Saturday, June 24th, 2017

தமிழ் முஸ்லீம் மக்களிடையே மோதலை உருவாக்கிய புலனாய்வு பிரிவினரும், முஸ்லீம் தீவிரவாதிகளும். த. தே. கூட்டமைப்பின் தோற்றம்- அங்கம் 13.

Published on January 30, 2017-11:17 am   ·   No Comments

valaichenai (2)வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீண்டும் மீளக்குடியேறாதவரை தான் யாழ்ப்பாணம் செல்லப்போவதில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம் சபதம் எடுத்திருந்த நிலையில் கொழும்பில் யூன் 5ஆம் திகதி காலமானார்.

இறுதிக்கிரியைகளை அவரின் சொந்த ஊரான கரவெட்டியில் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. யூன் 7ஆம் திகதி கொழும்பிலிருந்து அவரின் சடலம் வவுனியாவுக்கு எடுத்து செல்லப்பட்டது. வவுனியா நகரசபை மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த போது வவுனி;யா அரசாங்க அதிபர் கே.கணேஸ், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி இராமச்சந்திரன், மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின்னர் ஓமந்தையில் வைத்து விடுதலைப்புலிகள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
பூதவுடல் விடுதலைப்புலிகளின் முழுமையான பாதுகாப்பு மரியாதைகளுடன் கிளிநொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு தூயவன் அரச அறிவியல்துறை கல்லூரி மண்டபத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரின் சடலத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் உட்பட விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கொழும்பிலிருந்து பூதவுடல் கொண்டுவரப்பட்ட போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் கொடி போர்த்தப்பட்டிருந்தது. கிளிநொச்சி அரசஅறிவியல் துறை கல்லூரி மண்டபத்தில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடி போர்த்தப்பட்டது. sivasithamparam_funeral_1
வவுனியா கிளிநொச்சி யாழ்ப்பாணம் என வடபகுதி முழுவதும் கறுப்பு வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தது.

அவரின் பூதவுடல் பின்னர் கரவெட்டிக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், வி.ஆனந்தசங்கரி, ஜோசப் பரராசசிங்கம், சிவசக்தி ஆனந்தன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

1989ஆம் ஆண்டு யூலை 13ஆம் திகதி கொழும்பில் வைத்து விடுதலைப்புலிகள் சுட்ட போது அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோருடன் சிவசிதம்பரம் அவர்களும் இறந்திருந்தால் அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோரின் பட்டியலிலேயே அவரும் இருந்திருப்பார். அவர் அன்று துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்ததால் அவர் இறந்த போதும் அதன் பின்னரும் அவருக்கான அஞ்சலிகளும் கௌரவங்களும் நினைவு கூரல்களும் இடம்பெற்றன. அவருக்கான சிலை கூட கரவெட்டியில் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழ் தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோருக்கு அவர்கள் பிறந்த யாழ்ப்பாணத்தில் ஒரு அஞ்சலிக் கூட்டமோ நினைவு சிலைகளோ இல்லை என்பதுதான் பெரும் சோகம்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும் இடையில் கிளிநொச்சியில் நல்லிணக்க ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டதையும் அதனை அடுத்து தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையில் ஒற்றுமையும் இனநல்லிணக்கமும் ஏற்படுவதை சிறிலங்கா அரசாங்கமும் படைகளும், படைகளுடன் இணைந்து செயல்பட்ட முஸ்லீம் ஆயுதக்குழுக்களும் விரும்பவில்லை. அதனை குழப்புவதற்கான சூழ்ச்சிகளில் அவர்கள் ஈடுபட ஆரம்பித்தனர்.

சிறிலங்கா படைகளுடன் இணைந்து செயல்பட்ட ஒசாமா முன்னணி என்ற முஸ்லீம் ஆயுதக்குழு கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்களிடையே மோதல்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ் மக்கள் மீதும் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவு அலுவலகங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.

jeyananthamoorthyயூன் 3ஆம் திகதி வாழைச்சேனையில் இருந்த ஊடகவியலாளர் எஸ்.ஜெயானந்தமூர்த்தியின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தனர். அதனை தொடர்ந்து மூதூரில் இருந்த விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அலுவலகத்தை ஆயுதங்களுடன் சென்ற முஸ்லீம் குழு உடைத்து சேதமாக்கியது.

இதனை தொடர்ந்து யூன் 24ஆம் திகதி மூதூரில் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலை சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கிய முஸ்லீம் ஆயுதக்குழுவே தூண்டி விட்டது. இதில் தமிழ் முஸ்லீம் இரு தரப்பையும் சேர்ந்த மக்கள் காயமடைந்தனர்.

இத்தாக்குதல்களின் பின்னணியில் முஸ்லீம் ஆயுதக்குழுவான ஒசாமா முன்னணியே இருந்தது என்ற செய்தியை வெளியிட்ட தமிழ் ஊடகவியலாளர் பி.சற்சிவானந்தம் அவர்களின் வீட்டின் மீது யூன் 26ஆம் திகதி முஸ்லீம் ஆயுதக்குழு தாக்குதல் நடத்தியது. அவரின் வீடும் உடமைகளும் பலந்த சேதமடைந்தது. சற்சிவானந்தமும் அவரின் குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பி சென்று தேவாலயம் ஒன்றில் தஞ்சம் அடைந்தனர். மூதூர் தாக்குதல் தொடர்பாக ஊடகவியலாளர் சற்சிவானந்தம் பிபிசி தமிழ் ஓசைக்கு வழங்கிய செவ்வியை தொடர்ந்து அவரை பழிவாங்கும் முகமாக முஸ்லீம் ஆயுதக்குழு இந்த தாக்குதலை நடத்தியதாக கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் கண்டனம் தெரிவித்திருந்தது. satchivanandam

மூதூரில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை தொடர்ந்து யூன் 27ஆம் திகதி ( 27.06.2002) அன்று மட்டக்களப்பு வாழைச்சேனையில் தமிழ் மக்கள் மீது அரச படைகளின் துணையுடன் முஸ்லீம் தீவிரவாத ஆயுதக்குழு தாக்குதல்களை நடத்தியது.

வாழைச்சேனையில் தமிழ் மக்கள் மீது முஸ்லீம் தீவிரவாத குழு நடத்திய தாக்குதலில் பெண்கள் வயோதிபர்கள் உட்பட 13பேர் படுகாயமடைந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் சிறுகாயங்களுக்கு உள்ளாகினர். ஒருவர் கொல்லப்பட்டார். கிரனட் குண்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தினர்.
ஓட்டமாவடி அண்டிய பகுதியில் வைத்து 10 தமிழ் பெண்களை முஸ்லீம் ஆயுதக்குழு கடத்தி சென்றதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

கறுவாக்கேணி கிராமத்திற்குள் புகுந்தும் தாக்குதல் நடத்தினர். இதில் 10வயது தமிழ் சிறுவன் உட்பட பலர் காயடைந்தனர்.

இதனை தொடர்ந்து வாழைச்சேனை பகுதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு படையினர் நகரில் நிலைகொண்டிருந்த போது முஸ்லீம் ஆயுதக்குழுக்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் தமிழர்களுக்கு சொந்தமான உடமைகளுக்கு தீவைத்தனர்.

valaichenaiவாழைச்சேனை நகரில் தமிழர்களுக்கு சொந்தமான கடைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு தீவைத்து கொழுத்தப்பட்டது. ஆறு கடைகள் முழுமையாக சேதமடைந்தது. ஏனைய கடைகள் பகுதி அளவில் சேதமடைந்தது.

வாழைச்சேனை பிரதேசசபைக்கு சொந்தமான கட்டிடத்தையும் முஸ்லீம் தீவிரவாத ஆயுதக்குழு தீவைத்து எரித்தது. இந்த சம்பவங்கள் அனைத்தும் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் முன்னிலையிலேயே நடைபெற்றதாக அப்பகுதி தமிழ் மக்கள் தெரிவித்தனர்.

பல தமிழ் குடும்பங்கள் பாதுகாப்பு கருதி வீடுகளை விட்டு வெளியேறினர். இதனை பயன்படுத்திக்கொண்ட முஸ்லீம்கள் தமிழர்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடித்தனர். ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த போதிலும் படையினரின் முன்னிலையில் இந்த வன்முறைகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் பதற்றமான சூழல் காணப்பட்டது. முஸ்லீம் பிரதேசங்கள் ஊடாக பயணம் செய்வதற்கு தமிழ் மக்கள் அஞ்சினர். போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.
இச்சம்பவங்களை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராசசிங்கம், தங்கவடிவேல், ஞா.கிருஷ்ணபிள்ளை, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சி.சண்முகம் ஆகியோர் வாழைச்சேனைக்கு சென்றனர். அவர்களுடன் ஊடகவியலாளர்களான உதயகுமார், நிராஜ் டேவிட் ஆகியோருடன் நானும் சென்றிருந்தேன். மட்டக்களப்பு மாவட்ட பிரதிபொலிஸ் மா அதிபரும் வந்திருந்தார். கொழும்பிலிருந்து பதில் பொலிஸ் மா அதிபர் ரி.ஆனந்தராசா தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் குழுவும் வாழைச்சேனைக்கு வந்திருந்தது.

சேதங்களை பார்வையிட்ட பின்னர் அரசாங்க அதிபர் சண்முகம் தலைமையில் வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கூட்டம் நடைபெற்ற போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் தாம் கண்ட சம்பவங்களை தெரிவித்தனர். valaichenai (2)

தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடந்த போது அத்தாக்குதல்களை தடுக்க வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜமால்டீன், வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பியசேனா ஆகியோர் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அவர்கள் அதனை பார்த்துக்கொண்டிருந்தனர் என பாதிக்கப்பட்ட மக்கள் இக் கூட்டத்தில் தெரிவித்தனர்.

பொலிஸ் சி.ஜ.டியினராக இருந்த மன்சூர், ரமீஸ், உவைஸ், பயிஸ் ஆகியோரே தமிழ் கடைகளுக்கு தீவைப்பதிலும் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதிலும் முன்னின்றனர் என்றும் பயிஸ் என்பவரின் துப்பாக்கி சூட்டிலேயே காண்டீபன் என்ற தமிழ் இளைஞர் கொல்லப்பட்டார் என்றும் நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆணைக்குழு ஒன்றை நியமித்து விசாரணை நடத்தி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கோரியிருந்தார். ஆனால் இந்த சம்பவங்கள் தொடர்பாக எந்த விசாரணைகளும் நடைபெறவில்லை. சம்பவம் இடம்பெற்ற போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த அனைத்து பொலிஸாரையும் இடமாற்றம் செய்வதாக பதில் பொலிஸ் மா அதிபர் ஆனந்தராசா உத்தரவாதம் வழங்கியிருந்தார்.

வாழைச்சேனையில் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களை பார்வையிட்ட பின் அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அங்கிருந்து மாலை 5மணியளவில் திரும்பிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிரானில் அதிர்ச்சி காத்திருந்தது.

கூட்டம் முடிவடைந்த பின்னர் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், ரி.தங்கவடிவேல், ஞா.கிருஷ்ணபிள்ளை, ரெலோ மாவட்ட பொறுப்பாளர் இந்திரகுமார் பிரசன்னா, மாவட்ட அரசாங்க அதிபர் சி.சண்முகம், மாவட்ட செயலக உயரதிகாரிகள், மற்றும் ஊடகவியலாளர்களும் ஐந்து வாகனங்களில் திரும்பிக்கொண்டிருந்தோம். மட்டக்களப்பு நகரில் இருந்த விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி தலைமையிலான விசேட அதிரடிப்படையினர் இரு வாகனங்களில் பாதுகாப்பிற்கு வந்திருந்தனர். ஏறாவூர் முஸ்லீம் பிரதேசத்தை கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பிற்கு வந்திருந்தனர்.

கிரான் சந்தியில் வீதிக்கு குறுக்கே நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தடிகள் பொல்லுகள் கற்களுடன் நின்றனர். எங்கள் வாகன தொடரணி செல்வதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன் அவ்வீதியால் மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையிலான பொலிஸ் அதிகாரிகள் சென்ற வாகனங்களை செல்ல விட்டவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்ற வாகனங்களை மறித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டக்களப்பு நகருக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம், திரும்பி செல்லுங்கள் என அவர்கள் எச்சரித்தனர்.

முஸ்லீம் பிரதேசத்திற்கு ஊடாக செல்வதுதான் அச்சுறுத்தலாக இருக்கும் என எண்ணிய எமக்கு தமிழ் கிராமம் ஒன்றின் ஊடாக தமிழ்மக்களின் பிரதிநிதிகள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருந்தது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

இந்த பகுதியில் வைத்து தான் ஒரு வருடத்திற்கு முதல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமலன் சௌந்தரநாயகம் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். எம்.பிமாரை வாகனத்துடன் வைத்து எரியுங்கடா என சிலர் சத்தம் இட்டனர். பின்னர் தான் அறிந்து கொண்டோம், இந்த சம்பவத்திற்கு கிரான் பொதுமக்கள் காரணமல்ல என்றும் அவர்களை தூண்டி விட்டவர்கள் வேறு நபர்கள் என்றும் அறிந்து கொண்டோம். ( தொடரும் )
இரா.துரைரத்தினம்.0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு [June 24, 2017]

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல் [June 23, 2017]

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு [June 23, 2017]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...
DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
januar

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம் [June 16, 2017]

முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத ...