Wednesday, March 29th, 2017

நாளை ஆரம்பமாகும் ஐ.நா.கூட்டத்தொடர். சிறிலங்காவுக்கு மற்றுமொரு இராஜதந்திர வெற்றி .

Published on February 26, 2017-10:19 am   ·   No Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத்தொடர் நாளை 27ஆம் திகதி ஜெனிவா பலைஸ் வில்சனில் அமைந்துள்ள ஐ.நா.மனித உரிமை பேரவை மண்டபத்தில் ஆரம்பமாக உள்ளது.

ஐ.நா.மனித உரிமை பேரவையின் இவ்வாண்டுக்கான தலைவர் ஜோஹன் அலக்சாண்டர் தலைமையில் இக்கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இவர் எல் சல்வடோர் நாட்டின் ஐ.நா நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாக கடந்த 2014ஆம் ஆண்டு தொடக்கம் பணியாற்றி வருகிறார். எல் சல்வடோர் நாட்டின் பிரதிவெளிவிவகார அமைச்சராக 1986 முதல் 1989வரை பதவி வகித்த இவர் அதன் பின்னர் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.சபையில் எல்சல்வடோர்நாட்டின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகவும் சிலகாலம் பதவி வகித்தார். இராஜதந்திர துறையில் நீண்ட அனுபவம் கொண்ட இவர் இவ்வாண்டு ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு தலைமை தாங்குகிறார்.

34ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப அமர்வில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக இவ்வாண்டு பதவி ஏற்ற அன்ரோனியோ குடேர்ஸ் முதன்முறையாக உலகத்தலைவர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகமாக பதவி ஏற்ற பின் மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் பங்கு கொள்ளும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராக 10 வருடங்களாக பதவி வகித்த அன்ரோனியோ குடேர்ஸ் இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகமாக பதவி ஏற்றுக்கொண்டார்.

போர்த்துக்கல் நாட்டின் பிரதமராக 1995ஆம் ஆண்டிலிருந்து 2002ஆம் ஆண்டுவரை பதவி வகித்த அவர் சிறந்த மனித உரிமை செயற்பாட்டாளராக கருதப்படுகிறார். சோசலிஸ்ட் இன்ரநஷனல் என்ற அமைப்பின் தலைவராக பதவி வகித்த பின் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராக பதவி ஏற்றார்.

போர்த்துக்கல் நாட்டின் அரசியல் தலைவராக இருந்தவர் என்ற ரீதியில் இலங்கையின் இனப்பிரச்சினை பற்றி நன்கு அறிந்த உலகத்தலைவராகவும் இவர் விளங்குகிறார். போர்த்துக்கல் ஒரு காலத்தில் இலங்கையை ஆட்சி செய்த நாடாகும். 2005ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராக பதவி ஏற்ற பின் இலங்கைக்கு விஜயம் செய்த அவர் வன்னிக்கு சென்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களையும் சந்தித்திருந்தார்.

வன்னிக்கு சென்று தமிழீழ விடுதலைப்புலிகளை சந்தித்த ஐ.நா. உயர்அதிகாரியாக அன்ரோனியோ குடேர்ஸ் விளங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அகதிகள் விடயத்திலும் மனித உரிமை விடயங்களிலும் நீண்ட அனுபவம் உடைய ஐ.நா. செயலாளர் நாயகம் அன்ரோனியோ குடேர்ஸ் அவர்களின் சிறப்புரையும் இக் கூட்டத்தொடரில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
ஆரம்ப நிகழ்வில் ஐ.நா. செயலாளர் நாயகம், மற்றும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் ஆணையாளர் ஆகியோரின் உரைகளை தொடர்ந்து உயர்மட்ட தலைவர்களின் அமர்வு இடம்பெறும். இந்த உயர்மட்ட தலைவர்களின் அமர்வு இரு தினங்கள் இடம்பெறும்.

மார்ச் மாதத்தில் இடம்பெறும் கூட்டத்தொடரில் முதல் அமர்வில் உயர்மட்ட தலைவர்களின் உரைகள் இடம்பெறும். அங்கத்துவ நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் மட்டுமே இந்த உயர்மட்ட அமர்வில் உரையாற்றுவார்கள்.

இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை உரையாற்ற உள்ளார்.

இக்கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக இலங்கையில் உள்ள சில அரசியல்வாதிகளும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்களின் ஊடாகவே நுழைவு அனுமதியை பெற்றுக்கொள்கின்றனர்.

நாடுகளின் பிரதிநிதிகள் மட்டும் அந்த நாட்டின் சார்பில் கலந்து கொள்ள முடியும். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது மாகாணசபை உறுப்பினர்களோ அந்த பதவி வழியாக ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடர்களில் கலந்து கொள்ள முடியாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் பதவி செய்யப்பட்ட சில அரசார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவே அரசபிரதிநிதிகள் தவிர்ந்த ஏனையோர் கலந்து கொள்கின்றனர். பதவி செய்யப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் பார்வையாளர்களாக கலந்து கொள்வதற்கும் பக்க அறைகளில் இரு மணிநேரத்திற்கு மேற்படாது கூட்டங்களை நடத்துவதற்கும் அனுமதி வழங்கப்படும்.

ஐக்கிய நாடுகள் சபை என்பது நாடுகள் இணைந்து உருவாக்கிய சபையாகும். அங்கு நாடுகளின் நலன்களே முக்கியத்துவம் பெறும். பிரேரணையை முன்வைப்பதற்கும், வாக்களிப்பதற்கும் நாடுகளுக்கு மட்டுமே உரிமை உண்டு. பார்வையாளர்களாக கலந்து கொள்ளும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பிரேரணைகள் பற்றி அல்லது தீர்மானங்கள் பற்றி கருத்து சொல்வதற்கோ அதன் மீது வாக்களிப்பதற்கோ அதிகாரம் கிடையாது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாடுகள் ஆங்கிலம் மற்றும் பிரென்ஸ் மொழிகளில் இடம்பெறுகின்ற போதிலும் உலக சனத்தொகை அடிப்படையில் அரபு, சீனா, ஆங்கிலம், பிரென்ஸ், ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய மொழிகள் ஐ.நாவின் உத்தியோகபூர்வ மொழிகளாக விளங்குகின்றன. இந்த மொழிகளை தவிர வேறு மொழிகளில் ஐ.நாவில் உரையாற்ற முடியாது.

இலங்கையிலிருந்து வருகை தந்து அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் சார்பில் கலந்து கொண்ட ஒருவர் ஐ.நா.விதிகளுக்கு முரணாக தமிழில் உரையாற்றிய பின் அந்த அரசசார்பற்ற நிறுவனத்திற்கு ஐ.நாவால் எச்சரிக்கை வழங்கப்பட்ட சம்பவமும் உண்டு. அது போல உயர்மட்ட தலைவர்கள், நாடுகளின் பிரதிநிதிகளின் உரைகள் முடிந்த பின் சில விடயங்கள் மீது இரு நிமிட உரையாற்ற அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதுண்டு.

பாலஸ்தீன பிரச்சினை சம்பந்தமாக பேசப்பட்டுக்கொண்டிருந்த போது அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் சார்பில் இலங்கையிலிருந்து சென்ற தமிழர் ஒருவர் இலங்கை பிரச்சினை பற்றி பேச முற்பட்ட போது அப்பேச்சு இடையில் நிறுத்தப்பட்டு எச்சரிக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.

வாக்களிக்கும் உரிமை கூட 47 உறுப்பு நாடுகளுக்கு மட்டுமே உண்டு. இந்த 47 நாடுகளையும் ஐ.நா.பொதுச்சபையில் அங்கம் வகிக்கும் நாடுகள் தெரிவு செய்கின்றன. உறுப்பு நாடாக இரு ஆண்டுகள் ஓரு நாடு பதவி வகிக்க முடியும்.

ஆபிரிக்காவிலிருந்து 13 நாடுகளும், ஆசிய பசுபிக் நாடுகளிலிருந்து 13 நாடுகளும், லத்தீன் அமெரிக்கன் மற்றும் கரீபியன் பகுதியிலிருந்து 8 நாடுகளும் மேற்கு ஐரோப்பாவிலிருந்து 7 நாடுகளும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்து 6 நாடுகளுமாக 47 நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உறுப்புநாடுகளாக உள்ளன.
இலங்கை இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உறுப்பு நாடு அல்ல. ஆசிய பசுபிக் நாடுகளிலிருந்து பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, ஈராக், யப்பான், கிர்கிஸ்தான், மொன்கோலியா, பிலிப்பைன்ஸ், கட்டார், கொரிய குடியரசு, சவுதிஅரேபியா, ஐக்கிய அரபு எமிறேட்ஸ் ஆகிய நாடுகளே உறுப்புரிமை கொண்ட நாடுகளாக உள்ளன.

வருடாந்தம் மூன்று தடவை நடைபெறும் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் மார்ச் மாத கூட்டத்தொடரே முக்கியத்துவம் பெறுகிறது. அதில் நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். மார்ச் மாத கூட்டத்தொடர் நான்கு வாரங்களும் யூன் மாத கூட்டத்தொடர் மூன்று வாரங்களும், செப்டம்பர் மாத கூட்டத்தொடர் மூன்று வாரங்களும் இடம்பெறும்.

ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளின் மனித உரிமை விடயங்கள் தொடர்பான யு.பி.ஆர். அறிக்கையும் இந்த அமர்வில் இடம்பெறும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அங்கத்துவ நாடு ஒன்றின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்படும். அந்த வகையில் மார்ச் 22ஆம் திகதி மத்திய ஆபிரிக்கா, கொங்கோ, மாலி, ஹைட்டி, லிபியா, உக்ரைன், கென்யா, சிறிலங்கா ஆகிய நாடுகளின் மனித உரிமை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும். இந்த விவாதத்தில் நாடுகளின் பிரதிநிதிகள் மட்டுமே கருத்து கூற முடியும்.

அன்றைய தினம் மாலை 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பான ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும். இந்த அறிக்கை முன்கூட்டியே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அன்றைய தினமே உத்தியோகபூர்வமாக மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை பற்றிய எதிர்பார்ப்பு தமிழர் தரப்பில் காணப்படும் அதேவேளை 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில விடயங்களை நீக்கி மேலும் சில விடயங்களை சேர்த்துக் கொள்ளும் புதிய பிரேரணை ஒன்று முன்வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரேரணையை பிரித்தானியா முன்வைக்க உள்ளது

இந்த பிரேரணைக்கான முன்அறிவித்தலை பிரித்தானியா மனித உரிமை பேரவைக்கு கொடுத்துள்ளது.
2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா முன்வைத்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது ஏகமனதாகவே அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது
அத்தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கும் விடயங்களை 18மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் இது தொடர்பான முழுமையான அறிக்கையை ஆணையாளர் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாத கூட்டத்தொடரில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த தீர்மானத்தில் சொல்லப்பட்டிருந்தது.

இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு எதனையும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டுக்களை தாங்கி ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளிவந்தாலும் இலங்கை அரசாங்கம் மீது ஐ.நா.சபை எந்த நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை என்பது திண்ணம். ஏனெனில் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளது, போர்க்காலத்தில் மானிடத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் மானிடத்திற்கு எதிரான குற்றத்தை இழைத்த சிறிலங்கா மீது இதுவரை எந்த நடவடிக்கைகளையும் ஐ.நா.சபை எடுக்கவில்லை.

அதேபோன்றுதான் இம்முறை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் வெளியிட இருக்கும் அறிக்கையிலும் சிறிலங்கா மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டாலும் அவை காலப்போக்கில் அழிந்து போன அல்லது மறக்கப்பட்ட அறிக்கைகளாகவே அமைந்து விடும்.

ஐ.நா.சபையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது கால இழுத்தடிப்பு செய்து வரும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் செயல்பட ஐ.நா.சபையில் எந்த ஒரு நாடும் இல்லை என்பதுதான் யதார்த்தம்.

ஐ.நா.பொதுச்சபையும், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையும் அரசுகளுக்கு இடையிலான ஒரு அமைப்பு ஆகும். அங்கத்துவ நாடு என்ற வகையில் சிறிலங்கா அரசை காப்பாற்றும் செயல்பாடுகளிலேயே அனைத்து நாடுகளும் உள்ளன.

கடந்த ஆட்சிக்காலத்தில் மேற்குலக நாடுகள் சிறிலங்கா மீது அழுத்தங்களை கொடுத்து வந்தன. ஆட்சி மாற்றத்தின் பின் அமெரிக்கா, பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகளும் சிறிலங்காவை காப்பாற்றும் முயற்சிகளிலேயே இறங்கி உள்ளன.

இதன் ஒரு கட்டம் தான் இம்முறை இலங்கை தொடர்பாக பிரித்தானியா முன்வைக்க உள்ள பிரேரணை. 2015 செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் வழக்குதொடுநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளடங்கிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்த வாக்கியத்தை நீக்கி உள்நாட்டு விசாரணை என மாற்றும் பிரேரணையை பிரித்தானியா முன்வைக்க உள்ளது.

இதன் மூலம் சிறிலங்காவின் இராஜதந்திர நடவடிக்கைகள் சர்வதேசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

( இரா.துரைரத்தினம் )0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Batticaloa  1

’கிழக்கின் சுயநிர்ணயம்’’ என் பார்வையில்!? ராம். [March 28, 2017]

எம் ஆர் ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை (100 ரூபா) இனிய ...
baseer seguthawuth

பஷீர் சேகு தாவுத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றனர். [March 28, 2017]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கள்ள மௌனம் காத்த இந்தியா [March 27, 2017]

தமிழர் தரப்பு தமது சக்திக்கு அப்பாற்பட்ட எதிர்பார்ப்புக்களை முன்வைத்து ஏமாந்து ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற விவாதம் ( முழுமையான வீடியோ) [March 22, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இன்று மனித உரிமை ஆணையாளர் அல்.ஹசைன் ...
london

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு பெண் உட்பட இருவர் பலி.15 பேர் காயம் [March 22, 2017]

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பெண் உட்பட ...
Zeid 1

கலப்பு நீதிமன்ற பொறிமுறையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்- அல்.ஹசைன் மீண்டும் வலியுறுத்தினார். Full VIDEO [March 22, 2017]

கடந்த 2015ல் நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானம் தொடர்பான அறிக்கையை ...
RC-34-IMADR-side-event

WOMEN’S AND MINORITY RIGHTS IN SRI LANKA’S TRANSITIONAL JUSTICE PROCESS. [March 22, 2017]

on Friday 17th March at the 34th session ...
06

இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்க குழு. [March 22, 2017]

கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் ...
1

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வு [March 22, 2017]

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வுக்கான முயற்சியில் ஈடுபடுவதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகள் ...
virasekara

ஜெனீவா வந்துள்ள சிறிலங்காவின் கடற்படைத்தளபதிக்கு சிக்கல் வருமா ? – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுவிசிடம் கைது செய்யக்கோரிக்கை !! [March 22, 2017]

ஜெனீவாவுக்கு வருகை தந்துள் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ரியர் ...