இது பற்றி பின்னர் பார்ப்போம்)

இந்த பிரச்சினைகளை தீர்த்து தமிழ் கட்சிகளை ஒன்றிணைப்பதில் கணிசமான பங்களிப்பை செய்த தொழிலதிபர் எஸ்.வடிவேற்கரசன் பற்றியும் குறிப்பிடவேண்டும். இவரின் தந்தை தொண்டமானாற்றை சேர்ந்த சேகரம்பிள்ளை ஆகும். இலங்கையில் உள்ள தமிழ் வர்த்தகர்களில் முக்கியமானவராக இவர் திகழ்ந்தார். யாழ்ப்பாணம் கொழும்பு என பல இடங்களில் சேகரம் அன்சன்ஸ் என்ற பெயரில் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் இருந்தன. கொழும்பில் உள்ள தமிழ் வர்த்தகர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய தேசிய கட்சியை ஆதரித்து அக்கட்சியின் தேர்தல்களுக்காக பெருந்தொகை பணங்களை வழங்கி வந்த போதிலும் சேகரம்பிள்ளை தமிழரசுக்கட்சியின் ஆதரவாளராக இருந்தார். தமிழரசுக்கட்சி, அதன் பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் தொடர்ச்சியாக தேர்தல்களுக்கு பணம் வழங்கி வந்தார். அவரைப்போலவே வடிவேற்கரசனும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஆதரவை வழங்கி வந்தார்.   எஸ்.வடிவேற்கரசன் அவர்களே இலங்கையில் சுமிற்றோமோ ரயர் இறக்குமதியாளரும் ஏக விநியோகத்தருமாகும்.   தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து பலமான அரசியல் தலைமையாக திகழ வேண்டும் என்பதில் தொழிலதிபர் எஸ்.வடிவேற்கரசனும் ஆர்வம் கொண்டிருந்தார்.

ஒரு வாரகாலமாக கொழும்பில் நடந்த சந்திப்புக்கள் பேச்சுவார்த்தைகளை அடுத்து 2001ஆம் ஆண்டு ஒக்டோபர் 20ஆம் திகதி சனிக்கிழமை நான்கு தமிழ் கட்சிகளுக்கிடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கொள்ளுப்பிட்டியில் உள்ள தொழிலதிபர் எஸ்.வடிவேற்கரசன் அவர்களின் வீட்டில் வைத்து செய்து கொள்ளப்பட்டது. tna-in-mou-01

நான்கு கட்சிகளும் இணைந்து ஒரே கொள்கையின் அடிப்படையில் செயல்படுவது என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுவதென்றும், நான்கு கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பாக செயல்படுவது என எடுக்கப்பட்ட முடிவையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் தேர்தல் ஆணையாளருக்கு நான்கு கட்சி செயலாளர்களும் இணைந்து அறிவிப்பதென அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒரே கொள்கையின் கீழ் செயல்படும் அதேவேளை தங்கள் தங்கள் கட்சிகளின் தனித்துவங்களையும் தொடர்ந்து பேணுவது என்றும் இக்கட்சிகள் இணங்கி கொண்டன.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் ஆர்.சம்பந்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் ந.குமரகுருபரன், ரெலோ கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா, ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டனர்.

இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வில் எஸ்.வடிவேற்கரசன், நிமலன் கார்த்திகேயன், கந்தையா நீலகண்டன் உட்பட கொழும்பு தமிழ் பிரமுகவர்கள் சிலரும் கலந்து கொண்டனர்.

நான்கு கட்சிகளும் இணைந்து செயற்படுவது என்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னம் தமது பொதுசின்னமாக இருக்கும் என்றும் தேர்தல் ஆணையாளருக்கு இந்நான்கு கட்சிகளின் செயலாளர்களும் கூட்டாக அறிவித்திருந்தன.

தமிழ் பிரதேசங்களில் பொருளாதார தடையை நீக்க வேண்டும், யுத்த நிறுத்தம் செய்து நோர்வேயின் அனுசரணையுடன் விடுதலைப்புலிகளுடன் பேச வேண்டும், விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என ஆட்சிக்கு வரும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதே புரிந்துணர்வு உடன்படிக்கையின் முக்கிய விடயம் என ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக தமிழ்நெற் இணையத்தில் 2001.ஒக்டோபர் 20ஆம் திகதி பின்வருமாறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

Tamil parties sign MOU

Leaders of the Tamil parties’ alliance Saturday signed a Memorandum of Understanding (MOU) to contest the forthcoming general election under one symbol. Mr.R.Sampanthan on behalf of Tamil United Liberation Front (TULF), Mr.N.Kumarakuruparan on behalf of All Ceylon Tamil Congress (ACTC), Mr.N.Sri Kantha on behalf of Tamil Eelam Liberation Organization (TELO) and Mr.Suresh Premachandran of behalf of Eelam Peoples’ Revolutionary Liberation Front (EPRLF-Suresh wing) have signed the MOU.

“The primary objective of the MOU is to exert pressure on any main political party that comes to power at the forthcoming general election to declare a ceasefire, lifting the economic embargo on Tamil areas particularly areas which do not come under the state armed forces, to lift the ban on the Liberation Tigers of Tamil Eelam and to enter into talks with the LTTE to arive at an acceptable political solution to the Tamil national question through Norwegian initiative”, a spokesman of the alliance said.

He added that the Tamil parties’ alliance would direct its parliamentary strength after the general election to achieve its objective contained in the MOU.

The leaders of four Tamil parties’ alliance Saturday met at the residence of a neutral person and signed the MOU.

இதனை தொடர்ந்து வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பு மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டது. tna-in-mou

கொழும்பு மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் நல்லையா குமரகுருபரன் தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுவை தாக்கல் செய்தது.

ஒவ்வொரு மாவட்டங்களிலும் கட்சிகளுக்கு இருக்கும் வாக்கு வங்கியை பொறுத்து வேட்பாளர் எண்ணிக்கை ஒவ்வொரு கட்சிக்கும் நிர்ணயிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் இந்த வேட்பாளர் தெரிவில் தலையீடு செய்யவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் கீழ் அதன் உதயசூரியன் சின்னத்தில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எவ் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி மாவட்டங்களில் மட்டும் வேட்பாளர்களை நியமித்தது. திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் ஈ.பி.ஆர்.எல்.எவ் வேட்பாளர்களை நியமிக்கவில்லை.   2001 ஒக்டோபர் 26ஆம் திகதி திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வன்னி ஆகிய மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

திருகோணமலையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் ஆர்.சம்பந்தன் அவர்களை தலைமை வேட்பாளராக கொண்டு 7பேர் போட்டியிட்டனர். இதில் 5 வேட்பாளர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்தவர்கள். அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் மற்றும் ரெலோ ஆகியன தலா ஒவ்வொரு வேட்பாளரை நியமித்திருந்தன. ரெலோவின் தலைவர் என்.சிறிகாந்தா திருகோணமலையில் போட்டியிட்டார்.

யோசப் பரராசசிங்கம் அவர்களை தலைமை வேட்பாளராக கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் 5 வேட்பாளர்களும், ரெலோவின் சார்பில் இந்திரகுமார் பிரசன்னாவும், த.தங்கவடிவேலுவும் போட்டியிட்டனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் சார்பில் ஞானமுத்து கிருஷ்ணபிள்ளை ( வெள்ளிமலை ) போட்டியிட்டார்.

வன்னி மாவட்டத்தில் ரெலோவை சேர்ந்த செல்வம் அடைக்கலநாதன் தலைமை வேட்பாளராக போட்டியிட்டார். 9 வேட்பாளர்களில் 4பேர் ரெலோவை சேர்ந்தவர்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் மூன்று வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஈ.பி.ஆர்.எல்.எவ், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் சார்பில் தலா ஒரு வேட்பாளர் போட்டியிட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த அ.சந்திரநேரு தலைமையில் 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணி 9 வேட்பாளர்களையும், ரெலோ ஒரு வேட்பாளரையும் நியமித்திருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் அம்மாவட்டத்தில் வேட்பாளர்களை நியமிக்கவில்லை.

யாழ். மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் வி.ஆனந்தசங்கரி தலைமையில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் மாவை சேனாதிராசா, ரவிராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் சார்பில் அதன் தலைவர் அ.விநாயகமூர்த்தியும், கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் போட்டியிட்டனர். ரெலோ சார்பில் சிவாஜிலிங்கமும், ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரனும் போட்டியிட்டனர். nomination-tna

2001ல் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளின் போது விடுதலைப்புலிகளுக்கு பங்கு இருக்கவில்லை, அவர்கள் இதில் தலையிடவும் இல்லை, ஆனால் 2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தின் பின்னரே விடுதலைப்புலிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த நல்லையா குமரகுருபரன் செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

2001ஆம் ஆண்டு தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து விடுதலைப்புலிகள் அறிக்கை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தேர்தல் முடியும் வரை ஆதரவை வெளிப்படுத்தவில்லை என்றும் நல்லையா குமரகுருபரன் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆதரித்து அறிக்கை விட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றியை பெறாவிட்டால் அது தமக்கு பாதகமாக அமைந்து விடும் என்ற காரணத்தினால் தான் விடுதலைப்புலிகள் ஆதரித்து அறிக்கை வெளியிடாமல் இருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் கட்சிகள் இணைந்து ஒரே அணியில் போட்டியிட்டது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் உற்சாகத்தையும் கொடுத்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் விஞ்ஞாபனம் 2001.நவம்பர் 12ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பு கொலிடே இன் ஹொட்டலில் வைத்து வெளியிடப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் வி.ஆனந்தசங்கரி, செயலாளர் ஆர்.சம்பந்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் ந.குமரகுருபரன் ஆகியோர் இதனை வெளியிட்டு வைத்தனர்.
அதில் போரை நிறுத்தி நோர்வே அனுசரணையுடன் அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் பேச வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இலங்கை தமிழர்கள் இந்நாட்டில் தனித்துவமான தேசிய இனம், தமிழர் தாயகம் அதன் பிராந்திய ஒருமைப்பாடு, தமிழ் தேசத்தின் சுயநிர்ணய உரிமை, ஏனைய இனங்களுக்கு இருக்கும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் தமிழ் மக்களுக்கும் இருக்க வேண்டும் என்ற விடயங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

உடனடியாக வடகிழக்கு மாகாணத்தில் அமுலில் உள்ள பொருளாதார தடையை நீக்க வேண்டும், பயணகட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், போரை உடனடியாக நிறுத்தி சர்வதேச மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் அரசும் விடுதலைப்புலிகளும் பேசி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மட்டக்களப்பில் முதன் முறையாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான கொக்கட்டிச்சோலைக்கும் சென்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பிரசாரம் செய்தனர்.
( தொடரும் )   – இரா.துரைரத்தினம் .0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
Jaffna Journalists. 2

ஊடகத்துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப்பொருளில் யாழ். ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு [May 28, 2017]

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் "தமிழ் கார்டியன்" ஊடக நிறுவனம் ...
IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
blood

மலையகத்தில் சீரற்ற காலநிலை- மகாவலி ஆறு பெருக்கெடுப்பு. [May 27, 2017]

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...
Arular

இனப்படுகொலைக்காக அரசாங்கத்தை தண்டிப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை- ஈரோஸ் அருளர் குற்றச்சாட்டு VIDEO [May 26, 2017]

தமிழீழம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கு ...
IMG_5473

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்- அடிக்கல் நாட்டப்பட்டது. VIDEO [May 26, 2017]

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ...
North province

வடமாகாண பட்டதாரிகளின் செயலுக்கு வடமாகாணசபை கண்டனம். [May 25, 2017]

வடமாகாண சபையின் வாயில் கதவு களை மூடி மாகாணசபை உறுப்பினர்களை ...
North province

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை முலமைச்சரின் கையில். [May 25, 2017]

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ...
kansa

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. [May 25, 2017]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய ...