Friday, September 22nd, 2017

அனைத்து இயக்கங்களும் மக்களுக்கு விடுதலையளித்தார்கள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-13

Published on August 21, 2012-12:03 pm   ·   No Comments

ஈழத்தமிழ் மக்களின் விடுதலைப்போராட்டம் அகிம்சை வழியிலிருந்து ஆயுதப்போராட்டமாக உருப்பெற்ற போது தங்களை நோக்கி அந்த துப்பாக்கிகள் திரும்பும் என கனவிலும் கூட எண்ணியிருக்க மாட்டார்கள். ஆனால் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்த அத்தனை இயக்கங்களும் மக்களை நோக்கி தமது துப்பாக்கிகளை திரும்பியிருந்தன. அது விடுதலைப்புலிகள் இயக்கமாக இருக்கலாம் அல்லது சிறிலங்கா இராணுவத்துடனும், இந்திய இராணுவத்துடனும் தமது சுயநலத்திற்காக சேர்ந்திருந்த ஏனைய தமிழ் இயக்கங்களாகலாம், அனைத்துமே தமது நலன்களை முதன்மை படுத்தி ஈவிரக்கமற்ற படுகொலைகளை புரிந்திருந்தனர். அத்தனை இயக்கங்களும் மக்களுக்கு இந்த உலகிலிருந்து விடுதலை வழங்கினார்கள்.

முள்ளிவாக்காலில் தமது உயிர்களை காத்துக்கொள்வதற்காக தப்பி ஓடிய அப்பாவி மக்களாக இருக்கலாம், அல்லது நீதிக்காக குரல் கொடுத்த புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், என வகை தொகையற்ற வகையில் மக்கள் இந்த தமிழ் இயக்கங்களின் சிக்கி தமது வாழ்க்கையை இழந்த வரலாறு நீண்டதாகும்.

என்னுடன் நெருக்கமாக பழகியவர்களில் இந்த தமிழ் இயக்கங்களின் சிக்கி தமது உயிர்களை இழந்த சிலர் பற்றிய நினைவு குறிப்புக்களை இங்கே பதிவு செய்கிறேன்.

பேராசிரியர் ரவீந்திரநாத்
தமது பதவி உயர்வு, முன்னேற்றம் என வாழும் பேராசிரியர்கள் மத்தியில் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இருந்த பேராசிரியர் ரவீந்திரநாத் மட்டக்களப்புக்கு மட்டுமல்ல இலங்கை முழுவதிற்குமான ஒரு பெரும் சொத்து என்பதை கொலைகாரர்களான பிள்ளையான் கருணா போன்றவர்களுக்கு நிட்சயம் தெரிந்திருக்காது.

விவசாயத்துறை பட்டதாரியான ரவீந்திரநாத் 1978ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு கரடியனாறு விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் ஆராய்ச்சி உத்தியோகத்தராக பணியாற்றினார். அந்நேரம் மட்டக்களப்பு மாவட்டம் சூறாவளியால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த வேளையில் பாதிக்கப்பட்ட விவசாயத்துறையை மீண்டும் கட்டி எழுப்ப பெரிதும் உதவினார்.

அதன் பின்னர் கிழக்கு பல்கலைக்கழகம் 1980ஆம் ஆண்டுகளில் கிழக்கு பல்கலைக்கழக கல்லூரியாக ஆரம்பிக்கப்பட்ட போது விவசாய விஞ்ஞான பீடங்கள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டன. அந்த ஆரம்பகால கட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இணைந்து கொண்ட ரவீந்திரநாத் பல்கலைக்கழக வளர்ச்சிக்காக பெரிதும் உதவினார். இன்று கிழக்கு பல்கலைக்கழகம் ஒரு பல்கலைக்கழக தரத்திற்கு உயர்ந்து வசதி வாய்ப்புக்கள் இருக்கும் போது மண் கதை பேசிக்கொண்டு பலர் கிழக்கு பல்கலைக்கழக கதிரைகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் ரவீந்திரநாத் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இணைந்த போது எந்த வசதிகளும் இருந்ததில்லை.

வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய கட்டிடம் கிழக்கு பல்கலைக்கழக கல்லூரிக்காக கையளிக்கப்பட்ட போது குப்பை கூழங்களாக இருந்ததை ஒரு பல்கலைக்கழக சூழலுக்கு உருவாக்கியவர்கள் ரவீந்திரநாத், ஜெயசிங்கம், மனோ சபாரத்தினம் போன்றவர்களே.

கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் பணியாற்றிய போது பேராசிரியர் ரவீந்திரநாத் மிளக்காய் செய்கை பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியின் பயனாக இன்று இலங்கையில் செய்கை பண்ணப்படும் மிளகாய் செடி இனத்தை கண்டுபிடித்தார். இது போன்று எந்நேரமும் விவசாய பண்ணையில் தனது நேரத்தை செலவழித்து நல்லின உற்பத்திகளை கண்டுபிடித்து கிழக்கு மாகாணத்திற்கு மட்டுமல்ல இலங்கைக்கும் மிகப்பெரிய சொத்தாக திகழ்ந்தார்.

தமிழ் மக்களின் தேசிய விடுதலை தொடர்பாக தீவிர அக்கறை கொண்டிருந்த அவர் மட்டக்களப்பில் ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்ட போராட்டங்கள், செயற்பாடுகளில் கலந்து கொள்ள தவறுவதில்லை. கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யாழ்ப்பாண தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கிய கருணாகுழு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இருந்த பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களையும் அப்பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதற்காக 2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி கருணா குழு கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்த பால சுகுமாரை கடத்தி சென்றனர். பேராசிரியர் ரவீந்திரநாத் அப்பதவியிலிருந்து இராஜினாமா செய்தால்தான் பாலசுகுமாரை விடுதலை செய்வோம் என அக்குழு அறிவித்திருந்தது.

இதன்படி பேராசிரியர் ரவீந்திரநாத் தனது இராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பியதை அடுத்து பாலசுகுமார் கருணாகுழுவால் விடுவிக்கப்பட்டார். ரவீந்திரநாத் இராஜினாமா செய்த போதிலும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் அவரின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளவில்லை.

கொழும்பிலிருந்து பணியாற்றுமாறு அவருக்கு பணித்திருந்தார். மட்டக்களப்பை விட்டு வெளியேறி கொழும்பில் தங்கியிருந்த நிலையிலேயே 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி கொழும்பு பௌத்தலோக மாவத்தையில் வைத்து கருணாகுழுவால் பேராசிரியர் ரவிந்திரநாத் கடத்தி செல்லப்பட்டார்.

கொலைகளையும் கடத்தல்களையும் கப்பம் பெறுவதையும் பாலியல் பலாத்காரங்களையும் தவிர வேறு எதுவும் தெரியாத கருணா குழு கடத்தி சென்ற ரவீந்திரநாத்தை படுகொலை செய்து சடலத்தை கூட யாரும் கண்டுபிடிக்காதவாறு மறைத்து விட்டனர். இந்த கொலையை கருணாவின் உத்தரவில் பிள்ளையான் தலைமையிலான குழுவே செய்ததாக பின்னர் தெரியவந்தது.

கருணாவும் பிள்ளையானும் பிரிந்த பின்னர் ரவீந்திரநாத்தை கொலை செய்த விடயத்தை ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியிருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

செழியன் பேரின்பநாயகம்
ஊடகவியலாளராக தன் தொழிலை ஆரம்பித்த செழியன் பேரின்பநாயகம் 1990களில் பொது சமூகசேவையில் ஈடுபட்டு 1994ஆம் ஆண்டு அரசியலுக்குள் பிரவேசித்திருந்தார்.  மட்டக்களப்பில் ஊடகவியலாளராக இருந்த போது என்னுடன் மிக நெருக்கமாக பழகிய செழியன் பேரின்பநாயகம் அரசியல்வாதியாக மாறிய போது ஊடகவியலாளருக்கும் அரசியல்வாதிக்கும் இடையில் ஏற்படும் மோதல்கள் எனக்கும் செழியனுக்கும் இடையில் ஏற்பட்டது தவிர்க்க முடியாத விடயங்களாகும். அதில் பல சுவையான விடயங்களும் உண்டு. கசப்பான விடயங்களும் உண்டு.

1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊடகத்துறைக்குள் பிரவேசித்த செழியன் பேரின்பநாயகம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆதரவுடன் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபத்திலும், தினகரன் பத்திரிகையிலும் பகுதிநேரமாக பணியாற்றினார். 1978ஆம் ஆண்டுக்கு பின் மட்டக்களப்பு நகரில் நிரந்தரமாக குடியேறினார். 1985ஆம் ஆண்டுக்கு பின்னரே எனக்கு செழியன் பேரின்பநாயகத்துடன் தொடர்பு ஏற்பட்டது.

1990ஆம் ஆண்டு மிகவும் நெருக்கடியான காலகட்டம். மட்டக்களப்பு சமாதான குழுவில் இணைந்து பணியாற்றினார். பின்னர் சமாதான குழுவின் செயலாளராக பணியாற்றிய காலத்தில் மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள கத்தோலிக்க கழக மண்டபத்தில் சமாதான குழுவின் அலுவலகத்தில் தினசரி செழியனை காணமுடியும். காணாமல் போன கைது செய்யப்பட்ட தமது உறவுகளை தேடி அலையும் தாய்மாரையும் அந்த அலுவலகத்தில் தினசரி காணமுடியும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990களின் பின்னர் காணாமல் போன கைது செய்யப்பட்டவர்களின் விபரங்களை மட்டக்களப்பு சமாதான குழு நேர்த்தியாக சேகரித்திருந்தது. அந்த தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தி வைப்பதில் செழியன் பேரின்பநாயகம் சில காலம் முழுநேரமாக ஈடுபட்டிருந்தார். அவரின் அந்த சேவைதான் 1994ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் ரெலோவின் சார்பில் நிறுத்தப்பட்ட சுயேச்சை குழுவுக்கு தலைமை தாங்கி வெற்றி பெற்றார்.

1994ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாநகரசபை தேர்தலில் செழியன் பேரின்பநாயகம் போட்டியிட்ட போது அவரின் தேர்தல் பிரசாரத்திற்கு துணையாக நானும் நடேசனும் செயற்பட்டோம். அப்போது செழியன் பேரின்பநாயகம் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராக இருந்தார். நான் செயலாளராக இருந்தேன். நடேசன் பொருளாளராக இருந்தார்.

செழியன் பேரின்பநாயகம் மாநகர முதல்வராக பதவி ஏற்ற பின்னர் ஊடகவியலாளர்களுக்கும், மாநகர முதல்வர் செழியன் பேரின்பநாயகத்திற்கும் இடையில் பெரிய போர் ஒன்றே ஆரம்பமானது. முக்கியமாக எனக்கும் செழியனுக்கும் இடையில் மிகப்பெரிய தர்மயுத்தமே நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபையின் குறைபாடுகள், ஒழுங்கீனங்கள் பற்றி சுட்டிக்காட்டி செய்தி எழுத தொடங்கிய போது தனக்கு எதிராக செய்தி எழுதுவதாக நினைத்து கொண்ட செழியன் பேரின்பநாயகம் அதை சரியாக கையாளது ஊடகவியலாளர்களுடன் மோதல் போக்கை கையாண்டது எமக்கும் செழியனுக்கும் இடையில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியது.

அப்போது நான் மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த விடிவானம் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். அது பிராந்திய பத்திரிகை என்பதால் மட்டக்களப்பு பிராந்திய செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. முக்கியமாக மட்டக்களப்பு நகரை நிர்வாகிக்கும் மாநகரசபையின் நிர்வாக குறைபாடுகள், மக்களுக்கு மாநகரசபை நிர்வாகத்தால் ஏற்படும் அசௌகரியங்கள், போன்ற செய்திகளுக்கு விடிவானம் முக்கியத்துவம் கொடுத்திருந்தது.

மாநகரசபை மக்களுக்கு சிறப்பான சேவையை செய்ய வேண்டும் என்பதற்காகவே பத்திரிகைகள் குறைபாடுகளை சுட்டிக்காட்டுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த செழியன் எம்மை எதிரிகளாக பார்க்கும் நிலைக்கு வந்தார். மாநகரசபை கூட்டத்திற்கு விடிவானம் பத்திரிகை செய்தியாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. மாநகரசபையின் நூலகங்களிலும் அப்பத்திரிகைக்கு தடை விதிக்கப்பட்டது. அது இரண்டுவாரங்களுக்கு ஒரு முறை புதன்கிழமையில் வெளிவரும் பத்திரிகை.

விடிவானம் பத்திரிகையை மாநகர நூலகங்களில் தடை விதித்த போதிலும் அப்பத்திரிகை கடைகளுக்கு விநியோகிக்கப்பட்ட உடன் காலையிலேயே அப்பத்திரிகையை வாங்கும் முதலாவது நபராக செழியன் பேரின்பநாயகம் தான் இருப்பார். விடிவானம் பத்திரிகை வெளிவரும் புதன்கிழமைகளில் அவர் அலுவலகத்தில் இருக்கமாட்டார், இருந்தாலும் மாநகரசபை ஊழியர்களுடன் கடுப்பாகவே இருப்பார்.
விடிவானம் பத்திரிகையில் மட்டக்களப்பு மாநகரசபை பற்றி வெளிவந்த தலைப்புக்கள் செழியனை கடுப்பேற்றி விடுவதாக சில நண்பர்கள் என்னிடம் கூறியிருக்கின்றனர்.

மட்டக்களப்பு மாநகர (சபை) மாடுகள்

மட்டக்களப்பு நகரில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லையால் பல வீதி விபத்துக்களும் ஏற்பட்டிருந்தன. இரவில் மட்டக்களப்பு பிரதான வீதியில் கூட்டம் கூட்டமாக மாடுகள் படுத்திருக்கும். இவ்வாறு பிரதான வீதி ஒன்றில் பெருந்தொகையான மாடுகள் வீதியை மறித்து படுத்திருப்பதை படம் எடுத்து மட்டக்களப்பு மாநகர ( சபை) மாடுகள் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். அச்செய்தி வெளிவந்த அன்று விடிவானம் அலுவலகத்திற்கு முன்னால் செழியன் பேரின்பநாயகம் பெரும் களேபரத்தை ஏற்படுத்தியிருந்தார். அப்பத்திரிகையை எரித்ததுடன் வீதியில் நின்று திட்டித்தீர்த்து விட்டு சென்றார்.

மேயர் பேயரானார்
மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தட்டெழுத்தாளராக பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவரிடம் கடிதம் ஒன்றை தட்டச்சு செய்வதற்கு கொடுத்திருந்தார். அப்பெண் கடிதத்தை தட்டச்சு செய்து கொண்டு போய் கொடுத்த போது அதை வாசித்து விட்டு அப்பெண் மீது சீறி விழுந்தார். என்னை பேயராக்கி விட்டாய் என கடிந்து கொண்டார். மாநகர முதல்வர் கையொப்பம் இடும் இடத்தில் மேயர் செழியன் பேரின்பநாயகம் என்பதற்கு பதிலாக பேயர் என தட்டச்சு செய்து விட்டார். ம என்ற எழுத்திற்கு பதிலாக ப என்ற எழுத்தை அடித்து விட்டார். இதனால் கோபமடைந்த செழியன் பேரின்பநாயகம் அப்பெண்ணுக்கு 10ரூபா அபராதம் விதித்திருந்தார்.

இந்த விடயத்தை கடித ஆதாரத்துடன் விடிவானம் மேயர் பேயரானார் என்ற தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது. செய்தி வெளியாகிய உடன் கொதித்தெழுந்த செழியன் பேரின்பநாயகம் மட்டக்களப்பு நகரில் உள்ள கடைகளில் விடிவானம் விற்பனை செய்யக் கூடாது என கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டார். ரெலோ இயக்கத்தை சேர்ந்தவர்களும் ஒவ்வொரு கடையாக சென்று விடிவானம் பத்திரிகையை விற்பனை செய்யக் கூடாது என அச்சுறுத்தியதுடன் கடையில் இருந்த பத்திரிகையை வீதியில் போட்டு எரித்தனர். ஆனால் மறுநாளே மீண்டும் அப்பத்திரிகையை மீள்பதிப்பு செய்து விநியோகத்திற்கு விட்ட போது வழமையாக விற்பனையாகும் பத்திரிகையை விட மூன்று மடங்கு அதிகமான பத்திரிகை விற்பனையானது.

இதன் விளைவு ஒருநாள் நள்ளிரவு வேளையில் ரெலோ இயக்கத்தினர் துப்பாக்கிகளுடன் எனது வீட்டிற்குள் நுழைந்தனர். அந்த கசப்பான அனுபவ பகிர்வுடன் அடுத்த அங்கத்தில் சந்திப்போம்
( தொடரும்)

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...