Thursday, February 22nd, 2018

சொந்த சகோதரர்கள் மோதிய அவலம்! சிந்திய இரத்தங்கள்!!- இரா.துரைரத்தினம்.

Published on March 14, 2012-9:16 pm   ·   4 Comments

கடந்த முறை பதிப்பில் வராத என் மனப்பதிவை பார்த்து விட்டு மட்டக்களப்பிலிருந்து ஒரு மடல் எனது மின்னஞ்சலுக்கு வந்திருந்தது.
அந்த மண்ணோடு எனக்கிருக்கும் உறவின் வலிமையை அம்மடலில்  அந்த நண்பர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எனக்கென்று ஒரு அரசியல் கொள்கை இருந்த போதிலும், வேறு பட்ட அரசியல் சித்தாத்தங்களை கொண்டிருந்த பலருடனும் நெருங்கிய நண்பர்களாக இருந்த காலங்களை அம்மடல் நினைவுக்கு கொண்டு வந்திருந்தது.

அந்த நண்பர் எழுதிய மடலை  இங்கே தருகிறேன்……
இம்மடல் தங்களுக்கு ஆச்சரியத்தைத் தந்தாலும் ஒரு குறிப்பிட்ட அசாதாரண சூழ்நிலை நிலவிய காலப்பகுதியில் தோழமையோடு பழகியவன் என்ற வகையிலும் இம்மண்ணையும் மக்களையும் நேசிப்பவன் என்ற வகையிலும் இச்சிறு குறிப்பினை வரைவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
குறிப்பாக தங்களுடைய எழுத்துக்களை தொடர்ந்து விருப்போடு வாசிப்பவன் என்ற வகையிலும் முக்கியமாக தங்கள் கட்டுரைகளின் யதார்த்தத்தினை ஏற்றுக்கொள்பவன் என்ற வகையிலும் இதனை குறிப்பிட விரும்புகின்றேன். தினக்கதிர் இணையத்தளத்தினூடாக கிழக்கின் அரசியல் உள்ளிட்ட யதார்த்தங்களை தாங்கள் முன்வைக்கும் பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது. அதிலும் மிக அண்மையில் வடமுனை சிங்கள குடியேற்ற முயற்சி பற்றிய கட்டுரை பெறுமதி வாய்ந்த வரலாற்று ஆவணம்.
காரணம் அந்த நிகழ்ச்சியில் காலம் சென்ற அமைச்சர் தேவநாயகம் அவர்களுடன் நேரடியாக பங்குகொண்டவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் அக்கட்டுரை என்னை மிகவும் கவர்ந்தது. நான் கொழும்பு பல்கலைக் கழகத்தில் மாணவனாக இருந்த சமயம் ஊத்;துச்சேனை என்ற இடத்துக்கு அமைச்சருடன் சென்று அங்கு அடாத்தாக குடியேற்ற முயற்சியை மேற்கொண்ட பௌத்த பிக்குவை விரட்டியடித்த சம்பவத்தில் கௌரவ அமைச்சருடன் உடன் சென்றவர்களில் நான் ஒருவன் மட்டுமே உயிருடன் இருக்கின்றேன் என்ற வகையில் அக்கட்டுரையில் நான் கூடிய ஈடுபாடு காட்டினேன்.
ஆனால் எந்தவித அரசியல் அனுசரனையும் இன்றி துணிவாக அவ்விடத்துக்குச் சென்று உரிய தகவல்களைப் பெற்று நடவடிக்கை எடுத்த உங்களின் பங்களிப்புக்கு முன்பு எங்களின் செயல் மிகக் குறைவானதுதான் என்பது தங்கள் கட்டுரையின் பின் என் நம்பிக்கையாக உள்ளது.
உங்கள் எழுத்துக்கள் இச்சமூகத்துக்கு விழிப்புணர்வையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தவேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்து நிறைவு செய்கிறேன்.

இந்த மடலை எழுதிய நண்பரும், நானும் அரசியல் கொள்கையில் வேறு பட்ட சித்தாத்தங்களை கொண்டவர்கள். ஆனாலும் நல்ல நண்பர்களாக பழகினோம்.

இவர்களைப் போன்ற நல்ல நண்பர்களை விட்டு…. அந்த மண்ணை விட்டு,… தூக்கி வீசப்பட்ட அந்த சம்பவங்களும், அந்த நெருக்கடியான நாட்களைப்பற்றியுமே இன்று எழுத இருக்கிறேன்.

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள் 4ஆம் அங்கத்தில் மட்டக்களப்பில் எழுப்பபட்ட பிரிவினை வாதத்தையும், மேற்குலகத்தில் வாழ்ந்த தமிழர்கள் மட்டக்களப்பு தமிழர்கள் மீது துரோகி பட்டங்களை வழங்கிய அவலங்களையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.

அடுத்து வந்த நாட்களில் தமிழர்களை தமிழர்கள் கொன்று குவித்த சம்பங்கள் மட்டக்களப்பை அதிரவைத்தன என அந்த அங்கத்தின் இறுதியில் குறிப்பிட்டிருந்தேன்.

விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் கருணாவுக்கும் இடையிலான பிளவின் பூகம்பம் வெடித்த நாட்களில்தான் பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.  2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் தெரிவில் விடுதலைப்புலிகளின் நேரடி தலையீடு காணப்பட்டது.

யுத்தம் நடைபெற்ற 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ் கட்சிகளை இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு கருக்கொள்ளப்பட்ட போதிலும் 2001ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முதல்தடவையாக தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ ஆகிய நான்கு கட்சிகளும் போட்டியிட்டன. இந்த வேட்பாளர் தெரிவில் விடுதலைப்புலிகளின் தலையீடு இருக்கவில்லை. நான்கு கட்சிகளுமே யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்தினார்கள்.

விடுதலைப்புலிகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள் என தற்போது கூறிவரும் சிலருக்கு இந்த விடயங்கள் எரிச்சலை ஊட்டலாம்.  ஆனால் 2002ல் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் அதிகரிக்க தொடங்கியது.  இதன் உச்சக்கட்டமாக 2004ஆம் ஆண்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களில் பெரும்பாலானவர்களை விடுதலைப்புலிகளே தெரிவு செய்தனர்.  ஓவ்வொரு மாவட்டத்திற்குமான வேட்பாளர் தெரிவு நடந்த சமயத்தில் கருணாவின் பிளவு அறிவிக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் ஜோசப் பரராசசிங்கத்தை தவிர ஏனைய 7பேரையும் அப்போது விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை தளபதியாக இருந்த கருணாவே தெரிவு செய்தார்.
விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை தளபதி கருணாவின் சிபார்சில் கனகசபை, தங்கேஸ்வரி, ஜெயானந்தமூர்த்தி, ராசன் சத்தியமூர்த்தி, கிங்ஸ்லி இராசநாயகம், அரியநேத்திரன், ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.  யாழ் மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் சிபார்சில் சொலமன் சிறில், சிவநேசன், பத்மினி சிதம்பரநாதன், செல்வராசா கஜேந்திரன், ஆகியோர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.  வன்னிமாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் சிபார்சில் சிவநாதன் கிசோர், கனகரத்தினம் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் விடுதலைப்புலிகளால் சிபார்சு செய்யப்பட்ட தங்கேஸ்வரி, சிவநாதன் கிசோர், கனகரத்தினம், ஆகியோர் இப்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முதல் தினத்தில் தான் கருணா பிரிந்து போகப்போவதாக அறிவிப்பு வெளியானது. இது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட வேட்பாளர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது.

வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட இரு தினங்களின் பின் கரடியனாற்றில் உள்ள விடுதலைப்புலிகளின் அலுவலகத்திற்கு மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை கருணா அழைத்திருந்தார். தனக்கு கீழ் உள்ள கிழக்கு தலைமையின் கீழேயே மட்டக்களப்பு அம்பாறை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் செயற்பட வேண்டும் என்றும் வன்னித்தலைமையுடன் எந்த தொடர்பையும் வைக்க கூடாது என உத்தரவிடப்பட்டது.  ஜோசப் பரராசசிங்கம் மட்டும் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகளின் தலைமையை அவர் நிராகரிக்க மறுத்து விட்டார். ஏனைய 7பேரும் கருணாவின் உத்தரவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ஜோசப் பரராசசிங்கம் ஏற்கனவே 14வருடங்களாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். அவருக்கான பாதுகாப்பு ஒன்று இருந்தது. அரசியல் தளம் ஒன்றும் இருந்தது. ஏனையவர்களுக்கு இந்த அரசியல் தளமோ, பாதுகாப்போ இருக்கவில்லை. அவர்கள் கருணாவின் உத்தரவின் படியே செயற்பட்டார்கள்.

இவர்களில் ராசன் சத்தியமூர்த்தி, கிங்ஸ்லி இராசநாயகம் ஆகியோர் கருணாவின் அதிதீவிர விசுவாசிகளாக செயற்பட்டு, வன்னித்தலைமைக்கு எதிராக பிரசாரம் செய்து வந்தனர்.  விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை தவிர வேறு யாரையும் தான் தலைவராக ஏற்றுக்கொள்ளவில்லை என ஜோசப் பரராசசிங்கம் அறிக்கை வெளியிட்டதையடுத்து கருணாவின் சீற்றம் அவரின் பக்கம் திரும்பியது. தேர்தல் முடியும் வரை அவர் வெளியில் சென்று தேர்தல் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. அவர் தங்கியிருந்த சுபராஜ் தியேட்டரில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் முடங்க வேண்டிய நிலை ஜோசப் பரராசசிங்கத்திற்கு ஏற்பட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து போகப்போவதாக கருணா அறிவித்த நாளிலிருந்து மட்டக்களப்பை விட்டு அவர் வெளியேறும் வரையான அந்த 42 நாட்கள் மட்டக்களப்பில் அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என தெரியாத காலமாக இருந்தது. நிமிடத்திற்கு நிமிடம் மாற்றங்களும், அச்சமூட்டும் சம்பவங்களும் நடைபெற்றன. சில இடங்களில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு எதிராக கருணா குழுவால் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சில இடங்களில் பிரபாகரனின் உருவப்பொம்மைகளும் எரிக்கப்பட்டன. கிழக்கு பல்கலைக்கழக மைதானத்திலும் சிலரால் விடுதலைப்புலிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யுவி தங்கராசா, மற்றும் இப்போது கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இருக்கும் கிட்டினன் ஆகியோர் இருந்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்பொம்மையும் ( கொடும்பாவி) எரிக்கப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அப்போது வேட்பாளராக இருந்த ஜெயானந்தமூர்த்தியும் கலந்து கொண்டதாக சிலர் கூறினர்.

தேர்தல் பிரசாரம் ஒரு புறம், விடுதலைப்புலிகளுக்கும், கருணாகுழுவுக்கும் இடையிலான மோதல் மறுபுறம், யார் விடுதலைப்புலிகளின் பக்கம்? யார் கருணாவின் பக்கம்? என அறிந்து கொள்ளமுடியாத திரிசங்கு நிலையில் மக்கள் இருந்தனர்.
அப்போது மட்டக்களப்பு பொதுமக்களின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பதற்கு நான் கண்ட அனுபவம் ஒன்று பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

தாண்டவன்வெளியில் பத்திரிகை விற்பனை செய்யும் கடை ஒன்றிற்கு தினசரி காலையில் நான் செல்வது வழக்கம், தினசரி பத்திரிகையை வாங்குவதற்கும் ஓசிப்பேப்பர் வாசிப்பதற்குமாக அக்கடைக்கு செல்வது வழக்கும். அக்கடையின் முகாமையாளராக இருந்தவர் வாசிப்பு பழக்கம் உடையவர். அரச திணைக்களம் ஒன்றில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர்.  கருணாவின் பிளவு அறிவிக்கப்பட்டு அதற்கான காரணங்களையும் கூறி அறிக்கை வெளிவந்த அன்று அவரை சந்தித்தேன்.
கருணா கூறியிருக்கும் காரணங்கள் சரிதானே, மட்டக்களப்பை இவர்கள் இப்படிதான் புறக்கணித்து வருகிறார்கள் என சொன்னார்.  சுமார் ஒரு வாரகாலம் கழித்து அவரின் மனநிலை சற்று மாறியிருந்தது. கருணாவிலும் பிழை இருக்குது போல தெரியுது. வன்னி பக்கத்திலையும் பிழை தெரியுது. இரண்டு பக்கமும் பிரச்சினையை பேசித்தீர்த்திருக்கலாம் என்றார்.  அதன் பின் சுமார் ஒருமாதம் கழித்து அவரின் மனநிலை முற்றாகவே மாறியிருந்தது. கருணா கள்ளன். இவன் தன்னிலை இருக்கிற பிழைகளை மறைக்கிறதிற்காகத்தான் இப்படி செய்திருக்கிறான். என்ன இருந்தாலும் இவ்வளவு காலமும் கட்டிக்காத்த இயக்கத்தை உடைக்க நினைச்சிருக்க கூடாது என அவரின் கோபம் முழுவதும் கருணாவின் பக்கம் திரும்பியிருந்தது.

ஒரு மாதகாலத்தில் மக்களின் மனநிலைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கு ஊடகங்களும், சில தமிழ் ஊடகவியலாளர்களும்தான் காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.  இதற்காக மட்டக்களப்பிலிருந்த ஊடகவியலாளர்களும், கொழும்பிலிருந்த ஊடகவியலாளர்களும் தொடர்ச்சியாக எடுத்த முயற்சிதான் இந்த வெற்றிக்கு காரணம் எனலாம். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி தினசரி ஒவ்வொரு பொது அமைப்பின் பெயரில் அறிக்கைகள் ஊடகங்களில் வெளிவரும். மக்களின் மனநிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய அறிக்கைகளும் செய்திகளும் தொடர்ச்சியாக வெளிவந்ததன் பலன் சரியாக ஒரு மாதத்தில் மக்களின் ஆதரவை கருணா இழக்க வேண்டி ஏற்பட்டது.
கருணாவின் சதியை முறியடிப்பதில் கொழும்பிலிருந்து வெளிவந்த தினக்குரல், சுடர்ஒளி, சூரியன் எப்.எம் ஆகியன முக்கிய பங்கு வகித்தன. வீரகேசரியை பொறுத்தவரை ஞாயிறு பதிப்பு ஓரளவு கருணாவின் சதியை முறியடிப்பதற்கு ஒத்துழைத்த போதிலும் வீரகேசரி தினசரி கருணாவிற்கு ஆதரவான செய்திகளே பெரும்பாலும் வெளிவந்தன.

மறுபுறம் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்திருந்தது. கருணா குழு ராசன் சத்தியமூர்த்தி, தங்கேஸ்வரி, இராசநாயகம் ஆகியோருக்கே அதிக ஆதரவை வழங்கினர். விருப்பு வாக்கில் ஒன்றை ராசன் சத்தியமூர்த்திக்கு வழங்க வேண்டும் என கருணாகுழு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கும் அறிவுறுத்தியிருந்தது.

இந்நிலையில் மார்ச் 30ஆம் திகதி காலையில் ராசன் சத்தியமூர்த்தி அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார். தேர்தல் பிரசாரத்திற்கு உதவி செய்வதாக வந்த இரு இளைஞர்களே அவரை வீட்டில் வைத்த சுட்டுக்கொன்றனர்.
இச்சம்பவம் கருணா தரப்பிற்கு பெரும் இழப்பாக அமைந்தது.

இந்த வேளையில் ராசன் சத்தியமூர்த்தி பற்றியும் குறிப்பிட வேண்டும். மலையகத்தை பூர்வீகமாக கொண்ட ராசன் சத்தியமூர்த்தி மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவராக இருந்தவர். சிங்கள, ஆங்கில மொழிகளை பேசக் கூடியவர். 2001ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டவர்.

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த அலிசாகிர் மௌலானா, மௌனகுருசாமி, ராசன் சத்தியமூர்த்தி ஆகிய மூவரும் 2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தத்தையடுத்து விடுதலைப்புலிகளின் கிழக்கு தளபதி கருணாவுடன் நேரடியான உறவை வளர்த்துக்கொண்டனர்.

இந்த விபரங்கள் பற்றி மற்றொரு அங்கத்தில் விரிவாக பார்க்கலாம்.

2003ஆம் ஆண்டு காலப்பகுதியில் கருணாவை கரடியனாறு அலுவலகத்தில் சந்தித்த போது விடுதலைப்போராட்டத்திற்கு மிகவும் ஆபத்தான பேர்வழிகளான ராசன் சத்தியமூர்த்தி, அலிகாகிர் மௌலானா போன்றவர்களுடன் ஏன் உறவை வைத்திருக்கிறீர்கள் என நான் கேட்ட போது கருணா அளித்த பதில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

எங்கள் பெடியள் கைது செய்யப்பட்டால் அல்லது கொழும்பிற்கு சென்று ஒரு அலுவலை முடிக்க வேண்டும் என்றால் உடனடியாக ராசன் சத்தியமூர்த்திதானே மறுக்காமல் உடனடியாக செல்கிறார். சில உதவிகளுக்கு ராசன் சத்தியமூர்த்தி போன்றவர்களைத்தானே நாட வேண்டியிருக்கிறது என சொன்னார். கருணாவிற்கும், ராசன் சத்தியமூர்த்திக்கும் இடையில் மிகவும் நெருக்கமான உறவு வளர்ந்திருக்கிறது என்பதை அப்போது உணர்ந்து கொண்டேன்.

ராசன் சத்தியமூர்த்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கருணா தரப்பிற்கு பெரும் இழப்பாக அமைந்தது.  இதனையடுத்து கருணா தரப்பிற்கு தங்களுடன் இருக்கும் போராளிகள் மீதே சந்தேகம் ஏற்பட தொடங்கியது. கருணா தரப்புடன் போர் புரிந்து விடுதலைப்புலிகள் மீண்டும் மட்டக்களப்பை கைப்பற்றினார்கள் என பலரும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. கருணா மட்டக்களப்பை விட்டு தப்பி ஓடுவதற்கு காரணம் தன்னை சுற்றியிருந்த போராளிகளிலேயே நம்பிக்கை இழந்து அவர்களே தன்னை சுட்டு விடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்த போதுதான் கருணா அலிசாகிர் மௌலானாவின் உதவியுடன் மட்டக்களப்பை விட்ட தப்பி சென்றார்.

மட்டக்களப்பை மீண்டும் விடுதலைப்புலிகள் மீட்பதற்கு அவர்கள் புரிந்த உளவியல் போர்தான் முக்கியகாரணமாகும். மட்டக்களப்பிலிருந்து வன்னிக்கு சென்ற விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களான ரமேஷ், கௌசல்யன், தயாமோகன், ரமணன், இளந்திரையன் போன்றவர்கள் மட்டக்களப்பில் இருந்த போராளிகளுடன் தொடர்பு கொண்டு பேசியதையடுத்து கருணாவுடன் இருந்த தளபதிகள் சிலரின் மனங்களில் கூட மாற்றம் ஏற்பட்டிருந்தது. வன்னியிலிருந்த ரமேஷ் ஒரு தடைவ கூறும் போது மட்டக்களப்பில் கருணாவுடன் இருக்கும் போராளிகளில் 90வீதமானவர்கள் எங்களின் நேரடி தொடர்பில் இருக்கிறார்கள். நாங்கள் அங்கு சென்று இறங்கியதும் அந்த மாற்றத்தை புரிந்து கொள்வீர்கள் என தெரிவித்திருந்தார்.
ராசன் சத்தியமூர்த்தி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், உட்பட சில சம்பவங்களால் கருணாவுக்கு யாரை நம்புவது? யாரை சந்தேகிப்பது என்ற பெரும் குழப்பம் ஏற்பட்டு விட்டது.

2004 ஏப்ரல் 2ஆம் திகதி பொதுத் தேர்தல் நடந்த போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணாகுழுவின் ஆதிக்கமே இருந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் வெற்றிபெறுபவர்கள் தங்களின் பக்கமே நிற்பார்கள் என கருணா குழுவினர் பெரிதும் நம்பியிருந்தனர். அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கூறி சில வேட்பாளர்களின் இலக்கங்களையும் விநியோகித்திருந்தனர்.

தேர்தல் முடிந்ததையடுத்து வென்னப்புவ என்ற இடத்தில் ஒரு கருத்தரங்கிற்காக சென்றிருந்தேன். அந்த கருத்தரங்கில் சிங்கள மற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற அக்கருத்தரங்கில் சிங்கள ஊடகவியலாளர்களுக்கும் மட்டக்களப்பிலிருந்து சென்ற ஊடகவியலாளர்களுக்கும் இடையில் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்தது. தற்கால அரசியல் நிலை பற்றி கலந்துரையாடல் நடைபெற்ற போது விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணா பிரிந்து சென்ற விவகாரம் சூடுபிடித்திருந்தது. விரைவில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் மட்டக்களப்பு வரும், கருணா வெளியேற வேண்டி ஏற்படலாம் என மட்டக்களப்பிலிருந்து சென்ற நாங்கள் தெரிவித்த போது அது நடக்காது, இனி விடுதலைப்புலிகள் தலையெடுக்க முடியாது என அனுராதபுரத்திலிருந்து வந்த சிங்கள ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்தார். கருணாவை ஒரு ஹீரோவாக சித்தரித்த சிங்கள ஊடகவியலாளர்கள் இனிமேல் கருணாவை வெல்ல முடியாது என தெரிவித்தனர்.

அந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் நான்கு முகாம்களாக பிரிந்து நின்றதை அவதானிக்க முடிந்தது.

சிங்கள ஊடகவியலாளர்கள் கருணாவின் கைஓங்கும், விடுதலைப்புலிகள் அழிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து சென்ற தமிழ் ஊடகவியலாளர்கள் கருணா மட்டக்களப்பை விட்டு வெளியேற வேண்டி ஏற்படும். அங்கு மீண்டும் விடுதலைப்புலிகளின் பிரசன்னம்தான் இருக்கும் என்றனர்.

முஸ்லீம் ஊடகவியலாளர்கள் கருணாவையும் ஆதரிக்காத, விடுதலைப்புலிகளையும் ஆதரிக்காத அரச ஆதரவு போக்கை கொண்டவர்களாக காணப்பட்டனர்.

வடபகுதியிலிருந்து வந்த தமிழ் ஊடகவியலாளர்கள் எந்த பக்கமும் சாராத ஒரு நழுவல் போக்கையே கடைப்பிடித்தனர்.

கருத்தரங்கை முடித்துக்கொண்டு அம்பாறையை சேர்ந்த சில முஸ்லீம் ஊடகவியலாளர்களும், மட்டக்களப்பை சேர்ந்த தமிழ் ஊடகவியலாளர்களும் பிரத்தியேக வான் ஒன்றில் வந்து கொண்டிருந்தோம். அன்று காலையில் வெருகலுக்கு விடுதலைப்புலிகள் வந்து விட்டதாக கேள்விப்பட்டோம்.

பொலனறுவையிலிருந்து  மட்டக்களப்பு செல்லும் பிரதான வீதி கருணா குழுவின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இதனால் ஓட்டமாவடிக்கு வந்ததும் முஸ்லீம் ஊடகவியலாளர்களை வானின் முன் ஆசனத்தில் அமர்த்தி விட்டு நாம் பின் ஆசனங்களில் இருந்தோம்.

குல்லா தொப்பியுடன் முன் ஆசனத்தில் முஸ்லீம் நண்பர் ஒருவர் இருந்ததால் கிரான் போன்ற இடங்களில் நின்றிருந்த கருணாகுழுவினர் நாங்கள் பயணம் செய்த வானை மறிக்கவில்லை.

அன்றிரவே விடுதலைப்புலிகளின் அணி வாகரையில் தரையிறங்கியது. அந்த தரையிறக்கத்தின் போது விடுதலைப்புலிகளுக்கும் கருணா குழுவினருக்கும் இடையில் சில இடங்களில் மோதல்கள் ஏற்பட்ட போதிலும் எதிர்பார்த்ததை விட இலகுவாக விடுதலைப்புலிகள் அப்பிரதேசங்களை கைப்பற்றிக்கொண்டனர்.

ஏற்கனவே தொடர்பில் இருந்த தளபதி ரமேஷ் போன்றவர்கள் வெருகல் ஊடாக வாகரைப்பிரதேசத்திற்குள் பிரவேசித்த போது அங்கு நிலை கொண்டிருந்த கருணா குழுவுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பை செய்தனர். ரமேஷ்தான் அந்த அறிவிப்பை போராளிகளுக்கு விடுத்தார். தன்னுடைய தலைமையில் விடுதலைப்புலிகள் போராளிகள் வந்திருக்கிறோம், நீங்கள் எல்லோரும் சரணடையுங்கள் என அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்கள் எதிர்ப்பை தெரிவிக்காது சரணடைந்தனர்.

அன்றிரவு வாகரையிலிருந்து கௌசல்யன் தொலைபேசியில் என்னுடன் தொடர்பு கொண்டு நாங்கள் வந்துவிட்டோம். வாகரைப்பிரதேசம் முழுமையாக எங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது. நாளை சரணடைந்த போராளிகளை பெற்றோரிடம் ஒப்படைக்கப்போகிறோம். நீங்கள் மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்களை அழைத்துக்கொண்டு வாருங்கள் என சொன்னார். மறுநாள் காலை மட்டக்களப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் சுமார் 6பேர் வாகரையை நோக்கி சென்றோம்..

பெரும் இரத்தகளரி இன்றி அந்த பிரதேசத்தை விடுதலைப்புலிகள் மீட்டுவிட்டார்கள் என்ற ஆத்மதிருப்தி ஏற்பட்டாலும், வாகரையிலிருந்து கதிரவெளி நோக்கி செல்லும் பாதையில் சகோதர மோதல்களால் சிந்திய இரத்தங்களையும், அடுத்தது என்ன நடக்கப்போகிறதோ என்ற ஏமாற்றங்கள், நம்பிக்கையீனங்கள் கலந்த முகங்களையும் தான் காணமுடிந்தது.

அந்த மோதல்களில் இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கு என சென்றவர்கள்தான். கொல்லப்பட்டவர்கள் கருணா குழுவாக இருந்தாலும் சரி, விடுதலைப்புலிகள் தரப்பாக இருந்தாலும் சரி அனைவரும் தமிழீழ போராட்டத்திற்காக விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழ தேசத்தை மீட்க வேண்டும் என்ற இலட்சிய வேட்கையோடு சென்றவர்கள்தான்.

ஆனால் ஒரே இலட்சியத்தோடு பயணித்தவர்கள் இன்று……?

அந்த இலட்சிய வேங்கைகளின் இரத்தங்களைத்தான் வாகரை வீதிகளில் என்னால் காணமுடிந்தது.

வாகரை தேவாலயத்தில் ரமேஷ் நின்றார். எங்களைக்கண்டதும் அண்ணை நாங்கள் வந்து விட்டோம் என நம்பிக்கையோடு சொன்னார்.

ஆனால் அந்த நம்பிக்கைகள் நிலைக்கவில்லை. யாரும் எதிர்பார்க்காத இழப்புக்கள்,.. அந்த மண்ணில் வாழ முடியாத துக்ககரமான சம்பவங்கள் அதன் பின்னர்தான் இடம்பெற்றது.
(தொடரும்) முன்னைய அங்கங்களை பார்வையிட http://www.thinakkathir.com/?category_name=%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA

 

 

Readers Comments (4)

 1. Visithran says:

  ஜெயானந்தமூர்த்தி பற்றி எழுதியிருந்தீர்கள். அது முற்றிலும் உண்மை ஐயா! தேசியத்தலைவரின் படத்தை எரித்தார். அவர் எரிக்கிரதில உடைக்கிறதில வல்லவர். தமிழ் தேசிய கூட்டமைப்பு கஜேந்திரன் அணி உருவாக ஐடியா கொடுத்தது மட்டுமன்றி, இங்கே லண்டனிலும் நாடுகடந்த தமிழீழ அரசை உடைத்ததில் முன்னுக்கு நின்ற மனுஷன் அவர்தான். ஜெயானந்த மூர்த்தியின் அரசியல் ஞானப்பால் குடித்த சிறுசுகள் தான் கடந்த 27 .02 .2012 ஜெனீவாவில் கோப்பை கழுவும் இராஜதந்திரம் பற்றி முழங்கினார்கள். தமிழர் ஒருன்கினைப்புக்குளுக்கள் விரும்புவது போல ஒருவேளை உருத்திரகுமாரனுக்கு பதிலாக ஜெயானந்தமூர்த்தி பிரதமராக தெரிவாகியிருந்தால் நாடுகடந்த அரசின் நிலை என்னவாகியிருக்கும் என்று இப்போதாவது புரிகிறதா?

 2. Mohan says:

  Yes ! Really super !
  Wait for Next ….!

 3. kumar says:

  Who is Jeyaanthamurthi???

 4. karaddy says:

  //வடபகுதியிலிருந்து வந்த தமிழ் ஊடகவியலாளர்கள் எந்த பக்கமும் சாராத ஒரு நழுவல் போக்கையே கடைப்பிடித்தனர்.//அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே . என்றைக்கும் அவர்கள் நழுவுவதுதான் வாடிக்கை

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...