Wednesday, January 17th, 2018

பத்திரிகையாளர் என்ற நிலையிலிருந்து நான் செய்த தவறு! – (பாகம்-2) இரா.துரைரத்தினம்!

Published on January 8, 2012-1:48 pm   ·   12 Comments

 மட்டக்களப்பு நகரிலிருந்த தினக்கதிர் தினசரி பத்திரிகை அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தாக்கி எரிக்கப்பட்ட பின்னர் தமிழ்அலை பத்திரிகை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கொக்கட்டிச்சோலையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்பத்திரிகை விடுதலைப்புலிகளின் முழுக்கட்டுப்பாட்டிலேயே இருந்தது.

தினக்கதிர் தினசரி பத்திரிகை அலுவகத்தின் மீது யார் தாக்குதல் நடத்தினார்கள் என்ற விபரத்தை பின்னர் பார்ப்போம்.

தமிழ்அலை பத்திரிகையின் பிரதம ஆசிரியராக வேணுகோபால் பணியாற்றினார். மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த மாதமிருமுறை வெளிவரும் விடிவானம் பத்திரிகையில் நான் ஆசிரியராக இருந்த போது வேணுகோபால் அப்பத்திரிகையில் இணைத்துக்கொள்ளப்பட்டார். மிகவும் கீழ்ப்படிவானர். சொன்னவேலையை மிகவும் நேர்த்தியாக செய்யக்கூடியவர். ஆனால் பத்திரிகையாளருக்கு வேண்டிய துணிச்சல் இல்லை. விடிவானம், அதன் பின்னர் தினக்கதிர் வாரப்பத்திரிகையிலும் என்னோடு பணியாற்றினார்.

தமிழ்அலை பத்திரிகையில் வேணுகோபாலுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு கொடுப்பதற்காக அந்த நாளில் பணியாற்றுமாறு என்னை வேணுகோபாலும், அப்பத்திரிகையின் முகாமையாளராக இருந்த அரியநேத்திரனும் கேட்டிருந்தனர்.  அவர்கள் இருவரையும் பத்திரிகைதுறையில் இணைத்துவிட்டவன் என்ற வகையில் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டியது என் கடமை என எண்ணி அதற்கு சம்மதித்தேன்.

வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் தமிழ்அலை தினசரியில் பிரதம ஆசிரியருக்கு உரிய பணியை செய்ய வேண்டியது எனது பொறுப்பாக இருந்தது.

2004 மார்ச் 3ஆம் திகதி ஒரு புதன்கிழமை….

அன்று காலை 9மணியளவில் மண்முனைதுறை Ferry மூலம் மறுகரையை அடைந்த போது நகருக்கு வருவதற்காக நின்ற முனைக்காட்டைச் சேர்ந்த ஒருவர் சொன்னார். ஊருக்குள்ள கொஞ்ச பிரச்சினை போல கிடக்கு…. கல்யாணத்திற்கு சமைச்சபடி எல்லாம் அரைகுறையாக்கிடக்கு, கௌசல்யனை காணயில்லையாம்…
கூறியவர் Ferry  புறப்படுவதற்கு தயாரானபோது அவசரமாக அதில் ஏறிக்கொண்டார்.

அன்று விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யனுக்கு கொக்கட்டிச்சோலை கோவிலில் கல்யாணம் நடக்க இருந்தது. நான் தமிழ்அலை அலுவலகத்திற்குள் மோட்டார் சைக்கிளில் சென்று இறங்கிய போது அலுவலக வாசலிலும், வெளியிலும் ஊழியர்கள் கூட்டமாக கதைத்து கொண்டிருந்தார்கள். நான் போனதும் அனைவரும் உள்ளே சென்றுவிட்டார்கள்.

அங்கு பணியாற்றுபவர்களில் கணணிப்பிரிவிற்கு பொறுப்பாக பணியாற்றும் இளைஞர் என்னோடு நட்பாக பழகுபவர். நான் போனதும் அவர் சொன்னார். அண்ணை பிரச்சினை பெரிய அளவில போகுது. கௌசல்யன் வன்னிக்கு போய்விட்டார். கல்யாணம் நின்று போச்சு. இயக்கத்திற்குள்ள பெரிய பிரச்சினை போல கிடக்கு. பெரிய பதட்டமாக இருக்கு. போராளிகள் எல்லாம் குழப்பி போய் இருக்கிறாங்கள் என்றான். இண்டைக்கு பேப்பர் அடிக்கலாமோ தெரியாது என்றான்.  அது ஒன்றும் இல்லை. பேப்பர் அடிக்கிறதுதான். நீங்கள் வேலையை செய்யுங்கோ என சொல்லிவிட்டு நான் வேலையை ஆரம்பித்தேன்.

கணணிப்பிரிவில் வேலை செய்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண் போராளிகள். அவர்களும் பதற்றத்துடன் இருப்பதை அவதானித்தேன். இதுகளைப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல் நீங்கள் வேலையை செய்யுங்கோ என அவர்களுக்கு நான் கூறிய போதிலும் அதன் பின்னர் வந்த ஒவ்வொரு தகவலும் அதிர்ச்சியாக இருந்தது.

முதல்நாள் செவ்வாய்கிழமை நண்பகல் தளபதிகள் முக்கிய பொறுப்பாளர்களை தரவைக்கு அழைத்த கருணா இனிமேல் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை பிரிவு தனியாகவே இயங்கும். வன்னியோடு நீங்கள் யாரும் தொடர்பு வைக்க கூடாது என உத்தரவிட்டிருந்தார்.

மறுநாள் திருமண ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த கௌசல்யன் யாருக்கும் சொல்லாமல் வன்னிக்கு சென்றுவிடுவதென தீர்மானித்தார். அவருடன் தளபதி பிரபாவும் இணைந்து கொண்டார். ஏனையவர்களுக்கு கூறினால் தான் கருணாவிடம் மாட்டுப்பட்டு விடுவேன் என்ற அச்சத்தில் ஏனைய தளபதிகளுக்கு சொல்லாமல் அம்பாறை ஊடாக வன்னிக்கு புறப்பட்டனர்.
அதேநேரம் மட்டக்களப்பு நகர அரசியல்துறை பொறுப்பாளர் சேனாதியும், அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் குயிலின்பனையும் கௌல்யன் வாகரைக்கு கல்யாணத்திற்காக இறால் வாங்குவதற்கு அனுப்பியிருந்தார். கௌசல்யன் மட்டக்களப்பு எல்லையை தாண்டியதும் சேனாதிக்கும் குயிலின்பனுக்கும் இறால்வாங்க தேவையில்லை உடனடியாக வன்னிக்கு வாருங்கள் என தகவல் அனுப்பினார்.

புதன்கிழமை நண்பகல் அளவில் படுவான்கரை பகுதியில் இந்த பிரச்சினை தெரிய ஆரம்பித்து விட்டது. கௌசல்யனை காணவில்லை. பிரபாவை காணவில்லை, சேனாதியை குயிலின்பனை காணவில்லை என ஒவ்வொரு கதையாக வந்து கொண்டிருந்தது. மட்டக்களப்பில் உள்ள விடுதலைப்புலிகளின் அலுவலக தொலைபேசிகளும் பேச மறுத்தன. ஏனைய தளபதிகள் வன்னிக்கு செல்லாதவாறு அனைவருக்கும் கருணா தனக்கு கீழ் இருந்த போராளிகளை பாதுகாப்புக்கு அமர்த்தினார்.

கருணாவுடன் இருந்த பல தளபதிகள் கௌசல்யன், ரமேஷ் போன்றவர்களிடம் கோபத்துடன் இருந்ததாக பின்னர் அறிந்தேன். தங்களுக்கு தெரியாமல் ஓடிவிட்டார்களே என. பெரும்பாலானவர்களுக்கு கருணாவிடமிருந்து தப்பி செல்ல முடியாத நிலையிலேயே கருணாவுடன் நிற்க வேண்டிய சூழ்நிலை கைதியானார்கள் என்பது பின்னர் தெரியவந்தது.

வன்னிக்கும் படுவான்கரைக்குமான தொடர்புகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டிருந்தன. வன்னியிலிருந்து தமிழ்செல்வன், தயாமாஸ்ரர் ஆகியோர் தமிழ்அலை அலுவலகத்திற்கே தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்து கொண்டனர்.

கௌசல்யன், பிரபா ஆகியோர் வந்து சேர்ந்துவிட்டார்கள் என்று வன்னியிலிருந்து தமிழ்செல்வன் சொன்னார். இந்த விடயம் கொழும்பில் உள்ள சில பத்திரிகையாளர்களுக்கும் மட்டக்களப்பிலிருந்த பத்திரிகையாளர்களுக்கும் எட்டிவிட்டது. தமிழ்அலை பத்திரிகை அலுவலகத்தின் தொலைபேசி ஓயாமல் அடித்துக்கொண்டிருந்தது. அவர்களுக்கு பதிலளிப்பதே எனக்கு பெரும் பாடாக இருந்தது.

கொழும்பிலிருந்து சிவராம் தொலைபேசி எடுத்தான். நிலைமையை சொன்னேன். நாளை நான் மட்டக்களப்புக்கு வந்துவிடுவேன் என்றான். மட்டக்களப்பு நகரிலிருந்து நடேசன், தவராசா ஆகியோர் தொலைபேசி எடுத்தார்கள். நடேசனைப்பொறுத்தவரை தான் செய்தியை எப்படியாவது முந்திக்கொடுத்து விட வேண்டும் என்ற ஆர்வம். கொஞ்சம் பொறுங்கள்.. எப்படியும் பிரச்சினையை தீர்த்து விடுவார்கள். இந்த செய்திகள் வெளியில் வந்தால் அந்த முயற்சிகள் எல்லாம் கெட்டுவிடும் என சொன்னேன். வன்னியிலிருந்தும் தமிழ்செல்வன் சொன்னார் இந்த செய்திகள் வெளியில் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். எப்படியும் இதை சமாளித்து விடலாம் என்று.

மாலை முனைக்காடு மகாவித்தியாலயத்தில் படுவான்கரை மக்களுக்கு தமது நிலைப்பாட்டை சொல்வதற்காக பொதுமக்களுக்கான ஒரு கூட்டத்தை கூட்டுமாறு ரமேஷிற்கு கருணா உத்தரவிட்டிருந்தார். ரமேஷிற்கு முழுமையாக கருணாவின் நம்பிக்கைக்குரியவர்களே பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்தனர்.

தனக்கு பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டிருந்த போராளிகளை முனைக்காடு மகாவித்தியாலயத்தில் கூட்டத்திற்காக பாதுகாப்பு ஏற்பாடு செய்யுமாறும் சற்று நேரத்தில் தான் கூட்டத்திற்கு வருகிறேன் என கூறிய ரமேஷ் வவுணதீவு ஊடாக யாருக்கும் தெரியாமல் வன்னிக்கு புறப்பட்டார். கூட்டத்திற்கு வந்தவர்கள் ரமேஷ் அங்கு வராததால் காத்திருந்து விட்டு கலைந்து சென்றனர். இது கூட அங்கு பரபரப்பாக காணப்பட்டது.

மாலை 4.30மணியளவில் ஏ.எவ்.பி செய்திக்கு கருணா வழங்கிய செவ்வி வெளியானது. கிழக்கில் விடுதலைப்புலிகள் தனது தலைமையில் இனி தனித்தே இயங்குவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்தி தென்னிலங்கைக்கு தேனாக ஒலித்தது. சிங்கள ஊடகங்கள் எல்லாம் அதற்கு அதி முக்கியத்துவம் கொடுத்தன.

மாலை 6மணியளவில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தமிழ்அலைக்கு வந்தார். முடிவு எடுத்தாச்சு. அறிக்கை தருவம். கிழக்கு மாகாண மக்களுக்கு தமிழ்அலைதான் செய்தியை சொல்ல வேணும். நாங்கள் ஏன் பிரிந்து இயங்கப்போகிறோம் என்ற காரணத்தை விளக்கி ஆசிரிய தலையங்கம் எழுதுங்கள் என சொல்லிவிட்டு போனார். அப்போதுதான் மிகப்பெரிய ஆபத்திற்குள் பொறிக்குள் சிக்கி கொண்டிருக்கிறேன் என உணர்ந்து கொண்டேன்.

கணணிப்பிரிவில் எனக்கு நம்பிக்கையான இருவரை வைத்துக்கொண்டு ஏனையவர்களை போகுமாறு அனுப்பிவிட்டேன்.

கௌசல்யன் வன்னிக்கு சென்றுவிட்டதால் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளராக கரிகாலன் கருணாவால் அறிவிக்கப்பட்டார்.

இரவு 8மணி இருக்கும் கரிகாலன் கையொப்பம் இட்டு அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார். அதையே தலைப்பு செய்தியாக போடவேண்டும் என்றும் ஏனைய ஊடகங்களுக்கு அனுப்புமாறும் கூறினார்கள். தாங்கள் ஏன் பிரிந்து போகப்போகிறோம் என்பதற்கான காரணங்களை அதில் கூறியிருந்தார்கள்.

சிங்கத்தின் குகைக்குள் சிக்கிவிட்ட ஆபத்தை உணர்ந்து கொண்டேன். அந்த அறிக்கையை போடாவிட்டால் நான் அங்கிருந்து வீட்டிற்கு செல்ல முடியாது. போட்டால் அது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகம். மனதில் மிகப்பெரிய போராட்டம்.

அப்போது மட்டக்களப்பு அம்பாறை துணைஅரசியல்துறை பொறுப்பாளர் கிரிஷன் வந்தான். அண்ணை அறிக்கை கிடைச்சதுதானே. அதை போடுங்கோ என்றான். இனி வன்னியோட ஒட்டும் இல்லை. உறவும் இல்லை. இனி யாழ்ப்பாணம் வேற, நாங்கள் வேற. மேசையில் அடிச்சு சொன்னான். அம்மான் முடிவெடுத்திட்டார். இனி முடிவிலை மாற்றம் இல்லை. ஆவேசமாக கூறினான். கிரிஷன் ரென்சன்காரன் என்பது எல்லோருக்கும் தெரிந்தவிடயம்.

இரவு 12மணியை தாண்டிய பின்னர் ஆசிரிய தலையங்கத்தையும், தலைப்புச்செய்தியையும் எழுதிக்கொடுத்தேன். கணணிப்பிரிவில் வேலை செய்தவர் ஓடிவந்து கேட்டார். அண்ணை அறிக்கையை போடயில்லையோ என்று. நான் எதுவுமே பேசவில்லை.

விடுதலைப்புலிகளுக்குள் எந்த பிளவும் இல்லை. தலைவர் பிரபாகரன் தலைமையில் செயற்படுவதாக உறுதி என்று தலைப்புச்செய்தியை போட்டிருந்தேன். ஆசிரிய தலையங்கமும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் ஒற்றுமையை வலியுறுத்தியே எழுதியிருந்தேன்.

ஒரு பத்திரிகை ஆசிரியராக இருந்து கொண்டு நான் செய்தது தவறு என்றே என் மனச்சாட்சி கூறியது. இன்றும் அப்படித்தான் நினைக்கிறேன். உண்மையை மறைப்பது ஊடக தர்மமும் அல்ல. ஆனால் தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கும் சராசரி மனிதனாக சிந்தித்தால் நான் செய்தது சரி என்றே எனக்கு பட்டது.  எப்படியாவது ஒரிரு தினங்களுக்குள் இப்பிரச்சினையை விடுதலைப்புலிகளின் தலைமை சமாளித்து விடும் என நம்பினேன்.

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவரும் தமிழ்அலை நாளை என்ன செய்தியை சொல்லப்போகிறது என கிழக்கு மாகாண மக்கள் மட்டுமன்றி வெளிஉலகமும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. பிளவு என்று வெளிப்படையாக சொல்லிவிட்டால் இணக்கப்பாட்டு முயற்சிகள் எல்லாமே சிதைந்து விடுமே என எண்ணினேன். பிளவு பற்றி பெரிதாக செய்தி போடவேண்டாம் என கொழும்பில் உள்ள தமிழ் ஊடகத்துறையில் இருந்தவர்களுக்கும் கூறினேன். அப்போது இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவராக இருந்த காரணத்தால் கொழும்பில் உள்ள தமிழ் பத்திரிகையாளர்கள் அனைவருடனும் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது.

அதிகாலை 4.30மணிக்கு பத்திரிகை அச்சடித்து விநியோகத்திற்கு கொண்டு செல்ல தயாரான போது நான் மட்டக்களப்பு நகருக்கு புறப்பட்டேன். என்ன இண்டைக்கு நேரத்தோட வெளிக்கிட்டிட்டீங்க என அச்சகப்பகுதியில் வேலைசெய்த ஒருவர் கேட்டார். வழமையாக காலை 6மணிக்கு புறப்படும் நான் அன்று அதிகாலை 4.30மணிக்கே புறப்பட்டுவிட்டேன். அன்று வழமையை விட அதிக பத்திரிகையும் அடிக்கப்பட்டது.

காலை 6மணிக்கு பத்திரிகை கடைகளுக்கு சென்ற போதுதான் படுவான்கரையில் இருந்த விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் கோபம் அடைந்தார்கள். கரிகாலன் உட்பட பலரும் தமிழ்அலையை சூழ்ந்து கொண்டார்கள். சொன்னது என்ன செய்தது என்ன என கரிகாலன் கொதித்து போய் இருக்கிறார் என தமிழ்அலையில் வேலை செய்யும் ஒருவர் எனக்கு தெரிவித்தார்.

கரிகாலன், கிரிஷன், கொற்றவன் என பலரும் இங்க கோபத்தோட நிற்கிறார்கள். எங்க அவன் துரை போய்விட்டானா என கொதித்து போய் நிற்கிறார்கள். அண்ணை நீங்க வீட்டில நிக்காதயுங்கோ என தமிழ்அலையில் கணணிப்பிரிவில் வேலை செய்யும் நண்பர் எனக்கு சொன்னார். இராணுவகட்டுப்பாட்டு பிரதேசமான மட்டக்களப்பு நகரில் இருக்கும் என்னை இலகுவில் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற அசட்டு நம்பிக்கை எனக்கு.

தமிழ்அலையிலிருந்து கொற்றவன் எனது வீட்டிற்கு கோல் எடுத்திருந்தான். நான் அப்போது வீட்டில் இருக்கவில்லை. அண்ணை கொற்றவன்தான் இங்க பெரிய அட்டகாசம் காட்டுறான் என தமிழ்அலையில் உள்ளவர்கள் சொன்னார்கள்.

சுவார்ஸ்யமான விடயம் என்ன என்றால் கொற்றவனை எனக்கு தெரியாது. கருணா தப்பி சென்ற பின் கொற்றவன் போன்றவர்கள் விடுதலைப்புலிகளுடன் இணைந்திருந்தார்கள்.

பின்னர் ஒருநாள் கொக்கட்டிச்சோலையில் கௌசல்யனை சந்தித்த போது யாரடா அந்த கொற்றவன். அவன்தான் பெரிய அட்டகாசம் காட்டினாம் என நான் கேட்ட போது கௌசல்யன் சிரித்து கொண்டிருந்தான். அப்போது நான் நினைக்கிறேன் தவராசா, நிராஸ் ஆகியோரும் அந்த சந்தர்ப்பத்தில் இருந்திருக்க வேணும். கொஞ்சநேரத்தில் கௌசல்யன் சொன்னான். அண்ணை இதில் ஒருத்தன் நிண்டானே அவன்தான் கொற்றவன். நீங்கள் ஆரடா அந்த கொற்றவன் எண்டதும் வெளியில போய் விட்டான் என்றான்.

வியாழக்கிழமை காலையில் தமிழ்அலையில் வெளிவந்த தலைப்புச்செய்தியை மேற்கோள் காட்டி தமிழ்நெற் விடுதலைப்புலிகளுக்குள் பிளவு இல்லை என செய்தி வெளியிட்டது.

Batticaloa LTTE reiterates stand

[TamilNet, Thursday, 04 March 2004, 09:32 GMT]
“We are functioning with commitment to our cause under the command of our national leader Veluppillai Pirapaharan and the guidance of commander Col. Karuna” a senior official of the LTTE in Batticaloa was quoted as saying in Thursday’s edition of the Thamil Alai, a regional daily published from Kokkaddicholai, a large village controlled by the Tigers 15 kilometres southwest of Batticaloa town.

“We did not take any decision to leave the LTTE and operate separately”, the official told Thamil Alai.

“Rumours of the LTTE breaking up have been spread systematicaly to cause panic and fear among the people”, LTTE sources close to Col. Karuna told Thamil Alai.

காலை 10மணியிருக்கும் சிவராம் தொலைபேசியில் தொடர்பு கொண்டான். நான் தமிழ்அலையில நிற்கிறன் என்றான். ஏன் அங்க நிக்கிறாய் கரிகாலன் ஆட்கள் கொதிப்பில நிற்கிறாங்கள் என்றேன். அது பிரச்சினை இல்லை. அம்மானை சந்திக்க போறன். சந்திச்சிட்டு வாறன் என்றான்.

வியாழக்கிழமை இரவு சிவராம் கொக்கட்டிச்சோலையிலிருந்து மட்டக்களப்பு நகருக்கு திரும்பியிருந்தான்.

வெள்ளிக்கிழமை காலையில் சிவராமை சந்தித்த போது நான் கருணாவை சந்திக்கவில்லை என்றான். பின்னர் வீரகேசரியில் கருணாவுக்கு எழுதிய கடிதத்திலும் கருணாவை தான் சந்திக்க முயற்சித்ததாகவும், ஆனால் கருணா தன்னை சந்திக்கவில்லை என்றும் எழுதியிருந்தான்.

ஆனால் விசுவும் கரிகாலனும் சிவராமை கருணாவிடம் அழைத்து சென்றதாக சிவராமுக்கு நெருக்கமான ஒருவர் பின்னர் சொன்னார். அதேபோல இரண்டாம் நாள் வியாழக்கிழமை மாலை கருணா வெளியிட்ட அறிக்கையை தயாரித்தில் சிவராமுக்கு பங்கு இருப்பதாகவும், கொழும்பில் உள்ள ஊடகவியலாளர் ஒருவர் சொன்னபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சிவராம் மட்டக்களப்பை நேசித்தான். மட்டக்களப்பு சமூகத்தின் வளர்ச்சியில் அதீத அக்கறை கொண்டிருந்தான். அதனால் சிலவேளையில் சிவராம் பேசுவது பிரிவினைவாதம் அல்லது பிரதேசவாதம் என்று சிலர் எண்ணுவதுண்டு. என்னைப்பொறுத்தவரை சிவராமின் போக்கு நியாயமானது என்றே நான் இன்றும் நம்புகிறேன். அவன் தான் பிறந்த மண்ணை நேசித்தான். அதற்கு மேலாக தமிழ் மக்களின் விடுதலை நேசித்தான். அவன் மீது ஆயிரம் குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டாலும், சிவராம் தொடர்பாக எழுப்பபடும் கேள்விகளுக்கு இன்னும் விடைகிடைக்காமல் இருந்த போதிலும் நான் அவனை நம்புகிறேன்.
அவன் மட்டக்களப்பு மக்களின் அறியாமையை, கண்டு கோபப்பட்டான். ஆளுமை மிக்க சமூகமாக வரவேண்டும் என மட்டக்களப்பு மடையனுகளே என உரிமையோடு திட்டினான்.

ஆனால் கருணா தான் பிரிந்து போகப்போகிறேன் என அறிவித்த பின் சிவராம் கருணாவை சந்தித்திருந்தால் ஏன் அதை எங்களுக்கு மறைக்க வேணும்? இந்த கேள்விக்கு எனக்கு இதுவரை விடைகிடைக்கவில்லை.

வியாழக்கிழமை காலையில் வேணுகோபால் உட்பட தமிழ்அலை ஊழியர்கள் வேலைக்கு சென்ற போது கருணாகுழுவின் கட்டுப்பாட்டில் அந்த அலுவலகம் முழுமையாக கொண்டு வரப்பட்டிருந்தது. கருணாகுழு மட்டக்களப்பை விட்டு தப்பி செல்லும் வரை 41நாட்களும் வேணுகோபால் உட்பட தமிழ்அலை பத்திரிகை ஊழியர்கள் சிறைவைக்கப்பட்டே பத்திரிகை அடிக்கப்பட்டது.

பத்திரிகை ஆசிரியர்களை சிறைவைத்து பத்திரிகை அடித்த வரலாறு 1989ஆம் ஆண்டு இந்திய இராணுவ காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினாலும் நிகழ்த்தப்பட்டது. விடுதலை என்ற பத்திரிகையை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் 1989 இறுதிகாலத்தில் யாழ்ப்பாணத்தில் அடித்தார்கள். முரசொலி பத்திரிகையில் பணியாற்றிய பத்திரிகையாளர்களை கடத்தி சென்று சிறைவைத்தே அவர்களை கொண்டு அப்பத்திரிகை அடிக்கப்பட்டது. அதில் சிக்கிய எனது அனுபவத்தை இன்னொரு பகுதியில் பார்ப்போம்.

வெள்ளிக்கிழமை தமிழ்அலை கருணாவின் அறிக்கையை தலைப்பு செய்தியாக தாங்கி வெளிவந்தது. அந்த அறிக்கையை பெரும்பாலான மட்டக்களப்பு மக்கள் நம்பினார்கள். அதன் பொய்மையை பின்னர் மட்டக்களப்பு மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நகரில் நான் சிவராமை சந்தித்த போது சிவராம் சொன்னான். நீ கொஞ்சம் தப்பிவிட்டாய். இல்லை எண்டால் மண்டையில போட்டிருப்பாங்கள் என்றான்.

கருணாவின் பிளவு களேபரம் நடந்து கொண்டிருந்த அதேவேளை 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் வேட்புமனுத்தாக்கல் களேபரமும் நடந்து கொண்டிருந்தது.

வெள்ளிமாலை மட்டக்களப்பு காந்திசிலை மைதானத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களில் ராஜன் சத்தியமூர்த்தி, இராசநாயகம் போன்றவர்கள் கருணாவின் தலைமையில் நாம் செயற்படுவோம் என அக்கூட்டத்தில் பேசினர்.  யோசப் அண்ணன் பேசும் போது தலைவர் பிரபாகரன் தலைமையில் கருணாவின் வழிகாட்டலில் செயற்படுவோம் என்றார்.
அக்கூட்டத்தில் பிளவின் தாக்கம் வெளிப்பட்டது. மக்களும் மிகவும் குழம்பிப்போய்தான் இருந்தார்கள். சிலர் கருணாவின் முடிவு சரி என்றார்கள்.

எல்லாமே குழப்பமாக இருந்தது. சனிக்கிழமை காலையில் கிளிநொச்சியில் பத்திரிகையாளர் மகாநாடு என அறிவித்திருந்தார்கள். நான், நடேசன், தவராசா, சிவராம் ஆகியோரும், சிவராமின் ஒரு வெள்ளைக்கார நண்பரும் வெள்ளி இரவு வானில் கிளிநொச்சிக்கு புறப்பட்டோம்.

அந்த பயணத்தில் கூட நாம் ஆபத்தை சந்தித்தோம். அந்த பயணத்தில் உயிராபத்திலிருந்து தப்பியது கூட ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியான அனுபவம்தான். எங்களை காப்பாற்றிய அந்த புண்ணியவானும் இப்போது உயிரோடு இல்லை ( தொடரும்) thurair@hotmail.com
பதிப்பில் வராத என் மனப்பதிவுகள் பாகம் ஒன்றை பார்வையிட   http://www.thinakkathir.com/?p=26409  
 

Readers Comments (12)

 1. Mohan says:

  Really Super !
  Very very interest….!

 2. suri pathman says:

  GOOD, WE NEED TO KNOW THE TRUTH , CONTINUE

 3. manavan says:

  புலிகளின் தவறுகளை எழுதாமல் விட்டது தமிழ் பத்திரிக்கை செய்த

  மபெரும்தவரு

  மானம்கெட்ட தமிழன்

  • CAPTION SIMBA says:

   YEAH!YOU ARE CORRECT!
   FOLLOW THE SANGARI WHEN WRITING
   ABOUT THE LTTE!
   TIGERS(TAMILS)MUST SHOW SOME KIND OF
   SINCERITY TO LIONS WHEN LIVING FOR A WHILE (MAX 20YRS MORE ONLY) IN
   LAND OF LIONS.

 4. தன்மானம் says:

  புலிகள் தவறு விட்டிருந்தால் தமிழ் பத்திரிகைகள் எழுதிருக்கும் ஆனால் எழுதவிலையே புலிகள் தவறு விடவில்லைதானே
  தன்மானத்தமிழன்

 5. Anpu swiss says:

  தமிழ் தேசியத்தின் நலன் கருதி செயல்படுவதே முக்கியம் ஆகவே அந்த வகையில் தாங்கள் செய்தது சரியே தங்கள் கடமை தொடர வாழ்த்துக்கள்

 6. Sriskandarajah says:

  உனது அறுபதுகளில் ……..டயரியை எடு.. இனியாவது உண்மையை எழுது — கவியரசு வைரமுத்து.

 7. naaham says:

  Dear Mr.Thurairatnam,

  I respect your feelings as a Journalist.If ,I were you…, I would have done the same and would do the same million times ,again and again, if the intention is to safeguard the Tamil liberation. Personally , reading your writting is like re-living those painfull days all over again , I remeber vividly ,the agony I and my family members went through on those days!! Still, we really do not know , a lots of the inside details ,as to really what happened .As one of the very few journalists alive today , who had some first hand information of the incidents , I really think you should continue to do what you have begun to do , with out any bias.

 8. […] பதிப்பில் வராத என் மனப்பதிவுகள் பாகம்  இரண்டை  பார்வையிட  http://www.thinakkathir.com/?p=27063 […]

 9. vanniyan says:

  sivaram ean ,thaan karunaavai meet panninathai maraithar, enpathan kaaranattai , KURUPARAN ezhthum thodarai read panninaal unkalukku therium thurai iyaa averkaleh- thesiyath thalaivarukku anton palasingkam poola, karunaavukku thaan sivaram irukka wendum enru ninaithar , kadasiyil athu palikkavillai. kuruparan article i konjam read pannavum.

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...