Friday, September 22nd, 2017

பதிப்பில் வராத என் மனப்பதிவுகள் -விடுதலைப்புலிகளின் பிளவுக்கு வித்திட்ட கிழக்கு பல்கலைக்கழகம் – ( பாகம் 10) இரா.துரைரத்தினம்!

Published on April 28, 2012-8:23 pm   ·   No Comments

இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றிருக்கிறேன், ஆனால் மட்டக்களப்பின் குறிப்பாக படுவான்கரை பகுதி மக்களின் உபசரிப்பையும் விருந்தோம்பலையும் எங்கும் காணமுடியாது. இத்தகைய பெருமை கொண்ட அந்த மண்ணில்தான் இந்த கொடூரங்கள் நடைபெற்றன.

வடக்கில் பிறந்து விட்டார்கள் என்ற ஒரு காரணத்திற்காக புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், சமூக தொண்டர்கள் விரட்டப்பட்டார்கள், சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அந்த அப்பாவிகளின் இரத்தம் வீதிகளில் ஓடிய அவலம் அங்குதான் நடைபெற்றது.

வடக்கில் பிறந்தார்கள் என்ற காரணத்திற்காக கிழக்கு மண்ணில் அந்த புத்திஜீவிகள் சிந்திய இரத்தம், இரத்தம் தோய்ந்த கிழக்கு பல்கலைக்கழக பதவிகள், இவை பற்றி தான் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறேன்.

மட்டக்களப்பிலிருந்து வடபகுதி வர்த்தகர்களை வெளியேற்றிய தரப்பு அடுத்த கட்டமாக செய்ய துணிந்த மிகக்கொடூரமான செயல்களை மனித நேயம் மிக்க மட்டக்களப்பு மக்கள் ஏன் கண்டிக்கவில்லை. ஏன் அதை தட்டிக்கேட்டு தடுக்க முன்வரவில்லை.

மட்டக்களப்பு மண்ணின் வளர்ச்சிக்காக, அந்த மண்ணின் விடுதலைக்காக, தமிழ் இனத்தின் துயர் துடைக்க தங்களை அர்ப்பணித்து பணியாற்றிய வடபகுதி புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், சமூக தொண்டர்கள் அநியாயமாக மட்டக்களப்பு மண்ணில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட போது மௌனம் சம்மதம் என்பது போல மட்டக்களப்பு சமூகம் மௌனம் காத்த கொடுமையை ஏன் செய்தார்கள்?

என் தாய் நிலம் என்ற இறுமாப்புடன் மட்டக்களப்பின் மூலை முடுக்கெல்லாம் கால் பதித்த எங்களைப் போன்றவர்களை ஏன் அந்த மண் அந்நியப்படுத்தியது? அந்த கொடுமைகளை புரிந்தவர்களை கல்விமான்களாகவும், அரசியல் தலைவர்களாகவும், மட்டக்களப்பு சமூகத்தின் ஒரு பகுதியினர் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களே,

தம்பையா, கலாநிதி ரவீந்திரநாத்,  நடேசன் வரை மட்டக்களப்பு மண்ணே தனது உயிர் மூச்சு என வாழ்ந்தவர்களை அந்த மண்ணிலிருந்து விரட்டி, அவர்களின் உயிர்களை ஈவிரக்கமின்றி குடித்தவர்களுக்கு மௌன அங்கீகாரம் வழங்கியிருக்கிறதே,

வந்தாரை வரவேற்கும் வாழவைக்கும் மட்டக்களப்பு என பெருமை பேசும் அந்த மண்ணில்தான் வடபகுதியில் பிறந்து விட்டார்கள் என்ற ஒரு காரணத்திற்காக மட்டும் அவர்களின் இரத்தம் வீதிகளில் ஓடியதே அதை ஏன் மட்டக்களப்பு சமூகம் தட்டிக்கேட்கவில்லை. அந்த குற்றவாளிகளுக்கு ஏன் தண்டனை கொடுக்கவில்லை?

நடேசனின் உடல் வீதியில் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்த போது வேடிக்கை பார்க்க வந்தவர்களில் ஒருவர் கூட அவனின் உடலை தூக்கி வாகனத்தில் ஏற்ற கைகொடுக்க முன்வரவில்லையே?

மாறாக கொலைகாரர்களுக்கும், அந்த கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கும்  பதவிகளும், பட்டங்களும் வழங்கப்பட்டிருக்கிறதே, அவர்களுக்கு மண்ணின் மைந்தர்கள் என அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறதே?  அவர்களுக்கு மாலை மரியாதைகள் வழங்கப்பட்டிருக்கிறதே,

மட்டக்களப்பு மண்ணின் வளர்ச்சிக்காகவே தங்களை அர்ப்பணித்து பணியாற்றிய புத்திஜீவிகளான தம்பையா, ரவீந்திரநாத், போன்ற புத்திஜீவிகளை படுகொலை செய்ததற்கான ஒரு சிறிய காரணத்தையாவது  கிழக்கு பல்கலைக்கழக உயர் ஆசனங்களில் அமர்ந்திருப்பவர்களாலோ, அல்லது கிழக்கு மாகாண அமைச்சர்கள் என்றும் மத்திய அமைச்சர்கள் என்றும் உலாவருபவர்களால் முன்வைக்க முடியுமா?

இந்த படுகொலைகளும், கொடுமைகளும் மட்டக்களப்பு வரலாற்றில் என்றும் மாறாத வடுவாகவே இருக்கும்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிளவுகளை ஏற்படுத்தியதில் முக்கிய பங்குவகித்தது கிழக்கு பல்கலைக்கழகம் என்பதை பலர் நம்பமாட்டார்கள்.

ஆனால் அதுதான் உண்மை.

கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய இரு தரப்பினர் தங்கள் கதிரைகளை தக்க வைத்துக்கொள்வதற்காக, சிலர் கதிரைகளை பிடிப்பதற்காக நடந்த போட்டியில், மோதல்களில் தாங்கள் வெல்வதற்காக இரு தரப்புமே நாடியது விடுதலைப்புலிகளைத்தான்.

கிழக்கு பல்கலைக்கழகம் 1981ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் விஞ்ஞான, விவசாய பீடங்களே ஆரம்பிக்கப்பட்டன. பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ரவீந்திரநாத், கலாநிதி ஜெயசிங்கம் போன்றவர்கள் பல்கலைகழகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே இணைந்து கொண்டவர்கள். கிழக்கு பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்ட பின் 1990களில்  கலை, வர்த்தக பீடங்கள் ஆரம்பிக்கப்பட்டன. வெறும் வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயம் என்ற சில கட்டிடங்களுடன் காணப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக கல்லூரியில் தொடர்ந்த அவர்களின் பணி எளிதான ஒன்றல்ல.

1990களின் பின்னர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்ற பிரதேச வாதம் வளரத்தொடங்கியது. அதன் உச்சக்கட்டம் 1995ஆம் ஆண்டு உபவேந்தர் தெரிவின் மூலம் பூதாகரமாக வெடித்தது.

1990களில் 50ஆயிரத்திற்கு மேற்பட்ட அகதிகளை கொண்ட கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமை பராமரிப்பதில் கலாநிதி ஜெயசிங்கம், பேராசிரியர் மனோ சபாரத்தினம், வைத்தியர் சிவலிங்கம் ஆகியோர் முக்கிய பங்குவகித்து பெரும் பணியாற்றினர்.

இருந்த போதிலும் பேராசிரியர் மனோ சபாரத்தினம் யாழ்.மேலாதிக நிலப்பிரபுத்துவ குணம் கொண்டவர். பொதுவாகவே வகுப்பில் யாழ்ப்பாண மாணவர்களுக்கு சலுகை காட்டுவதாகவும், மட்டக்களப்பு மாணவர்களை மட்டம் தட்டுவதாகவும் மாணவர்கள் மத்தியில் குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை நான் அறிவேன். இதனால் மட்டக்களப்பு மாணவர்கள் மனோ சபாரத்தினம் மீது வெறுப்பு கொண்டிருந்தனர். மனோ சபாரத்தினம் போன்ற யாழ் மேலாதிக்க வாத சிந்தனை கொண்ட ஒரு சிலரை வைத்து யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் அனைவரையும் கெட்டவர்கள் என எண்ணுவதுதான் தவறு.

இதனால் தானோ என்னவோ கிழக்கு பல்கலைக்கழகத்தில் இரு கோஷ்டிகள் செயற்பட்டன.

மனோ சபாரத்தினம், ரவீந்திரநாத், ரகுராகவன், செந்தில்மோகன், என யாழ்ப்பாண வாத குழு.

அடுத்தது யுவி தங்கராசா, திருச்செல்வம், சித்திரலேகா என மட்டக்களப்பு வாத குழு. வேடிக்கை என்ன என்றால் சித்திரலேகாவும், திருச்செல்வமும் 50வீதம் தான் மட்டக்களப்பு. யுவி தங்கராசா ஊடகவியலாளர் சிவராமின் மைத்துனர். சிவராமின் தங்கை மீனாவைத்தான் யுவி திருமணம் செய்திருந்தார். வாழைச்சேனையை சேர்ந்த யுவி தங்கராசா முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் நெருங்கிய உறவினரும் கூட. திருச்செல்வத்தின் தந்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். தாய் மட்டக்களப்பை சேர்ந்தவர். சிறிய வயதிலேயே தாயை விட்டு தந்தை பிரிந்து சென்றதால் தகப்பனில் ஏற்பட்ட கோபம், யாழ்ப்பாணத்தின் மீதான கோபமாக வளர்ந்து யாழ்ப்பாணத்தவர்களை கண்ணிலும் காட்ட கூடாத அளவுக்கு பிரதேச வாதம் அவரிடம் காணப்பட்டது. சித்திரலேகாவின் தந்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். தாய் மட்டக்களப்பை சேர்ந்தவர். எனினும் சித்திரலேகா மட்டக்களப்பு கோஷ்டியின் பக்கமே நின்றார். மனோ சபாரத்தினம் போன்ற நிலப்பிரபுத்துவ யாழ். மேலாதிக்க வாத சிந்தனை கொண்டவர்கள் மீதான வெறுப்பு சில வேளைகளில் பெண்நிலைவாதியான சித்திரலேகாவை மட்டக்களப்பு கோஷ்டியின் பக்கம் சாய்த்திருக்கலாம்.

இந்த கோஷ்டி மோதல்களின் உச்சக்கட்டம் 1995ஆம் ஆண்டு உபவேந்தர் தெரிவு எனலாம்.

1995ல் உபவேந்தரை நியமிப்பதற்காக கிழக்கு பல்கலைக்கழக பேரவை மூவரை தெரிவு செய்திருந்தது. இதில் யுவி தங்கராசா, மௌனகுரு மற்றும் சித்திரலேகா, ஆகியோர் மட்டக்களப்பை சேர்ந்த வணபிதா பேராசிரியர் இராஜேந்திரம் அவர்களை உபவேந்தராக நியமிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது.

ஆனால் செந்தில்மோகன் போன்றவர்களின் கை கிழக்கு பல்கலைக்கழக பேரவையில் ஓங்கியிருந்தது. இதனால் கிழக்கு பல்கலைக்கழக பேரவை பேராசிரியர் இராஜேந்திரம் அவர்களின் பெயரை நிராகரித்து விட்டு பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ரவீந்திரநாத், ரகுராகவன் ஆகியோரின் பெயர்களை சிபார்சு செய்திருந்தது. இது கிழக்கு பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியிருந்தது.

மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரின் பெயரை நிராகரித்து விட்டு யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவரை தெரிவு செய்திருக்கிறார்களே என சிலர் போர்க்கொடி தூக்கினர். அதில் நியாயமும் இருந்தது.

இந்த வேளையில் பேராசிரியர் இராஜேந்திரம் அவர்களின் பெயரை சிபார்சு செய்யாததற்கு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பேராசிரியர் இராமகிருஷ்ணன், அப்போது தற்காலிய விரிவுரையாளராக இருந்த கெனடி போன்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பேராசிரியர் இராமகிருஷ்ணன் அடிப்படை யாழ்ப்பாண வாத, சாதித்தடிப்பு கொண்டவராக காணப்பட்ட போதிலும் இந்த விடயத்தில் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரின் பெயரை சிபார்சு செய்யாமல் விட்டது தவறு என வாதிட்டார். கிழக்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் பெரும்பாலானவர்கள் இந்த சிபார்சை ஆட்சேபம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து ரகுராகவனின் பெயர் நீக்கப்பட்டு பேராசிரியர் இராஜேந்திரத்தின் பெயர் சிபார்சு செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறிலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் கணேசமூர்த்தியின் செல்வாக்கினால் ஜனாதிபதி சந்திரிக்கா பேராசிரியர் இராஜேந்திரம் அவர்களை உபவேந்தராக நியமித்தார்.

அப்போதுதான் இந்த இரு கோஷ்டிகளுமே விடுதலைப்புலிகளை நாடினர்.

ரவீந்திரநாத், மனோ சபாரத்தினம் கோஷ்டி மனோ மாஸ்ரரின் செல்வாக்கை பெற்றுக்கொண்டனர். யுவி தங்கராசா போன்றவர்கள் நேரடியாக கருணாவை நாடினர். யுவி தங்கராசா, திருச்செல்வம், தற்போது உபவேந்தராக இருக்கும் கோவிந்தராசா ஆகியோர் கருணாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமது இருப்பை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

பேராசிரியர் இராஜேந்திரம் உபவேந்தராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து யுவி தங்கராசா திருச்செல்வம் போன்றவர்களுக்கு புலமை பரிசில் கிடைத்தது. ரவீந்திரநாத், மனோ சபாரத்தினம் தரப்பு பழிவாங்கப்பட்டனர். அவர்கள் மனோ மாஸ்ரரை நாடினர். ஒரு தரப்பு கருணாவிடமும் மறுதரப்பு மனோ மாஸ்ரரிடமும் கோள் மூட்டும் படலம் ஆரம்பமானது.

இந்த வேளையில் மனோ மாஸ்ரரும், கருணாவும் கிழக்கு பல்கலைக்கழக விடயங்களில் தத்தமது தரப்புக்காக மூக்கை நுழைக்க ஆரம்பித்தனர்.

பேராசிரியர் இராஜேந்திரம் உபவேந்தராக நியமிக்கப்பட்ட போது என்னைப் போன்றவர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அவர் ஒரு வணபிதாவாக இருந்தவர், நேர்மையாக இருப்பார், பழிவாங்க மாட்டார், ஊழல்களுக்கு இடம்கொடுக்க மாட்டார் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு ஒரு பொற்காலம் ஏற்படும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடந்தது எதிர்மறைதான்.

அவருக்கு சார்பானவர்களின் கை ஓங்கியது. யுவி தங்கராசா, சுவாமிநாதன், போன்றவர்களின் கை ஒங்கியதாகவும் ஒரு சாரார் குற்றம் சாட்டியிருந்தனர்.

அவர் தனது சொந்த தம்பியை கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாகத்திற்கு பணிப்பாளராக நியமித்தார். தனக்கு வேண்டியவர்களுக்கே சலுகைகளை வழங்கினார். மட்டக்களப்பு யாழ்ப்பாணம் என்ற பிரதேசவாதம் மேலும் வளர ஆரம்பித்தது. தனது நியமனத்திற்கு எதிராக செயற்பட்டவர்கள் என யார் யாரை எண்ணினாரோ அவர்களை பழிவாங்க ஆரம்பித்தார். முக்கியமாக கலாநிதி ஜெயசிங்கம் உபவேந்தரால் பழிவாங்கப்பட்டார்.

கலாநிதி ஜெயசிங்கம் பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடுகளை செய்திருந்தார். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நீதிவிசாரணை குழு ஒன்று இதற்காக நியமிக்கப்பட்டது. இந்த விசாரணை குழு விசாரணைக்கு ஒரு முறை நானும் அழைக்கப்பட்டிருந்தேன்.

விடிவானம் பத்திரிகை வெளிவந்த காலத்தில் விஞ்ஞான பீடத்தில் வெற்றிடங்களுக்காக உள்ளக ரீதியில் விளம்பரம் கோரப்பட்டிருந்தது. அந்த விளம்பரம் விடிவானம் பத்திரிகைக்கு கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகத்தினால் வழங்கப்படாத போதிலும் பொது மக்களின் நன்மை கருதி வெற்றிடங்கள் தொடர்பாக ஒரு செய்தியாக போடும் படி விஞ்ஞான பீடாதிபதி ஜெயசிங்கம் விடிவானம் பத்திரிகைக்கு தந்திருந்தார். அப்போது அந்த பத்திரிகையின் பிரதம ஆசிரியராக நான் பணியாற்றினேன். அந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து கட்டம் கட்டி அச்செய்தியை வெளியிட்டிருந்தேன்.

அந்த வெற்றிடத்திற்கு உபவேந்தர் தனக்கு தெரிந்தவர்களை நியமிப்பதற்கு எண்ணியிருந்தார் என பின்னர் நான் அறிந்தேன். மட்டக்களப்பில் உள்ள தகுதியானவர்கள் அதற்கு விண்ணப்பிப்பதற்கு வசதியாக இருக்கும் என நல்ல தகவலை வழங்கும் நோக்குடன் அதனை முன்பக்கத்தில் பிரசுரித்திருந்தேன்.

பல்கலைக்கழகத்தின் விளம்பரம் ஒன்றை தங்களின் அனுமதி இன்றி விஞ்ஞான பீடாதிபதி விடிவானத்திற்கு வழங்கியிருந்ததாகவும், அதை தங்களின் அனுமதி இன்றி பிரசுரித்ததாக என்மீதும் உபவேந்தர் இந்த விசாரணைக்குழுவிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

கொழும்பில் நடந்த விசாரணைக்கு சமூகமளித்த நான் மக்களை சென்றடைய வேண்டிய தகவல் ஒன்று அது உண்மை என உறுதிப்படுத்துவதற்கு ஆதாரங்கள் இருந்தால் உபவேந்தரின் அனுமதியை பெற வேண்டும் என்ற நியதி பத்திரிகைக்கு கிடையாது. அந்த செய்தி தவறாக இருந்தால் மட்டுமே பல்கலைக்கழக நிர்வாகம் பத்திரிகை மீது கேள்வி எழுப்ப முடியும் என தெரிவித்திருந்தேன். இதனைத் தொடர்ந்து விடிவானம் பத்திரிகை மீதும், கலாநிதி ஜெயசிங்கம் மீதும் உபவேந்தர் சுமத்திய குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட்டது.

இப்படி சிறிய சிறிய விடயத்திற்கே பழிவாங்கும் ஒரு நபராகவே உபவேந்தர் வணபிதா இராஜேந்திரம் மாறியிருந்தார்.

இதில் ஒரு விடயத்தை குறிப்பிடவேண்டும். கலாநிதி ஜெயசிங்கம் மட்டக்களப்பு செங்கலடியை பிறப்பிடமாக கொண்டவர். அவரிடம் மட்டக்களப்பு யாழ்ப்பாணம் என்ற பிரதேசவாதம் இருந்ததில்லை. ஆனால் அவர் ரவீந்திரநாத், மனோ சபாரத்தினம் போன்றவர்களின் பக்கமே இருந்ததாலோ என்னவோ உபவேந்தர் இராஜேந்திரத்தால் பழிவாங்கப்பட்டார்.

 அதேபோன்று இந்த இருதரப்பிலும் சேராதவர்களாக தம்பையா, யோகராசா, கெனடி, அம்மன்கிளி போன்றவர்கள் இருந்தனர். இவர்கள் இந்த கோஷ்டி மோதல்களுக்குள் சிக்கவில்லை.

இந்த வேளையில் 1998அல்லது 1999ஆம் ஆண்டு என நினைக்கிறேன். கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள் நான்கு பேரையும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு இடத்திற்கு கருணா அழைத்திருந்தார். விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி ஜெயசிங்கம், விவசாய பீடாதிபதி ரவீந்திரநாத், வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி ரகுராகவன், கலை கலாசார பீடாதிபதி பேராசிரியர் மௌனகுரு ஆகியோர் ஒரு இடத்தில் கருணாவின் வருகைக்காக விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்றில் காத்திருந்தனர். கருணா ஒரு ஜீப்பில் வந்திறங்கினார். அந்த ஜீப்பில் கருணாவுடன் யுவி தங்கராசாவும் வந்திறங்கினார். இந்த நான்கு பீடாதிபதிகளுக்கும் தனக்கு கருணாவின் செல்வாக்கு இருக்கிறது என காட்டுவதற்காகவும், அவர்களை அடக்கி வைப்பதற்காகவும் யுவி தங்கராசா கையாண்ட தந்திரம் அது.

ரவீந்திரநாத், ஜெயசிங்கம், மனோ சபாரத்தினம், ரகுராகவன் தரப்பு மனோ மாஸ்ரரை நாடியிருப்பதை எச்சரிக்கும் நோக்கிலேயே அன்று கருணா அவர்களை அழைத்திருந்தார். எந்த பிரச்சினையையும் என்னிடம் தான் கொண்டுவரவேண்டும், மனோ மாஸ்ரரிடம் கொண்டு செல்ல கூடாது என கருணா எச்சரித்திருந்தார்.

ஆனால் யாழ் வாத கோஷ்டி மனோ மாஸ்ரரிடமும், மட்டக்களப்பு வாத கோஷ்டி கருணாவிடமும் கோள் மூட்டும் படலம் தொடர்ந்தது. மாலை வேளையில் ரவீந்திரநாத் போன்றவர்கள் கரடியனாற்றுக்கு மனோ மாஸ்ரரை சந்திக்க செல்வார்கள். யுவி தங்கராசா கோஷ்டி கருணாவை சந்திக்க செல்வார்கள். இது காலப்போக்கில் மட்டக்களப்பில் இருந்த விடுதலைப்புலிகளுக்கிடையில் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்ற பிரதேச வாதங்களை தோற்றுவித்தது.

2001 அல்லது 2002 என நினைக்கிறேன். தரவையில் நடந்த மாவீரர் தினத்திற்கு அதிதிகளாக யுவி தங்கராசா, திருச்செல்வம், கோவிந்தன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த மௌனகுருசாமி, ராஜன் சத்தியமூர்த்தி போன்றவர்கள் கருணாவால் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். இது மனோ மாஸ்ரர் தரப்பிற்கு கோவத்தை ஏற்படுத்தியிருந்தது. இதன் ஒரு கட்டமாகத்தான் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்த அற்புதன் மாஸ்ரர் 2001ஆம் ஆண்டு குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. கருணா தரப்பே இத்தாக்குதலை நடத்தியது. இது போன்ற சில சுயநலவாதிகளால் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்ற மோதலை விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் ஏற்படுத்தினர்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து செல்லப்போவதாக கருணா அறிவித்த போது பி.பி.சி தமிழோசை இது தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த யுவி தங்கராசாவிடம் அபிப்பிராயம் கேட்டது.

கருணாவின் பிரிவு என்பது தனிப்பட்ட கருணாவின் விரும்பம் என்று சொல்வதை விட ஒட்டுமொத்த மட்டக்களப்பு மக்களின் விருப்பமும் அதுதான். மட்டக்களப்பு மக்கள் யாழ்ப்பாண நிர்வாகத்தின் கீழ் இருக்க விரும்பவில்லை என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் கருணாவின் பிரிவு என கூறி அந்த பிளவை யுவி தங்கராசா நியாயப்படுத்தியிருந்தார். ( அந்த ஒலிப்பதிவு தற்போதும் என்னிடம் உள்ளது)

அது மட்டுமல்ல கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து யாழ்ப்பாணத்தவர்களை வெளியேற்ற வேண்டும் என செயற்பட்டவர்களில் யுவி தங்கராசா, திருச்செல்வம், கோவிந்தராசா போன்றவர்கள் முன்னணியில் இருந்தனர். இதற்காக அவர்கள் எடுத்த ஆயுதம் தான் கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ள வடபகுதியை சேர்ந்தவர்களில் சிலரை மண்டையில் போடுவது,

மீண்டும் விடுதலைப்புலிகள் மட்டக்களப்பை கைப்பற்றிய பின் ( கருணா மட்டக்களப்பிலிருந்து தப்பி சென்ற பின்) கருணாவின் பிளவை மிகத்தீவிரமாக ஆதரித்த யுவி தங்கராசாவை விடுதலைப்புலிகள் கைது செய்து கொண்டு சென்று அடைத்து வைத்திருந்தனர். சில நாட்கள் விடுதலைப்புலிகளின் சிறையில் இருந்த யுவி தங்கராசாவை விடுதலைப்புலிகளிடமிருந்து மீட்டு வந்தவர் அவரின் மைத்துனர் சிவராம் தான்.

யுவி தங்கராசாவை மீட்பதற்காக வன்னிக்கு சென்று முக்கியமானவர்களை சந்தித்ததுடன் மட்டக்களப்பில் உள்ள தளபதிகளான ரமேஷ், கௌசல்யன் போன்றவர்களை சந்தித்து யுவி தங்கராசாவை விடுதலை செய்யுமாறு வேண்டினார். பின்னர் யுவி தங்கராசாவை சிவராமிடமே விடுதலைப்புலிகள் ஒப்படைத்தனர். அவரை சிவராம் தன்மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தார்.

இந்த நிலையில் விடுதலைப்புலிகள் மட்டக்களப்பை கைப்பற்றிய போதிலும் கருணா கொழும்புக்கு தப்பி சென்ற போதிலும் கருணா குழுவை சேர்ந்த பிள்ளையான் தலைமையிலான ஒரு ஆயுதக்குழு மட்டக்களப்பில் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் இருந்தது.

இப்போது கிழக்கு மாகாண முதலமைச்சர் என மாலை மரியாதையுடன் வலம் வரும் பிள்ளையான் தலைமையிலான குழுவே வடபகுதி புத்திஜீவிகள், ஊடகவியலாளர்களை களப்பலி எடுக்க புறப்பட்டது.

இந்த கொலைகளின் பின்னணியில் இருந்த கிழக்கு பல்கலைக்கழக பிரமுகர்கள், மட்டக்களப்பு அரச நிர்வாகத்தில் இருந்த பிரமுகர்கள், அவர்கள் நடத்திய கோரக்கொலைகளின் விபரங்கள் அடுத்த அங்கத்தில் வர இருக்கிறது.

( தொடரும்)

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...