Thursday, October 19th, 2017

ஒரு மாவட்ட அரசாங்க அதிபரை மாற்றும் பலம் கூட தமிழர் தரப்பிடம் கிடையாது- இரா.துரைரத்தினம்

Published on December 31, 2016-7:16 pm   ·   No Comments

batti-gaமட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மீது தொடர்ச்சியாக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது, அவர் 2015ல் செய்த நிதி மோசடிகள் விசாரணைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வந்திருக்கிறதே, அப்படியானவரை ஏன் தொடர்ந்து மட்டக்களப்பு அரசாங்க அதிபராக வைத்திருக்கிறீர்கள் என மட்டக்களப்பில் உள்ள தமிழ் அரசியல் பிரமுகர் ஒருவரிடம் கேட்டேன்.

அவர் குற்றம் செய்திருந்தாலும் அவரை இடமாற்றம் செய்த மாட்டார்கள் என அவர் உறுதியாக சொன்னார். அவருக்கு வருடாந்த இடமாற்றம் 2017 ஜனவரியில் வர இருந்தது. அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என தமிழர் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்ததால் அவரின் இடமாற்றம் தடுக்கப்பட்டிருக்கிறது என அந்த அரசியல் பிரமுகர் கூறினார்.

தமிழ் பிரதேசங்களின் அரச அதிகாரிகளின் நியமனங்களையோ இடமாற்றங்களையோ தமிழ் அரசியல் தரப்பு தீர்மானிக்க முடியாது. சிங்கள முஸ்லீம் அரசியல் தரப்புக்களால் மட்டுமே அது முடியும். உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தையும் அந்த தமிழ் அரசியல் பிரமுகர் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2015 ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மைத்திரிபால சிறிசேனா ஜனாதி;பதியாக பதவி ஏற்ற பின் சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பி;னர்கள் மைத்திரியை சந்தித்தனர். ஆட்சிமாற்றத்திற்கு நாங்கள் தான் காரணம், நாங்கள் தான் மைத்திரியை ஜனாதிபதியாக்கினோம், என்ற இறுமாப்புடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஜனாதிபதியை சந்தித்தனர்.

அப்போது பல கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்தனர். தமி;ழர்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா மாவட்டத்தில் சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரை இடமாற்றம் செய்து விட்டு தமிழர் ஒருவரை நியமிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் கையொப்பம் இட்டு ஜனாதிபதியிடம் கையளித்தனர். இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் இடமாற்றம் செய்யப்படவில்லை. அது போல அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் முன்வைத்த கோரிக்கைகள் எவையும் நிறைவேற்றப்படவில்லை.

மாவட்ட அரசாங்க அதிபரை இடமாற்றம் செய்வதற்கு கூட பலமற்றவர்களாகத்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் காணப்படுகின்றனர் என்றும் அவர் சொன்னார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா, பிரதியமைச்சர் அமிர்அலி, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர், இவர்கள் மூவரும் அதிகாரத்தில் இருக்கும் வரை மாவட்ட அரசாங்க அதிபரின் இடமாற்றத்தை மட்டுமல்ல அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களையும் அரசாங்கம் விலக்கி கொள்ளும். அவரை குற்றமற்றவர் என அரசாங்கம் அறிவிக்கும். இதுதான் மட்டக்களப்பில் தற்போது உள்ள களசூழல்.

பட்டபகலில் கொழும்பு நகரில் ரவிராஜை கொலை செய்தவர்களையே குற்றமற்றவர்கள் என விடுதலை செய்த இந்த இனவாத அரசாங்கமும் நீதித்துறையும் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் மோசடி செய்திருந்தாலும் அவருக்கு தண்டனை கிடைக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? மட்டக்களப்பில் சிங்கள குடியேற்றத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒருவரை, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஹிஸ்புல்லா, அமிர்அலி போன்றவர்கள் போடும் உத்தரவுகளை ஓய்வு உறக்கமின்றி நிறைவேற்றி வரும் ஒருவரை இந்த அரசாங்கம் எப்படி தண்டிக்கும்?

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் செய்த நிதி மோசடி தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளர்களான சுசந்த டி சில்வா, முகம்மட் மஹ்ரூப் ஆகியோர் அடங்கிய குழு விசாரணை செய்தனர். 2015ஆம் ஆண்டு செய்த மோசடி தொடர்பாகவே இந்த விசாரணைகள் நடைபெற்றன. அதற்கு முன்னைய ஆண்டுகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவில்லை.  இந்த விசாரணைகளில் அரசாங்க அதிபர் அரச நிதியை மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வாகனத்திற்கான எரிபொருள் கொள்வனவு மற்றும் அவரின் தங்குமிட விடுதியில் பாவிக்கப்பட்ட எரிவாயுவுக்கான கொடுப்பனவுக்கு வழங்கப்பட்ட பணமும் நிதிப்பிரமாணத்திற்கு முரணாக மோசடி செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் கொடுப்பனவில் ஒரு இலட்சத்து 40ஆயிரம் ரூபாவும் அவரின் தங்குமிட விடுதியில் பாவிக்கப்பட்ட எரிவாயுவுக்கான கொடுப்பனவில் 82ஆயிரம் ரூபா பணமுமாக மொத்தம் 2 இலட்சத்து 22ஆயிரம் ரூபாவை அவர் மோசடி செய்துள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிதி மோசடி நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் 2 இலட்சத்து 22ஆயிரம் ரூபாவை திறைசேரிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். batti-ga-1batti-ga-2

ஒருவர் ஒரு வீட்டில் கொள்ளையடிக்கிறார். அந்த கொள்ளை கண்டுபிடிக்கப்பட்ட உடன் கொள்ளையிட்ட பொருள்களையும் பணங்களையும் திருப்பி கொண்டுபோய் அந்த வீட்டில் ஒப்படைத்தால் கொள்ளையிட்டவர் குற்றமற்றவர் ஆகிவிடுவாரா? இந்த கேள்விதான் மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் விடயத்திலும் எழுகிறது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் அரச நிதியை மோசடி செய்திருக்கிறார் என கண்டுபிடிக்கப்பட்ட உடன் அப்பணத்தை திறைசேரிக்கு ஒப்படைத்து விட்டால் அவர் குற்றமற்றவர் என்றாகி விடுமா?

ஆனால் மகிந்த அரசாங்க காலத்தில் மட்டுமல்ல நல்லாட்சி என தன்னை சொல்லிக்கொள்ளும் மைத்திரி ஆட்சியிலும் குற்றவாளிகளும் மோசடிகாரர்களும் தப்பி வருகின்றனர் என்பதற்கு இது போன்ற பல சம்பவங்களை சுட்டிக்காட்டலாம்.

தமிழர் நலன்களுக்கு எதிராக செயல்படுபவராக இருந்தால் எந்த குற்றத்தையும் செய்து விட்டு தப்பிக்கொள்ளலாம் என்பதற்கு இது போன்ற சம்பவங்கள் நல்ல உதாரணங்களாகும்.

2012ஆம் ஆண்டிலிருந்து அவர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்து வருகின்ற போதிலும் மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலமான 2014வரையான காலப்பகுதியில் அவரின் நிதி மோசடிகள் பற்றிய விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் உள்ள அரச காணிகள் வேறு இனங்களை சேர்ந்த தனியார்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு மாவட்ட அரசாங்க அதிபர் உடந்தையாக இருக்கிறார் என குற்றம் சாட்டப்படுகிறது.

உதாரணமாக வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ரிதிதென்னயில் 400ஏக்கர் அரச காணி முஸ்லீம் நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்டிருக்கிறது. வாகரை பிரதேசம் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசமாகும்.

பாரிய அளவில் தனியார் பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், வீடமைப்பு திட்டங்களை செய்வதற்கு சவுதிஅரேபியா, கட்டார், ஐக்கிய அரபுஇராச்சியம், ஈரான், மலேசியா என அரபு நாடுகள் கோடிக்கணக்கான நிதிகளை வழங்கிறார்கள். திட்டங்களை செயல்படுத்துவதற்கு போதிய நிதி கிடைக்கிறது. கூடவே அரசியல் பலமும் இருக்கிறது. அவர்கள் அரச காணிகளை பெற்றுக்கொள்கிறார்கள், ஆனால் தமிழர் தரப்பு என்ன செய்கிறது, இவற்றை எல்லாம் கைகட்டி நின்று பார்த்துக்கொண்டிருக்கத்தான் முடியும் என அந்த அரசியல் பிரமுகர் ஆதங்கப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருந்தொகையான அரச காணிகள் காணப்படுகின்றன. ஆனால் தமிழர் தரப்பால் அந்த நிலங்களை பெற்று தொழிற்சாலைகளையோ தனியார் பல்கலைக்கழங்களையோ அல்லது பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு திட்டங்களையோ நிறுவ பணபலமோ, அரசியல் பலமோ கிடையாது. புலம்பெயர் நாடுகளில் சில தமிழர்கள் பணபலத்துடன் இருந்தாலும் கிழக்கில் தமிழர் நலன்சார்ந்து எந்த ஒரு திட்டத்தையும் அவர்கள் செய்ய முன்வருவதில்லை.

வாகரை, கிரான், ஏறாவூர்பற்று, மண்முனைமேற்கு என மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள அரசகாணிகள் இனங்காணப்பட்டு அந்த காணிகளுக்கு காணிகச்சேரிகள் நடத்தப்பட்டு அமைச்சர்களான ஹிஸ்புல்லா, அமிர்அலி போன்றவர்கள் சிபார்சு செய்பவர்களுக்கு காணிகள் வழங்கப்பட்டு வருகிறது.

எல்லைக்கிராமங்களை பாதுகாக்க வேண்டும் என தமிழ் அரசியல்வாதிகள் பேசிவருகின்ற போதிலும் நடைமுறையில் அது செயல்படுத்தப்படுவதில்லை. அண்மையில் கூட கெவிளியாமடுவில் சேனைப்பயிர் செய்வதற்காக தலா இரண்டு ஏக்கர் காணிகள் வழங்குவதற்காக காணி கச்சேரி நடத்தப்பட்ட போது தமிழர்கள் யாரும் அக்காணிகளை பெற முன்வரவில்லை. ஏனைய இனத்தவர்களே அங்கு குடியேற முன்வந்தனர்.

தங்களுக்கு பாதுகாப்பில்லை என காரணம் கூறி தமிழர்கள் எல்லைக்கிராமங்களில் குடியேற தயங்கி வருகின்றனர். ஆனால் சிங்கள மக்களும் முஸ்லீம் மக்களும் எங்கு சென்றும் குடியேற தயாராக இருக்கிறார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச காணிகள் மட்டும் தான் சிங்கள மற்றும் முஸ்லீம் இனங்களின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கிறது என எண்ணிவிட முடியாது. தமிழ் பிரதேசங்களில் பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்களுக்கு சொந்தமான உறுதிக்காணிகள் கூட முஸ்லீம் மக்களின் கைகளுக்கு சென்று கொண்டிருக்கிறது.

காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமைகளில் தொழுகையின் பின்னர் தமது மக்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படுவது வழமை,
அதில் அண்மைக்காலத்தில் வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புக்களில் ஒன்று. காணி கொள்வனவு தொடர்பிலானதாகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த பிரதேசத்தில் காணி விற்பனைக்கு இருந்தாலும் அதனை என்ன விலை கொடுத்தாவது கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டு வருகிறது.

முன்னர் தமிழ் கிராமங்களில் முஸ்லீம் மக்கள் காணிகளை கொள்வனவு செய்வதற்கு முன்வருவதில்லை. ஆனால் இப்போது கொக்கட்டிச்சோலை போன்ற நூறுவீதம் தமிழர்கள் வாழும் கிராமங்களிலும் முஸ்லீம் மக்கள் காணிகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஊரில் உள்ள தமது காணிகளை விற்று வருகின்றனர். முஸ்லீம் மக்களுக்கே பெருமளவு பணத்திற்கு விற்க முடியும் என்பதால் விற்கப்படும் அனைத்து காணிகளும் தமிழர் கையை விட்டு போய்க்கொண்டு இருக்கிறது.

முஸ்லீம் மக்களின் சனத்தொகை அதிகரிப்பு வீதத்திற்கு ஏற்ப காணித்தேவையும் அதிகரித்து வருகிறது. தமிழர்கள் இப்போது குடும்ப கட்டுப்பாட்டை மிகக்கடுமையான கடைப்பிடிக்கின்றனர். இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை என்ற கட்டுப்பாடு தற்போது கிராமங்களிலும் காணப்படுகிறது. ஆனால் முஸ்லீம் குடும்பங்களில் இந்த குடும்பகட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுவதில்லை. இதனால் ஒவ்வொரு குடும்பங்களும் சராசரியாக எட்டு ஒன்பது குழந்தைகளை பெற்றுக்கொள்கின்றனர். இதனால் காணித்தேவையும் அதிகரி;த்து வருகிறது.
சில வருடங்களுக்கு முன்னர் காத்தான்குடி, ஏறாவூர் ஓட்டமாவடி ஆகிய முஸ்லீம் கிராமங்களை அண்டி இருக்கும் தமிழ் கிராமங்களில் உள்ள காணிகளைத்தான் முஸ்லீம் மக்கள் கொள்வனவு செய்து வந்தார்கள். இவர்கள் காணிகளை கொள்வனவு செய்வதற்கு முஸ்லீம் நிறுவனங்களும், அரபு நாடுகளும் நிதி உதவிகளை செய்து வருகின்றன.

ஆரையம்பதி, நொச்சிமுனை தாளங்குடா, செங்கலடி போன்ற தமிழ் கிராமங்களில் தான் இப்பிரச்சினை காணப்பட்டது. காணி ஒன்றை விற்க முற்படும் தமிழர்கள் முஸ்லீம்களையே நாடுகின்றனர். தமிழர்கள் தமிழர்களுக்கு காணி விற்பது கிடையாது. முஸ்லீம்கள் தான் அதிக விலை கொடுத்து வாங்குவார்கள் என்பதால் மட்டக்களப்பில் பெரும்பாலான தமிழர்கள் முஸ்லீம்களுக்கே விற்று வருகிறார்கள்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு நகரில் உள்ள தமிழர்களின் காணிகளை கூட முஸ்லீம் குடும்பங்களே கொள்வனவு செய்து வருகின்றன. அண்மையில் மட்டக்களப்பு நகரில் திருகோணமலை வீதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லீம் குடும்பங்கள் கொள்வனவு செய்துள்ளன.

மட்டக்களப்பில் அரசியல் பலம் மட்டுமல்ல, பொருளாதார, வர்த்தக, வாணிப பலங்களும் முஸ்லீம் மக்களிடம் தான் உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நகரங்களில் மட்டக்களப்பு நகரத்தில் இருந்த வர்த்தக நிலையங்கள் மட்டுமே தமிழர்களின் கைகளில் இருந்தன. 1980களின் பின்னர் தமிழ் ஆயுதக்குழுக்களின் பணம் பறிக்கும் தொல்லைகளால் மட்டக்களப்பு நகரில் இருந்த வியாபார நிலையங்கள் முஸ்லீம் மக்களின் கைகளுக்கு மாறிவந்தன. 2004க்கு பின்னர் கருணா குழு யாழ்ப்பாண தமிழ் வர்த்தகர்களை மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றியதால் மட்டக்களப்பு நகரின் வர்த்தகம் முழுமையாக முஸ்லீம் வர்த்தகர்களிடம் சென்றுவிட்டது.

சராசரியாக நாள் ஒன்றுக்கு 2ஆயிரம் தமிழ் தொழிலாளர்கள் காத்தான்குடிக்கு வேலைக்கு செல்கின்றனர். காத்தான்குடிக்கு தமிழர்கள் வேலைக்கு வரக் கூடாது என தடுக்கப்பட்டால் இந்த 2ஆயிரம் குடும்பங்களின் வீடுகளிலும் அடுப்பு எரியாது.

தமிழ் மக்கள் நெல்லை உற்பத்தி செய்தாலும் மீனைப்பிடித்தாலும் அதனை கொள்வனவு செய்பவர்கள் முஸ்லீம் வர்த்தகர்கள் தான். படுவான்கரை போன்ற பிரதேசங்களில் இருக்கும் விவசாயிகளுக்கு கடனை வழங்குபவர்கள் முஸ்லீம் வர்த்தகர்கள்தான். இதனால் அவர்களின் உற்பத்திகளை குறைந்த விலையாக இருந்தாலும் அவர்களுக்கே விற்பனை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களுக்கு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 75வீத தமிழர்கள் வாழ்ந்தாலும் 24வீதமாக உள்ள முஸ்லீம் மக்களிடமே அனைத்து பலமும் உள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்கள் 75வீதமாக இருந்தாலும் 3நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர்களாகவும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லீம்களாகவும் உள்ளனர். ( இதில் ஒருவர் தேசிய பட்டியல் மூலம் வந்தவர். ) முஸ்லீம் அரசியல்வாதிகளிடமே அரசியல் பலம் இருப்பதால் நூறுவீதம் தமிழர்கள் வாழும் பட்டிருப்பு தொகுதியில் கூட பாலர் பாடசாலை விழாவுக்கு கூட முஸ்லீம் அரசியல்வாதிகளே அதிதிகளாக செல்கின்றனர். அந்த விழாக்களை கூட அமிர்அலி போன்ற முஸ்லீம் அரசியல்வாதிகள் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரான பிரசாரத்திற்கும் தமிழர்களை இழிவு படுத்துவதற்கும் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தலைவர்களை கேவலமாக பேசுவதற்குமே பயன்படுத்தி கொள்கின்றனர். இதனை கைதட்டி ரசிக்கின்ற அவலத்தில் தான் தமிழர் சமூகம் உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 39.29 வீதமும், முஸ்லீம்கள் 36.69வீதமும், சி;ங்களவர்கள் 23.15வீதமாக காணப்பட்டாலும் கிழக்கு மாகாணத்தில் கல்வி கற்கும் மாணவர் தொகையில் முதலாம் இடத்தில் இருப்பவர்கள் முஸ்லீம் மாணவர்கள்தான். தமிழ் மாணவர்களை விட 6ஆயிரம் முஸ்லீம் மாணவர்கள் கூட உள்ளனர். இதற்கு காரணம் முஸ்லீம் மக்களின் இளவயதினரின் அதிகரிப்பு, கல்வியில் அவர்கள் காட்டும் அக்கறை என்பன முக்கியமானதாகும்.

அரசியல் கல்வி பொருளாதாரம் வர்த்தக வாணிபம் என அனைத்து துறைகளும் இன்று தமிழர்களின் கைகளில் இல்லை.

ஒரு பூனையை வளர்க்க வக்கற்ற நிலையில் இருந்து கொண்டு எனது தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது என பெருமை பேசுவதால் என்ன பலன்?0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...