Monday, May 22nd, 2017

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியேறுமா? வெளியேற்றப்படுமா?

Published on March 12, 2017-8:09 pm   ·   No Comments

suresh-premachandran-r.sampanthanமுள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் முடிந்த பின் 2009 மே மாதத்திற்கு பின்னர் உயிர் உடமைகள் அனைத்தையும் இழந்த போதிலும் தமிழ் மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை ஒன்று உறுதியாக உள்ளது என்ற அந்த நம்பிக்கை மட்டுமே அவர்கள் கையில் இருந்தது.

அதனை தொடர்ந்து 2010 மற்றும் 2015 தேர்தல்களில் அதனை வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் நிரூபித்திருந்தனர்.

தமிழ் மக்கள் நம்பியிருந்த ஒற்றுமையான உறுதியான அரசியல் தலைமை இன்று உள்ளதா என்ற கேள்வியே எழுந்திருக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் தலைமை பற்றியும், மக்கள் நம்பிக்கையோடு தெரிவு செய்த தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையில் இன்று ஏற்பட்டுள்ள பிளவுகளும் மோதல்களும் ஒற்றுமையீனங்களும் வாக்களித்த மக்களுக்கு நம்பிக்கையீனத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

ஒற்றுமை மற்றும் பலமான அரசியல் தலைமை என்ற காரணத்திற்காகவே 2001ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வந்திருக்கின்றனர். அந்த ஒற்றுமை, பலம் தமிழ் மக்களால் நம்பிக்கையுடன் தெரிவு செய்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இன்று இருக்கிறதா என்ற கேள்வி சாதாரண ஒவ்வொரு மக்களிடமும் எழுந்திருக்கிறது.

2001ஆம் ஆண்டு நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கி தேர்தலில் இறங்கிய போது ஐக்கிய தேசியக்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி போன்ற பேரினவாத கட்சிகளும், அவர்களுடன் இணைந்து செயல்பட்ட ஈ.பி.டி.பி, போன்ற கட்சிகளுமே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கருத்தை முன்வைத்து வந்தன. இதனை மக்கள் ஒரு பொருட்டாக எடுக்கவில்லை, தமக்கு பலமான அரசியல் தலைமை ஒன்று வேண்டும் என்ற நோக்குடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தமது அரசியல் பிரதிநிதிகளாக தெரிவு செய்து வந்தனர்.

2004ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து ஆனந்தசங்கரி போன்றவர்கள் பிரிந்து சென்ற போது அவர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்திருந்தனர்.

2010ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி பிரிந்து சென்று போட்டியிட்ட போதும் தமிழ் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. ஒற்றுமை என்ற வட்டத்தை விட்டு யாரும் வெளியில் செல்வதை தமிழ் மக்கள் விரும்பவில்லை என்பதே அந்த தேர்தல் முடிவு வெளிப்படுத்தியிருந்தது. அன்றிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது குற்றச்சாட்டுக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறது. அது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது 2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தெளிவானது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்துவதற்காக அவர் படாத பாடுபட்டு வருகிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டும் அல்லது அதில் இருப்பவர்கள் கூட்டமைப்பை விட்டு பிரிந்து வரவேண்டும் என பகிரங்கமாக கோரிவருகிறார். தன்னுடைய கட்சி கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்புவதை விட அல்லது மக்கள் பிரச்சிகைகளில் நாட்டம் கொள்வதை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் காலையில் எழுந்து படுக்கப்போகும் வரை என்ன செய்கிறார் என ஆராய்வதிலேயே அவரின் காலம் கழிகிறது.

தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலரை அதில் உள்வாக்குவதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைத்து சின்னாபின்னமாக்கி விடலாம் என நம்பியிருந்தனர். அது கூட பெருமளவு வெற்றிபெற வில்லை.

ஆனால் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளேயே பெரும் பூகம்பங்கள் வெடித்து வருகின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை விட உள்ளே ஏற்பட்டிருக்கும் மோதல்கள் தான் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடிக்கு தனியே ஒருவர் அல்லது இருவரை குற்றம் சாட்டிவிட முடியாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்களும் இதற்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் தான்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகியன தமிழரசுக்கட்சி மீது விமர்சனங்களை முன்வைத்து வந்தன. அண்மையில் ரெலோவும் தமிழரசுக்கட்சி மீது காரசாரமான விமர்சனத்தை முன்வைத்திருக்கிறது.

கூட்டமைப்பின் மூன்று கட்சிகளின் கருத்துக்களைப் புறக்கணித்து, தன்னிச்சையாகவும் சர்வாதிகாரத் தோரணையிலும் தமிழரசுக் கட்சி கூட்டமைப்பின் பெயரில் தொடர்ந்து செயற்படப் போகின்றது என்றால், அதனை கூட்டமைப்பின் எதிர்கால நலன் கருதி, ஒரு அரசியல் சவாலாக எமது கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என ரெலோவை சேர்ந்த என்.சிறிகாந்தா வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்;.எவ் கடந்த இரு வருடங்களாக தமிழரசுக்கட்சி மீது விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வந்தாலும் ரெலோ தமிழரசுக்கட்சி தொடர்பாகவோ அல்லது சம்பந்தன், சுமந்திரன் தொடர்பாகவோ எந்த விமர்சனங்களையும் முன்வைத்ததில்லை, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய கட்சிகள் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொண்ட போதும் ரெலோ மௌனமாகவே இருந்தது. ஆனால் ரெலோவும் இப்போது தமிழரசுக்கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

இதற்கு அப்பால் தமிழரசுக்கட்சிக்குள்ளேயே மோதல்கள் வெடித்திருக்கிறதோ என்று எண்ணும் அளவிற்கு அக்கட்சியின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் நிறைவேற்றப்பட்ட 30.1 தீர்மானத்தை நடைமுறைப்படுத்த மேலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகளுக்குள் மட்டுமல்ல, தமிழரசுக்கட்சிக்குள்ளும் பிளவுகள் ஏற்பட்டிருக்கிறது.

ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிகளுடன் தமிழரசுக்கட்சியை சேர்ந்த சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், யோகேஸ்வரன் ஆகியோரும் சிறிலங்காவுக்கு கால அவகாசம் வழங்க கூடாது என்ற மனுவில் கையொப்பம் இட்டிருக்கின்றனர். சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, சிறிநேசன் ஆகியோர் கையொப்பம் இடாமலே அவர்களின் பெயர்களும் சேர்க்கப்பட்டிருக்கிறது.

கால அவகாசம் வழங்க கூடாது என்பது சரியான முடிவா அல்லது நிலமைகளை அறியாமல் உணர்ச்சி வேகத்தில் எடுத்த முடிவா என்பதற்கு அப்பால் இந்த விடயத்தில் தமிழரசுக்கட்சிக்குள் கூட ஒருமித்த கருத்தை எடுக்க முடியாமல் போனமை அக்கட்சிக்கு ஏற்பட்ட ஒரு தோல்வியாகும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச அரசியலை அறியாத சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மனுவில் கையொப்பம் இட்டிருக்கிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் சர்வதேச விவகாரங்களை கையாள்பவருமான எம்.ஏ.சுமந்திரன் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் பிழையாக வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள் என தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்திருக்கிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிலர் பிழையாக வழிநடத்தியிருந்தால் அவர்களை சரியாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கட்சியான தமிழரசுக்கட்சிக்கு உண்டு. அந்த தவறை சம்பந்தன் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அது போல தமது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சர்வதேச அரசியல் தெரியவில்லை என்றால் அவர்களுக்கு தெளிவு படுத்தியிருக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத்தான் உண்டு.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் இந்த குழப்பங்களுக்கு தானே காரணம் என்பதை ஆர்.சம்பந்தன் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

எதிர்தரப்பு விமர்சனங்களுக்குள் சிக்கியிருக்கும் சுமந்திரனின் நகர்வுகள் சர்வதேச சூழலுக்கு ஏற்ப சரியாக இருந்தாலும் அதுபற்றி ஏன் சக உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்தவில்லை?

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐ.நாவுக்கு மனுவை அனுப்பி சர்ச்சை ஏற்பட்ட பின்பே வவுனியாவில் கூட்டம் ஒன்றை கூட்டி மூன்று தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள்.
இதனை ஆரம்பத்திலேயே செய்திருந்தால் இந்த குழப்பங்களுக்கு இடமிருந்திருக்காது. எதிர்தரப்பினரின் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டிய இருந்திருக்காது.

கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், அவர்கள் சர்வாதிகாரப்போக்கில் செயல்படுகின்றனர், கட்சியின் சார்பில் அவர்களின் நடவடிக்கைகள் பற்றி ஏனைய உறுப்பினர்களுக்கு தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ச்சியாக இருந்து வருகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்லது அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளோ ஜனநாயக ரீதியில் எடுக்கும் முடிவுகளை தலைவர் சம்பந்தன் அவர்கள் மதித்து நடப்பதில்லை என்றும் ஜனநாயக ரீதியான முடிவுகளை உதாசீனம் செய்து சர்வாதிகாரப்போக்கில் முடிவுகளை எடுக்கிறார் என்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகிறது.

இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பல சம்பவங்கள் இருந்த போதிலும் இரு சம்பவங்களை உதாரணமாக காட்ட முடியும்.

ஒன்று வடமாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த நான்கு கட்சிகளும் கூடி ஏகமனதாக ஒரு தீர்மானத்தை எடுத்திருந்தன. கட்சிக்கு தலைவராக இருந்தாலும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எடுக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதுதான் ஜனநாயக மரபும் கூட. ஆனால் அந்த ஜனநாயக மரபுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு சர்வாதிகாரப் போக்கில் தான் விரும்பிய ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக கொண்டு வந்தார். முதலமைச்சராகிய பின் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே அவர் ஆப்பு வைத்தார் என்பது வேறு கதை.

இரண்டாவது சம்பவம் 2015 பொதுத்தேர்தலின் பின்பு நடந்தது. தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சி தலைவர்களின் அபிப்பிராயங்கள் எதனையும் கேட்காது திருகோணமலையில் உள்ள துரைரத்தினசிங்கத்தையும், வவுனியாவில் உள்ள சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவையும் தெரிவு செய்தார். பெண் உறுப்பினர் ஒருவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் சாந்தி ஸ்ரீஸ்கந்தராசாவின் நியமனத்தை ஏற்றுக்கொண்டாலும் துரைரத்தினசிங்கத்தின் நியமனம் சம்பந்தனின் தனிப்பட்ட விரும்பமாகும்.

புதிய அரசியல் யாப்பு தொடர்பான நகலை ஜே.வி.பி தனது அனைத்து உறுப்பினர்களுக்கும் சமர்ப்பித்து விவாதித்திருக்கிறது. மகிந்த தரப்பு சிறிலங்கா சுதந்திர கட்சியும், மைத்திரி தரப்பு சிறிலங்கா சுதந்திர கட்சியும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதனை வழங்கி இது தொடர்பாக ஆராய்ந்திருக்கிறார்கள். ஐக்கிய தேசியக்கட்சியும் அவ்வாறு செய்திருக்கிறது. ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மட்டும் புதிய அரசியல் யாப்பு தொடர்பாக கட்சி உறுப்பினர்களுக்கோ தமிழ் மக்களுக்கோ எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.

2016 டிசம்பருக்குள் தீர்வு வரும் என வாக்குறுதி அளித்த சம்பந்தன் அவர்கள் 2016 முடிந்து கால் வருடத்தை கடக்கும் இன்றைய நிலையில் கூட இதுவரை புதிய அரசியல் யாப்பு பற்றி தனது உறுப்பினர்களுக்கோ அல்லது தமிழ் மக்களுக்கோ எதுவும் சொல்லவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சிறிலங்கா அரசுக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என மனு அனுப்பபட்ட விடயத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற வகையில் சம்பந்தனும், சர்வதேச விவகாரங்களை கையாள்பவர் என்ற ரீதியில் சுமந்திரனும் உறுப்பினர்களுக்கு முன் கூட்டியே விளக்கம் அளித்து ஒரு முடிவை எடுத்திருந்தால் இந்த பிரச்சினை எழுந்திருக்க வாய்ப்பில்லை.

கால அவகாசம் வழங்க வேண்டுமா அல்லது கால அவகாசம் வழங்க கூடாதா என்பதை கட்சி உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்தி உறுதியான முடிவு எடுத்திருந்தால் இந்த விடயத்தில் இன்று பிளவு பட்டு நின்றிருக்க வேண்டி வந்திருக்காது.

கால அவகாசம் வழங்க கூடாது என்ற கோரிக்கை சிறிலங்கா அரசாங்கத்திற்கு சாதகமான விடயம் என்பதை சரியான தெளிவு படுத்தியிருந்தால் அந்த மனுவில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பம் இட்டிருக்க மாட்டார்கள். சம்பந்தன், சுமந்திரன் ஆகியோர் எடுத்திருக்கும் நிலைப்பாடு சரியானது என்பதை ஏன் அவர்கள் தமது உறுப்பினர்களுக்கு தெளிவு படுத்தவில்லை.  ஐ.நாவுக்கு மனு அனுப்புவதற்கு முதலே வவுனியாவில் நடத்தப்பட்ட கூட்டத்தை வைத்திருந்தால் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது.

வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு தாங்கள் ஆதரவளிக்கவில்லை என ஈ.பி.ஆர்.எல்.எவ் அறிவித்திருக்கிறது. அண்மைக்காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமை மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்தாலும் இப்போது மோதல் உச்சக்கட்டத்தை அடைந்திருக்கிறது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியால் தனித்து மக்களிடம் செல்லக் கூடிய பலம் கிடையாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகினாலும் அவர்களால் தனியாக போட்டியிட முடியாது. அதன் வெளிப்பாடு தான் அண்மையில் மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழ் நிகழ்ச்சியில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக உருவெடுக்க வேண்டும் என கோரியிருந்தார்.

தொடர்ந்து மோதல்களில் ஈடுபட்டு வரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் தமிழ் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறுவதையே தமிழரசுக்கட்சி உட்பட ஏனைய கட்சிகள் விரும்புகின்றன. அவர்களாக தங்களை வெளியேற்றட்டும் என ஈ.பி.ஆர்.எல்.எவ் ஒட்டிக்கொண்டிருக்கிறது.

தாங்களால் தனித்து போட்டியிட முடியும் என தமிழரசுக்கட்சிக்கு இருக்கும் துணிவு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சிக்கு அறவே கிடையாது. ஈ.பி.ஆர்.எல்.எவ் இந்திய இராணுவத்தின் உதவியுடன் மாகாணசபை தேர்தலில் போட்டியிட்ட போதிலும் அதற்கு பின்னர் எந்த ஒரு தேர்தலிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தால் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்ற வரலாறு கிடையாது.

சித்தார்த்தன் தலைமையிலான புளொட் இயக்கத்தினாலும் தனித்து களம் இறங்கும் பலம் கிடையாது. இதனால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை என்ற இரு கப்பல்களில் கால் வைத்திருக்கிறார். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடம் கிடைக்கவில்லை என்றால் தமிழ் மக்கள் பேரவை என்ற கப்பலில் ஏறி தப்ப முடியும் என்ற நம்பிக்கையிலேயே புளொட் இயக்கம் செயற்பட்டு வருகிறது.

ஆனால் ரெலோ நிலைமைகளை புரிந்து கொண்டு தமிழரசுக்கட்சியுடன் இணங்கி செல்வதையே விரும்புகிறது. அக்கட்சியை சேர்ந்த சிவாஜிலிங்கம் சில வேளைகளில் இடறிக்கொண்டு சென்றாலும் ஏனையவர்களான செல்வம் அடைக்கலநாதன், இந்திரகுமார் பிரசன்னா, கோவிந்தன் கருணாகரன் ஜனா ஆகியோர் தமிழரசுக்கட்சி தலைமையோடு மோதலை தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள ரெலோவினர் தமிழரசுக்கட்சியினருடன் நெருக்கமாக செயல்படுகின்றனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகள் பிரிந்து சென்றாலும் தனித்து போட்டியிடும் ஆற்றல் தமக்கு இருப்பதாக   தமிழரசுக்கட்சி கருதுகிறது. ஆனால் சம்பந்தன் போன்றவர்களின் சர்வாதிகாரப்போக்கால் அக்கட்சி மீது மக்களுக்கு ஏற்பட்டு வரும் அதிருப்தியை அக்கட்சி தலைமை உணர்ந்ததாக தெரியவில்லை.

தமிழ் மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக தமிழரசுக்கட்சியை தக்க வைக்கப்போகிறார்களா என்பதை அக்கட்சியின் தலைமை முடிவு எடுக்க வேண்டும்.

– இரா.துரைரத்தினம்.suresh-premachandran-r.sampanthan

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran 2

ஆயுதப்போராட்டம் காரணமாக கல்விமான்களை மதிக்காத நிலை தோன்றிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செவ்வி. VIDEO [May 22, 2017]

இப்போது என் மீது வைக்கும் விமர்சனங்களை பார்க்கும் போது எந்த ...
polanaruwa

பொலனறுவையில் தமிழ் பிரயாணி மீது சிங்கள காடையர்கள் கடும் தாக்குதல். [April 16, 2017]

சிங்கள காடையர்கள் பொலனறுவையில் வைத்து தமிழ் பிரயாணி ஒருவர் மீது ...
selva

மட்டக்களப்பில் தந்தை செல்வா 40ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு – சுமந்திரன் உரையாற்றுகிறார். [April 12, 2017]

தந்தை செல்வா என தமிழ் மக்களால் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் ...
IMG_9656

சுவிட்சர்லாந்தில் ஊரி மாநில தமிழ் மக்களின் 25ஆவது ஆண்டு விழா [April 11, 2017]

சுவிட்சர்லாந்து ஊரி மாநிலத்தில் தமிழ் மக்கள் குடியேறி 25ஆண்டுகள் பூர்த்தியாவதை ...
army

இராணுவ கோப்ரல் மர்ம மரணம்-விசாரணை ஆரம்பம். [April 10, 2017]

இராணுவ அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் வீட்டில் ...
Arulanantham

தினகரன் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். அருளானந்தம் காலமானார். [April 9, 2017]

தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் முன்னாள் பிரதம ஆசிரியர் எஸ். ...
kirupakaran

சிறிலங்காவின் போர்களம் ஐ.நா. மனித உரிமை சபைக்கு நகர்த்தபட்டுள்ளன. [April 8, 2017]

இறுதியாக ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.மனித உரிமை சபையின் 34வது கூட்டத் ...
His_Master's_Voice

மரத்துப்போன மனிதம்! தொடரும் வன்மம்.? – ராம். [April 7, 2017]

அண்மைக்காலமாக எம்மவரிடையே விரும்பத்தகாத, தவிர்க்ககூடிய செயல் ஒன்று, அருவருக்கத்தக்க விதமாக ...
kirupa

நெடுந்தீவு சிறுமி படுகொலை- ஈ.பி.டி.பி உறுப்பினர் கிருபாவுக்கு மரணதண்டனை தீர்ப்பு [April 7, 2017]

நெடுந்தீவில் 12வயதுடைய சிறுமி லக்சாயினியை பாலியல் பாலத்காரம் செய்து படுகொலை ...
Netherlands Court

விடுதலைப்புலிகளுக்காக நிதி சேகரித்த 5பேருக்கு 20ஆண்டுகால சிறை- நெதர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு . [April 5, 2017]

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ...