Tuesday, June 27th, 2017

ஜெனிவாவில் மோட்டார் கண்காட்சியும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் திருவிழாவும்.

Published on March 20, 2017-6:14 pm   ·   No Comments

2017-Geneva-Motor-Show-Preview-730x430ஜெனிவாவின் பக்கம் உலகத்தின் பார்வையை திருப்பும் இரு நிகழ்வுகள் மார்ச் மாதத்தில் நடைபெறுவது வழக்கம். ஒன்று சர்வதேச மோட்டார் கண்காட்சி, இரண்டு, ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர்.

இந்த இரண்டு நிகழ்வுகளுக்காகவும் இக்காலப்பகுதியில் ஜெனிவா நகரம் பரபரப்பாக காணப்படும்.

வருடத்தில் ஒரு தடவை ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச மோட்டார் கண்காட்சிதான் உலகில் நடைபெறும் கார் கண்காட்சிகளில் ( மோட்டார் கண்காட்சி ) பிரமாண்டமானதாகும்.   கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்த கண்காட்சியை பார்வையிடுவதற்காக உலக நாடுகளிலிருந்து சுமார் 7இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வருகை தருவார்கள்.

இம்முறை 900 புதிய மொடல்கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் தமது புதிய உற்பத்திகளை காட்சிக்கு வைப்பதும் விற்பனைக்கான முன்பதிவுகளை பெறுவதும் வழங்கமாகும். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கார்கள் சமானியர்களால் வாங்கிவிட முடியாது. ஆனால் பார்வையிட முடியும். அதில் ஒருமுறை ஏறியிருந்து புகைப்படங்கள் வீடியோக்களை எடுக்க முடியும். இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் கார்களில் ஆகக்குறைந்த விலை ஒன்றரை இலட்சம் பிறாங்குகளாகும். ( இலங்கை பணத்தில் இரண்டு கோடிக்கு மேல் ) இரண்டு மில்லியன் பெறுமதியான ( இலங்கை பணத்தில் 30கோடி ரூபா ) கார்களும் உண்டு. 16 பிறாங் கொடுத்து நுழைவு சீட்டை எடுத்து 30 கோடி ரூபா பெறுமதியான காருக்கு அருகில் நின்று அல்லது காரில் ஏறிஇருந்து காரை ஓட்டுவது போல புகைப்படத்தை எடுக்க முடியும்.

புதிய கார்களை வாங்குபவர்கள், புதிய தொழில்நுட்பங்கள் பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்கள், புதினம் பார்ப்பவர்கள், கார்களுக்கு பக்கத்தில் நின்று படம் பிடித்து கொள்பவர்கள் என இக்கண்காட்சிக்கு வருபவர்களில் பல தரப்பு உண்டு. இங்கு வருபவர்களில் ஆயிரத்தில் ஒருவர் தான் காரை கொள்வனவு செய்பவராக இருப்பார். ஏனைய அனைவரும் புதினம் பார்க்க வருபவர்கள் தான். இம்முறை ஜெனிவா மோட்டார் கண்காட்சிக்கு சென்றேன் என பெருமை பட்டுக்கொள்ள முடியும். 2017-Geneva-Motor-Show-Preview-730x430

கார் கண்காட்சியில் புதிய கார்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை விட புதிய தொழில்நுட்பங்கள், பற்றிய கருத்தரங்குகள் என இத்துறைசார்ந்தவர்களுக்கு பயன்படக்கூடிய விடயங்களும் இடம்பெறுவது உண்டு. ஆனால் புதிய கார்களை சுற்றி சுற்றி பார்த்து விட்டு திரும்புபவர்கள் தான் பெரும்பாலானவர்கள்.

அதுபோலத்தான் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக உலக நாடுகள் பலவற்றிலிருந்து ஏராளமானவர்கள் வந்திருக்கிறார்கள். இலங்கையிலிருந்தும் 50க்கும் மேற்பட்டவர்கள் ஜெனிவாவுக்கு வந்திருக்கிறார்கள். இவர்களிலும் கார் கண்காட்சிக்கு வருபவர்கள் போல தரப்புக்கள் உண்டு.

இப்போது ஜெனிவா மனித உரிமை பேரவைக்கு செல்வது மோட்டார் கண்காட்சிக்கு செல்வது போன்றதுதான் என்ற நிலைதான் இப்போது காணப்படுகிறது. கார்களை கொள்வனவு செய்வதற்கும், புதிய தொழில்நுட்பங்களை அறிந்து கொள்ளும் கருத்தரங்குகளில் பங்குபற்றி பயன்பெறுவதை போல ஐ.நா.மனித உரிமை பேரவையில் ஆக்கபூர்வமான விடயங்களில் ஈடுபடுபவர்கள் ஒருவீதத்தினர்தான். ஏனையவர்கள் கார் கண்காட்சியை போன்று புதினம் பார்ப்பவர்கள் தான் அதிகம்.

இம்முறை ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக மூன்று பிரதான விடயங்கள் இடம்பெற உள்ளன.

1. நான்கு வருடத்திற்கு ஒரு தடவை ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கம் சமர்ப்பிக்கும் மனித உரிமைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கையும் அது தொடர்பான விவாதமும்,

2. 2015 ஒக்டோபர் முதலாம் திகதி ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கையில் நல்லிணக்கமும் பொறுப்பு கூறலும் என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பற்றிய ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை.

3. 30.1 இலக்க தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என இம்முறை பிரித்தானியா முன்வைக்க இருக்கும் புதிய பிரேரணை.

4. இலங்கையில் சிறுபான்மை இனங்களின் உரிமைகள் பற்றியும், காணாமல் போனோர் தொடர்பாகவும் விசேட அறிக்கையாளர்களின் அறிக்கைகளும் அது தொடர்பான விவாதங்களும்.

இந்த நான்கு விடயங்களுமே இலங்கை தொடர்பாக ஐ.நா.மனித உரிமை பேரவையில் இம்முறை இடம்பெற இருக்கும் பிரதான விடயங்களாகும்.

இது தவிர பக்க அறைகளில் நடைபெறும் கூட்டங்கள் ஐ.நா.மனித உரிமை பேரவையின் உத்தியோகபூர்வ நிகழ்ச்சிகள் அல்ல. மனித உரிமை பேரவையில் பதிவு செய்யப்பட்ட அரசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உறுப்பு நாடுகள் பக்க அறைகளை இரு மணித்தியாலங்களுக்கு முற்பதிவு செய்து கூட்டங்களை நடத்த முடியும்.

அவ்வாறான கூட்டங்களிலும் இலங்கை பிரச்சினை இம்முறை விவாதிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழர்களால் தமிழர்கள் மட்டும் கலந்து கொள்ளும் கூட்டங்களை தவிர யஸ்மின் சூகாவை தலைவராக கொண்ட உண்மை மற்றும் நீதிக்கான திட்ட அமைப்பு, நிமல்கா பெர்னாண்டோ தலைமையிலான இமெடா போன்ற அமைப்புக்கள் ஆக்கபூர்வமான கூட்டங்களை பக்க அறைகளில் நடத்தியிருக்கின்றன. இவர்கள் நடத்தும் கூட்டங்களில் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கைக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்காவும் கலந்து கொண்டு பதில்களை வழங்கியிருந்தார்.

இவற்றில் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் முதல் மூன்று விடயங்கள் தொடர்பான விவாதங்களில் நாடுகள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். தீர்மானங்களையும் அவர்களால் தான் எடுக்க முடியும். அரசசார்பற்ற நிறுவனங்களோ அல்லது வேறு எவருமோ தலையிட முடியாது.

மனித உரிமை விடயங்களில் இலங்கையில் ஏற்பட்டு வரும் முன்னேற்றங்கள் பற்றி நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை சிறிலங்கா முன்வைக்கும் அறிக்கையில் இலங்கையில் புதிய அரசாங்கத்தின் காலத்தில் மனித உரிமை விடயங்கள் முன்னேற்றம் அடைந்து வருவதாக சிறிலங்கா கூறி தப்பிக்கொள்ள முயற்சிக்கலாம். அதற்கு அமெரிக்கா போன்ற நாடுகளும் அமோதிக்கலாம்.
ஆனால் இலங்கையில் சிறுபான்மை இனங்கள் பற்றியும் காணாமல் போனவர்கள் பற்றியும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர்கள் சமர்ப்பித்திருக்கும் அறிக்கைகள் சிறிலங்கா அரசின் மனித உரிமை முன்னேற்ற அறிக்கைக்கு முரணாகவே உள்ளன.

சிறுபான்மை மக்கள் தொடர்பான ஐ.நா.சபையின் விசேட அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நாடியா இலங்கையில் சிறுபான்மை இனமக்கள் தொடர்பான அறிக்கையை கடந்த வாரம் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டத்தொடரில் சமர்ப்பித்திருந்தார்.

அவர் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து இலங்கையில் சிறுபான்மை இனமக்களின் பிரதிநிதிகளையும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்திருந்தார்.

சிறுபான்மை இனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நெருக்கடிகள் பற்றி விரிவான அறிக்கை ஒன்றையும் அவர் ஐ.நா.சபைக்கு சமர்ப்பித்திருக்கிறார்.

மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான சிறிலங்காவின் புதிய அரசாங்கம் கூட சிறுபான்மை இனமக்களின் பிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் தோற்றுவிட்டதையே அவரின் அறிக்கையின் சாரம்சமாகும்.
இலங்கை அரசாங்கம் இலங்கையின் சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான உடனடியான மிக முக்கியமான வலுவான வேலைத்திட்டங்களை முன்வைப்பதில் தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

ஆட்சிமாற்றத்திற்கு பிரதானமாக வழிவகுத்தவர்கள் சிறுபான்மை மக்களாகும். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பு இலக்கு என்பனவற்றை நிறைவேற்ற அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருக்கிறதா என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருக்கிறார்.

சிறுபான்மை இனங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசியல்யாப்பில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது இன்னமும் நிறைவேறவில்லை என்ற விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தமிழ், முஸ்லிம் சமூகங்களில் தாக்கம் செலுத்தும் விடயங்களான வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுதல், காணாமல்போனோர் விவகாரம், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகள் விவகாரங்களை அரசாங்கம் உடனடியாக ஆராய்ந்து கவனம் செலுத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றெடுக்கப்பட்ட தற்போதைய சந்தர்ப்பத்தை இழக்க வேண்டிய அபாயம் ஏற்படும் என்றும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

அதேபோன்று ஐ.நா.மனித உரிமை பேரவையின் பக்க அறை ஒன்றில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூகா இலங்கையின் புதிய அரசாங்கத்திலும் கூட மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டினார்.

சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு ஆண்டுகளாகி விட்ட போதிலும், ‘போர் நடந்த பகுதிகளில் தமிழ்ப் பொதுமக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட, கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தலுக்குட்பட்ட சூழலிலேயே நாளாந்த வாழ்க்கையை கழிக்கின்றனர். கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் போன்ற வன்முறைகளும், துஷ்பிரயோகங்களும் தொடர்ந்து இடம்பெறுகின்றன.

போர் முடிவுக்கு வந்து எட்டு ஆண்டுகளாகியும், இராணுவமயச் சூழலின் அளவு ஏற்றுக் கொள்ள முடியாதது. அதைவிட, சிறிலங்கா அரசபடைகள் தொடர்ந்தும் விலக்களிப்புடன் செயற்படுகின்றன. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், சிறிலங்கா தொடர்பான அனைத்துலக அணுகுமுறைகள் 180 பாகை கோணத்தில் மாறி விட்டன என சர்வதேச நாடுகளின் போக்குகள் பற்றியும் விமர்சனங்களை வெளியிட்டிருந்தார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் தென் பகுதியில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள போதிலும், வடக்கின் சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
காணாமல் போனவர்கள் பற்றியும் வவுனியாவில் உள்ள சித்;திரவதை முகாம் பற்றியும் யஸ்மின் சூகா சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த இலங்கைத்தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க காணாமல் போனவர்கள் பற்றி ஆராய்வதற்காக அலுவலகம் ஒன்றை அரசாங்கம் அமைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த வாரம் சர்வதேச பெண்கள் சங்கத்தினால், நடாத்தப்பட்ட பக்க நிகழ்வில், பாலஸ்தீனம் மேற்கு சாகாரா காஷ்மீர் ஆகிய போராட்டங்களில் பெண்கள் மீதான வன்முறைகள் பற்றி உரையாடப்பட்ட வேளையில், இலங்கையில் தமிழ் பெண்கள் மீதான வன்முறைகள் குறித்து. தமிழர் மனித உரிமைகள் மையத்தின் சர்வதேச இயக்குநர் திருமதி டியேற்றிமக் கோணால் உரையாற்றியிருந்தார்.

பிரதான நிகழ்வுகள் தவிர்ந்து பக்க நிகழ்வுகளில் இலங்கை அரசாங்கத்தை கேள்விக்குட்படுத்தும் ஆக்குபூர்வமான நிகழ்வுகள் சர்வதேச அமைப்புக்களால் நடத்தப்பட்டிருக்கிறது.   சில தமிழர் அமைப்புக்கள் பக்க அறைகளில் நடத்தும் கூட்டங்களில் தமிழர்கள் பேச அங்கு கூடியிருக்கும் தமிழர்கள் கேட்டுவிட்டு செல்லும் நிகழ்வுகளாகவே அமைந்திருக்கின்றன.  இதேவேளை இலங்கை தொடர்பாக பிரித்தானியா முன்வைக்க இருக்கும் பிரேரணை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

நல்லிணக்க ஊக்குவிப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் என்ற தலைப்பில் இந்த வரைபு முன்வைக்கப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி நிறைவேற்றப்பட்ட 30.1 இலக்க தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்த பிரேரணையின் முக்கிய விடயமாகும். இதில் இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை ஐக்கிய நாடுகள் சபை உறுதிசெய்யவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

இதனை பிரித்தானியா முன்வைத்திருந்தாலும் பிரதான அனுசரணையை அமெரிக்கா, வடஅயர்லாந்து, மொன்டிக்ரோ ஆகியன வழங்கியுள்ளன. சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்காக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்குமாறு, நாடுகளுக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த முறை 30.1 இலக்க தீர்மானத்திற்கு இணைஅனுசரணை வழங்கியதை போல இம்முறையும் சிறிலங்கா இணை அனுசரணை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் வேடிக்கை என்ன வென்றால் இந்த தீர்மானத்தில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என குறிப்பட்டிருக்கிறது.

சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதியும் பிரதமரும் உறுதியாக கூறிவருகின்றனர். சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லை என கொழும்பில் வைத்து வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் கூறியிருக்கிறார்.

சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐ.நா.மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு கடந்த முறை இலங்கை அரசாங்கம் அனுசரணை வழங்கியிருந்தது இம்முறையும் இலங்கை அனுசரணை வழங்கலாம்.

சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லை என கூறும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐ.நா.மனித உரிமை பேரவையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய நீதிவிசாரணை என்ற தீர்மானத்திற்கு சம்மதம் தெரிவிப்பதுதான் வேடிக்கை.

( இரா.துரைரத்தினம் )p07 (5)-page-001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

thanabalasingam

தமிழ் தேசியக் கூட்டமைப்பை சிதைக்க எண்ணும் அணியுடன் கைகோர்த்திருக்கும் விக்னேஸ்வரன் – வி.தனபாலசிங்கம். [June 27, 2017]

ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு ஒரு வருடம் கடந்துபோவதற்கு முன்னதாகவே தமிழ்த் ...
bikku

இரத்த தானம் என்ற பெயரில் தமிழர்களைக் கேவலப் படுத்தும் பேரினவாத அரசியல் – வைத்தியகலாநிதி முரளி வல்லிபுரநாதன். [June 27, 2017]

அண்மைக்காலமாக தமிழ் மக்கள் சாதீய பிரிவுகளினால் பிரிந்து இருப்பதன் காரணமாக ...
ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு [June 24, 2017]

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல் [June 23, 2017]

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு [June 23, 2017]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...