Friday, November 17th, 2017

பேசப்போன செழியனை சுட்டுக்கொன்ற புலிகள்- பதிப்பில் வராத என் மனப்பதிவுகள்-14 இரா.துரைரத்தினம்

Published on November 25, 2012-6:38 pm   ·   No Comments

இலங்கையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் சிறிலங்கா படைகள் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினரின் அச்சுறுத்தல்கள், நெருக்குதல்களின் மத்தியில் மட்டுமன்றி தமிழ் இயக்கங்கள், உட்பட ஆயுதக்குழுக்களாலும் ஆபத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

1990களின் பின்னர் இது உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் தமிழ் அமைப்புக்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

விடிவானம் பத்திரிகை வெளிவந்த 1994களின் பிற்பட்ட காலத்தில் ரெலோ இயக்கம் மட்டக்களப்பில் இராணவத்திற்கு ஆதரவாக செயற்பட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஆயுதம் தரித்தவர்களாகவே நடமாடினர்.  தமது ஆதரவுடன் பதவிக்கு வந்த மேயர் செழியன் பேரின்பநாயகம் பற்றி விடிவானம் பத்திரிகையில் கடுமையான விமர்சனங்கள் வந்த காரணமோ அல்லது சிறிலங்கா அரசுக்கு எதிராக அப்பத்திரிகை தொடர்ச்சியாக எழுதியதன் காரணமோ தெரியவில்லை அப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்த என்னை போட்டுத்தள்ள அவர்கள் எண்ணியிருக்கலாம்.

சம்பவதினம் மாலை நான் கொழும்புக்கு சென்றிருந்தேன். வீட்டில் எனது மனைவி பிள்ளைகள் தங்கியிருந்தனர். அயல்வீடுகள் எங்கள் உறவினர்களுடையதுதான். முதலில் எங்கள் வீட்டின் அயலில் உள்ள உறவினர்களின் வீடுகளிலிருந்து யாரும் வெளியேறாதவாறு ஆயுதங்களுடன் சிலர் புகுந்து நிற்க இருவர் எங்கள் வீட்டிற்கு ஆயுதங்களுடன் வந்தனர்.

வீட்டில் நான் இல்லை என அறிந்து கொண்டதும் வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தி விட்டு சென்றனர். ஆயுதங்களுடன் வந்தவர்கள் செழியன் பேரின்பநாயகத்தின் வாகனத்திலேயே வந்ததாக பின்னர் அறிந்து கொண்டேன். வந்தவர்களில் ஒருவர் ரெலோ இயக்கத்தின் சீலன் என்பவர் என பின்னர் தெரியவந்தது. ஆனால் அப்போது ரெலோ இயக்கத்திற்கு பொறுப்பாக இருந்த றொபேட் இந்த சம்பவம் தனக்கு தெரியாது என்று தெரிவித்திருந்தார்.  சில வேளைகளில் ரெலோ இயக்கத்தை சேர்ந்த சிலரை செழியன் பேரின்பநாயகம் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் என்னிடம் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவத்திற்கு முன்னர் ஒரு முறை விடிவானம் பத்திரிகைகளில் வரும் செய்திகள் தொடர்பாக பேச வேண்டும் என ரெலோ இயக்கத்தினர் அவர்களின் அலுவலகத்திற்கு என்னை அழைத்திருந்தனர். அங்கு சென்ற போது பொறுப்பாளராக இருந்த றொபேட்டும், செழியன் பேரின்பநாயகமும் இருந்தனர். அப்போது புரிந்து கொண்டேன், ரெலோ இயக்கத்தினரை பயன்படுத்தி மேயர் செழியன் பேரின்பநாயகம் தான் எனக்கு எச்சரிக்கை விடுப்பதற்காக இங்கு அழைத்திருந்தார் என்று.
எதிர்பார்த்தது போலவே எச்சரிக்கை செய்யும் தொனியிலேயே அன்றைய பேச்சு அமைந்திருந்தது. றொபேட் வழக்கம் போல சிரித்துக் கொண்டிருந்தார். ஆயுதம் வைத்திருக்கும் இயக்கங்கள் எச்சரிப்பது போல செழியன் பேரின்பநாயகத்தின் பேச்சு அமைந்திருந்தது.

அதன் பின்னர் அடுத்த கட்டமாகவே ஆயுதங்களுடன் நள்ளிரவு வேளையில் ரெலோ இயக்கத்தினர் என்னைத் தேடி வீட்டிற்கு வந்திருந்தனர். எனக்கு கெட்டியான ஆயுளோ தெரியவில்லை. அன்று நான் வீட்டில் இருக்கவில்லை.

அந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு நகரில் புளொட், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ராஜிக்குறுப், இராணுவத்தினருடன் நேரடியாக இயங்கிய புளொட் மோகன் குழு என பார்க்கும் இடமெல்லாம் ஆயுதக்குழுக்களின் நடமாட்டமே காணப்படும். இவர்களின் அச்சுறுத்தல்கள், கெடுபிடிகளுக்கு மத்தியில் தான் கத்தியில் நடப்பது போன்றே ஊடகவியலாளர்கள் செயற்பட்டனர்.

மேயராக இருந்த காலத்தில் செழியன் பேரின்பநாயகம் அதிகார தோரணை காரணமாக சில தவறான போக்கில் சென்றிருக்கலாம். ஆனால் செழியன் பேரின்பநாயகம் மேயர் பதவியை இழந்த பின்னர் ஒரு நாள் எனது வீடு தேடி வந்தான். வீட்டு கேற்றில் நின்று வீட்டில் உள்ளே வரலாமா என கேட்டான். மேயர் செழியன் பேரின்பநாயகமாக அல்ல, எனது நண்பன் செழியன் பேரின்பநாயகமாக எப்போதும் நீ வரலாம் என்றேன்.  நடந்த சம்பவங்களுக்காக மன்னிப்புக்கேட்டான். அதன் பின்னர் செழியன் பேரின்பநாயகத்துடன் நட்பு தொடர்ந்தது.

செழியன் பேரின்பநாயகம் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முதல்நாள் மட்டக்களப்பு நகரில் சந்தித்தோம். கடை ஒன்றிற்கு சென்று இருவரும் தேனீர் அருந்திய போது செழியன் பேரின்பநாயகம் சில விடயங்களை என்னுடன் பேசினார். தான் நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்காக விடுதலைப்புலிகளுடன் பேசப் போவதாகவும் கூறினான்.

செழியன் பேரின்பநாயகம் குறிப்பிட்டது போல விடுதலைப்புலிகளுடன் பேசுவதற்காக கல்முனையில் ஒரு வீட்டில் விடுதலைப்புலிகள் சந்திப்பதற்கு ஏற்பாடாகி இருந்தது. அங்கு பேசுவதற்காக வந்த இரு விடுதலைப்புலிகளே செழியன் பேரின்பநாயகத்தை சுட்டுக்கொன்றனர்.

சம்பவம் நடந்து சில நிமிடங்களில் கல்முனையிலிருந்து சலீம் எனக்கு தொலைபேசி எடுத்தார். செழியன் பேரின்பநாயகத்தை சுட்டுவிட்டார்கள் என சொல்கிறார்கள் என பதற்றத்துடன் சொன்னார். உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பார்க்குமாறு நான் கூறினேன். சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த சலீம் சற்று நேரத்தில் அந்த கொடூரச் செய்தியை உறுதிப்படுத்தினார்.

செழியன் பேரின்பநாயகம் நீண்டகாலம் ஊடகத்துறையில் பணியாற்றிய எனது நல்ல நண்பன். மேயராக பதவி வகித்த காலத்தில் அந்த அதிகார தோரணையோ தெரியவில்லை, இருவருக்கும் இடையில் மோதல்கள் முறுகல்கள் ஏற்பட்டது. ஆனால் மேயர் பதவிக்காலம் முடிந்த பின் தன் தவறுகளை உணர்ந்து பழைய செழியன் பேரின்பநாயகமாக நான் கண்டேன். புலிகள் ஏன் செழியன் பேரின்பநாயகத்தை சுட்டுக்கொன்றனர் என்று இன்றுவரை எனக்கு தெரியவில்லை.

எத்தனை கெடுபிடிகள் இருந்தாலும் அரச படைகளினதும், இராணுவ துணைப்படைகள், ஆயுதக்குழுகளின் மனித உரிமை மீறல்கள் படுகொலைகள், கடத்தல்கள், அனைத்தையும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு ஊடகங்களுக்கு மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளர்கள் வழங்கினர்.

வெளிநாடுகளிலிருந்து இயங்கிய ரிஆர்.ரி தமிழ்ஒலி, ஐபிசி, ரிரிஎன் தொலைக்காட்சி, மற்றும் ஒஸ்ரேலிய கனடா நாடுகளிலிருந்து ஒலிப்பான வானொலிகள் அனைத்திற்கும் மட்டக்களப்பில் இருந்த செய்தியாளர்களே பிரதான செய்தியாளர்களாக இருந்தனர்.

தமிழ்நெற் இணையத்தள அறிமுகம்.
அக்காலப்பகுதியில் தமிழ் இணையத்தளங்கள் அறிமுகமாகியிருக்கவில்லை. 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்நெற் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது தமிழ்நெற் பிரதம செய்தியாளராக கொழும்பில் இருந்த சிவராம் செயற்பட்டார். மட்டக்களப்பிலிருந்து நானும், அதன் பின்னர் யசியும் இணைந்து கொண்டோம்.

திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாணம், ஆகிய இடங்களுக்கு தமிழ்நெற் இணையத்தளத்திற்கு அதன் பின்னரே செய்தியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்நெற் இணையத்தளம் தமிழ்செய்தி பிரிவு ஒன்றையும் ஆரம்பித்தது. ஆனால் ஒரு சொற்பகாலத்திலேயே தமிழ்நெற் இணையத்தின் தமிழ்செய்தி பிரிவு மூடப்பட்டு விட்டது.

இன்று தமிழ்செய்திகளுக்கான இணையத்தளங்கள் நூற்றுக்கு மேற்பட்டவை இயங்கி வருகின்றன. ஆனால் இணையத்தள பரப்பில் முதல்முதலாக வெளிவந்த தமிழ்செய்தி சேவை இணைத்தளம் தமிழ்நெற்றின் தமிழ்செய்தி தளம் தான்.
அக்காலத்தில் போர் தாக்குதல் செய்திகள், உட்பட இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் அரசியல் நடவடிக்கைகளை அனைத்தும் உடனுக்குடன் தாக்கி வரும் இணையத்தளமாக தமிழ்நெற் இணையத்தளம் விளங்கியது. அப்போது வேறு எந்த இணையத்தளமும் இருந்ததில்லை.

2000ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதி வெசாக் தினத்தன்று மாலை மட்டக்களப்பு மங்களராமய விகாரைக்கு அருகில் குண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் படைத்தரப்பை சேர்ந்த 4பேர் உட்பட சிலர் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் அங்கு வந்த இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 19பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதில் ஆயித்தியமலையிலிருந்து வணபிதா ஒருவரால் அழைத்து வரப்பட்ட மாணவர்களும் கொல்லப்பட்டனர்.  ஆனால் ஊடகங்கள் அனைத்தும் புலிகள் நடத்திய குண்டுவெடிப்பிலேயே அனைவரும் கொல்லப்பட்டனர் என்றும் காயமடைந்தனர் என்றும் செய்திகளை வெளியிட்டு கொண்டிருந்தன.

சம்பவம் நடைபெற்ற சிறிது நேரத்தில் காயமடைந்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிலர் இரகசியமாக சில தகவல்களை வெளியிட்டனர். தாங்கள் இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டிலேயே காயமடைந்ததாக தெரிவித்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் துப்பாக்கி சூட்டு காயங்களிலேயே கொல்லப்பட்டிருந்தது தெரியவந்தது. இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டிலேயே பலரும் இறந்ததுடன் காயமடைந்தனர் என்ற செய்தியை தமிழ்நெற் இணையத்தளமே முதல் முதலில் வெளியிட்டது.

இராணுவத்தினரின் துப்பாக்கி சூட்டில் தான் மாணவர்கள் உட்பட பலர் இறந்தனர் என்ற செய்தியை லண்டனிலிருந்து ஒலிப்பரப்பான ஐ.பி.சி வானொலியும் தெரிவித்தது. அப்போது ஐ.பி.சியின் சிற்றலை சேவை இலங்கையில் பிரசித்தி பெற்றிருந்தது.
மறுநாள் காலை ஐ.பி.சியில் அச்செய்தி ஒலிப்பரப்பானது. அன்று நண்பகல் ஐ.பி.சிக்கு அப்போது செய்தியாளராக இருந்த நடேசன் மட்டக்களப்பு இராணுவத் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஐ.பி.சிக்கு தான் அச்செய்தியை வழங்கவில்லை என்றும் ஐ.பி.சிக்கு குண்டுவெடிப்பில் மக்கள் கொல்லப்பட்டனர் என்ற செய்தியையே வழங்கியதாகவும் தமிழ்நெற் இணையத்தள செய்தியையே ஐ.பி.சி ஒலிப்பரப்பியது என்று சொன்னதன் மூலம் நடேசன் அச்சிக்கலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

தமிழ்நெற் இணையத்தளத்திற்கு இந்த செய்தியை அனுப்பியது யார் என்று இராணுவத்திற்கு கண்டுபிடிப்பது கஷ்டமான காரியமல்ல. தமிழ்நெற்றிற்கு அச்செய்தியை அனுப்பியதற்காக என்னை விசாரணைக்கு அழைத்திருந்தார்கள்.
காயமடைந்தவர்கள் என்னிடம் தெரிவித்ததை தான் நான் எழுதினேன் என தெரிவித்தேன். மூன்றுமணி நேர விசாரணை, பின்னர் விடுவிக்கப்பட்டேன்.

தமிழ்நெற் இணையத்தள செய்திகளை ஐ.பி.சி ஒலிப்பரப்ப படுவதால் அந்த வானொலிக்கு மட்டக்களப்பு செய்தியாளராக இருந்த நடேசன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் பல உண்டு.

ஈ.பி.ஆர்.எல்.எவ் ராஜிக் குறூப் மக்களிடம் கப்பம் பெறுவது அவர்களின் அடாவடித்தனங்கள் என்பனவற்றை விரிவாக எழுதியிருந்தேன். அது தமிழ்நெற்றில் வெளியானது. ஐ.பி.சியும் அப்படியே ஒலிப்பரப்பியது. ராஜிக் குறூப் நடேசனை கூப்பிட்டு விசாரித்தனர். அது தமிழ்நெற்றின் செய்தி, அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லை என நடேசன் சொன்னபோது அந்த குழுவுக்கு தலைமை தாங்கிய ராஜிக் என்னை அழைத்திருந்தான்.  அந்த செய்தியின் இணைப்பை தமிழ்நெற்றில் இந்த இணைப்பில் பார்வையிடலாம்   http://www.tamilnet.com/art.html?catid=79&artid=7387

மோட்டார் சைக்கிளில் வந்த ராஜிக் குழு உறுப்பினர்கள் இருவர் தோழர் உங்களை உடனடியாக காம்பிற்கு வரச்சொன்னார் என கூறிவிட்டு சென்றனர். ( ராஜிக் குழு உறுப்பினர்கள் தோழர் என அழைப்பது ராஜிக்கை ஆகும்)
சாம் தம்பிமுத்துவின் வீட்டில் தான் ராஜிக் முகாம் இருந்தது. அங்கு சென்ற போது முகாமின் உள்ளே இருந்த வீட்டு முன்விறாந்தையில் போடப்பட்ட கதிரையில் அமர வைக்கப்பட்டேன். மண்டையில் போடப்போகிறார்கள் என மனம் சொல்லியது.
பளிச் என தெரியும் வெண்ணகல நிறத்திலான ஒரு கைத்துப்பாக்கியை சூழற்றியவாறு ராஜிக் வந்தான். கைத்துப்பாக்கியை எனக்கு முன்னால் இருந்த மேசையில் வைத்து விட்டு பேச்சை ஆரம்பித்தான். நான்தான் அச்செய்தியை எழுதினேன் என சொன்னால் நிட்சயம் வெடி விழும் என்பது எனக்கு தெரியும்.

 நான் தப்புவதற்காக தமிழ்நெற் தலைமையகத்தின் மீதே பழியை போட்டேன். தமிழ்நெற் இணையத்தளத்திற்கு நான் செய்தியாளராக இருப்பது உண்மைதான். ஆனால் மட்டக்களப்பில் தமிழ்நெற் இணையத்தளத்திற்கு பலர் செய்தியாளராக இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இந்த செய்தியை அனுப்பியிருக்கலாம். மட்டக்களப்பிலோ அல்லது வேறு மாவட்டங்களிலோ தமிழ்நெற் இணையத்தளத்திற்கு யார் யார் செய்தியாளராக இருக்கிறார்கள் என்ற விபரம் எனக்கு தெரியாது என சொன்னேன்.

அண்ணை, இந்த செய்தியை யார் எழுதினது என்று கண்டுபிடிக்க வேணும். யார் எழுதியது என ஒரு கிழமைக்குள் எனக்கு கண்டுபிடித்து சொல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டேன். அதன் பின்னர் லேக் வீதியில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ் அலுவலகத்திற்கு முன்னால் நின்றிருந்த ராஜிக்கை சந்திக்க நேர்ந்தது. ராஜிக் கேட்ட முதல் கேள்வி, அண்ணை ஆளை கட்டுபிச்சிட்டீங்களோ என்பதுதான். நானும் விசாரித்துக் கொண்டிருக்கிறன். எப்படியும் கண்டுபிடித்து சொல்கிறேன் என சொல்லி ஒருவாறு அங்கிருந்து சென்று விட்டேன்.

ராஜிக் மீது தற்கொலை தாக்குதல் 

என்னுடைய நல்ல காலமோ தெரியவில்லை, சில நாட்கள் கழித்து  ( 29 may 1999 )  நண்பகல் வேளை மட்டக்களப்பு நகரில் உள்ள இளைஞர் சேவை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுக்கான ஒரு சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. பாரிய குண்டு சத்தம் ஒன்று கேட்டது.

குண்டு சத்தம் கேட்ட திசையில் இருக்கும் தயா மோட்டோர் என்ற கடைக்கு தொலைபேசி எடுத்து விசாரித்தோம். எங்கள் கடைக்கு பக்கத்தில் தான் குண்டு வெடிச்சிருக்கு என சொல்லி விட்டு அவர் தொலைபேசியை துண்டித்து கொண்டார்.
பொதுவாகவே குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தால் அந்த இடத்தை விட்டு மக்கள் வேறு இடத்திற்கு ஓடிச்செல்வார்கள். ஆனால் பத்திரிகையாளர்கள் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தை நோக்கி ஓடிச்செல்வார்கள். அன்றும் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்றோம்.  பொலிஸார் இராணுவத்தினர் அந்த இடத்திற்கு வருவதற்கு முதல் சென்றது நாங்கள் தான். அந்த இடத்தில் யாரும் இல்லை. சற்று நேரத்தில் தான் அந்த இடத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் வந்து சேர்ந்தனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றின் அருகே  மூவரின் சடலங்கள், இன்னும் சிலர் காயமடைந்திருந்தனர். சற்று தள்ளி ஒருவரின் தலை. அருகில் சென்று பார்த்தோம். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மட்டக்களப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜீக் குழுவின் தலைவன் ராஜிக்.
அது ஒரு தற்கொலை தாக்குதல். மட்டக்களப்பில் நடந்த இரண்டாவது தற்கொலை தாக்குதல் இதுவாகும்.  அந்த சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்குள் தமிழ்நெற்றில் செய்தி வெளியானது. இலங்கையில் உள்ள எந்த ஊடகமும் செய்தியை வெளியிடுவதற்கு முதல் ராஜிக் கொல்லப்பட்ட செய்தியை தமிழ்நெற் தான் உடனடியாக வெளியிட்டது.

கொலைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. நியாயப்படுத்தவும் முடியாது,

ஆனால் ராஜிக் கொல்லப்பட்ட பின்னர் சிக்கலுக்குரிய ஒரு கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய நெருக்கடியிலிருந்து நான் தப்பிக் கொண்டேன்.

1990களின் பின்னர் மட்டக்களப்பில் குண்டுவெடிப்பில் சிதறிக் கிடக்கும் சடலங்களையும், ரயர் போட்டு எரிக்கப்பட்ட சடலங்களையும் பார்த்து பார்த்து இக்காட்சிகள் எமக்கு புதிதாக தெரிவதில்லை. மட்டக்களப்பில் உள்ள பெரும்பாலான மக்கள் ராஜிக் கொல்லப்பட்டதை மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொண்டனர். ஏனெனில் மட்டக்களப்பில் இந்திய இராணுவ காலத்தில் மண்டையன் குழுவுக்கு தலைமை தாங்கியது முதல் அதன் பின்னர் 1991ஆம் ஆண்டுகளின் பின்னர் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து ராஜிக் குழு என்ற பெயரிலும் செய்த அட்டகாசங்கள், கொலைகள் கொஞ்சம் அல்ல.

சிங்கள இராணுவத்தை எப்படி மட்டக்களப்பு தமிழ் மக்கள் வெறுத்தார்களோ அதை விட ஈ.பி.ஆர்.எல்.எவ் ராஜிக், புளொட் மோகன் போன்றவர்களை வெறுத்தார்கள்.

மக்களை படுகொலை செய்து விடுதலை வழங்கி விண்ணுலகம் அனுப்புவதில் அனைத்து இயக்கங்களுமே ஒன்றுக்கு ஒன்று சளைத்தவர்கள் அல்ல.

பொதுவாகவே ஆரம்பகாலத்தில் தமிழ் இயக்கங்களில் ஈரோஸ் இயக்கம் படுகொலைகள் அட்டகாசம் புரியாதவர்கள் என்ற நல்ல அபிப்பிராயம் நிலவி வந்தது. ஆரம்பகாலத்தில் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுடன் சில தொடர்புகளும் எனக்கு இருந்தது. அந்நாட்களில் மட்டக்களப்பில் ஈரோஸ் இயக்கத்தின் முக்கியஸ்தர்களாக இருந்த பஷீர் அதன் பின்னர் பாலகுமார் வரை அந்த இயக்கத்தை சேர்ந்த சிலர் எனது நல்ல நண்பர்களாக இருந்தனர். நான் இலங்கையில் இருக்கும் வரை அவர்களுடனான நட்பு தொடர்ந்தது.

ஆனால் ஈரோஸ் இயக்கத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இழக்க செய்தது ஈரோஸ் புரிந்த மிகப்பெரிய படுகொலை தான்.   ஈரோஸ் இயக்கம் புரிந்த மிகப்பெரிய படுகொலை பற்றி அடுத்த அங்கத்தில் பார்ப்போம்…( தொடரும்)

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...