Friday, November 17th, 2017

வந்தது ஒரு செய்திதான் – துள்ளிகுதித்தனர் தமிழ் ஊடகவியலாளர்கள் – அதிர்ச்சியடைந்தனர் சிங்கள ஊடகவியலாளர்கள்!-இரா.துரைரத்தினம்

Published on February 23, 2012-7:51 pm   ·   1 Comment

அண்மையில் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் தெரிவு தொடர்பான செய்தி தமிழ் இணையத்தளம் ஒன்றில் வெளிவந்த போது அரசுக்கு ஆதரவானவர்கள் ஒன்றிணைந்து விட்டார்கள் என ஒருவர் எழுதியிருந்தார்.
வெளிநாடுகளில் உள்ள யாரோ ஒருவர்தான் அதை எழுதியிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அதை பார்த்த போது அனந்த பாலகிட்ணர், பாரதி, கஜன், நிக்ஷன் ஆகியோர் யார் என்பதை என் மனப்பதிவில் பதிவு செய்ய வேண்டும் என எண்ணினேன்.

அனந்த பாலகிட்ணரை சண்டே ஒப்சேர்வர் பத்திரிகையில் பணியாற்றும் ஒருவர் என்றுதான் பலரும் அறிந்திருக்கிறார்கள். அரசு சார்பான பத்திரிகையாளன் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருக்கிறது. ஆனால் நான் இப்போது சொல்லப்போகும் விடயம் அதற்கு முற்றிலும் மாறுபட்டது.

வடமுனை சிங்கள குடியேற்றமும் எமது பயணமும்
1982ஆம் ஆண்டு முற்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு எல்லைப்பகுதியான வடமுனையில் சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. வடமுனை வெலிக்கந்த பிரதேசத்திற்கு கிழக்காக உள்ள பகுதியாகும். நீர்வளமும், நிலவளமும் நிறைந்த பிரதேசம். அந்த பகுதியில் சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் வெளிவந்த போது அதை அரசாங்கம் மறுத்திருந்தது.

ஆனால் பிக்கு ஒருவர் தலைமையில் பெருமளவில் சிங்கள குடும்பங்கள் கொண்டுவரப்பட்டு அங்கு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு குடியேற்றப்படுவதாகவும், அந்த பகுதிக்கு தங்களின் வயல்களை பார்வையிட சென்ற தமிழர்கள் இருவர் காணாமல் போய்விட்டதாகவும் பரபரப்பாக செய்திகள் வந்து கொண்டிருந்தன. இவை அனைத்தையும் சிறிலங்கா அரசாங்கம் மறுத்திருந்தது.

இந்நிலையில் ஈழநாடு பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றிக்கொண்டிருந்த அனந்தகிருஷ்ணன் என்னை தொடர்பு கொண்டு வடமுனைக்கு சென்று அங்கு சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்படுவது உண்மைதானா என பார்ப்போம் என கேட்டார். ( சண்டே ஒப்சேவரில் சேர்ந்த பின் அனந்த் பாலகிட்ணர் என மாற்றிக்கொண்டார்)
அந்த நேரத்தில் அப்பகுதிக்கு தமிழர்கள் யாரும் செல்ல முடியாத  அச்சநிலை காணப்பட்டது. அங்கு செல்ல முற்பட்டவர்களையும் அந்த பகுதியின் எல்லையில் இருந்த இராணுவத்தினர் தடுத்து விட்டனர். சிங்கள குடியேற்றத்திற்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டே பெரும் எடுப்பில் அந்த சிங்கள குடியேற்றம் நடைபெற்றுக்கொண்டிருந்ததாக அறிந்திருந்தோம்.
இருந்த போதும் எப்படியாவது வடமுனைக்கு சென்று சிங்கள குடியேற்றத்தை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்த வேண்டும் என திட்டமிட்டோம். இருந்த போதிலும் ஏற்கனவே அங்கு சென்ற தமிழர்கள் காணாமல் போய்விட்டார்கள் என்ற செய்தி ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அப்போது அனந்தின் அப்பா பாலகிட்ணர் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சர்வோதய இயக்க இணைப்பாளராக இருந்த என்னுடைய நண்பர் சம்டீன் அவர்களிடம் எமது நோக்கத்தை கூறி அதற்கு உதவி செய்ய முடியுமா என கேட்டேன். மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் என்னுமிடத்தில்தான் சர்வோதய மட்டக்களப்பு தலைமையகம் இருந்தது. ஒருவாறு சாம்டீன் எமது திட்டத்திற்கு சம்மதித்தார். ஆனால் ஒரு நிபந்தனை போட்டார். நான் உங்களை கூட்டிச்செல்கிறேன். ஆனால் நீங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் பத்திரிகையாளர் என காட்டி கொள்ள கூடாது என தெரிவித்தார். நாமும் சம்மதித்தோம்.

சாம்டீன் கம்பளையை சேர்ந்தவர். சிங்கள மொழி மூலமே கல்விகற்றவர். அதனால் அவர் மீது பெரிதாக சந்தேகம் ஏற்பட வாய்ப்பில்லை. நான், அனந்தகிருஷ்ணன், சாம்டீன், சர்வோதய பணியாளர் என நான்கு பேரும் சர்வோதய வானில் புறப்பட்டோம். பால்மா, அரிசி, உலர் உணவு பொருள்களையும் சாம்டீன் வாகனத்தில் ஏற்றினார்.

நாங்கள் வடமுனையில் குடியேறியிருக்கும் சிங்கள மக்களுக்கு உதவி நிவாரணங்களை வழங்கப் போகிறோம். நீங்கள் இருவரும் பத்திரிகையாளர்கள் அல்ல. இங்கு திரும்பி வரும்வரைக்கும் நீங்கள் சர்வோதய தொண்டர்கள். எமது திட்டம் பிசுபிசுத்தால் பிக்குவும் சிங்களவர்களும் எங்கள் அனைவரையும் மேலே அனுப்பிவிடுவார்கள் என சாம்டீன் சொன்னார்.

மட்டக்களப்பிலிருந்து புறப்பட்டு பொலனறுவைக்கு சென்று அங்குள்ள சர்வோதய மாவட்ட இணைப்பாளராக இருந்தவரையும் ( சிங்களவர்) அழைத்து கொண்டு வெலிக்கந்த ஊடாக வடமுனைக்கு சென்றோம். வடமுனையில் இருக்கும் மக்களுக்கு உதவிகளை வழங்க வந்திருக்கிறோம் என கூறியே பொலனறுவை சர்வோதய இணைப்பாளரையும் சாம்டீன் அழைத்து சென்றார்.

எனக்கும் அனந்தகிருஷ்ணனுக்கும் மனதிற்குள் பயம். எங்களை யார் என்று தெரிந்து கொண்டால் நடக்கப்போகும் விபரீதத்தை எண்ணி அஞ்சிக்கொண்டிருந்தோம். முற்பகல் 11மணியளவில் வடமுனை எல்லைக்கு சென்றதும் இராணுவத்தினர் அங்கு செல்ல முடியாது என்றனர்.  சர்வோதய தொண்டர்கள் என்பதால் பின்னர் ஒருவாறு விட்டனர். அங்கே சென்று பிக்குவை சந்தித்து அங்குள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கப்போவதாக சாம்டீன் தெரிவித்தார். தென்னிலங்கையிலிருந்து கிடுகுகள், மற்றும் வீடுகள் அமைப்பதற்கான பொருட்கள் ஏற்றிவருவதை நேரில் பார்த்தோம். அனைத்தையும் நாம் படம் எடுத்துக்கொண்டோம்.

வடமுனை வளமான பிரதேசம், வடமுனை நன்னீர் குளத்தில் மீன்பிடி தொழில் செய்யலாம். அந்த குளத்திலிருந்து இரண்டு போக நெற்செய்கையும் செய்ய முடியும். வளமான அப்பிரதேசத்தை இலக்கு வைத்தே சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. வடமுனையிலிருந்து பார்த்தால் குடும்பிமலை தெரியும். ( இப்போது தொப்பிக்கல என பெயர்மாற்றிவிட்டார்கள்) 

ஒருவாறு அன்று மாலையில் அங்கிருந்து புறப்பட்டு இரவு மட்டக்களப்பு நகரை சென்றடைந்தோம். அதன் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் வடமுனை சிங்கள குடியேற்றம் பற்றி ஆதாரபூர்வமாக படங்களுடன் அனந்தகிருஷ்ணனின் கட்டுரை வெளியானது.

அந்த ஆதாரத்துடன் வடமுனை சிங்கள குடியேற்றம் பற்றி பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பபட்டது. அந்நேரத்தில் தேவநாயகம் அரசாங்கத்தில் நீதியமைச்சராக இருந்த போதிலும் சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசினார். வடமுனையில் சிங்கள குடியேற்றம் செய்யப்படவில்லை என கூறிவந்த அரசாங்கத்தால் பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது.

வடமுனை சிங்கள குடியேற்றத்தை ஆதாரங்களுடன் வெளியுலகிற்கு கொண்டு வந்த பெருமை அனந்தகிருஷ்ணனைத்தான் சாரும். இளம்கன்று பயமறியாது என்பது போல அப்போது நானும் அனந்தும் பயமறியாத இளைஞர்கள். இப்போது நினைத்தாலும் அந்த பயணம் அச்சமாக இருக்கும். எமது பயணத்தின் வெற்றிக்கு சாம்டீனின் உதவியையும் மறக்க முடியாது.

ஈழநாட்டில் கட்டுரை படங்களுடன் வெளிவந்து பாராளுமன்றத்தில் அது சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து பிக்குவிற்கும், அரசாங்கத்திற்கும் சாம்டீன் தான் எங்களை அழைத்து சென்றார் என்ற விடயம் தெரியவந்து விட்டது. அதனால் சாம்டீன் சர்வோதய தலைமையகத்தினாலும், அரசாங்கத்தினாலும் சில நெருக்கடியையும் சந்தித்தார். இருந்த போதிலும் சாம்டீன் உடனான நட்பு எனக்கு தொடர்ந்து இருந்தது.

இப்படி சில திறில் வேலைகளை அக்காலத்தில் நானும் சாம்டீனும் சேர்ந்து செய்திருக்கிறோம். சந்தர்ப்பம் வரும் போது சிலவற்றை சொல்வேன். 
1983ஆம் ஆண்டுக்கு பின்னர் அப்பகுதியில் விடுதலைப்போராட்ட இயக்கங்களின் ஆதிக்கம் வளர ஆரம்பித்ததையடுத்து வடமுனையில் குடியேறியிருந்த சிங்களவர்கள் வெளியேறிவிட்டார்கள். இப்போது மீண்டும் அந்தப்பகுதியில் சிங்களவர்கள் குடியேறுவதாக அறிய முடிகிறது.

முன்னர் வடமுனையில் புளொட் இயக்க முகாம் இருந்தது.

1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் வடமுனை, குடும்பிமலை, தரவை ஆகிய இடங்களுக்கு நான் சென்றிருந்த போது அந்த இடங்களை மீண்டும் பார்க்க முடிந்தது. வடமுனையில் விடுதலைப்புலிகளின் ஒரு முகாம் இருந்தது. குடும்பிமலை ( தொப்பிக்கல) அடிவாரத்தில் விடுதலைப்புலிகளின் பெரிய பண்ணை ஒன்று இருந்தது. விசுதான் அதற்கு பொறுப்பாக இருந்தார். ஒருநாள் இரவு அந்த பண்ணையில் தங்கியிருந்த அனுபவம் கூட மறக்க முடியாததாகும்.
தரவையிலிருந்து போராளி ஒருவர்தான் என்னை மோட்டார் சைக்கிளில் அழைத்து செல்வதற்கு விசு ஏற்பாடு செய்திருந்தார்.  வீதியே கிடையாது. வனாந்தரகாட்டு பகுதிக்குள்ளால் தான் அவர் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றார். மரங்களை சுற்றிச்சுற்றி மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற போது எனது உயிர் போய்வந்தது போல இருந்தது. வாகனம் செல்லக்கூடிய பாதை தூரம் என்பதால் அவர் அப்பாதையால் என்னை கூட்டிச்சென்றார்.

மேல் பக்கம் இருந்து சில வேளை ஆமி வந்து அம்புஸ் கிடக்குறவங்கள். வெடிச்சத்தம் கேட்டால் கீழ விழுந்து மரம் ஒன்றோட கவர் எடுங்கோ என அந்த போராளி சொன்னார்.

தம்பி உந்த றெயினிங் எல்லாம் எனக்கு தெரியாதடா என அப்போராளிக்கு சொன்னேன். எனக்கு அச்சமூட்டுவதற்கு சொன்னரோ அல்லது உண்மையில் அந்த இடத்திற்கு ஆமி வருவாங்களோ எனக்கு தெரியாது. அந்த பண்ணையை சென்றடையும் வரை உயிர் போய் வந்த மாதிரியே இருந்தது.

அன்றிரவு, மறுநாள், என அந்த பண்ணையில் இருந்த இரு தினங்களும் விருந்தில் மூழ்கடித்து விட்டார் விசு. அந்த பண்ணையில் பால் இறைச்சி, மரக்கறி என ஒன்றுக்கும் பஞ்சமில்லை.
பொதுவாகவே விடுதலைப்புலிகள் உபசரிப்பில் வல்லவர்கள். அதிலும் விசு உபசரிப்புக்கும் பழகுவதற்கும் மிகவும் நல்லவர்.

ஒருமுறை விசு என்னிடம் சொன்ன விடயம் பத்திரிகையில் தலைப்பு செய்தியாக வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. அப்போது ரி.ஆர்.ரி வானொலியிலும் வெளியாகியிருந்தது. அதன் பின்னர் என்னுடன் கதைக்கும் போது அண்ணை இதை பேப்பருக்கு எழுதிப்போடாதையுங்கோ என அடிக்கடி சொல்வார். புளொட் இயக்கத்தில் ஆரம்பத்தில் சேர்ந்து பின்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து கொண்ட விசு மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளராகவும் இருந்தார். 

அரசசார்பு  பத்திரிகையில் பணியாற்றுபவர் அரசு ஆதரவாளராகத்தான் இருப்பார் என எண்ணுவது தவறாகும். அவர்கள் தங்கள் இனம்சார்ந்து எத்தகைய நெருக்கடியான பணிகளை ஆற்றியிருக்கிறார்கள் என்பதை சிலர் அறிந்து கொள்வதில்லை.

ஸ்ரீகஜன், மாணிக்கவாசகம் ஆகியோரின் கைதும் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தோற்றமும்

இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் நெருக்கடியான காலகட்டத்திலேயே ஆரம்பிக்கப்பட்டது.  1998ஆம் ஆண்டு யூலை 16ஆம் திகதி வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய ஸ்ரீகஜனும், 1998 யூலை 20ஆம் திகதி வீரகேசரியின் வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகமும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். அவர்களின் விடுதலைக்காக கொழும்பில் இருந்த எந்த ஊடக அமைப்பும் குரல் கொடுக்கவில்லை. கொழும்பில் இருந்த ஊடக அமைப்புக்கள் அனைத்தும் சிங்கள ஊடகவியலாளர்களை கொண்ட அமைப்புக்கள். அவர்கள் பணியாற்றிய வீரகேசரி நிறுவனம் கூட அவர்களுக்கு உதவுவதில் கைவிரித்து விட்டது.
கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மட்டுமே அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என கோரியிருந்தது.

மாணிக்கவாசகம் ஒருமாதத்தின் பின்னரும், ஸ்ரீகஜன் மூன்று மாதங்களின் பின்னரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்.

அந்த வேளையில்தான் இலங்கையில் இருக்கும் தமிழ் ஊடகவியலாளர்கள் அனைவரையும் இணைத்து ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும், நெருக்கடி நிலைக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்களுக்காக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் 09மே 1999ஆம் ஆண்டு இலங்கையில் இருக்கும் தமிழ் ஊடகவியலாளர்கள் இணைந்து இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தை உருவாக்கினர். வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிசன் மண்டபத்தில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தில் தலைவராக குருநாதனும், ( திருமலை) செயலாளராக சீவகனும் ( தற்போது பிபிசி தமிழோசை) பொருளாளராக சிவகுமாரும் ( சரிநிகர்) தெரிவு செய்யப்பட்டனர்.

ஐரோப்பிய ஒன்றியம், இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், தேசிய சமாதானப்பேரவை ஆகியவற்றின் அனுசரணையுடன் இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இணைந்து 2000ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் 22ஆம் திகதிகளில் தமிழ், சிங்கள, முஸ்லீம் ஊடகவியலாளர் கலந்து கொண்ட இனஉறவுக்கான கருத்தரங்கு ஒன்று மட்டக்களப்பில் நடத்தப்பட்டது.  இருநாள் கருத்தரங்கையடுத்து சிங்கள ஊடகவியலாளர்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கும் சென்றிருந்தனர்.
22ஆம் திகதி இரவு மட்டக்களப்பு ஊறணியில் உள்ள வதிவிட கருத்தரங்கு நடைபெறும் தங்கு விடுதியில் சிங்கள தமிழ் ஊடகவியலாளர்கள் தங்கியிருந்தனர். யுத்தபிரதேசத்தில் செய்தியாளர்கள் எவ்வாறு செய்தி சேகரிப்பது என்ற தலைப்பில்தான் கருத்தரங்கு நடைபெற்றது.

ஊடகவியலாளர்கள் இரவு தங்கியிருக்கிறார்கள் என்றால் அங்கு பெரிய தண்ணிப்பாட்டி நடைபெறும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான். சிங்கள, தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றாக இருந்து பேசிக்கொண்டிருந்த போது ஒரு செய்தி வந்தது.
தமிழ் ஊடகவியலாளர்களை துள்ளிக்குதிக்க வைத்த செய்தி- சிங்கள ஊடகவியலாளர்களை கவலைகுள்ளாக்கியது

அது தமிழ் ஊடகவியலாளர்களை துள்ளிக்குதிக்க வைத்தது. சிங்கள ஊடகவியலாளர்களுக்கு பெரும் கவலை தரும் அதிர்ச்சி தகவலாக இருந்தது. ஆனையிறவு இராணுவ முகாம் முழுமையாக விடுதலைப்புலிகளிடம் வீழ்ந்து விட்டது என்ற செய்தி வெளிவந்தது.

தமிழ் ஊடகவியலாளர்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த தண்ணிப்பாட்டி ஆனையிறவு வெற்றி பாட்டியாக மாறியது. சிங்கள ஊடகவியலாளர்களின் முகங்கள் இடிவிழுந்தது போல இருந்தது. சிலர் உடனடியாகவே அந்த இடத்தை விட்டு எழுந்து சென்று விட்டனர். எங்களுடன் மிகவும் அந்நியோன்யமாக பழகும் சிங்கள ஊடகவியலாளர்கள் கூட எழுந்து சென்று விட்டனர்.

தமிழன் வெற்றிக்கொண்டாட்டம் நடத்துகிறான் என எங்கள் காதில் விழும்படி சிங்கள ஊடகவியலாளர்கள் பேசிக்கொண்டனர்.

சரியாக 10 நாட்கள் கழித்து மே 2ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். அந்த கருத்தரங்கினை மட்டக்களப்பில் ஏற்பாடு செய்ததற்காக என் மீது விசாரணை நடத்தப்பட்டது.
என் மீது அவர்கள் சில குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர். சிங்கள ஊடகவியலாளர்களை விடுதலைப்புலி பிரதேசத்திற்கு அழைத்து சென்று அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொடுத்தது என்றும், மட்டக்களப்பு நகரில் நடந்த கருத்தரங்கில் விடுதலைப்புலிகளும் கலந்து கொள்ள ஏற்பாடுகளை செய்ததாகவும் என் மீது குற்றம் சுமத்தியிருந்தார்கள்.

எனினும் இந்த குற்றச்சாட்டுக்களை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் நிரூபிக்க முடியாமல் போய்விட்டது.

மற்றுமொரு மனப்பதிவுடன் உங்களை சந்திப்பேன்……
(தொடரும்)

Readers Comments (1)

  1. Mohan says:

    Really super!wait for Next…!

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...