Saturday, February 17th, 2018

வடமராட்சி கிழக்கின் அவலங்கள்…. வழிகளும் விழிகளும் திறக்கட்டும். – கருணாகரன்.

Published on March 14, 2017-6:36 pm   ·   No Comments

thalaiyady kaddaikadu Roadயாழ்ப்பாணத்திலிருந்து களுத்துறைக்கு அல்லது அம்பாந்தோட்டைக்கு நீங்கள் ஈஸியாகப் போய் விடலாம். அல்லது நாட்டின் வேறு எந்தப் பகுதிக்கும் கூட நீங்கள் உல்லாசமாகப் பயணிக்கலாம். உங்கள் பயணத்தில் களைப்போ அலுப்போ இருக்காது. நீங்கள் தூங்கி விழிக்கும்போது பயணம் நிறைவேறியிருக்கும். அல்லது ஏதாவது ஒரு நகரத்தையோ கிராமத்தையோ கடந்து கொண்டிருப்பீர்கள். ஆனந்தமாக அமைந்திருக்கும் உங்களுடைய பயணம்.

ஆனால், யாழ்ப்பாணத்திலிருந்து கட்டைக்காட்டுக்கு அல்லது வெற்றிலைக்கேணிக்கு அப்படி நீங்கள் போய்விட முடியாது. இவ்வளவுக்கும் யாழ்ப்பாணத்துக்கும் வெற்றிலைக்கேணிக்கு அல்லது கட்டைக்காட்டுக்குமிடையிலான தூரம் தனியே 100 கிலோ மீற்றருக்குள்தான். அதிலும் பருத்தித்தித்துறையிலிருந்து கட்டைக்காடு, சுண்டிக்குளம் நோக்கிச்செல்லும் கடலோர வீதி ஆகக்கூடியது 60 கிலோ மீற்றர் மட்டும்தான். ஆனால், இந்த வீதியில் நீங்கள் பயணிப்பதாக இருந்தால், உங்கள் உடலின் பாகங்கள் கழன்று வேறு வேறாகி விடும். வண்டி ஓடுகிறதா, ஊர்கிறதா, வள்ளம்போல ஆடி அசைகிறதா என்று உங்களுக்கே சந்தேகம் வந்து விடும். இந்த 60 கிலோ மீற்றர் தூரத்தையும் கடப்பதற்கு உங்களுக்கு குறைந்தது மூன்று மணித்தியாலங்கள் தேவை. இதைக் கடப்பதற்குள் வாழ்க்கையே அலுத்துவிடும். அந்தளவுக்குப் படு மோசமாகச் சிதைந்து போயிருக்கிறது இந்த வீதி.

இப்படியான நிலையில்தான் இங்கே ஆசிரியர்கள் வந்து போகவேண்டியிருக்கு. இதனூடாகத்தான் பள்ளிக்கூடங்களுக்குப் பிள்ளைகள் போய் வருகிறார்கள். இந்த வழியாகத்தான் கடலில் பிடிக்கும் மீனைச் சந்தைக்குத் தினமும் எடுத்துப் போகிறார்கள் மக்கள். மேலதிக மருத்துவச் சிகிச்சைக்காக அம்புலன்ஸ் வண்டி கூட இதனூடாகவே போகிறது. அப்படி எடுத்துச் செல்லப்படும் நோயாளி இந்த வீதியைக் கடப்பதற்குள் உயிர் பிழைத்தால் அதுவே பெரிய அதிர்ஸ்டம். தப்பித்தவறி ஏதாவது ஒரு தேவைக்காக நீங்கள் இந்த வீதியுடாகப் பயணம் செய்ய வாய்த்தால் அப்போது தெரியும் இங்கே உள்ள மக்களின் அவல வாழ்க்கை எப்படியாக இருக்கிறது என்று.

“நாடு முழுக்க வீதி வலையமைப்பும் தொடர்பாடலும் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதே!”  என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஆனால், இந்த வீதியும் இந்தப் பிரதேசமும் அந்த வலையமைப்புக்குள் சேர்த்துக்கொள்ளப்படவோ இணைத்துக் கொள்ளப்படவோ இல்லை. எதற்காக இந்தத் தவிர்ப்பு நடவடிக்கை அல்லது புறக்கணிப்பு நடந்திருக்கிறது என்று புரியவில்லை.

இப்படிப் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் கட்டைக்காடு, வண்ணாங்குளம், நித்தியவெட்டை, கேவில், போக்கறுப்பு, சுண்டிக்குளம், முள்ளியான், பொற்பதி, வதிரி, வெற்றிலைக்கேணி, ஆழியவளை, உடுத்துறை, மருதங்கேணி, தாளையடி, வத்திராயன், செம்பியன்பற்று, அம்பன், குடத்தனை, குடாரப்பு, நாகர்கோயில் என்ற பெரும்பகுதிகளில் மக்கள் வாழ்கிறார்கள். மருதங்கேணி என்ற ஒரு பிரதேச செயலர் பிரிவு முற்றாகவே இப்படித்தான் தனித்து விடப்பட்டுள்ளது. புவியியல் அமைப்பில் மட்டுமல்ல, அபிவிருத்தி மற்றும் திட்டமிடலிலும் இது தனித்தே விடப்பட்டிருக்கிறது.

இந்தப் பிரதேசம் போரினாலும் சுனாமியினாலும் என இரட்டைப் பாதிப்பைச் சந்தித்தது. இரண்டு பாதிப்பிலுமிருந்து மீள்வதற்கு இந்தப் பிரதேசத்துக்கான நிதி ஒதுக்கீடும் மீள்நிலைத்திட்டங்களும் முறையாகக் கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்திருந்தால் இப்படியான நிலை ஏற்பட்டிருக்காது. இந்தப்பிரதேசத்தை ஏனைய பிரதேசங்களோடு – நாட்டின் ஏனைய வலையமைப்போடு – இணைப்பதற்கு ஆக மொத்தம் ஒரு பிரதான வீதியும் இரண்டு இணைப்பு வீதிகளுமே உள்ளன.

ஒன்று பருத்தித்துறை – சுண்டிக்குளம்  பிரதான வீதி. இதுவே பிரதான வீதி. இதனுடைய நீளம் ஏறக்குறைய 60 கிலோ மீற்றர்கள். இது கரையோர வீதி. இந்த வீதியைச் சரியாக அமைத்தால் யாழ்ப்பாணக் குடாநாட்டின் மேற்குக்கடலோரங்களான கீரிமலை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை வழியாக தாளையடி, வெற்றிலைக்கேணி, சுண்டிக்குளம் என நீண்டு, மாத்தளன், முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு, நாயாறு, கொக்குத்தொடுவாய், தென்னமரவாடி, புல்மோட்டை, திருகோணமலை எனச் சென்று, அப்படியே மட்டக்களப்பு வழியாகக் கல்முனை, அக்கரைப்பற்று எனச் செல்ல முடியும். வடக்கு மற்றும் கிழக்குக் கரையோர வீதியாக இது அமையும்.

இணைப்பு வீதிகளில் ஒன்று தாளையடியிலிருந்து புதுக்காட்டுச் சந்தி – கண்டி யாழ்ப்பாணம் வீதியில் இணைகின்றது. இதனுடைய நீளம் ஏறக்குறைய 12 கிலோமீற்றர்கள். மற்றைய வீதி இயக்கச்சியிலிருந்து கட்டைக்காடு மற்றும் சுண்டிக்குளம் செல்லும் வீதி. இதனுடைய நீளம் சுமார் 25 கிலோ மீற்றர். இவை எல்லாமே வீதி அபிவிருத்தித்திணைக்களத்துக்குரியவை. B தர வீதிகள். ஆனால், இதில் எந்த வீதியும் திருத்தம் செய்யப்படவில்லை.

இங்குள்ள புவியியல் அமைப்பில் இந்த வீதிகளைத் தவிர்த்து வேறு வழிகளால் பயணம் செய்ய முடியாது. பெருமணல் நிறைந்த பகுதி என்பதால், வீதியை விட்டு கீழே இறங்கினால் வண்டி நகராது. மறுபக்கத்தில் கடல். கடல்வழியே பயணிப்பதாக இருந்தால் படகு வழியாகத்தான் செல்ல முடியும். அது சிரமங்கள் நிறைந்த செலவு அதிகமான பயணம். யுத்தமும் சுனாமியும் ஏற்படுத்திய பெரும்பாதிப்பை நிரப்பி ஈடு செய்வதற்கும் புதிய அபிவிருத்தியை நோக்கிச் செல்வதற்கும் வீதியே அடிப்படையாக – முக்கியமாக உள்ளது. வீதி இல்லை என்றால் எதுவுமே செய்ய முடியாது. ஒரு வீதிப்பிரச்சினைக்காக இத்தனை பெரிய விளக்கமா? அல்லது தனியாக ஒரு கட்டுரையா என்று நீங்கள் கேட்கலாம். வீதி இல்லை என்றால் எதற்கும் வழியே இல்லை. பெருந்திரள் மக்களின் வாழ்க்கையே நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது. இதையே நாம் உணர வேணும்.

“மிகப் பின்தங்கியிருந்த ரஷ்யாவை எப்படி வளர்த்தெடுக்கப்போகிறீர்கள்?” என்று ரஷ்யப் புரட்சியை அடுத்து லெனினைச் சந்தித்த பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டனர். இதற்கு லெனின் சொன்ன பதில், “ரஷ்யாவை மின்மயப்படுத்தப்போகிறேன். சமநேரத்தில் வீதிகளால் வலையமைப்பை உருவாக்குவோம்“ என. அப்படியே செய்யப்பட்டது. அடுத்து வந்த ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் தனிப்பெரும் வல்லரசாக உருப்பெற்றது.

அபிவிருத்திக்குத் தொடர்பாடல் முக்கியமானது. பொருளாதார வளர்ச்சிக்கு வீதியும் தொலைத்தொடர்பும்மின்சாரமும் அடிப்படையானவை. இவையில்லாமல் ஒரு பிரதேசத்தை எந்த வகையிலும் கட்டியெழுப்ப முடியாது. இது உலகம் முழுவதும் உள்ள பொது விதி. இந்த விதியிலிருந்து தனியே ஒரு பிரதேசம் மட்டும் எப்படி விதிவிலக்காக முடியும்? இதை எப்படி நாம் அனுமதிக்கவும் பாராமுகமாகவும் இருக்க முடியும்?

இதேவேளை வடமராட்சி கிழக்கு அல்லது மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவு என்ற இந்தப் பிரதேசம் வரலாற்று ரீதியாகவும் பொருளாதார அடிப்படையிலும் முக்கியமானது. இங்குள்ள ஊர்கள் புர்வீக காலக் குடியிருப்புகள். இந்தியாவிலிருந்தும் பிற தேசங்களிலிருந்தும் கடல் வழியாக வாணிபம் நடப்பதற்கு இந்தப் பிரதேசத்தின் கடல் முகத்துறைகள் பயன்பட்டிருக்கின்றன. அதனால் கடலோரத்தை அண்டிய பகுதிகளில் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

பிறகு ஐரோப்பியர் ஆட்சிக்காலத்திலும் இவை முக்கியமான பிரதேசங்களாகவே இருந்தன.  இதற்குச் சான்றாக வெற்றிலைக்கேணியில் அவர்களால் கட்டப்பட்டு, இப்போது சிதைந்த நிலையிலிருக்கும் Fort of Basutta என்ற கோட்டையும் வெளிச்ச வீடும் (கலங்கரை விளக்கு) சான்றாக உள்ளன. இதற்கு அண்மையாக இன்னொரு கோட்டை இயக்கச்சியில் (Fort of Pyl) உள்ளது. கூடவே புல்லாவெளி என்ற இடத்தில் (முள்ளியான் பிரிவில்) மிகத் தொன்மையான வரலாற்றுச் சிறப்பு  மிக்க தேவாலயமும் உண்டு.

மறுபக்கத்தில் மண்டலாய்ப்பிள்ளையார் என்ற மிகத் தொன்மையான இந்து ஆலயமும் வேறு பல இந்தக் கோயில்களும் உள்ளன. மண்டலாய்ப்பிள்ளையார் கோயிலின் அருகாகவே கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்கான ஆறுமுகம் திட்டத்தின் பெருவாய்க்காலும் உள்ளது. இந்தத்திட்டம் 1950 களில் உருவாக்கப்பட்டது. ஆனால், பிறகு இந்தத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இதனால் ஆரம்ப நிலையில் அமைக்கப்பட்ட வாய்க்காலை இன்னும் குறையாகவே உள்ளதை இந்தப்பகுதியில் காண முடியும்.

இன்னொரு சிறப்பம்சம் இங்கே உள்ள சுற்றுலாத்தலம். வலசை வரும் கடற்பறவைகளும் வன ஜீவராசிகளும் கடலோரமும் மணல் திட்டுகளும் சுற்றுலாப்பயணிகளைக் கவரக்கூடியன. இதற்காக இங்கே இலங்கைச் சுற்றுலாத்துறை அமைச்சு ஒரு உல்லாச விடுதியை அமைத்துள்ளது. இயக்கச்சியின் வழியாகவும் மருதங்கேணி வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு வழியாகவும் இங்கே செல்ல முடியும். ஆனால், பாதை சீரில்லை. இதனால் இந்தச் சுற்றுலா விடுதியும் சுற்றுலாப்பகுதியும் கவனிப்பாரற்றிருக்கிறது.

தவிர பொருளாதார ரீதியாக கடற்தொழிலுக்குச் சிறப்பாகவும் பாராம்பரியமாகவும் உள்ளது இந்தக் கடலோரம். உடப்பு – புத்தளம், நீர்கொழும்பு போன்ற பகுதிகளில் இருந்து கூட பெரும்பாலானவர்கள் இந்தப் பிரதேசத்துக்கு வந்து மீன்பிடியில் ஈடுபடுவதுண்டு. அதைப்போல பருவகால மீன்பிடிக்காக நெடுந்தீவுப் பிரதேசங்களிலிருந்து வந்து தொழில் செய்வோருண்டு. கூடவே தென்னைப் பயிர்ச்செய்கைக்கும் மரமுந்திரிகைச் செய்கைக்கும் பனைக்கும் வளமான பிரதேசம் இது. ஏராளமான தென்னந்தோட்டங்கள் ஒரு காலம் இங்கே இருந்தன.

1991 இல் ஆனையிறவு முகாமைக் கைப்பற்றுவதற்காக முற்றுகையிட்டுப் புலிகள் நடத்திய ஆகாய கடல் வெளிச் சமர் என்ற ஆ.க.வெ சண்டையை முறியடிப்பதற்காக இங்குள்ள வெற்றிலைக்கேணிக் கடற்கரையில் படையினரின் தரையிறக்கம் நடந்தது. இதனையடுத்து இங்கே 18 நாட்கள் கடுமையான சமர் நடந்தது. 681 புலிகள் சாவடைந்தனர். படைத்தரப்பில் 237 படையினர் பலியானதாகச் சொல்லப்பட்டது. இந்தச் சண்டையினால் அத்தனை தென்னங்தோப்புகளும் பனைகளும் முற்றாகவே அழிந்து விட்டன.

இதற்குப் பிறகு 1991 தொடக்கம் 2000 வரை படையினர் இந்தப்பகுதியில் பெருந்தளம் அமைத்து நிலைகொண்டிருந்தனர். மிஞ்சிய பனைகள் பாதுகாப்பு அரண்களை அமைப்பதற்காக அழிக்கப்பட்டன. 2000 த்தில் புலிகள் ஓயாத அலைகள் 02 என்ற படை நடவடிக்கை மூலம் இந்தப்பகுதியைக் கைப்பற்றினர். இதன்போது நடந்த சண்டையில் மிஞ்சிய காட்டு வளமும் தொல் அடையாளங்களும் சிதைந்து அழிந்தன. மறுபடி 2009 படையினர் இந்தப்பகுதியைப் புலிகளிடமிருந்து கைப்பற்றினர். இப்படியே மாறிமாறி நடந்த யுத்தத்தினால் பெரும் பேரழிவைச் சந்தித்தது இந்தப்பகுதி.

இப்படி  அழிவடைந்த பிரதேசத்தில் மறுபடியும் மக்கள் குடியேறியிருக்கின்றனர். ஆனால் மக்களுடைய சனத்தொகைக்கு அண்மித்ததாக இங்கே படையினரின் தொகையும் உள்ளது. வடக்கிலே அதிகமாகப் படையினர் நிலைகொண்ட மையங்கள் நான்கு. ஒன்று பலாலியும் அதன் சுற்றயலும். இரண்டாவது இயக்கச்சி தொடக்கம் வடமராட்சி கிழக்கு என்ற இந்தப் பிரதேசம். மூன்றாவது கேப்பாப்பிலவு உள்ளடங்கலான நந்திக்கடலின் மேற்குப் பகுதி. நான்காவது வவுனியா யோசப் காம் வளாகம்.

வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி என்ற இந்தப்பிரதேச செயலர் பிரிவில் ஆனையிறவுக்களப்புக் கடலில் இறால் பிடி ஒரு பருவகாலத் தொழில். ஏறக்குறைய 3000 க்கு மேற்பட்டவர்கள் இங்கே இறால் பிடியில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு ஒரு வீதி கூட இல்லை. 20 கிலோ மீற்றர் தூரத்தை மணலும் காடும் நிறைந்த வழியினால், மிகச் சிரமப்பட்டே பயணம் செய்கின்றனர். இந்தப் பகுதியில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் மற்றும் கடற்படையினரின் தேவைக்காகப் படையினரால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீதியையே எல்லோரும் பயன்படுத்துகின்றனர். இதனால் சில இடங்களில் படையினரின் தளத்துக்குள்ளாலேயே மக்கள் பயணிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக மண்டலாய் வழியாகப் பயணிக்கும் போது அங்கே உள்ள படையினரின் பெருந்தளத்தின் மையத்தின் வழியாகப் பயணித்தே வெற்றிலைக்கேணிக்கும் கட்டைக்காட்டுக்கும் போக முடியும்.

இந்தப் பிரதேசத்தின் கடலோரைத்தை அண்டிச் செல்லும் கரையோர வீதியமைப்புத்திட்டத்தை 1990 இல் இலங்கை அரசுக்கும் புலிகளுக்கும் (அது பிரேமதாச காலகட்டம்) இடையில் நடந்த பேச்சுகளின்போது புலிகள் முன்வைத்திருந்தனர். வடக்குக் கிழக்கு இணைப்புக்கு இந்த வீதி அச்சாணி என்று கருதப்பட்டது. அது உண்மையும் கூட. இது தொடர்பாக புலிகளின் பேச்சுவார்த்தைக்குழுவுக்குத் தலைமை வகித்த மாத்தயா என்ற கோபலசாமி மகேந்திரராஜா ஒரு திட்ட முன்வரைபையும் அரசாங்கத்திடம் கையளித்திருந்தார். அப்போது இது தொடர்பாக உத்தேச மதிப்பீடுகளும் நடந்தன. பிறகு நடந்த போர் எல்லாவற்றையும் மாற்றியமைத்தது. இப்போது சாதாரணமாகப் பயணிப்பதற்கே ஒரு வீதியில்லை. இதனால் பிள்ளைகளின் கல்வியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளியிடத்து ஆசிரியர்கள் இங்கே வந்து கற்பிப்பதற்குத் தயங்குகிறார்கள். அவர்களுடைய பயணத்திற்கு வழியில்லை என்பதால் அதிகாரிகள் இந்த ஆசிரியர்களைப் பணிப்பதற்குத் தயங்குகிறார்கள். உற்பத்திகளைச் சந்தைப்படுத்த முடியாமல் இருப்பதால் பொருளாதார நிலையிலும் பெரும் பின்னடைவுண்டு. இது மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கிறது. இதனால் இங்கே மீளக்குடியேறிய மக்களில் ஒரு தொகுதியினர் இங்கிருந்து வெளியேறி யாழ்ப்பாணம், பருத்தித்துறை, பளை போன்ற பிரதேசங்களை நோக்கியும் கிளிநொச்சிக்குமாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 14 பிரதேச செயலர் பிரிவுகள் உள்ளன. அதில் ஒன்றே மருதங்கேணி. ஒரு சிறு பகுதி தவிர்ந்த யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கடற்கரை முழுவதையும் தன்னுள் அடக்கியுள்ள இந்தப் பிரிவு, ஒடுங்கிய நீளமான வடிவில் அமைந்துள்ளது. இதனுடைய கிழக்கு எல்லையில் இந்தியப் பெருங்கடல் உள்ளது. மேற்கில் ஒடுங்கிய நீரேரி. தெற்கில் வீரக்களி ஆறு என்ற சிறு களப்பு. மருதங்கேணிப் பிரதேச செயலாளர் பிரிவைச் சாவகச்சேரி பிரதேசச் செயலாளர் பிரிவு, கரவெட்டி மற்றும் பருத்தித்துறை செயலாளர் பிரிவுகளும் கிளிநொச்சி மாவட்டமும்  எல்லைக்கோடிட்டுப் பிரிக்கின்றன.  உண்மையில் இந்தப் பிரிவை கிளிநொச்சியுடன் இணைப்பதே பொருத்தமானது. புவியியல் ரீதியாகவும் தொடர்பு ரீதியாகவும் அதுவே பொருத்தமானது. ஏற்கனவே இந்தப்பகுதி கிளிநொச்சி மாவட்டத்தின் கீழ் பச்சிலைப்பள்ளிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வளமும் வனப்பும் வரலாற்றுச் சிறப்பும் உள்ள இந்தப் பகுதியை தொடர்பாடல் வலையமைப்பில் இணைப்பதன் மூலமாக இங்குள்ள மக்களைச் சிறையிலிருந்தும் தனிமைப்படுத்தலிலிருந்தும் மீட்க முடியும். கூடவே பொருளாதார ரீதியிலும் மேம்படுத்த இயலும். மட்டுமல்ல, ஒரு நீண்ட பெரும் கடற்பரப்பில் தொழில் மற்றும் வாழ்க்கைச் சூழலையும் உருவாக்க இயலும். இதற்கான பார்வையைச் செலுத்துவது அவசியம். இதனை மத்திய மாகாண அரசுகள் செய்ய வேணும். தங்கள் வாழ்க்கையில் தங்களுடைய ஊர்களில் இருந்து ஒரு நாளாவது நல்லதொரு பயணத்தைச் செய்ய முடியாதா என ஏங்கும் கனவை நிறைவேற்றுவதும் ஏனையவர்களுடன் இந்த மக்களை இணைத்துச் சேர்ப்பதும் இவற்றின் கடமையாகும். வழிகளும் விழிகளும் திறக்கட்டும்.

(Thenee) thalaiyady kaddaikadu Road

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...
TNA

பிரதான அரசியல் கட்சிகளின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்க போகும் உள்ளுராட்சி சபை தேர்தல்கள் [February 8, 2018]

தென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி பிரதான கட்சிகள் தமது ...