Friday, November 17th, 2017

இரத்தம் தோய்ந்த கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கதிரை- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்- 9- இரா.துரைரத்தினம்!

Published on April 20, 2012-1:20 pm   ·   No Comments

எனது பத்திரிகைதுறை அனுபவங்களை எழுத வேண்டும் என எண்ணிய போது நெருக்கடியும் துயரமும் நிறைந்த 2004ஆம் ஆண்டு காலப்பகுதியை தவிர்த்து விட்டு எழுத வேண்டும் என எண்ணியிருந்த போதிலும் தவிர்க்க முடியாத நிலையில் இத்தொடரின் ஆரம்பத்திலேயே இலங்கையில் நான் இருந்த இறுதிக்காலம் பற்றி எழுத முற்பட்டேன்.

ஆனால் புறச்சூழலில் பல நெருக்கடிகள் வரும் என நான் எண்ணியிருக்கவில்லை. இதனால் கடந்த சில வாரங்களாக இத்தொடரை எழுத முடியாமல் போய் விட்டது. மன்னிக்கவும்.

இருந்த போதிலும் சில விடயங்களை தவிர்த்து எழுத வேண்டிய நிர்ப்பந்தத்துடன் இந்த பகுதியை தொடர்கிறேன்……

மட்டக்களப்பு மண் வந்தாரை வரவேற்கும் மண் என்பார்கள், விருந்தோம்பலுக்கு மட்டக்களப்பின் கிராமங்களைத்தான் உதாரணமாக சொல்வார்கள். கூடவே பாயுடன் ஒட்டவைத்து விடுவார்கள் என்றும் சிலர் கூறுவார்கள். இந்த பாயுடன் ஒட்டவைக்கும் கதையில் மந்திரமும் இல்லை, மாயமும் இல்லை, விருந்தோம்பல், உபசரிப்பு காரணமாக அங்கு போகிறவர்கள் அங்கேயே தங்கிவிடுவார்கள், அதனால்தான் பாயுடன் ஒட்டிவிடுவதாக ஒரு கதை வந்ததே தவிர பாயுடன் ஒட்டும் மந்திரக்கதைகள் எல்லாம் வெறும் கட்டுக்கதைகள்தான்.

இந்த விருந்தோம்பலை காண வேண்டுமாக இருந்தால் நீங்கள் மட்டக்களப்பின் நகரப்பகுதிக்கோ அல்லது எழுவான்கரைப்பகுதிக்கோ சென்றால் உங்களின் எதிர்பார்ப்பு எதிர்மறையாகத்தான் இருக்கும்.

முக்கியமாக மட்டக்களப்பின் நகரம் என்று சொல்லப்படுகின்ற புளியந்தீவுக்கு சென்றால் இந்த விருந்தோம்பல், உபசரிப்பு என்ற கதைகளை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. யாழ்ப்பாணத்தவர்கள் கஞ்சர்கள் என சொல்வார்கள். அதை விட மோசமான கஞ்சர்கள், கசமிஞ்சிகளை புளியந்தீவில் காண முடியும். தங்களை மட்டக்களப்பின் பூர்வீக குடிகள் என சொல்லிக்கொள்ளும் புளியந்தீவில் உள்ளவர்கள் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து சென்று குடியேறியவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதனால் தானோ என்னவோ மட்டக்களப்பின் வாசனையை மட்டக்களப்பு நகர் என சொல்லப்படும் புளியந்தீவில் காணமுடியாது. அது பற்றி பின்னர் பார்ப்போம்.

உண்மையான விருந்தோம்பல், உபசரிப்பை பார்க்க வேண்டுமாக இருந்தால் படுவான்கரை, பொத்துவில், தம்பிலுவில், மற்றும் முஸ்லீம் கிராமங்களான நிந்தவூர், ஒலுவில், அக்கரைப்பற்று கிராமங்களுக்குத்தான் செல்ல வேண்டும். முஸ்லீம் கிராமங்களின் உபசரிப்பு ஒரு தனிவகை.

1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழர்கள் முஸ்லீம் கிராமங்களுக்கு செல்ல முடியாத போது, முஸ்லீம்கள் தமிழ் கிராமத்திற்கு செல்ல முடியாத போது நான் நிந்தவூர் கிராமத்தில் சலீம் போன்ற என்ற நெருங்கிய நண்பர்களுடன் உல்லாசமாக சுற்றித்திரிந்த காலங்கள் மறக்க முடியாதவை.

நிந்தவூர் கடற்கரையில் பால்நிலவில் நடுநிசிக்கு பின்னரும் கூட நண்பர்களுடன் பேசிக்கொண்டிருப்போம்.

மட்டக்களப்பின் படுவான்கரையின் விருந்தோம்பலுக்கு ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்லலாம்.

எனது நண்பர்களில் ஒருவரான ரொபின் ஏராளசிங்கத்திற்கு படுவான்கரை முனைக்காடு கிராமத்தில் பாடசாலை அதிபர் ஒருவரின் மகளை பெற்றோர் நிட்சயம் செய்திருந்தார்கள்.

பெண்ணின் வீட்டிற்கு என்னையும் என்னுடைய இன்னொரு நண்பர் ஜீவரத்தினகுமாரையும் ( இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபத்தில் யாழ். சேவைப்பணிப்பாளராக இருந்தவர்) அழைத்து சென்றார்.

எங்களுக்காக மதிய உணவு தயாராக இருந்தது. புதுமாப்பிள்ளையும், அவர்களது நண்பர்களுமல்லவா, விருந்திற்கான ஏற்பாடு பிரமாதமாக இருந்தது.

மரக்கறி, மீன், இறைச்சி, கறிகள், பொரியல், சுண்டல், சொதி என அத்தனை வகைகளும் மேசையில் வைத்திருந்தார்கள்.

எங்கள் மூவருடன் பெண்ணின் தந்தை ( பாடசாலை அதிபர்) அவரின் மகன் ( தற்போது கல்விப்பணிப்பாளராக இருக்கிறார்) ஆகியோரும் சாப்பிடுவதற்கு அமர்ந்தனர். மணப்பெண்ணும், பெண்ணின் தாயும் எங்களுக்கு பரிமாறினார்கள்.

கோப்பையில் சோறு போடப்பட்டு பொரியல், சுண்டல் மட்டும் போடப்பட்டிருந்தது.  என்ன பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள், சாப்பிடுங்கள் என்றார்கள். என்ன கொடுமையடா இது. இவ்வளவு கறிவகைகளையும் சமைத்து மேசையில் வைத்து விட்டு சோற்றை வெறும் பொரியலுடன் சாப்பிட சொல்கிறார்களே என மனதிற்குள் யோசித்து கொண்டோம்.

ஜீவரத்தினகுமார் மட்டக்களப்பில் பிறந்திருந்தாலும் அவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள். மாம்பிள்ளை ரொபின் ஏராளசிங்கமும் மட்டக்களப்பு நகரில் பிறந்து வளர்ந்தவர். படுவான்கரை பழக்க வழக்கம் தெரியாது. மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து திருதிரு என முழித்து கொண்டிருந்தோம்.

எங்கள் நிலமை பெண்ணின் தந்தைக்கு புரிந்து விட்டது. என்ன யோசிக்கிறீங்கள், தனிய பொரியலுடன் சாப்பிடுவதா என யோசிக்கிறியளா என கேட்டார். முதலில் ஒரு கோப்பை சோறு பொரியலுடன் சாப்பிட வேணும், பிறகு கறியளுடன் சாப்பிட வேணும், பிறகு தயிர் தேன் சீனி பழம் போட்டு ஒரு கோப்பை சோறு சாப்பிட வேணும் என்றார். இதுதான் படுவான்கரை சாப்பாட்டு வழக்கம் என்றார்.

அன்று சாப்பாட்டில் அவர்கள் எங்களை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். அற்புதமான சமையலுக்கு அப்பால் அவர்களின் அன்பான உபசரிப்பு எங்களை திளைக்க வைத்து விட்டார்கள்.

திரும்பி வரும் போது எனது நண்பன் ஜீவரத்தினகுமார் சொன்னான். மச்சான் நானும் படுவான்கரை பகுதியில தான் கல்யாணம் முடிக்க வேணும் என சொன்னான். அப்படி சொன்ன ஜீவரத்தினகுமார் யாழ்ப்பாணத்தில்தான் திருமணம் முடிந்தார். அப்படி ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்த நான் மட்டக்களப்பிலேயே திருமணம் முடித்தேன்.

இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றிருக்கிறேன், சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பிய நாடுகள் என பலநாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். ஆனால் படுவான்கரை பகுதி மக்களின் உபசரிப்பையும் விருந்தோம்பலையும் எங்கும் காணமுடியாது.

இத்தகைய பெருமை கொண்ட அந்த மண்ணில்தான் இந்த கொடூரங்கள் நடைபெற்றன.

வடக்கில் பிறந்து விட்டார்கள் என்ற ஒரு காரணத்திற்காக புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூக தொண்டர்கள் விரட்டப்பட்டார்கள், சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அந்த அப்பாவிகளின் இரத்தம் வீதிகளில் ஓடிய அவலம் அங்குதான் நடைபெற்றது.

வடக்கில் பிறந்தார்கள் என்ற காரணத்திற்காக கிழக்கு மண்ணில் அந்த புத்திஜீவிகள் சிந்திய இரத்தம்,

இரத்தம் தோய்ந்த கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரின் கதிரை,

இவை பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்

(தொடரும்)

thurair@gmail.com

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...