Tuesday, November 21st, 2017

ஜெனிவாவில் வடக்கின் குரலாக தேய்ந்து போன ஈழத்தமிழர் பிரச்சினை – இரா.துரைரத்தினம்

Published on June 19, 2016-11:15 am   ·   No Comments

Lavaneethikaஈழத்தமிழர் பிரச்சினையை வடக்கின் பிரச்சினையாக மட்டும் பார்க்கும் தென்னிலங்கை அரசின் மனப்போக்கை ஒத்ததாகவே புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர் அமைப்புக்களும் ஈழத்தமிழர் பிரச்சினை என்பது வடக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைதான் என சர்வதேசத்திற்கு காட்டி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையிலான சம்பவங்களே நடைபெற்று வருகின்றன.

ஜெனிவாவில் மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு அங்கமாக கடந்த 16ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உரிமை பேரவையின் துணைமண்டபம் ஒன்றில் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

ஜேர்மனியை தளமாகக் கொண்டியங்கும் அச்சுறுத்தலுக்கு உள்ளான மக்கள் அமைப்பினால் Society for Threatened Peoples International (STPI)   ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தின் போது ‘வடக்கின் குரல்கள் என்ற தலைப்பில் ஆவணப்படுத்தப்பட்ட காணொளி ஒன்று ஒளிபரப்பட்டிருந்தது.

அக்காணொளியில் இலங்கையில் உள்ள சட்டத்தரணி ரட்ணவேல், மற்றும் அருட்தந்தை ரவிச்சந்திரன், யாழ் ஊடக அமையத்தை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர், வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி ஆகியோரின் ஒளிப்பதிவு செய்யப்பட்ட உரைகள் ஒளிப்பரப்பபட்டன.

இவர்கள் அனைவரும் வடக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகள் பற்றியும் வடக்கிலிருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் என்றும், வடக்கில் குறிப்பாக வலிகாமத்தில் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளிலிருந்து படையினர் வெளியேற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடபகுதி மக்கள் எதிர்நோக்கும் அவலங்கள் பற்றியும் வடக்கில் ஊனமுற்ற போராளிகள் பொதுமக்கள் பற்றியே அனைவரின் உரைகளும் அமைந்திருந்தன.

இதற்கு மேலாக யாழ். ஊடக அமைப்பின் பிரதிநிதியும் வடக்கில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுவதாகவும் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றியும் இந்த படுகொலைகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

ஈழத்தமிழர் பிரச்சினை என்பது வெறுமனே வடக்கில் உள்ள மக்களின் பிரச்சினையாக சிறிலங்கா அரசாங்கம் சர்வதேசத்திற்கு காட்டி வருகிறது. சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும் இலங்கை வரும் போது வடக்கிற்கே செல்லும் போக்கு காணப்படுகிறது. சிறிலங்கா அரசாங்கம் வடக்கையும் கிழக்கையும் பிரித்தாளும் தந்திரத்துடன் இதை செய்து வருகிறது.

ஆனால் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயக கோட்பாட்டை வலியுறுத்தி வரும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும் அவர்களுடன் இணைந்து பயணிக்கும் இலங்கையில் உள்ள தமிழ் பிரமுகர்களும் சிறிலங்கா அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் கீழ் செயல்படுகிறார்களா என எண்ணத் தோன்றுகிறது. ஈழத்தமிழர் பிரச்சினை என்பது வடக்கில் உள்ள குறிப்பாக யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர் பிரச்சினை காட்ட முற்பட்டிருக்கின்றன.

வடக்கின் குரல்கள் என்ற தலைப்பில் கூட்டத்தை நடத்தியவர்களால் வடக்கு கிழக்கு மக்களின் குரல்கள் என்ற தலைப்பில் அக்கூட்டத்தை நடத்த முடியாமல் போனதேன்?

கடந்த 60வருடங்களுக்கு மேலாக வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் அரசியல் பொருளாதார குடியேற்ற விடயங்களிலும் படையினரின் அடக்கு முறைகளாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் போரினாலும் திட்டமிட்ட குடியேற்றங்களாலும் பொருளாதார ரீதியிலும் வடக்கில் உள்ள மக்கள் மட்டுமல்ல கிழக்கில் உள்ள மக்களும் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள். இப்போதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இராணுவ ஆக்கிரமிப்பு சிங்களமயமாக்கல் திட்டமிட்ட குடியேற்றங்கள் என பெருமளவு பாதிக்கப்படுவது கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தான். ஆனால் வடக்கின் குரல்கள் என கூட்டத்தை நடத்தியவர்களால் ஏன் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் குரல்களை பெற முடியாமல் போனது?

சர்வதேச மட்டத்தில் நடத்தப்படும் கூட்டங்களை கூட கிழக்கை தவிர்த்து விட்டு வடக்கின் பிரச்சினையை காட்ட முற்படுவது பிற்போக்கு தனமானதும் சுயநல போக்கு கொண்டதுமாகும் என்பதை அவர்கள் ஏன் உணரவில்லை.

வடக்கின் குரல் என்ற தலைப்பில் 5க்கு மேற்பட்டவர்களின் உரைகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதில் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளை சொல்லக்கூடிய ஒருவரின் குரலைக்கூட இவர்களால் ஒளிப்பதிவு செய்ய முடியாமல் போயிருக்கிறது. கிழக்கு மக்களின் பிரச்சினைகளை கண்டு கொள்ளாதவர்கள் வடக்கு கிழக்கு இணைந்த தமிழீழம் என்ற கோரிக்கையை முன்வைப்பதற்கு தகுதி உடையவர்களா என்ற கேள்வியும் எழுகிறது.

அண்மைக்காலமாக கிழக்கை தவிர்த்து விட்டு வடக்கு மக்களின் பிரச்சினையை முன்னிலைப்படுத்தும் போக்கு சிலரிடம் காணப்படுகிறது. இத்தகைய போக்குக்கு எதிரான கண்டனக்குரல்களும் அண்மைக்காலத்தில் எழுந்திருக்கிறது. இதை எல்லாம் கவனத்தில் எடுக்காது வடக்கின் குரல்கள் என ஈழத்தமிழர்களின் பிரச்சினையை குறுகிய கண்ணோட்டத்துடன் பார்க்கும் இவர்கள் தொடர்பான சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததாகும்.

ஈழத்தமிழர்களின் பிரச்சினையின் ஆரம்ப புள்ளியே கிழக்கில் இருந்துதான் உருவானது என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள். 1950களின் பின்னர் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களாலும் பொருளாதார ஒடுக்கு முறைகளாலும் பாதிக்கப்பட்டவர்கள் கிழக்கு மாகாண மக்கள் தான்.

யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களும் கிழக்கில் உள்ள தமிழர்கள் தான். வடக்கில் உள்ள மக்கள் அடக்குமுறைக்கு உள்ளாவது சிறிலங்கா படையினரால் மட்டும் தான். ஆனால் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் படையினரால் மட்டுமல்ல சிங்களவர்களாலும் முஸ்லீம்களாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அரசியலிலும் அபிவிருத்தியிலும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். வடக்கின் அபிவிருத்தியின் பலனை அனுபவிப்பது தமிழ் மக்கள்தான். ஆனால் கிழக்கில் அபிவிருத்தியின் பலன்கள் தமிழர்களுக்கு எட்டுவது கிடையாது. யுத்த காலத்தில் யுத்தத்தை காட்டி கிழக்கில் உள்ள தமிழர் பிரதேசங்கள் அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டிருந்தது. யுத்தம் முடிந்த பின்னரும் தொடர்ந்து தமிழர் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

கிழக்கில்யுத்தத்தால் அங்கவீனமான போராளிகள், வாழ்வாதாரத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் போராளிகள் பொதுமக்கள் என பலரின் பிரச்சினைகளை ஜெனிவா போன்ற சர்வதேச அரங்குகளில் கூட்டங்களை நடத்தும் தமிழர் தரப்புகளால் ஏன் கவனிக்கப்படுவதில்லை.

தமிழர் தாயகம் என்பதும் தமிழீழம் என்பதும் வடக்கு மட்டும் தான் என்ற சிந்தனைப்போக்குடன் செயல்படுபவர்களால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.
ஜெனிவா மனித உரிமை பேரவையில் பக்க அறைகளில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களால் இது போன்ற கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பிரதான மண்டபத்தில் இம்முறை இலங்கைத்தமிழர் விவகாரம் கவனத்தை பெறும் அளவிற்கு பேசப்படவில்லை என்றோ சொல்லலாம்.

கடந்த திங்கட்கிழமை 32ஆவது மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரின் ஆரம்ப உரையில் ஆணையாளர் அல் ஹசைன் இலங்கை தொடர்பாக மிகச்சுருக்கமாகவே குறிப்பிட்டார். UN Geneva commi

இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டும் விடயத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை அமுல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திடமிருந்து பரந்துபட்ட உபாயமார்க்கம் தேவைப்படுகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பது தொடர்பாக வாய்மொழி மூல அறிக்கையை தான் சபையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆணையாளரின் வாய்மொழி மூல அறிக்கையை தாம் எதிர்பார்த்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நீதிபதிகள் சட்டத்தரணிகள் ஆகியோரின் சுதந்திரம் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் மொனிக்கா பின்டோ அவர்களும் கடந்த புதன்கிழமை பிரதான மண்டபத்தில் உரையாற்றினார்.

இவரின் உரையிலும் இலங்கை தொடர்பாக மிகச்சுருக்கமாக குறிப்பிட்டார்.
இவர் கடந்த ஏப்ரல் 29ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்து மே 7ஆம் திகதிவரை தங்கியிருந்து பல்வேறு தரப்பினரையும் சந்தித்தனர்.

இலங்கையில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அரசாங்க அதிகாரிகள், நீதிச்சேவை ஆணைக்குழு பிரதிநிதிகள், சட்டமா அதிபர், சட்டத்தரணிகள், குடிசார் பிரதிநிதிகள், தேசிய மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் என பலரையும் சந்தித்திருந்தார்.

வடக்கு கிழக்கு வடமத்திய, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கும் இவ்விசேட அறிக்கையாளர் விஜயம் செய்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார். இவருடன் சித்திரவதை மற்றும் ஏனைய கொடூரமான மனித நேயமற்ற தண்டனைகள் பற்றிய ஐ.நா.சிறப்பு பிரதிநிதி ஜீன் ஈ மென்டிஸ் அவர்களும் சென்றிருந்தார்.

இலங்கையில் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் மற்றும் நீதிச்சேவையின் சுதந்திர செயல்பாடுகள் பற்றி ஐ.நா.மனித உரிமை பேரவையின் 33ஆவது கூட்டத்தொடரில் முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்க இருப்பதாகவும் இதன் சுருக்கமான 10 பக்க அறிக்கையை விரைவில் வெளியிட இருப்பதாகவும் ஐ.நா. விசேட அறிக்கையாளர் மொனிக்கா தெரிவித்தார்.

சித்திரவதைகள் மற்றும் கொடூரமான தண்டனைகள் பற்றிய ஐ.நா.சிறப்பு பிரதிநிதியும் இலங்கை விஜயம் தொடர்பாக அடுத்த கூட்டத்தொடரில் அறிக்கை சமர்ப்பிக்க இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இது தவிர ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அல் ஹசைன் அவர்கள் மனித உரிமை பேரவையின் 32ஆவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரை தொடர்பாக நாடுகளின் பிரதிநிதிகளும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உரையாற்றினர்

இதில் இலங்கை தொடர்பாக இரு பிரதிநிதிகள் உரையாற்றினர். பசுமைத்தாயகம் சார்பில் மரியோ புஸ்பரத்தினமும், பிரான்ஸ் பாரதி கலாசார நிலையத்தின் சார்பில் லவனிதிகா கந்தசாமியும் உரையாற்றினர்.

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்து ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போயுள்ள போதிலும் 200பேர் மட்டுமே சிறையில் இருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கிறது. மிகுதியானவர்களுக்கு என்ன நடந்தது என சிறிலங்கா அறிவிக்க வேண்டும் என்றும் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச நீதிபதிகளை கொண்ட நீதிமன்றமே விசாரணை நடத்த வேண்டும் என்றும் லவனிதிகா கந்தசாமி தெரிவித்தார்.

இலங்கையின் சார்பில் ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி கலாநிதி ரவிநாத் ஆரியசிங்க கூட்டத்தொடரில் கலந்து கொண்ட போதிலும் இதுவரை உரையாற்றவில்லை.
ஆனால் எதிர்வரும் 28ம் திகதி ஜெனிவா செல்லவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் {ஹசேனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

உள்ளக விசாரணை பொறிமுறையின் வடிவம் குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீர செய்ட் அல் ஹசேனுக்கு விளக்கமளிக்கவுள்ளார். பொறிமுறை தொடர்பான முன்னேற்றம் மற்றும் அரசாங்கம் இது தொடர்பில் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளார்.

மேலும் உள்ளக விசாரணை பொறிமுறையானது எவ்வளவு காலத்துக்கு இயங்கும் மற்றும் அதற்கான ஆணை எவ்வாறு அமையும் என்றும் அதற்கான அடிப்படை கட்டமைப்பு குறித்தும் அமைச்சர் மங்கள சமரவீர விளக்கமளிப்பார் என ஜெனிவாவில் உள்ள இலங்கை தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் 29ஆம் திகதி மனித உரிமை பேரவையில் ஆணையாளர் அல்.ஹசைன் வாய்மொழி மூல அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பதிலளித்து உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

sumanthiranஇதேவேளை கடந்த வாரம் அமெரிக்கா காங்கிரஷின் அழைப்பில் அமெரிக்கா சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கடந்த வியாழக்கிழமை ஜெனிவாற்கு வந்து மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அல்.ஹசைனை சந்தித்திருந்தார்.

இந்த சந்திப்பின் போது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் தமிழர்களின் கவலைகள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் அமெரிக்காவிற்குச் சென்றிருந்த சுமந்திரன், அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார்.

ஜெனிவாவில் வேறும் சில இராஜதந்திரிகளை சுமந்திரன் சந்தித்திருந்தார். மறுநாள் வெள்ளிக்கிழமை அவர் இலங்கைக்கு திரும்பி சென்றுள்ளார். இவரை தவிர தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இதுவரை ஜெனிவாவுக்கு வரவில்லை.

கடந்த காலங்களில் தமக்கெதிராக பிரேரணை வரப்போகிறது என அச்சத்துடனேயே சிறிலங்கா தரப்பை ஜெனிவாவில் பார்க்க முடிந்தது. ஆனால் இம்முறை எந்த பதட்டமோ அச்சமோ இன்றி தாம் இலகுவில் ஐ.நா.வை வென்று விடுவோம் என்ற இறுமாப்புடனேயே சிறிலங்கா தரப்பு காணப்படுகிறது.

தாம் நல்லிணக்க செயல்பாட்டை ஆரம்பித்திருக்கிறோம், அதற்கு கால அவகாசம் தேவை என்ற பல்லவியையே சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் 29திகதி பாடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.pusparatnam

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...