Monday, December 18th, 2017

தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்த முத்தரப்பினர் கூட்டாக முயற்சி – இரா.துரைரத்தினம்

Published on April 7, 2015-7:38 pm   ·   No Comments

manivannanஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்திருக்கிறது என்ற அறிவிப்பு வெளியான உடன் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு மட்டத்தில் உள்ள சிலர் முயன்று வருகின்றனர்.

அதேவேளை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கி உள்ளது என்றும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு சார்பான முகவரி அற்ற இணையத்தளங்கள் பிரசாரத்தை கடந்த ஒக்டோபர் மாதத்தில் மேற்கொண்டிருந்தனர்.  மக்களை தவறாக வழிநடத்தும் முகவரி அற்ற இந்த இணையத்தளங்களின் பொய் பிரசாரங்கள் சாயம் வெழுத்து விட்டது என்பதையும் சாதாரண வாசகர்கள் கூட இப்போது புரிந்து கொள்வார்கள்.

Court of Justice of the European Union  என்ற ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு கடந்த ஒக்டோபரில் உத்தரவிட்டிருந்தார்களே, அவ்வாறானால் எப்படி ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்திருக்க முடியும் என்ற கேள்வி சாதாரண பொதுமக்களுக்கு ஏற்படுவது இயல்புதான்.

இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் சிறிலங்காவின் வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பெரேரா வெளியிட்ட அறிக்கையில் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற உத்தரவையும் மீறி ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்திருக்கிறது. இதற்கு தமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் இராஜதந்திர நகர்வுகள் தான் காரணம் என மார்தட்டிக் கொண்டார்.

ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றின் உத்தரவை மீறவும் இல்லை, ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீடிப்பு அறிவிப்பு ரணில் விக்கிரமசிங்காவின் இராஜதந்திர நகர்வுகளால் தான் ஏற்பட்டது என்பதும் தவறாகும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சார்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப்புலிகள் விதித்த தடையை எதிர்த்து 2011-ல் லக்சம்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பாக நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் விக்டர் கோப் ஆஜராகி வாதாடி வந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 2014 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் நடைபெற்று ஒக்டோபர் 16ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தெரிவிக்கவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடை பற்றி ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை செய்யுமாறு பரிந்துரைத்திருந்தது.

விடுதலைப் புலிகள் அமைப்பு பயங்கரவார அமைப்பு என்று இந்தியாவில் அறிவிக்கப்பட்டிருந்த முடிவின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்திருந்ததாகவும், ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கான காரணங்களை ஆராய்ந்து மூன்று மாத காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் மீள்பரிசீலனை செய்து முடிவெடுக்க வேண்டும் என்றே நீதிமன்றம் கூறியிருந்தது.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் எந்த ஒரு கட்டத்திலும் உத்தரவிடவில்லை.  ஆனால் இந்த தீர்ப்பு வெளியான உடன் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க உத்தரவு என்றும் இது விடுதலைப்புலிகளுக்கு கிடைத்த வெற்றி என்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக மேற்குலக நாடுகளிலிருந்து முகவரி அற்ற நிலையில் வெளியாகும் சில இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டன.

இந்த செய்திகளை உண்மை என நம்பி இலங்கையில் உள்ள சில தமிழ் பத்திரிகைகளும் ஐரோப்பாவில் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறு உத்தரவு என செய்திகளை வெளியிட்டன.
மறுபுறத்தில் இந்த தடை நீக்கத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கதான் காரணம் என அப்போதைய மகிந்த அரசும் சில சிங்கள பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டன.
ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சரியாக புரிந்து கொள்ளாத அல்லது உண்மையை மறைத்து தமக்கு வெற்றி கிடைத்து விட்டதாக பிரசாரம் செய்த விடுதலைப்புலிகள் தரப்பின் சாயமும் இப்போது வெழுத்து விட்டது.

தடை நீக்கப்பட்டு விட்டதாக விடுதலைப்புலிகள் தரப்பு பிரசாரம் செய்து வந்த அதேநேரத்தில் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீடிக்கவே செய்யும் என்றும், அது நீக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வெளியான பின் ஐரோப்பிய நீதிமன்றத்தின் ஊடகத்துறை அதிகாரி தெரிவித்திருந்தார். விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பா என்ற கேள்வியை ஹேக்கில் இருக்கின்ற நீதிமன்றம் பரிசீலித்திருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு அமைப்புதானே தவிர சர்வதேச சட்டங்களில் அதனை பயங்கரவாத அமைப்பாக வரையறுக்க முடியாது என விடுதலைப்புலிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதத்தையும் ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்திருந்தது என ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற ஊடகத்துறை அதிகாரி கிறிஸ்டபர் தெரிவித்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மீள்பரிசீலனை செய்யுமாறு பரிந்துரையை செய்தார்களே ஒழிய தடையை நீக்குமாறு உத்தரவிடவில்லை, ஆனால் விலாசம் இல்லாத தமிழ் இணையத்தளங்களும் மேற்குலகில் உள்ள தொலைக்காட்சி மற்றும் வானொலிகளும் ஐரோப்பாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கப்பட்டு விட்டது என பிரசாரம் செய்தன.  இது மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு செயலாகும்.

இந்தியா விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடை செய்வதற்கு எடுத்த முடிவை அடிப்படையாக வைத்து ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்த போதும் கடந்த மூன்று மாதத்தில் விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பாவில் தடை விதிப்பதற்கு சரியான காரணங்களை அட்டவணைப்படுத்தி ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்ததுடன் விடுதலைப்புலிகள் மீதான தடையையும் நீடித்திருக்கிறது.

தமிழீழ விடுதலைப்புலிகள் மீளவும் ஒருங்கிணைவதற்கு ஏதுவாக ஐரோப்பாவில் இருக்கும் விடுதலைப்புலிகளின் கிளை அமைப்புக்கள் செயற்பட்டு வருகின்றன என்றும் சட்டவிரோத நிதி சேகரிப்பு, மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் தமது நாடுகளுக்குள் விடுதலைப்புலிகள் தனியாக தாம் ஒரு அரசாங்கம் போல செயற்படுகிறார்கள் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தடைக்கான காரணங்களை தெரிவித்திருக்கிறது.

ஐந்தாம் கட்ட ஈழப்போர் வெடிக்கும், மீண்டும் எழுவோம் என்ற கோஷங்களை ஐரோப்பிய நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் எழுப்பி வருகின்றனர். மீண்டும் பிரபாகரன் தலைமையில் ஆயுதப்போராட்டம் வெடிக்கும் என ஐரோப்பாவில் உள்ளவர்கள் மட்டுமல்ல நெடுமாறன் சீமான் போன்ற தமிழ்நாட்டில் உள்ள சில தமிழர் தரப்பும் கூறிவருகிறது.

இதுவும் ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீடிப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது. ஐரோப்பாவிலும் தமிழ்நாட்டிலும் உள்ள சிலரின் செயற்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீடிப்புக்கான காரணமாக மட்டுமன்றி சிறிலங்கா அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை அதிகரிப்பதற்கும் காரணமாக அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மீளவும் ஒருங்கிணைந்து, இன்னொரு போருக்குத் திட்டமிடக் கூடும் என்றும் இதனால் தாம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்து விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்திருப்பதாகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கறுப்புப் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தமது அரசாங்கம் அழுத்தம் கொடுத்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்திக்கிறார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு வெளிநாடுகளில் மில்லியன் கணக்கான டொலர் சொத்துகள் இருப்பதாகவும், அந்த நிதியை அவர்கள் உள்நாட்டில் மீண்டும் கெரில்லா போரை ஆரம்பிக்க பயன்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தின் கதையை கேட்டு ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடித்திருக்கிறது என்ற அமைச்சர் அஜித் பெரேராவின் கூற்றை சிங்கள மக்கள் நம்பலாம். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவுகள் என்பது வெறுமனே சிறிலங்காவின் கோரிக்கையை ஏற்று எடுக்கப்படுவது அல்ல.

சிங்கள மக்கள் மத்தியில் சிறிலங்காவின் ஆளும் தரப்பினரும் எதிர்த்தரப்பினரும் எவ்வாறு பொய் பிரசாரங்களை மேற்கொள்கிறார்களோ அது போலவே அண்மைக்காலமாக மேற்குலக நாடுகளில் உள்ள முகவரி அற்ற சில இணையத்தளங்களும் விடுதலைப்புலிகளுக்கு சார்பாக செயற்படும் வானொலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை குறிப்பாக தமிழரசுக்கட்சி மீது சேறு வாரி வீசும் திரிபு படுத்தப்பட்ட பொய்யான தகவல்களையே வெளியிட்டு வருகின்றன.

தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.  எதிர்வரும் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவுகளை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா செயற்பட்டு வருகிறார். அதன் ஒரு அங்கமாகவே வடக்கு முதலமைச்சரை ஒதுக்கி வைத்து விட்டு ஏனைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் போக்கை மேற்கொண்டுள்ளார் என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

ரணில் விக்கிரமசிங்க போன்ற சிங்கள தலைமைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்தி பிளவு படுத்த வேண்டும் என எதிர்ப்பார்க்கும் நிகழ்ச்சி நிரலிலேயே தமிழ் காங்கிரஷ் தலைவர் கஜேந்திரகுமார் போன்றவர்களும் அவர்களுக்கு ஆதரவான மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலி அமைப்பினரும் செயற்பட்டு வருகின்றனர்.

விடுதலைப்புலிகளின் இணையத்தளம் என அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு இணையத்தளம் அண்மைக்காலமாக மாவை சேனாதிராசாவுக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் பொய்யான செய்திகளை திட்டமிட்டு வெளியிட்டு வருகின்றனர்.

தமிழரசுக்கட்சியிலிருந்து விக்னேஸ்வரனை நீக்குவேன் என மாவை சொன்னார் என்றும் மாவையோ எவருமோ அக்கட்சியிலிருந்து என்னை நீக்கமுடியாதென முதலமைச்சர் விக்கினேஸ்வரன் சொன்னார் என்றும் பொய்யான செய்திகளை அந்த இணையத்தளம் வெளியிட்டு வருகிறது. அவர்கள் இதனை சொல்லாமலே கற்பனையாக பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர்.

இது திட்டமிட்டு செய்யப்படும் ஒரு காரியமாகும். ரணில் விக்கிரமசிங்கா, கஜேந்திரகுமார் மற்றும் மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலி அமைப்புக்கள் மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசு உட்பட சில தரப்புக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்த வேண்டும் என செயற்பட்டு வருகின்றனர்.

இதற்கு ஆதாரமாக அண்மையில் கஜேந்திரகுமார் வெளியிட்டு வரும் கருத்துக்கள் உள்ளன. முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமது கட்சியில் சேர வேண்டும் என்று கூறியமையும் கஜேந்திரகுமாரின் அரசியல் வெறுமையை எடுத்து காட்டுகிறது. கஜேந்திரகுமாரின் கோரிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்த வேண்டும் என்ற வெளிப்படையான செயற்பாடாகும்.

மகிந்த ராசபக்ச தரப்பால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்துவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை. ஆனால் ரணில் விக்கிரமசிங்க கருணாவை பிரித்தெடுத்து விடுதலைப்புலிகள் இயக்கத்தை உடைத்தை போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு சதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்ற குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பதற்கான ஆதாரங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால் வடமாகாண முதலமைச்சருக்கு அழைப்பு அனுப்பவில்லை.

இது தமிழ் தேசிய கூட்டமைப்பை பிளவு படுத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் செய்யும் தந்திரமாகும். ரணில் விக்கிரமசிங்காவின் சூழ்ச்சிக்கு மேற்குலக நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் அமைப்பினரும் கஜேந்திரகுமார் தரப்பினரும் துணைபோன்றனர் என்பதை அவர்களால் மறுக்க முடியாது.
ரணில் தரப்பும் கஜேந்திரகுமார் போன்ற விடுதலைப்புலிகள் தரப்பும் நாடு கடந்த தமிழீழ அரசு தரப்பும்   ஒரே நிகழ்ச்சி நிரலிலேயே செயற்படுகின்றனர் என்பதை அவர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் புலப்படுத்துகின்றன

பணத்திற்காக ரணிலை தோற்கடித்த விடுதலைப்புலிகள் தற்போது மீண்டும் அதே பணத்திற்காக ரணிலுடன் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிளவு படுத்தி வடக்கு கிழக்கில் சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு வாய்ப்பை வழங்கினார்கள் என்ற உண்மை காலம் கடந்தாவது தமிழ் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

thamil thanthi 05.04.2015

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...
HDRLanka (16)

இலங்கையில் பல்சமய இல்லம் [December 10, 2017]

நல்லிணக்கம் என்ற பெயருக்கு பின் உள்ள திரைமறைவு நகர்வுகளை இட்டு ...
TNA me

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பங்கு பிரிப்பில் குழப்பம்- அவசரமாக கூடுகிறது ரெலோ. [December 4, 2017]

எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் சில சபைகளில் கூடிய ஒதுக்கீடுகளை தமக்கு ...
NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...