Wednesday, March 29th, 2017

சர்வதேச மன்றத்தில் உணர்ச்சி அரசியல்கள் வெற்றியளிக்கப்போவதில்லை.

Published on March 12, 2017-2:15 pm   ·   No Comments

UNOஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான சிறிலங்கா அரசு உள்நாட்டில் ஒன்றையும், சர்வதேச சமூகத்தின் முன் இன்னொன்றையும் பேசி வருவதை ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரை அவதானிப்பவர்களுக்கு நன்கு புரியும்.

கடந்த 2015 செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள், வழக்குதொடுநர்கள், வழக்கறிஞர்களை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், இதற்கான அலுவலகம் ஒன்று இலங்கையில் நிறுவ வேண்டும் என சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இதற்கான எந்த வித ஆரம்பகட்ட நடவடிக்கைகளை கூட எடுக்காத சிறிலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப்போவதில்லை என்றும், உள்நாட்டு நீதிக்கட்டமைப்பின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறிவருகின்றனர்.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கப்போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அண்மைக்காலத்தில் தென்னிலங்கை மக்கள் மத்தியில் கூறிவருகிறார்.

ஆனால் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணைக்கு தாம் ஆதரவளிப்பதாகவும், இன்னும் இரண்டு வருடகாலத்தில் தீர்மானத்தில் சொல்லப்பட்ட விடயங்களை நிறைவேற்றுவோம் என்றும் கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா.மனித உரிமை பேரவையின் பக்க அறையில் நடந்த முறைசாரா கூட்டத்தில் ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க உறுதி அளித்திருக்கிறார். UNO 2

போருக்குப் பிந்திய நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்றச்சாட்டுகளுக்குப் பொறுப்புக்கூறுதல், போன்ற விடயங்களை உள்ளடக்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், 2015 ஒக்ரோபரில் நிறைவேற்றப்பட்ட 30.1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரும் பிரேரணை ஒன்றை தற்போது நடைபெற்று வரும் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் பிரித்தானியா முன்வைக்க உள்ளது. இதற்கு அமெரிக்கா, உட்பட சில நாடுகள் இணைஅனுசரணை வழங்க உள்ளன.

புதிய பிரேரணையின் நகல் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உறுப்பு நாடுகளின் ஆலோசனைகளை பெறும் நோக்கில் கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா.மனித உரிமை பேரவையின் பக்க அறை ஒன்றில் பிரித்தானியா கூட்டம் ஒன்றை நடத்தியிருந்தது.

இந்த கூட்டத்திற்கு அமெரிக்கா, சிறிலங்கா உட்பட பெரும்பாலான உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் 23ஆம் திகதி ஐ.நா.மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட்டு இப்பிரேரணை நிறைவேற்றப்படும். சிறிலங்கா இதற்கு ஆதரவு அளித்திருப்பதால் கடந்த முறையை போன்று வாக்கெடுப்பு இன்றியே நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பான இடைக்கால அறிக்கையை அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறும் 37ஆவது கூட்டத்தொடரிலும் விரிவான அறிக்கையை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறும், 40ஆவது கூட்டத்தொடரிலேயே சமர்ப்பிப்பார் என அந்த தீர்மான நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்தில், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் சர்வதேச நீதிவிசாரணை, தொடர்பான அனைத்துப் பரிந்துரைகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30.1 தீர்மானத்தில், உண்மை கண்டறியும் மற்றும் இழப்பீடுகள் வழங்கும் பொறிமுறைகளை அமைக்க வேண்டும் என்றும், போரின் போது இழைக்கப்பட்ட மோசமான மீறல்கள் குறித்து விசாரிக்க வெளிநாட்டு நீதுpபதிகளின் பங்களிப்புடன் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்றும், நாட்டின் மனித உரிமைகள் நிலையை முன்னேற்றுவதற்கு பரந்தபட்ட அளவில் சட்ட மற்றும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

30.1 இலக்க தீர்மானத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா எடுத்துள்ள நடவடிக்கைகள், செய்ய தவறிய வேலைகள், உட்பட ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையை தாம் கவனத்தில் கொள்வதாகவும், ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் செய்திருக்கும் பரிந்துரைகளை கவனத்தில் எடுத்து சிறிலங்கா அரசாங்கம் அதனை உரிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும் என்றும் புதிய தீர்மானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

UNO 1இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிக்க ஐ.நாவுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் சிறிலங்காவிடம் இந்த தீர்மான வரைவில் கோரப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பான இந்த தீர்மான வரைவு குறித்து விவாதிக்கும் முதல் முறைசாராக் கூட்டம், கடந்த செவ்வாய்க்கிழமை பக்க அறை ஒன்றில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கனடா, சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சுவீடம் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் 2015ஆம் ஆண்டு செப்டம்பரில் நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானத்தை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் தவறி விட்டதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சிறிலங்கா வாக்குறுதி அளித்த விடயங்களை நிறைவேற்றுவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டின.

வெறுமனே ஐ.நா.மனித உரிமை பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு இருப்பதால் சிறிலங்காவில் எதுவும் நடைபெறப்போவதில்லை என்பதை கடந்த காலங்களில் நாங்கள் பார்த்திருக்கிறோம், எனவே எந்தெந்த வேலைகளை எந்த கால எல்லைக்குள் செய்ய வேண்டும் என்ற கால அட்டவணை ஒன்று தயாரிக்க வேண்டும் என்றும், இவை நிறைவேற்றப்பட்டிருக்கிறதா என ஐ.நா.அலுவலகம் கண்காணிக்க வேண்டும் என்றும் சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சில நாடுகள் வலியுறுத்தின.

ஐரோப்பிய நாடுகள் சிறிலங்காவின் நடவடிக்கைகளில் அவநம்பிக்கை தெரிவித்த அதேவேளை சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், சீனா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் சிறிலங்காவில் மனித உரிமைகள் முன்னேற்றம் அடைந்திருப்பதாகவும், சிறிலங்கா செய்த நன்மையான விடயங்களையும் இந்த தீர்மானத்தில் குறிப்பிட வேண்டும் என கோரின.

இதற்கு பதிலளித்த பிரித்தானியா இந்த தீர்மானத்தில் என்ன விடயங்களை சேர்க்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ அதனை எழுத்தில் தாருங்கள் என சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகளுக்கு தெரிவித்தது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புக்களுக்கும் கருத்துக்களை சொல்ல அனுமதிக்கப்பட்டது.

போருக்கு பின்னர் சிறிலங்காவில் நல்லிணக்கம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் சொன்னாலும் அங்கு தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருவதாகவும் யுத்தம் முடிந்த பின்னும் மக்களின் காணிகளில் இராணுவம் முகாம் அமைத்திருப்பதாகவும் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டியது.

பொதுமக்களுக்கு சொந்தமான மிகச்சொற்பமான காணிகளே விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், வடபகுதியில் இராணுவ குறைப்பை செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டிய மனித உரிமை கண்காணிப்பகம் இப்போதும் அங்கு கைதுகள், சித்திரவதைகள் தொடர்வதாக சுட்டிக்காட்டியது. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக இரண்டு வருடங்களுக்கு முதல் சிறிலங்கா உறுதியளித்திருந்தது. ஆனால் இதுவரை பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து கைதுகள் இடம்பெறுவதாகவும் சித்திரவதைகள் இடம்பெறுவதாகவும் மனித உரிமை கண்காணிப்பக பிரதிநிதி சுட்டிக்காட்டினார்.

சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்குவதுடன் நின்று விடாது கால அட்டவணை ஒன்றை தயாரித்து அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா என கண்காணிப்பதற்கான அலுவலகம் ஒன்றையும் இலங்கையில் ஐ.நா.சபை நிறுவ வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் செயலாளர் ச.வி.கிருபாகரன் சிறிலங்கா சர்வதேசத்தில் நாடகம் ஆடுவதாக குற்றம் சாட்டினார்.

நான்கு தூண்களை மையமாக வைத்து ஆட்சி நடத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் பிரசாரம் செய்து வருகிறது. சிறிலங்கா நான்கு தூண்களை வைத்துதான் ஆட்சி நடத்தகிறது என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். வடக்கு கிழக்கில் குடியேற்றம், சிங்கள மயமாக்கம், பௌத்த மயமாக்கம், இராணுவ மயமாக்கம் ஆகிய நான்கு தூண்களில் தான் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறது. நீங்கள் கால அவகாசம் கொடுக்கும் இந்த இருவருடத்தில் அவர்கள் வடக்கு கிழக்கில் சிங்கள குடியேற்றம், பௌத்த மயமாக்கம், இராணுவ மயமாக்கம் என்பவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவார்களே ஒழிய நல்லிணக்கமோ, உண்மையை கண்டறியும் நீதி விசாரணையோ நடைபெறப் போவதில்லை என தெரிவித்தார்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஒஸ்ரேலியாவிலிருந்து வந்து கலந்து கொண்ட மாணிக்கவாசகம் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் சிறிலங்கா அரசாங்கம் இலகுவாக செய்யக் கூடிய விடயங்களை கூட செய்யாது தட்டிக்கழித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்திருக்க முடியும். இலங்கையின் அரசியல் யாப்பின் படி தண்டனை வழங்கப்பட்டவர்களையும், அல்லது தண்டனை வழங்கப்படாது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பவர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. மிகச்சாதாரணமாக நிறைவேற்றக் கூடிய அரசியல் கைதிகளின் விடுதலையை கூட செய்யாது இழுத்தடித்து வரும் சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றும் என நம்புவது நகைப்புக்குரிய விடயம் என மாணிக்கவாசகம் தெரிவித்தார்.

தமிழ் தரப்பினர் இக்குற்றச்சாட்டுக்களை சுமத்திய போது சிறிலங்கா அரச பிரதிநிதியாக கலந்து கொண்ட சிறிலங்காவின் நிரந்தர பிரதிநிதி கலாநிதி ரவிநாத ஆரியசிங்க மௌனமாகவே இருந்தார். கூட்டத்தை நடத்திய பிரித்தானியா கூட இதற்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை.

ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை இலகுவாக சமாளித்து விடலாம் என சிறிலங்காவால் கடந்து போக முடியாது.

2014ஆம் ஆண்டு ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது தமிழர் தரப்பில் சிலர் தீர்மான நகலை எரித்தார்கள். தமிழகத்தில் சிலர் அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம் என ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

ஆனால் அத்தீர்மானத்தின் ஊடாக பல உண்மைகள் வெளிவந்தது என்பதை சிலர் உணர தவறிவிட்டனர்.
இத்தீர்மானத்தை அடுத்தே ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மூவர் அடங்கிய விசாரணைக்குழுவை நியமித்தார்.

பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அடிசாரி, கம்போடியா கெமுரூச் போர்க்குற்ற தீர்ப்பாயத்தின் நீதிபதியாக இருந்த சில்வியா காட்ரைட், பாகிஸ்தான் முன்னாள் உயர்நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்க தலைவர் அஸ்மா ஜகாங்கிர் ஆகியோரை உள்ளடக்கி ஒரு விசாரணை குழுவை ஆணையாளர் நியமித்தார். அக்குழுவை இலங்கைக்கு வர அப்போது இருந்த மகிந்த ராசபக்ச அரசாங்கம் அனுமதிக்கவில்லை. எனினும் இலங்கைக்கு வெளியில் இருந்தே சாட்சிகளையும் ஆதாரங்களையும் பெற்று விசாரணைகளை நடத்தி அந்த அறிக்கையை ஐ.நா.மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்திருந்தது.

இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான படுகொலைகள் இடம்பெற்றிருக்கிறது அதை விசாரித்து குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனையும் பாதிக்கப்பட்டோருக்கு நீதியும் வழங்கவேண்டும் என்று இவ்விசாரணைக்குழு பரிந்துரைத்தது.

இந்த மூவரடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கையை அடியொற்றியே 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் ; Report of the OHCHR  Investigation on Sri Lanka ( OISL)   என்ற 260 பக்க அறிக்கையை வெளியிட்டார்.

மூவர் அடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கை, ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் 260பக்க அறிக்கை ஆகியனவே இலங்கையில் மனித குலத்திற்கு எதிரான படுகொலைகள் இடம்பெற்றிருக்கிறது என்பதை நிரூபிக்கும் சர்வதேச ஆவணமாக திகழ்கிறது. பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும், அரசார்பற்ற நிறுவனங்களும் இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்ந்ததாக அறிக்கைகளை வெளியிட்டிருந்தாலும் ஐ.நா.சபை போன்ற சர்வதேச சபை ஒன்றின் ஆவணத்தில் இலங்கையில் மனித குலத்திற்கு எதிரான படுகொலை நடைபெற்றிருக்கிறது என வெளிவந்தது அதுவே முதல் தடவையாகும்.

இது 2014ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இந்த அறிக்கை வெளிவந்த போது அமெரிக்க தீர்மானம் அயோக்கிய தீர்மானம் என நகலை எரித்தவர்கள் வாய்பொத்தி மௌனமாக இருந்தனர். அந்த தீர்மானத்தை எதிர்த்த சில தமிழ் அரசியல்வாதிகளும் பின்னர் இந்த அறிக்கைகள் வெளிவந்த போது அதனை வரவேற்றனர்.

இந்த மூவரடங்கிய விசாரணைக்குழு, மற்றும் ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் 260 பக்க அறிக்கை ஆகியனவற்றை தொடர்ந்தே அதில் சொல்லப்பட்டிருக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரியோ 2015 ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்கா தலைமையிலான நாடுகள் 30.1 தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தன.

இந்த தீர்மானங்களை சிறிலங்கா நிறைவேற்றா விட்டாலும் சிறிலங்கா தொடர்ந்து ஐ.நா.சபையால் கண்காணிக்கப்படுகிறது என்பது உண்மை.

இறையாண்மை உள்ள நாட்டில் வெளிநாட்டு சக்திகள் தலையிட முடியாது என சிறிலங்காவின் சிங்கள தலைவர்கள் வீராப்பு பேசினாலும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் அறிக்கையாளர்கள் தொடர்ச்சியாக இலங்கையை கண்காணித்து கொண்டுதான் இருப்பார்கள். இவற்றை சிறிலங்கா அரசாங்கம் இலகுவாக கடந்து போக முடியாது.

சர்வதேச நீதிபதிகளை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கு தமது அரசியல் யாப்பில் இடமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கூறினாலும் உள்நாட்டு நீதித்துறை நம்பகத்தன்மையுடன் இல்லை என்பதை ரவிராஜ் படுகொலை தீர்ப்பு, குமாரபுரம், மைலந்தனை படுகொலை தீர்ப்புக்கள் சர்வதேச நீதிபதிகளின் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இதனை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டிருக்கும் அறிக்கையிலும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
ரவிராஜ் படுகொலை மற்றும் குமரபுரம் படுகொலை ஆகியவற்றுக்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், சிங்கள ஜூரிமார்களைக் கேட்டுப் பெற்றனர். அதனை அடுத்து அவர்கள் குற்றமற்றவர்கள் என அந்த ஜூரிமார் தீர்மானித்தனர். இச்சம்பவங்கள் பற்றிய விசாரணைகளின் கவலைக்குரிய நிலைமையை குறிப்பிடும் அல்-ஹூசைன் இவற்றை முறையாகக் கையாள அரசாங்கம் திராணியற்று இருக்கிறது அல்லது திடசங்கற்பம் இன்றி இருக்கிறது எனக் குற்றம்சாட்டுகிறார்.

எனவே ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும், ஆணையாளரின் அறிக்கைகளையும் தமிழர் தரப்பு சரியாக கையாள வேண்டும், வெறும் உணர்ச்சி வேகத்தில் தீர்மான நகல்களை எரிப்பதாலோ அல்லது தீர்மானத்தை நிராகரிப்பதாக அறிக்கை விடுவதாலோ எதனையும் சாதித்து விட முடியாது.

ஐ.நா.மனித உரிமை பேரவை போன்ற சர்வதேச மன்றத்தில் உணர்ச்சி அரசியல் செய்வதை விட சர்வதேச நகர்வுகளை புரிந்து கொண்டு சர்வதேச நாடுகளின் ஆதரவை பெறுவதே தமிழர் தரப்பின் முன் இருக்கும் தேவையாகும்.

( இரா.துரைரத்தினம் )  Photo by sunanda Desapriya. 0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Batticaloa  1

’கிழக்கின் சுயநிர்ணயம்’’ என் பார்வையில்!? ராம். [March 28, 2017]

எம் ஆர் ஸ்டாலின் எழுதிய புத்தகத்தை (100 ரூபா) இனிய ...
baseer seguthawuth

பஷீர் சேகு தாவுத்திடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றனர். [March 28, 2017]

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கள்ள மௌனம் காத்த இந்தியா [March 27, 2017]

தமிழர் தரப்பு தமது சக்திக்கு அப்பாற்பட்ட எதிர்பார்ப்புக்களை முன்வைத்து ஏமாந்து ...
Zeid 1

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நடைபெற்ற விவாதம் ( முழுமையான வீடியோ) [March 22, 2017]

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இன்று மனித உரிமை ஆணையாளர் அல்.ஹசைன் ...
london

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் துப்பாக்கிசூடு பெண் உட்பட இருவர் பலி.15 பேர் காயம் [March 22, 2017]

பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பெண் உட்பட ...
Zeid 1

கலப்பு நீதிமன்ற பொறிமுறையின் கீழ் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்- அல்.ஹசைன் மீண்டும் வலியுறுத்தினார். Full VIDEO [March 22, 2017]

கடந்த 2015ல் நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானம் தொடர்பான அறிக்கையை ...
RC-34-IMADR-side-event

WOMEN’S AND MINORITY RIGHTS IN SRI LANKA’S TRANSITIONAL JUSTICE PROCESS. [March 22, 2017]

on Friday 17th March at the 34th session ...
06

இந்து சமய பாடத்திட்டத்தில் உள்ள குறைபாடுகளை திருத்தி அமைக்க குழு. [March 22, 2017]

கடந்த காலங்களில் அரசாங்கம் இந்து சமய பாடநெறி தொடர்பாகவும் பாடத்திட்டம் ...
1

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வு [March 22, 2017]

கொக்கிளாயில் இல்மனைற் மணல் அகழ்வுக்கான முயற்சியில் ஈடுபடுவதற்கான தொடக்கக்கட்ட நடவடிக்கைகள் ...
virasekara

ஜெனீவா வந்துள்ள சிறிலங்காவின் கடற்படைத்தளபதிக்கு சிக்கல் வருமா ? – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுவிசிடம் கைது செய்யக்கோரிக்கை !! [March 22, 2017]

ஜெனீவாவுக்கு வருகை தந்துள் சிறிலங்காவின் ஓய்வுபெற்ற கடற்படைத் தளபதி ரியர் ...