Friday, October 20th, 2017

கால அவகாசம் வழங்க கூடாது என்ற கோரிக்கையை ஐ.நா.சபை ஏற்றுக்கொண்டால் அது சிறிலங்காவுக்கு சாதகமாகவே அமையும்.

Published on March 4, 2017-5:36 pm   ·   No Comments

mangala-2ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானம் தொடர்பாக சிறிலங்காவுக்கு காலஅவகாசம் எதுவும் வழங்க கூடாது என ஒரு சாராரும், கால அவகாசம் வழங்க வேண்டும் என மற்றொரு சாரரும் காரசாரமான விவாதம் தமிழர் தரப்பில் நடைபெற்று வரும் வேளையில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் உரையாற்றிய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர காலஅவகாசம் வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை.

இருவருட கால அவகாசத்தை மனித உரிமை பேரவையில் அமைச்சர் மங்கள சமரவீர கோருவார் என இலங்கையில் உள்ள தமிழ் ஊடகங்கள் பரவலாக ஊகங்களை வெளியிட்டிருந்தன. ஆனால் கால அவகாசம் தேவை என்பதை எந்த இடத்திலும் கோராத அவர் புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின் செய்தவற்றை பட்டியலிட்டதுடன் காணாமல் போனோர் அலுவலகத்தை உருவாக்கியிருப்பதாகவும் நிலைமாறு கால நீதி பொறிமுறையின் செயற்பாடு பற்றியும் விளக்கினார்.

கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளரோ அல்லது ஐ.நா.சபை செயலாளர் நாயகமோ இலங்கை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லை.

அதன் பின் நாடுகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் 82பேர் உரையாற்றினர். இவர்களில் எவரும் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாகவோ அல்லது கால அவகாசம் தொடர்பாகவோ வழங்கப்பட வேண்டும் என்றோ சுட்டிக்காட்டவில்லை. பொதுவாக பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகள் இலங்கை விவகாரம் பற்றி தொட்டு செல்வது வழமையாகும். ஆனால் இம்முறை அமெரிக்காவை தவிர வேறு எந்த ஒரு நாடும் சிறிலங்கா என்ற வார்த்தையை உச்சரிக்கவே இல்லை.

அமெரிக்க நாட்டின் உயர்பிரதிநிதியாக கலந்து கொண்ட அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அனைத்துலக அமைப்புகள் விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் எரின் பார்க்லே இலங்கையில் மனித உரிமையை மேம்படுத்தவதற்கு ஐ.நா.மனித உரிமை பேரவை வழங்கி வரும் உதவிகளை பாராட்டியிருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை பக்கச்சார்பற்ற செயற்பாடுகளை வெளிப்படுத்தினால், ஆணையத்தின் செயற்பாட்டை மேலும் பலமுடையதாக்கும் என்றும் தெரிவித்த அவர் சிறிலங்கா விவகாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாட்டை முன்னுதாரணமாகவும் சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவில் கடந்தகால மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கான தொழில்நுட்ப உதவிகளை வழங்கியும், சீர்திருத்தங்களின் முன்னேற்றத்துக்கான வினையூக்கியாகவும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடு அமைந்திருந்தது என அவர் பாராட்டு தெரிவித்தார்.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற தவறிவிட்டதாக தமிழர் தரப்பாலும், மனித உரிமைகள் அமைப்புகளாலும் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் அங்கு உரையாற்றிய 82 நாடுகளில் எந்த ஒரு நாடும் சிறிலங்காவின் இந்த போக்கை சுட்டிக்காட்டவோ குற்றம் சாட்டவோ முன்வரவில்லை.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் வழங்க கூடாது என்ற கோரிக்கையை ஐ.நா.சபை ஏற்றுக்கொண்டால் அது சிறிலங்காவுக்கு சாதகமான விடயம் மட்டுமல்ல பெரும் வெற்றியும் கூட.

இலங்கையில் உள்ள தீவிரவாத போக்கு கொண்ட தமிழ் அரசியல் கட்சிகளான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள 11 நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க கூடாது என கூறியிருக்கிறார்களே, அப்படியானால் சிறிலங்காவுக்கு எப்படி இது சாதகமாக இருக்கும் என்ற கேள்வி எழலாம்.

ஐ.நா.தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவதற்கு சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்ற கோரிக்கையை முன்வைப்பவர்கள் அதற்கு அடுத்த கட்டமாக ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு அதனை கொண்டு செல்லும் அதிகாரமோ செல்வாக்கோ இருக்கிறதா என்பதை கூறவில்லை.

இனி கால அவகாசம் இல்லை என ஐ.நா.சபை அறிவித்தால் அதைப்போன்ற மகிழ்ச்சி சிறிலங்காவுக்கு வேறு எதுவும் இருக்க முடியாது. இப்போது சர்வதேசத்திடமிருந்து வரும் நெருக்கடிகள் அழுத்தங்கள் அனைத்தும் நீங்கி, ஐ.நா.தீர்மானத்தை கிடப்பில் போடுவதற்கு பெரும் வாய்ப்பாகவே அமையும். இதனால் ஐ.நா. மனித உரிமை பேரவை சிறிலங்காவுக்கு கால அவகாசத்தை வழங்கி தீர்மானத்தை நடைமுறைப்படுத்தவதற்கான அழுத்தங்களையே பிரயோகிக்கும்.

கால அவகாசம் வழங்கக் கூடாது என கோருபவர்கள் இதனை ஐ.நா.பாதுகாப்பு சபைக்கும், சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கும் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சம்பந்தப்பட்ட நாடு நடைமுறைப்படுத்தவில்லை என்றால் அல்லது அதனை நிராகரித்து உதாசீனம் செய்தால் ஐ.நா.மனித உரிமை பேரவையில் ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு அதனை சமர்ப்பிப்பதற்கான பிரேரணையை ஐ.நா.மனித உரிமை பேரவையில் தற்போது உறுப்பு நாடாக இருக்கும் 47 நாடுகளில் ஏதாவது ஒரு நாடு முன்வைக்க வேண்டும், பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்பட வேண்டும். இந்த 47 உறுப்பு நாடுகளில் எந்த நாடு இலங்கைக்கு எதிராக இந்த பிரேரணையை முன்வைக்கும்?

ஐ.நா. மனித உரிமை பேரவையில் 47 நாடுகள் உறுப்புரிமை பெற்றிருக்கின்றன. ஐ.நா.பொதுச்சபையில் 193 நாடுகள் அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இதில் எந்த ஒரு நாடும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டுவருவதற்கு தயார் இல்லை. ஐ.நா. சபையில் உள்ள அனைத்து நாடுகளும் இலங்கைக்கு சார்பான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன.

ஐ.நா.வில் தமக்கு சாதகமான சூழலே நிலவுகிறது என்பதை சிறிலங்கா நன்கு அறிந்து வைத்திருக்கிறது. அதற்கு ஏற்ற வகையில் சிறிலங்கா இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.

எனவே ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை என்றால் இலங்கைக்கு எதிராக ஐ.நா.பாதுகாப்பு சபைக்கோ அல்லது சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றிற்கோ கொண்டு செல்வதற்கான சூழல் அறவே கிடையாது. இதனால் தான் சிறிலங்கா அரசாங்கம் எந்த பதட்டமும் இன்றி ஐ.நா.சபையையும் சர்வதேச நாடுகளையும் கையாண்டு வருகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களை சிறிலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்துகிறதா என கண்காணிப்பதற்கு ஐ.நா.மனித உரிமை பேரவை அலுவலகம் கண்காணிப்பு ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தது இந்த ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இலங்கைக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்து இடைக்கால அறிக்கை ஒன்றை இவ்வாரம் மனித உரிமை பேரவைக்கு சமர்ப்பித்துள்ளார்கள்.

இந்த அறிக்கையில் கூட 2015ஆம் ஆண்டு நிறைவேற்றபட்ட பிரேரணையின் தீர்மானத்தை ஒரு வருட காலத்துக்குள் அமுலாக்க வேண்டும் என கூறப்பட்டிருக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்திற்கு இன்னும் ஒருவருட கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்ற சிபார்சை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் அலுவலக கண்காணிப்புக்குழு செய்திருக்கிறது.

பிரேரணை நிறைவேற்றப்பட்டு 18மாதங்கள் கடந்துள்ள போதிலும் அதில் உள்ள விடயங்களை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பாக பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறது. எனவே பிரேரணையில் சொல்லப்பட்ட விடயங்களை அமுல்படுத்துவதற்கு இன்னும் ஒருவருட காலம் அவகாசம் வழங்க வேண்டும். அந்த ஒருவருடகாலத்தில் சிறிலங்கா அதனை அமுல்படுத்தவில்லை என்றால் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் அறிவிக்க முடியும் என அந்த கண்காணிப்பு குழு பரிந்துரை செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு இதனை பாரப்படுத்துவதாக இருந்தால் அதற்கான தீர்மானத்தை ஐ.நா.மனித உரிமை பேரவை மேற்கொள்ள வேண்டும், அந்த தீர்மானத்தை கொண்டுவருவதற்கு உறுப்புரிமை பெற்ற 47 நாடுகளில் ஒரு நாடாவது முன்வருமா? இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டுவருவதற்கு மட்டுமல்ல, இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்கு கூட இன்று எந்த நாடும் தயாராக இல்லை. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருப்பதாக கடந்த காலங்களில் பிரேரணையை முன்வைத்து நிறைவேற்றிய அமெரிக்கா கூட இன்று மனித உரிமைகளில் முன்னேற்றம் அடைந்து வரும் நாடாக இலங்கையை உதாரணம் காட்டும் நிலை வந்துள்ளது.

ஐ.நா.மனித உரிமை அலுவலகத்தால் நியமிக்கப்பட்ட கண்காணிப்புக்குழு கூட பரிந்துரைகளை தான் செய்ய முடியும். பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்றால் அதனை ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு கொண்டு சென்று சிறிலங்காவிற்கு தண்டனை வாங்கி கொடுக்கும் அதிகாரம் ஐ.நா.மனித உரிமை பேரவையின் கண்காணிப்பு குழுவுக்கு கிடையாது. இந்த விடயத்தை ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லும் அதிகாரம் உறுப்பு நாடுகளுக்கு தான் உண்டு. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற அக்கறையோடு இந்த விடயத்தை ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு எந்த நாடு கொண்டு செல்லும், அப்படி கொண்டு சென்றாலும் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரத்தை கொண்ட அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அனுமதிப்பார்களா? வீட்டோ அதிகாரம் கொண்ட இந்த ஐந்து நாடுகளில் ஒரு நாடு எதிர்த்தால் கூட அத்தீர்மானம் தோல்வியடைந்து விடும். இந்நிலையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் வாசல் படிக்கு செல்வதை கூட இந்த நாடுகள் அனுமதிக்கப்போவதில்லை.

அத்துடன் ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மனித உரிமை மீறல்கள் சம்பந்தப்பட்டதாகும். உதாரணமாக வடகொரிய பிரச்சினை ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அந்த பிரச்சினையை மனித உரிமை பேரவையே கையாண்டு வருகிறது.

எனவே சிறிலங்காவை தொடர்ந்து சர்வதேச அழுத்தங்களுக்குள் வைத்திருக்க வேண்டுமாக இருந்தால் ஐ.நா.மனித உரிமை பேரவை தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு கால அவகாசத்தை வழங்க வேண்டிய தேவை ஐ.நா.மனித உரிமை பேரவைக்கு உண்டு.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் தமிழ் டயஸ்போறா என சொல்லப்படும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் பல வேலை செய்கின்றன. அவை ஐ.நா.மனித உரிமை பேரவையில் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களாக இல்லாவிட்டாலும் வேறு பதிவு செய்யப்பட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக அனுமதி அட்டையை பெற்று அங்கு வந்து பிரசார வேலைகளில் ஈடுபடுகின்றன.

இவற்றில் முக்கியமானவை பிரித்தானிய தமிழர் பேரவை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆகியனவாகும்.
இதில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து சிறிலங்காவை கண்காணிக்கும் பன்னாட்டு நிபுணர் குழு ஒன்றை நியமித்திருந்தது.

பிரித்தானியாவை சேர்ந்த சட்டத்தரணி பீற்றர் ஹெய்னெஸ் ( கியூ.சி) தலைமையில் அமெரிக்காவை சேர்ந்த சட்டத்தரணி அன்றீவ் லுனுஜ்ஜி பிரித்தானியாவை சேர்ந்த சட்டத்தரணி றிச்சாட் றொஜெர், அமெரிக்காவை சேர்ந்த சட்டத்தரணி ஹெதர் றைன், ஓய்வு பெற்ற நீதிபதி அஜித் சா, சர்வதேச நீதிபதிகள் குழுவில் அங்கம் வகித்த ஜொவ்ரி றொபேட்சன் ஆகிய ஆறு பேர் அடங்கிய நிபுணர் குழுவை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நியமித்திருந்தது.

இக்குழு நிலமைகளை ஆராய்ந்து தனது அறிக்கையை ஜெனிவா ஊடக மையத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அறிக்கையினை வெளியிட்ட தோடு ஊடக மகாநாட்டையும் நடத்தியிருந்தது.

அதில், சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து நேர்மையற்ற முறையில் நடக்குமானால், பன்னாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்குத் தொடுனர்களின் பங்கேற்புடன் கலப்புப் போர்க்குற்ற நீதிமன்றம் அமைத்தல் உள்ளிட்ட ஐநா மனித உரிமை மன்றத்தின் 30.1 தீர்மானத்தை எழுத்திலும் கருத்திலும் செயலாக்குவதற்கு முகாமையான நடவடிக்கைகள் எடுக்கத் தவறுமானால், ஐநா பாதுகாப்பு மன்றம் ஓராண்டுக்குள் சிறிலங்கா நிலைமையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்ப வேண்டும் என கூறியிருந்தது.

ஐ.நா.தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஒரு வருடகால அவகாசத்தை வழங்கி அதற்குள் அமுல்படுத்தவில்லை என்றால் சிறிலங்கா மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது. காலஅவகாசம் வழங்கவில்லை என்றால் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து சிறிலங்கா பொறுப்பு கூறாது நளுவி செல்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டு விடும் என்றும் இவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐ.நா.மனித உரிமை பேரவையிலோ அல்லது ஐ.நா.பாதுகாப்பு சபையிலோ தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் கவனத்தில் எடுக்கப்பட்ட வரலாறு கிடையாது. நாடுகளின் நலன்சார்ந்த விடயங்களே அங்கு முதன்மை பெறும். அத்துடன் ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயல் இழந்து போகும் வகையில் அச்சபை ஒரு போதும் செயல்படாது. கால அவகாசத்தை கொடுத்து தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம் கொடுக்கவே ஐ.நா.மனித உரிமை பேரவை விரும்பும்.

2015 ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துங்கள் என அழுத்தம் கொடுக்கும் ஐ.நா.சபையால் கால அவகாசத்தை வழங்காமல் இருக்க முடியாது. தீர்மானத்தில் சொல்லப்பட்ட சில விடயங்களை நீக்க வேண்டும் என எதிர்பார்க்கும் சிறிலங்கா தரப்புக்கு கால அவகாசம் கிடையாது என கூறுவது தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாது நளுவி செல்வதற்கு பெரும் வாய்ப்பு கிடைத்து விடும்.
அதைத்தான் சிறிலங்கா எதிர்பார்க்கிறது.

கால அவகாசத்தை வழங்காது சிறிலங்காவை தண்டிக்கும் வகையில் ஐ.நா.பாதுகாப்பு சபைக்கோ அல்லது சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்திற்கோ பாரப்படுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்ப்பது நியாயம் தான்.

ஆனால் இதை ஐ.நா.பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வது யார்? பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த நாடு இதை செய்யும்? 0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...