Sunday, May 28th, 2017

மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

Published on January 7, 2017-9:31 pm   ·   No Comments

tna-colombo-1கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை காற்றில் பறக்க விட்டு கானல்நீரை தேடி ஓடிக்கொண்டிருக்கின்றோம் என ஈரோஸ் தலைவர் பாலகுமாரன் இறுதிக்கட்ட போரின் போது முள்ளிவாய்க்காலில் வைத்து ஆதங்கப்பட்டதாக அண்மையில் ஒரு நண்பர் பதிவிட்டிருந்தார்.

2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் பரிஸிலிருந்து வந்த ரி.ஆர்.ரி. தர்ஷனை அழைத்துக்கொண்டு வன்னிக்கு சென்ற வேளையில் ஒருநாள் இரவு நீண்டநேரம் பாலகுமாரன் அவர்களுடன் உரையாடினோம். அப்போதும் அவர் இந்த ஆதங்கத்தையே வெளிப்படுத்தினார்.

கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்கள் எமக்கு கிடைத்தன. அவை அனைத்தையும் உதறி தள்ளிவிட்டோம். இப்போது செய்யப்பட்டிருக்கும் சமாதான ஒப்பந்தத்தையாவது சரியாக பயன்படுத்தி பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும். இந்த சந்தர்ப்பத்தையும் நாங்கள் தவறவிட்டால் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் எம்மை நோக்கி வராது என தீர்க்க தரிசனமாக சொன்னார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய பண்டா செல்வா ஒப்பந்தம், டட்லி செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றை சிங்கள தரப்பே கிழித்தெறிந்து செயலிழக்க செய்த போதிலும் அதன் பின்னர் ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களை குழப்பியது தமிழர் தரப்புத்தான் என்பது கசப்பான உண்மையாகும்.

பாலகுமாரன் அன்று சொன்னது போலவே இன்றும் கிடைக்கும் சந்தர்ப்பங்களை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு எட்ட முடியாத கானல் நீரை நோக்கி ஓடவைக்கும் முயற்சிகள் தான் நடக்கிறதா என எண்ணத்தோன்றுகிறது.

அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையும் திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விவாதமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரசியல் அமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவால் தயாரிக்கப்படும் இடைக்கால அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்களில் இணக்கப்பாடு எட்டப்படாததாலேயே இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதில் இழுபறி ஏற்பட்டிருக்கிறது.

இந்த குழுவின் தலைவரான சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ண அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் இந்த அரசியல்யாப்பில் உள்ளடக்கப்பட உள்ள சில விடயங்களை சூசகமாக சொல்லியிருந்தார்.

தமிழ் சிங்கள மொழிக்கான சமஅந்தஸ்த்து, மாகாணங்களுக்கான அதிகார பகிர்வு, போன்ற விடயங்கள் உள்ளடக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். பௌத்த மதத்திற்கு இருக்கும் முன்னுரிமை நீங்கப்படுமா என்ற கேள்விக்கு மதச்சார்பில்லாத அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கத்தான் விரும்புகிறோம், ஆனால் பெரும்பான்மையான மக்களின் விருப்பங்களை உதாசீனம் செய்து விட முடியாது என்றும் கூறியிருந்தார். இதிலிருந்து தற்போது இருக்கும் அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு இருக்கும் முன்னுரிமை புதிய அரசியல் யாப்பிலும் இருக்கும் என்பது உறுதியாகிறது.
இது தவிர தமிழர் தரப்பு எதிர்பார்க்கும் வடக்கு கிழக்கு இணைப்பு புதிய அரசியல் யாப்பின் மூலம் வரப்போவதில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.

13ஆவது திருத்த சட்ட மூலத்தின் கீழ் தற்போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகார அதிகாரங்களை விட சற்று கூடிய அதிகாரங்கள் கிடைக்க கூடிய சூழலே காணப்படுகிறது.
இந்த வேளையில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்த சட்டமூலமும் அப்போது மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பற்றியும் பார்ப்பது பொருத்தமானதாகும்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அப்போது பிரதமராக இருந்த பிரமதாஸாவும் கடுமையாக எதிர்த்தார், சிறிலங்கா சுதந்திர கட்சியும் அதனை எதிர்த்தது. ஜே.வி.பி இதற்கு எதிராக கடுமையான வன்முறைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கூட தவிர்க்க முடியாத சூழலிலேயே கையொப்பம் இட்டார்.

இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்யப்பட்டு ஒரு வருடம் முடிவடைவதற்கு முதல் மாகாணசபை தேர்தல் உட்பட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் விடயங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கையில் இருந்த 7 மாகாணங்களுக்கும் தேர்தல் நடந்து மாகாணசபைகள் இயங்க ஆரம்பித்த போதும் மீள்குடியேற்றம் செய்யாமல் தேர்தலை நடத்த முடியாது, இடைக்கால சபை ஒன்றை முதலில் அமைக்க வேண்டும் என்று தமிழர் தரப்பே கோரியிருந்தது. ஆனால் அந்த இடைக்கால சபை அமைக்கும் விடயத்திலும் விடுதலைப்புலிகளும் அரசாங்கமும் விட்டுக்கொடுக்காத போக்கில் இருந்ததால் அதுவும் கைகூடாமல் போனது. இந்நிலையில் இந்திய படைகளுடன் விடுதலைப்புலிகள் போரை ஆரம்பித்தனர்.

இறுதியாக இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்து ஒரு வருடம் முடிவடைந்த வேளையில் இந்திய கொடுத்த அழுத்தம் காரணமாக ஜே.ஆர். தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தயாரித்த வேளையில் திருகோணமலையில் இருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சொர்ணம் ஈழத்துநாதன் என்பவர் ஊடாக சம்பந்தனுக்கு தகவல் ஒன்றை அனுப்பினார். மாகாணசபையில் போட்டியிடக் கூடாது, அப்படி போட்டியிட்டால் பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டிருந்தனர். இந்த தகவலை சம்பந்தன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அமிர்தலிங்கத்திற்கு அறிவித்ததை அடுத்து அவர்கள் மாகாணசபை தேர்தலில் இருந்து ஒதுங்கி கொண்டனர்.

இன்று வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், அதிகார பரவலாக்கம் என்ற கோரிக்கைகளையே தமிழர் தரப்பு முன்வைத்திருக்கிறது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டிருந்தது. ஒரு வருடத்தில் கிழக்கில் தேர்தலை நடத்தி அதனை நிரந்தரமாக இணைக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது மாகாணசபைகளுக்கு இருக்கும் அதிகாரங்களை விட கூடிய அதிகாரங்கள் அப்போது காணப்பட்டன.

தமிழர் விடுதலைக் கூட்டணி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து ஒதுங்கி கொண்டதை அடுத்து இந்தியா தனது கைப்பொம்மைகளாக இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈ.என்.டி.எல். இயக்கங்களை ஆட்சி பீடம் ஏற்றியது.

அதை ஒரு ஜனநாயக ரீதியான தேர்தல் அல்ல. இந்திய அரசாங்கம் வடகிழக்கு மாகாணத்தில் பொம்மை அரசாங்கம் ஒன்றை உருவாக்கியிருந்தது.

மாகாணங்களுக்கு கல்வி, சுகாதாரம், விவசாயம், பொலிஸ், உள்ளுர் வீதி அபிவிருத்தி, உள்ளுராட்சி என பெரும்பாலான அதிகாரங்கள் மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருந்தது.
13ஆவது திருத்த சட்டத்தில் மத்திய அரசுக்குரிய நிரல், மாகாண அரசுக்குரிய நிரல், மற்றும் பொதுநிரல் என மூன்று பிரிவுகள் காணப்பட்டன. காணி மற்றும் பெருந்தெருக்கள், உட்பட சில அதிகாரங்கள் பொதுநிரலில் காணப்பட்டன. இந்த அதிகாரங்களை மாகாண அரசின் அனுமதியுடனேயே மத்திய அரசு பயன்படுத்தி கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

வடகிழக்கு மாகாண அரசு அமைக்கப்பட்ட உடன் வடகிழக்கில் மாகாண பொலிஸ் ஆணைக்குழு உருவாக்கப்பட்டு பிரதி பொலிஸ்மா அதிபர் ஆனந்தராசா தலைமையில் வடகிழக்கு மாகாண பொலிஸ் பிரிவு அமைக்கப்பட்டது. வடகிழக்கில் பொலிஸ் ஆட்சேர்ப்பும் இடம்பெற்றது.

கல்வி உட்பட சில திணைக்களங்கள் முழுமையாக மாகாணத்திற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது. மாகாணத்திற்கு ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீள எடுப்பதாக இருந்தால் மாகாண அரசுகளின் அனுமதியை பெற வேண்டும்.

வடகிழக்கு மாகாண அரசு அமைக்கப்பட்ட பின்னர் பிரமதாஸ ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். இந்திய படைகள் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்திய உருவாக்கிய வரதராசபெருமாள் தலைமையிலான மாகாணசபை அரசு பிரதிநிதிகளும் கப்பல் ஏறினர். 1990 யூலை 6ல் பாராளுமன்றத்தில் விசேட பிரேரணையை நிறைவேற்றி வடகிழக்கு மாகாண அரசு கலைக்கப்பட்டது.

வடக்கு கிழக்கில் நீண்டகாலம் மாகாண அரசு ஆளுநரின் நிர்வாகத்திலும் ஏனைய மாகாணங்கள் ஆளும் கட்சியின் அதிகாரத்திலும் இருந்ததால் மாகாணத்தின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் இலகுவாக பறித்து கொண்டது.

உதாரணமாக பாடசாலைகள் அனைத்தும் மாகாண அரசின் கீழேயே இருந்தன. மாகாண சபைகளின் இணக்கத்துடன் தேசிய பாடசாலை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி மாவட்டங்களில் இருந்த முதன்மையான பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக பிரகடனப்படுத்தி மத்திய அரசு கையகப்படுத்தி கொண்டது. இதற்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் துணைபோனார்கள்.
வடகிழக்கு மாகாண அரசு தொடர்ந்து செயற்பட்டிருந்தால் மாகாணத்திற்கு இருந்த அதிகாரங்களை மத்திய அரசு பறித்தெடுக்க வாய்ப்பிருந்திருக்காது.

1988ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணசபை தேர்தல் நடைபெற்ற காலத்திலேயே கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியிருந்தால் வடகிழக்கு மாகாணங்கள் சட்டரீதியாக இணைந்திருக்கும். அந்நேரம் கிழக்கில் உள்ள முஸ்லீம்களும் இணைப்பிற்கு ஆதரவாக வாக்களித்திருப்பார்கள்.

ஆனால் 1990ல் கிழக்கில் முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் வடக்கு கிழக்கு இணைப்பு என்பதை முற்றாக தகர்த்து விட்டது.

இன்று வடகிழக்கு இணைந்த மாகாணத்திற்கான அதிகார பரவலாக்கலையே தமிழர் தரப்பு கோரி நிற்கிறது. ஆனால் அன்று வடகிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு பெரும்பாலான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. இன்று வடக்கு கிழக்கு இணைப்பு இல்லாத தீர்வு நமக்கு தேவை இல்லை என தமிழர் தரப்பில் கூறப்படுகிறது. வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டிருந்த போது அதனை நிரந்தரமாக இணைப்பதற்கு தமிழர் தரப்பு என்ன முயற்சிகளை எடுத்தது.

ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கான ஏதுநிலைகள் எதுவும் இன்று இல்லை. கிழக்கில் உள்ள முஸ்லீம்கள் ஒருபோதும் இணைப்பிற்கு இணங்கி வரப்போவதில்லை,
புதிய அரசியல் யாப்பில் மாகாணங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டாலும் வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் தனித்தனியாகவே இருக்கப்போகின்றன.

தமிழர்களுக்கு கிடைத்த மற்றொரு சந்தர்ப்பம் சந்திரிக்கா குமாரதுங்காவினால் முன்வைக்கப்பட்ட தீர்வுப்பொதி, இந்த தீர்வு பொதியை தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நீலன் திருச்செல்வமே தயாரித்திருந்தார் என அப்போது கூறப்பட்டது.

இதுவரையில் முன்வைக்கப்பட்ட தீர்வு திட்டங்களில் சந்திரிக்கா அரசாங்கம் முன்வைத்த தீர்வு பொதியே சிறந்ததாக இப்பொழுதும் மிதவாத தமிழ் அரசியல் தரப்பால் சுட்டிக்காட்டப்படுகிறது.
இலங்கையில் 5 பிராந்திய சபைகள் உருவாக்கப்பட்டு மத்தியில் பிராந்தியங்களின் கூட்டாட்சி அமையும் என அதில் கூறப்பட்டிருந்தது. சமஷ்டி ஆட்சி என்ற பதம் குறிப்பிடப்படாவிட்டாலும் பிராந்தியங்களின் கூட்டாட்சி என குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் வடக்கு கிழக்கு ஒரு பிராந்தியமாக வரையறுக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது ஐக்கிய தேசியக்கட்சி அதன் நகல்களை பாராளுமன்றத்தில் தீவைத்து எரித்தது. 5 வாக்குகளால் அத்தீர்வுப்பொதி தோற்கடிக்கப்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி ஆதரித்திருந்தால் அத்தீர்வு பொதி வெற்றி பெற்றிருக்கும். ஆரம்பத்தில் தீர்வு பொதிக்கு ஆதரவளித்த தமிழர் விடுதலைக் கூட்டணி விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து வந்த அழுத்தம் காரணமாக இறுதி நேரத்தில் பின்வாங்கி கொண்டது. இதுவும் தமிழர் தரப்பு தவற விட்ட ஒரு சந்தர்ப்பமாகும்.

அதன் பின்னர் 2002ஆம் ஆண்டு ரணில் அரசாங்கத்துடன் செய்து கொண்ட உடன்படிக்கையை தொடர்ந்து விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பலனாக ஒஸ்லோ உடன்படிக்கையில் அரசதரப்பு பிரதிநிதிகளும் விடுதலைப்புலிகள் தரப்பு பிரதிநிதிகளும் கைச்சாத்திட்டனர்.

இந்த உடன்படிக்கையில் வடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்றும் அவர்களுக்கு சுயாட்சி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதையும் இந்த உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது.

ஆனால் இந்த உடன்படிக்கை கூட செயல்இழந்து போவதற்கு தமிழர் தரப்பே காரணமாகியது. ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டு மகிந்த ராசபக்ச ஜனாதிபதியாக வந்ததன் விளைவு ஒஸ்லோ உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடித்ததன் பெரும் பங்கு தமிழர்களுக்கு உண்டு. இதன் விளைவு விடுதலைப்புலிகளை மகிந்த அரசு முற்றாக அழித்து வெற்றி கண்டது.

இவ்வாறு பல சந்தர்ப்பங்களை காற்றில் பறக்க விட்டு கானல்நீரை நோக்கி ஓடி களைத்து விழுந்து விட்ட நிலையிலேயே புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தமிழ் மக்களுக்கு ஊட்டி வந்தார்.

வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் சமஷ்டி ஆட்சி ஒன்று கிடைக்கும் என்ற வாக்குறுதியை கடந்த பொதுத்தேர்தல் காலம் தொடக்கம் அவர் கூறிவந்தார்.

சம்பந்தன் நம்பியிருந்த அரசியல் யாப்பில் வடக்கு கிழக்கு இணைப்பு இடம்பெறப்போவதில்லை என்பது உறுதியாகி விட்டது. மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படலாம், இதை தவிர வடகிழக்கு இணைப்பு அல்லது கஜேந்திரகுமார் தரப்பு கோரிவரும் ஒரு நாடு இரு தேசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. tna-colombo-1

உண்மையில் சொல்லப்போனால் 1987ல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை விட சற்று கூடிய அதிகாரங்கள் புதிய யாப்பின் ஊடாக கிடைக்க உள்ளது.

இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன் இரு தெரிவுகள் மட்டும் தான் உள்ளன.

• ஓன்று அரசியல் யாப்பில் கிடைக்கின்ற அதிகாரங்களை பெற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவது.

• இரண்டாவது அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்ளாது அரசியல் யாப்புக்கு எதிராக வாக்களித்து பாராளுமன்றத்திலிருந்து வெளியேறுவது.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெரிதும் நம்பியிருப்பது இந்தியா அமெரிக்கா போன்ற சர்வதேசத்தையாகும். ஆனால் அவர்கள் முதலாவது தெரிவையே வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக களமிறங்கியிருக்கும் கஜேந்திரகுமார், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரால் வழிநடத்தப்படும் தமிழ் மக்கள் பேரவையும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களும் இரண்டாவது தெரிவையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இப்பொழுது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்றும் இல்லாதவாறு மீளமுடியாத நெருக்கடிக்குள் சிக்கியிருக்கிறது என்பது மட்டும் மிகத்தெளிவாக தெரிகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் அதன் பேச்சாளர் சுமந்திரன் ஆகியோருக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு கிடைத்த வெற்றியாகவும் இதை கருத முடியும்.

வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம் இல்லை, அதற்கு அரசு ஒத்து வந்தாலும் கிழக்கில் உள்ள முஸ்லீம் சிங்கள மக்கள் இணங்கமாட்டார்கள் என்பதை எனது கட்டுரைகளில் பல தடவை சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன். தற்போது தமது கைகளுக்கு கிடைத்திருக்கும் கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தை இழப்பதற்கு முஸ்லீம்கள் ஒருபோதும் தயாராக இல்லை. வடக்கு கிழக்கை இணைத்து அம்மாகாணத்திற்கு முஸ்லீம் ஒருவரை முதலமைச்சராக்குவோம் என சம்பந்தனின் கோரிக்கையை கூட முஸ்லீம் தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
கிழக்கில் பெரும்பான்மையாக இருக்கும் முஸ்லீம் சிங்கள மக்களின் விரும்பத்திற்கு மாறாக சிறிலங்கா அரசாங்கம் மட்டுமல்ல சர்வதேசமும் எதனையும் செய்யாது.

கிழக்கில் முஸ்லீம்களுக்கு தனியான அலகு, சிங்கள பிரதேசங்களை மெனராகல போன்ற மாவட்டங்களுடன் இணைப்பது, கிழக்கில் உள்ள தமிழர் பிரதேசங்களை வடக்குடன் இணைப்பது போன்ற யோசனைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதற்கும் போதிய ஆதரவு கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

அரசாங்கத்துடன் நடந்த பேச்சுவார்த்தைகளின் ஆரம்பித்திலேயே வடக்கு கிழக்கு இணைப்போ அல்லது சமஷ்டியோ சாத்தியமில்லை என்பதை அரச தரப்பு கோடிட்டு காட்டியிருந்தது இதனை சம்பந்தன் மக்களுக்கு வெளிப்படையாக சொல்லியிருக்க வேண்டும்.

அரசியல் யாப்பை ஏற்றுக்கொள்ளாது, யாப்புக்கு எதிராக வாக்களித்து பாராளுமன்றத்தில் வெளியேறுவது என்ற தீர்மானத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுப்பதையே அரசாங்கமும் விரும்புகிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெளியேறினாலும் மகிந்த தரப்பு உறுப்பினர்களின் ஆதரவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தான் விரும்பிய அரசியல் யாப்பை அரசாங்கம் நிறைவேற்றிக்கொள்ளும்.

இந்த விடயங்களில் இந்திய அமெரிக்க போன்ற சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் பக்கமே இருக்கின்றனவே ஒழிய தமிழர்களின் எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றும் நிலையில் இல்லை.
எனவே தமிழர் தரப்புக்கு இருக்கும் ஒரே வழி அரசிற்கு அழுத்தத்தை கொடுத்து அரசியல் யாப்பின் ஊடாக பெறக் கூடிய அதிகாரங்களை பெற்றுவிட வேண்டும். அதை விடுத்து எடுத்தோம் கழித்தோம் என பாராளுமன்றத்திலிருந்து வெளியேறினால் அடுத்த கட்டம் என்ன?

எத்தனை நாளைக்கு ஊர்வலங்களையும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் செய்து கொண்டிருக்க முடியும்? அதனையாவது தமிழர்கள் ஒற்றுமையாக செய்யும் நிலையிலா இருக்கிறார்கள்?
அரசியல் யாப்பு விடயத்தில் முஸ்லீம்கள் மிக அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை ஒரு போதும் தவற விடுவதில்லை. தங்களின் பொதுப்பிரச்சினை என வருகின்ற போது தமிழர்களை போல நான்கு கூறுகளாக பிரிந்து நின்று சண்டை பிடிப்பவர்கள் அல்ல. அண்மையில் வில்பத்து பிரச்சினை வந்த போது அனைத்து கட்சிகளையும் சேர்ந்த முஸ்லீம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூடி ஒரே மேடையில் ஒற்றுமையாக தமது நிலைப்பாட்டை தெரிவித்தார்கள்.

புதிய அரசியல் யாப்பு விடயத்திலும் அனைவரும் ஒற்றுமையாக ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளனர். தங்களுக்குரிய பங்கு கிடைக்கும் என்பது அவர்களுக்கு தெரியும். அதனால் அவர்கள் மிக அமைதியாக இருக்கிறார்கள்.

ஆனால் தமிழர்கள் இத்தனை அழிவுகள் இழப்புக்கள் வந்த பின்பும், ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற உணர்வு வரவில்லை,

யதார்த்தங்களை புரிந்து கொண்டு புதிய அரசியல் யாப்பில் கிடைக்கின்ற அதிகாரங்களை பெற்று அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டுமா? அல்லது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும், கஜேந்திரகுமார் தரப்பும் எதிர்பார்ப்பது போல மீண்டும் ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமா? என்பதை தமிழர்கள் தீர்மானிக்க வேண்டிய காலம் இது.

( இரா.துரைரத்தினம் )thamilthanthi

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thayaparan

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பங்களை தூண்டிவிட்ட அரசியல்வாதிகள். – இரா.துரைரத்தினம். [May 28, 2017]

முள்ளிவாய்க்கால் அழிவுக்கு பின்னரும் தமிழ் மக்கள் ஒற்றுமைப்படவில்லை என்பதற்கு கடந்த ...
Jaffna Journalists. 2

ஊடகத்துறையில் தடைகளை விலக்கல் என்ற தொனிப்பொருளில் யாழ். ஊடகவியலாளர்களுக்கு கருத்தரங்கு [May 28, 2017]

யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் "தமிழ் கார்டியன்" ஊடக நிறுவனம் ...
IMG_9918

கலைநிகழ்வுகளால் களைகட்டிய சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றிய கலைமாலை 2017 [May 28, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ...
blood

மலையகத்தில் சீரற்ற காலநிலை- மகாவலி ஆறு பெருக்கெடுப்பு. [May 27, 2017]

மலையகப் பகுதியில் ஏற்பட்டு வரும் காலநிலை மாற்றத்தினால் நாளாந்தம் பல ...
3

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா [May 26, 2017]

சுவிஸ் செம்மாக்கிறேத்தன் அருள்மிகு ஸ்ரீகதிர்வேலாயுத சுவாமி ஆலய மகோற்சவ பெருவிழா ...
Arular

இனப்படுகொலைக்காக அரசாங்கத்தை தண்டிப்பதற்கு தமிழ் தலைவர்களுக்கு விருப்பம் இல்லை- ஈரோஸ் அருளர் குற்றச்சாட்டு VIDEO [May 26, 2017]

தமிழீழம் தமிழ் மக்களுக்கு சொந்தமானது. சிங்கள தேசம் சிங்கள மக்களுக்கு ...
IMG_5473

ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக வல்வெட்டித்துறையில் நீச்சல் தடாகம்- அடிக்கல் நாட்டப்பட்டது. VIDEO [May 26, 2017]

பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நினைவாக ...
North province

வடமாகாண பட்டதாரிகளின் செயலுக்கு வடமாகாணசபை கண்டனம். [May 25, 2017]

வடமாகாண சபையின் வாயில் கதவு களை மூடி மாகாணசபை உறுப்பினர்களை ...
North province

வடமாகாண அமைச்சர்களின் முறைகேடு பற்றிய விசாரணை அறிக்கை முலமைச்சரின் கையில். [May 25, 2017]

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்ட முறைகேட்டு குற்றச்சாட்டுக்கள் குறித்து ...
kansa

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் 51கிலோ கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன. [May 25, 2017]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோ 700 கிராம் நிறையுடைய ...