Wednesday, January 17th, 2018

பொருளியல்துறை தலைவர் தம்பையாவை கொலை செய்த சூத்திரதாரிகள்- பதிப்பில் வராத மனப்பதிவுகள் ( அங்கம் 11)

Published on May 9, 2012-5:00 pm   ·   No Comments

கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் குமாரவேல் தம்பையா, வவுனியா ஆசிக்குளம் கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர். அவர் சுட்டுக்கொல்லப்படும் போது அவருக்கு வயது 48 மட்டுமே.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வர்த்தக முகாமைத்துவ பட்டம் பெற்ற தம்பையா சில காலம் ஆசிரியராக இருந்து பின்னர் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக பதவி ஏற்றவர். அவர் மட்டக்களப்பு வந்தாறுமூலையை பிறப்பிடமாக கொண்ட ஆசிரியையான கண்ணம்மாவை திருமணம் முடித்து மட்டக்களப்பு நகரில் ஞானசூரியம் சதுக்கத்தில் வாழ்ந்து வந்தார்.

தம்பையா கிழக்கு பல்கலைக்கழக பொருளியியல்துறை தலைவர் என்ற பல்கலைக்கழக கல்விசார் வட்டத்திற்குள் தன் பணியை சுருக்கி கொண்டவர் அல்ல.
தமிழ் இனத்தின் விடுதலை, அவர்களின் சமூக மேம்பாடு, மட்டக்களப்பு மக்களின் அரசியல், சமூக, பொருளாதார விடுதலை என்ற பரந்த பரப்பில் பொதுப்பணியில் தன்னை அர்ப்பணித்து கொண்டவர்.

1990களின் பின்னர் மட்டக்களப்பு மிகப்பயங்கரமான இராணுவ அடக்குமுறைக்குள் சிக்குண்டிருந்த காலம், கடத்தல்கள், காணாமல் போதல், என மக்கள் மரண பீதியில் வைக்கப்பட்டிருந்த காலம், மக்களின் அரசியல் சமூக உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் பேரினவாத அரசின் பக்கம் சாய்ந்தால்தான் வாழ்வு என எண்ணும் அளவிற்கு அடக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த வேளையில் மட்டக்களப்பு பிரதேசத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், கிழக்கு பல்கலைக்கழக சமூகம் என இரு தரப்பு மட்டுமே அடக்குமுறைகளுக்கு எதிராக, மக்களின் அரசியல் உரிமைகளுக்காக சில பணிகளை செய்து கொண்டிருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழக சமூகம் என்ற வகையில் தம்பையா, ஜெயசிங்கம், கெனடி, ரவீந்திரநாத், ஆகியோர் துணிச்சலோடு சில காரியங்களை செய்து கொண்டிருந்தனர்.

1999ஆம் ஆண்டு காலகட்டம், மக்கள் மத்தியில் தமிழ் தேசிய உணர்வை கட்டி எழுப்ப வேண்டிய அவசியம் உணரப்பட்ட போது, மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எழுந்த போது அதற்கு துணிச்சலுடன் முன்வந்தவர்களில் தம்பையா முக்கியமானவர்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மட்டக்களப்பில் அரசியல் மற்றும் மனித உரிமை கருத்தரங்குகளை நடத்தி வந்த போதிலும் அதற்கு அப்பால் மட்டக்களப்பு மக்களை இணைத்து புத்திஜீவிகள், சமூக ஆர்வலர்களை இணைத்து பணியாற்ற வேண்டிய அவசியம் உணரப்பட்ட போது உதயமானதுதான் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சிக்கழகம்.

கிழக்கு பல்கலைக்கழக சமூகம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம், மட்டக்களப்பு மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் , ஊடகவியலாளர்கள் என அனைவரையும் இணைத்து அமைப்பு ரீதியாக செயற்பட வேண்டும் என்ற எண்ணத்தில் மட்டக்களப்பு நகரில் உள்ள கத்தோலிக்க கழக மண்டபத்தில் ஒரு மாலை வேளையில் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்கான ஏற்பாடுகளை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அந்த கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன். மண்டபம் நிறைந்த மக்கள் அதற்கு வருகை தந்திருந்தனர்.

அந்த கூட்டத்தில் உதயமானதுதான் மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சிக்கழகம். மட்டக்களப்பு தமிழர் மறுமலர்ச்சி கழகத்தின் இணைப்பாளர்களாக கிழக்கு பல்கலைக்கழக பொருளியியல் பீட தலைவர் தம்பையாவும், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்க செயலாளர் தவராசாவும் தெரிவு செய்யப்பட்டனர்.

கூட்டம் முடிந்து மண்டபத்தை விட்டு வெளியே வந்த போது மட்டக்களப்பு மாவட்ட திணைக்களம் ஒன்றின் தலைவராக இருக்கும் என்னுடைய நண்பர் ஒருவர் என்னைக்கேட்டார். இது ஆபத்தான ஒரு வேலை. இராணுவ புலனாய்வு பிரிவினரும், அவர்களுடன் சேர்ந்திருக்கும் குழுக்களும் இதை அவதானித்து கொண்டிருக்கிறார்கள். கவனமாக செயற்படுங்கள், ஆபத்துக்கள் எந்த நேரத்திலும் உங்களுக்கு வரலாம் என எச்சரித்தார்.
அந்த நேரத்தில் கடத்தல்களும், படுகொலைகளும் மலிந்திருந்த காலம்.

ஆபத்துக்களும், அச்சுறுத்தல்களும் இருந்த போதிலும் மட்டக்களப்பில் நடத்தப்பட்ட பொங்குதமிழ், மற்றும் கிழக்கில் நடத்தப்பட்ட படுகொலைகளை நினைவு கூரும் உயிர்கொலை நாள் உட்பட முக்கிய நிகழ்வுகளுக்கு தம்பையாவின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் முழுமையாக இருக்கும்.

கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் நடத்தும் கருத்தரங்குகளில் தம்பையா தவறாது கலந்து கொள்வார்.

இது மட்டுமல்ல, கிழக்கு மாகாணத்தின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக தன் துறைசார்ந்த பணிகளுக்கு அப்பால் முழுக்கவனமெடுத்து செயற்பட்டார்.

தம்பையா வவுனியாவில் பிறந்த போதிலும் அவர் வவுனியாவில் தன் கவனத்தை செலுத்தியவர் அல்ல. உண்மையில் சொல்லப்போனால் யாழ். மேலாதிக்க வாதத்தை எதிர்ப்பவர். வன்னி மக்களைப் போலவே மட்டக்களப்பு மக்களின் வாழ்வும் பிந்தங்கி இருப்பது கண்டு அதன் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்தவர்.

தம்பையா தன்னை மட்டக்களப்பின் மைந்தனாகவே நினைத்தார். மட்டக்களப்பு மண்ணின் மைந்தன் என்ற உரிமையோடு செயற்பட்டார்.

அவர் ஒரு போதுமே தன்னை வடபகுதியை சேர்ந்தவர் என்றோ, வன்னியை சேர்ந்தவர் என்றோ, எண்ணியவர் அல்ல.

ஆனால் என்ன கொடுமை,

மட்டக்களப்பிலிருந்து வடபகுதியை சேர்ந்தவர்கள் வெளியேற வேண்டும் என தங்களை மட்டக்களப்பு மண்ணின் மைந்தர்கள் என கூறிக்கொண்ட கருணா, பிள்ளையான் குழுக்கள் உத்தரவிட்ட போது வர்த்தகர்கள், புத்திஜீவிகள் என பலரும் வெளியேறினர். தம்பையாவும் ஒரு சிலவாரம் வவுனியாவிலும் கொழும்பிலும் தங்கியிருந்து விட்டு நிலமை சீராகி விட்டது என்ற எண்ணத்தில் மட்டக்களப்பில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு திரும்பியிருந்தார்.

ஆனால் மட்டக்களப்பு மண்ணின் நலனைத்தவிர வேறெதும் சிந்திக்காத தம்பையா தன்னை இலக்கு வைப்பார்கள் என ஒரு துளி கூட நம்பியிருக்க மாட்டார்.

கொலைக்கான காரணமும் சூத்திரதாரிகளும்
தமிழ் மக்களின் விடுதலைக்காகவும், மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்த சிலர் குரல் கொடுத்துக்கொண்டிருந்த அதேவேளை சிங்கள பேரினவாத சக்திகளுடன் கைகோர்த்து கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிளவை ஏற்படுத்தி கருணாவை அதிலிருந்து பிரித்தெடுக்க வேண்டும் என கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்த சிலர் மறைமுகமாக செயற்பட்டனர்.

தங்களை மட்டக்களப்பு மண்ணின் மைந்தர்கள் என அடையாளம் காட்டிக்கொண்ட சிலர் கருணாவின் பிளவு வெளிப்பட்ட போது தங்களுக்கான ஒரு காலம் வந்துவிட்டதாக துள்ளிக்குதித்தனர். கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வடபகுதி கல்விமான்களை வெளியேற்ற வேண்டும் என தமது நீண்டகால திட்டத்தை நிறைவேற்ற காலம் கனிந்து விட்டதாக மகிந்தனர்.

மட்டக்களப்பிலிருந்தும், கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்தும் வடபகுதி புத்திஜீவிகள், அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும் என கங்கணம் கட்டி நின்றவர்களில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய கலாநிதி யுவி தங்கராசா, திருச்செல்வம், தற்போதைய உபவேந்தர் கிட்டினர் கோவிந்தராசா ஆகியோர் முக்கியமானவர்களாவர்.

யாழ்ப்பாணிகளுடன் தொடர்பை தொடர்ந்து வைத்திருந்தால் என்னுடைய வீட்டிற்கு நீ வரக்கூடாது என யுவி தங்கராசா ஒரு கட்டத்தில் சிவராமிடம் கூறியிருந்தார். இதை ஒரு சந்தர்ப்பத்தில் சிவராம் என்னிடமும் சில நண்பர்களிடமும் கூறியிருந்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வன்னிப்புலிகளை ஒழித்து கட்டுவோம் என கருணாவின் பிளவின் போது யுவி தங்கராசா, திருச்செல்வம், கிட்டினன் கோவிந்தராசா போன்றவர்கள் வெளிப்படையாக பேசியிருந்தனர்.

கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வடபகுதி விரிவுரையாளர்களை வெளியேற்றுவதற்கு அவர்கள் எடுத்த முதலாவது ஆயுதம் தம்பையா படுகொலை. இவர்களில் ஒருவரை போட்டு தள்ளிவிட்டால் எல்லோரும் ஓடிவிடுவார்கள் என்று அவர்கள் போட்ட திட்டத்தில் முதலில் அவர்களின் கண்ணில் பட்டவர் அப்பாவியான தம்பையா தான்.

இவர்களின் திட்டங்கள் எதையும் அறியாத தம்பையா அன்றும் வழமை போல மே 24ஆம் திகதி திங்கட்கிழமை மாலை ( 24.05.2004) கிழக்கு பல்கலைக்கழகத்தில் தன் கடமையை முடித்து விட்டு மட்டக்களப்பு ஞானசூரியம் சதுக்கத்தில் உள்ள வீட்டிற்கு வந்திருந்தார்.

இக்கொலைக்கான திட்டத்தை தீட்டியவர்கள் வந்தாறுமூலையில் உள்ள பல்கலைக்கழகத்திலிருந்து தம்பையா புறப்பட்டு வீட்டுக்கு செல்வதை அவதானித்து அப்போது பிள்ளையான் தலைமையில் மட்டக்களப்பு நகரில் இருந்தவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

மாலை 4.30மணியளவில் அவரின் வீட்டிற்கு வந்த இருவர் தம்பையா சேரை பார்க்க வேணும் என்றனர். யார் என பார்ப்பதற்காக வீட்டு வாசலுக்கு தம்பையா வந்த போது அவரின் நெஞ்சிலும், தலையிலும் வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன. அந்த இடத்திலேயே வீழ்ந்த தம்பையாவின் உயிர் பிரிந்தது.

தம்பையாவை ஏன் சுட்டார்கள், அவரை ஏன் இலக்கு வைத்தார்கள், அவருடன் நெருங்கிப்பழகிய எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ச்சி அது.

சம்பவம் நடந்து சுமார் ஒரு மணித்தியாலம் கழித்து அந்த அதிர்ச்சி செய்தியை தவராசா தொலைபேசி மூலம் எனக்கு சொன்னான். மனித நேயம் கொண்ட அனைவரும் கலங்கி நின்றார்கள். மிதித்த புல் சாகாத அந்த மென்மையான ஒரு மனிதரை, யாருக்கும் தீங்கு நினைக்காத ஒரு மனிதரை, யாரையும் கோவித்து பேசாத ஒரு பண்பான மனிதரை ஏன் சுட்டார்கள். விடைதெரியாது நாங்கள் கலங்கி நின்றோம்.

ஆனால் இப்போது மட்டக்களப்பில் தங்களை பிரமுகர்களாக காட்டிக்கொண்டு மாலை மரியாதையுடன் வலம் வரும் அந்த ஈனப்பிறவிகள் தங்களின் முதல் திட்டம் நிறைவேறி விட்டதாக குதூகலித்து நின்றார்கள்.

(தம்பையாவை பிள்ளையான் தலைமையிலான குழுவே சுட்டுக்கொன்றது என்ற விடயமும், அதன் பின்னணியில் யார் யார் இருந்தார்கள் என்ற விபரங்களும் சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட ஐரோப்பிய தூதரகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது)

மறுநாள் காலை கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் சார்பில் மலர் வளையம் ஒன்றை வாங்கிக்கொண்டு நானும், நடேசனும், தவராசாவும் சென்று தம்பையாவுக்கு அஞ்சலி செலுத்தினோம். வெளியில் வந்து வளவுக்கு வெளியே மரத்திற்கு கீழ் போடப்பட்டிருந்த கதிரையில் அமர்ந்தோம். எங்களுக்கு அருகில் யாரும் இருக்கவில்லை. எங்கள் மூவரின் முகங்களும் கவலை, அதிர்ச்சி, அடுத்தது என்ன நடக்க போகிறதோ என்ற அச்சம் என்பவற்றால் உறைந்து போய் இருந்தது.

அப்போதுதான் நடேசன் அந்த அதிர்ச்சி தகவலை சொன்னான்.

அடுத்தது ஒரு பத்திரிகையாளரைத்தான் குறிவைப்பார்கள். யாழ்ப்பாண பத்திரிகையாளரைத்தான் அவர்கள் இலக்கு வைப்பார்கள். நீ கவனமாக இருந்து கொள், என என்னை பார்த்து நடேசன் சொன்னான். தவராசாவுக்கும் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

இனி இங்கு இருக்க கூடிய சூழல் இல்லை. தான் கொழும்புக்கு இடமாற்றம் பெற்று செல்லப்போவதாக நடேசன் சொன்னான்.

சிறிது நேரத்தின் பின் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம்.

சில நாட்களுக்கு மட்டக்களப்பை விட்டு வெளியேறுவதே பாதுகாப்பு என உணர்ந்தேன். எனது மனைவி பிள்ளைகளை அழைத்து கொண்டு யாழ்ப்பாணம் சென்று ஒரு வாரம் தங்குவதென முடிவு செய்தேன். ஒரு வாரம் லீவு எடுக்குமாறு மனைவிக்கும் கூறிவிட்டு வான் ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு மறுநாள் புதன்கிழமை யாழ்ப்பாணம் புறப்பட்டேன்.

யாழ்ப்பாணம் புறப்படுவதற்கு முதல்நாள் இரவு நடேசனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஒரு வாரகாலத்திற்கு யாழ்ப்பாணம் சென்று தங்கப்போவதாக கூறினேன்.

நல்லவிசயம், நானும் கொழும்புக்கு விரைவில் இடமாற்றம் பெற்று செல்லப்போகிறேன். மகனுக்கும் யாழ்ப்பாணத்தில் வேலை கிடைத்து விட்டது. அங்கு போவதற்கு திட்டம் போட்டிருக்கிறோம் என நடேசன் சொன்னான்.

நான்கு நாட்கள் யாழ்ப்பாணத்தில் தங்கிருந்து செல்வச்சந்திதி, நயினாதீவு நாகபூசணி அம்மன், நல்லூர் என யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய கோவில்களுக்கு எல்லாம் பிள்ளைகளை அழைத்து சென்றேன்.

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து நடேசனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இன்று ஞாயிறு வீரகேசரியில் என்ர கட்டுரை பார்த்தியா என கேட்டான். இல்லை என்றேன்.

இந்த படுகொலைகளையும், அராஜகங்களையும் எத்தனை நாட்களுக்கு இந்த சமூகம் பொறுத்துக் கொண்டிருக்க போகுது. தம்பையாவின் படுகொலை பற்றி காரசாரமான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறேன். வாசித்து பார் என சொன்னான்.

ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பை வந்தடைந்தோம். திங்கள் வழமை போல மனைவியை அலுவலகத்திற்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்செல்வதற்காக தயாராகி கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வந்தது.
( தொடரும்)

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...