Wednesday, January 17th, 2018

குடியேற்றவாசிகளின் தொல்லையால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து போக எண்ணும் பிரித்தானியா – இரா.துரைரத்தினம்

Published on June 20, 2016-7:55 am   ·   No Comments

EU Britainஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா அங்கத்துவ நாடாக நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்கும் சர்வஜன வாக்கெடுப்பு எதிர்வரும் 23ஆம் திகதி பிரித்தானியாவில் நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் பிரித்தானிய குடியுரிமை பெற்றவர்கள் மட்டுமே வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். பிரித்தானியாவில் குடியேறியுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்களோ அல்லது அகதிகளாக குடியேறியுள்ளவர்களோ வாக்களிக்க முடியாது.

இத்தேர்தல் உலகில் பலமான சக்தியாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இருப்புக்கு பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த நாடுகளை ஒன்றிணைத்து பலமான சக்தியாக உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியாக 1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று ஐரோப்பியப் பொருளியல் சமூகம் மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம். 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் இவை ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின. இவை ஒருங்கே ஐரோப்பிய சமூகங்கள் என அழைக்கப்பட்டன.

ஐரோப்பிய சமூகம் 1973 ஆம் ஆண்டில் டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. இன்று 28 நாடுகளை அங்கத்துவ நாடுகளாக கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் விளங்குகிறது. ஐரோப்பிய கண்டத்தில் இருக்கும் நோர்வேயும் சுவிட்சர்லாந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இதுவரை இணைந்து கொள்ளவில்லை.

சுவிட்சர்லாந்து நோர்வே ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்ள வேண்டாம் என அந்நாட்டு மக்கள் வாக்களித்ததால் நோர்வேயும் சுவிட்சர்லாந்தும் இணைந்து கொள்ளவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து கொள்ளவில்லை என்றால் ஐரோப்பாவில் தனிமைப்படுத்தப்படுவீர்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தில் பலமான நாடுகளாக இருந்த ஜேர்மனி, பிரான்ஸ் ஆகியன நோர்வே சுவிட்சர்லாந்து நாடுகளை எச்சரித்திருந்தன.
1979 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றம் உருவாக்கப்பட்டு முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது.

பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணயத்தையும் நடைமுறைக்கு கொண்டு வந்தன. ஆனால் பிரித்தானியா தொடர்ந்தும் தனது சொந்த நாணயமான பவுண்சை நிரந்தரமாக பயன்படுத்தி வருகிறது. யூரோவை பிரித்தானியா ஏற்றுக்கொள்ளவில்லை.
ஐரோப்பிய கண்டத்தில் பலமான சக்தியாக கருதப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் அதன் பலம் ஒற்றுமை அனைத்தும் சிதைக்கப்பட்டு விடும் என அங்கத்துவ நாடுகளிடையே அச்சம் மேலோங்கியுள்ளது.

மறு புறத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்து நீடித்தால் பிரித்தானியாவின் பொருளாதாரமும் பலமும் குன்றிவிடும், பிரித்தானியா அழிவுப்பாதையை நோக்கித்தான் செல்ல நேரிடும் என பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாதிடுவோர் கூறுகின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டும் என்ற முடிவுக்கு வர காரணம் என்ன? ஐரோப்பிய ஒன்றியத்துடனான 43 வருட உறவை முறித்துக் கொண்டு வெளியேறும் முடிவுக்கு வந்ததேன் என ஆராய்வது முக்கியமாகும்.

அகதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவில் குடியேறுவதே இதற்கு பிரதான காரணமாக கூறப்படுகிறது. பிரித்தானியாவின் மொத்த சனத்தொகை 63.7மில்லியனாகும். இதில் 5.3மில்லியன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சாராத ஏனைய நாடுகளை சேர்ந்தவர்களாகும். 2.9மில்லியன் பேர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த குடியேற்ற வாசிகளாகும். வருடாந்தம் 2இலட்சத்து 75 ஆயிரம் பேர் பிரித்தானியாவில் குடியேறி வருகின்றனர். இவர்களில் ஒரு இலட்சத்து 25பேர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த குடியேற்ற வாசிகள். ஒரு இலட்சத்து 50ஆயிரம் பேர் ஐரோப்பிய ஒன்றியத்தை சேராத ஆசிய ஆபிரிக்க மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர்களாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டப்படி அங்கத்துவ நாடுகளில் தங்கு தடையின்றி குடியேறலாம். உதாரணமாக ஜேர்மன் பிரான்ஸ் இத்தாலி போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் பிரித்தானியாவில் குடியேறலாம்.

இதனால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து இரு வகையானவர்கள் பிரித்தானியாவில் குடியேறுகின்றனர்.

ஓன்று ஐரோப்பிய நாடுகளில் பூர்வீகமாக கொண்டவர்கள், இரண்டாவது ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறிய பின் அந்த நாடுகளில் குடியுரிமை பெற்று பிரித்தானியாவில் குடியேறுபவர்கள். ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் இவ்வாறு குடியேறி வருகின்றனர்.
உதாரணமாக பிரான்ஸ் அல்லது ஜேர்மனியில் அகதிகளாக குடியேறிய இலங்கை இந்தியா பாகிஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அந்நாடுகளின் குடியுரிமையை பெற்ற பின் அவர்கள் செய்யும் முதலாவது வேலை பிரித்தானியாவில் குடியேறுவதுதான்.

அண்மையில் பிரான்ஸில் குடியுரிமை பெற்ற தமிழர் ஒருவர் தன்னிடம் பலரும் கேட்கும் முதலாவது கேள்வி எப்போது லண்டனில் குடியேறப்போகிறாய் என்பதுதான் என கூறியிருந்தார்.

ஜேர்மன் பிரான்ஸ் நாடுகளின் பூர்வீக குடிகளை விட அந்த நாடுகளில் அகதிகளாக குடியேறி குடியுரிமை பெற்றவர்களே லண்டனில் குடியேறுவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.

அண்மைக்காலத்தில் கிரேக்கம், ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் இந்நாடுகளில் உள்ள பலரும் பிரித்தானியாவிலேயே குடியேறி வருகின்றனர்.

பிரித்தானியாவில் குடியேறும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அவர்கள் தொழில் ஒன்றை பெறும் வரை வாழ்க்கை செலவுக்கான கொடுப்பனவை பிரித்தானிய அரசு செலுத்தி வருகிறது. வருடாந்தம் 2 இலட்சத்து 75ஆயிரம் அகதிகள் பிரித்தானியாவில் குடியேறி வருவதால் பெருந்தொகையான நிதியை செலவழிக்க வேண்டிய நிலையில் அந்நாடு உள்ளது.
அண்மைக்காலத்தில் சிரியா, ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா என பல நாடுகளிலிருந்து ஐரோப்பாவை நோக்கி தினசரி ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் 2 இலட்சத்து 48ஆயிரம் பேர் ஐரோப்பாவிற்குள் வந்துள்ளனர்.

ஐரோப்பாவிற்குள் வரும் அகதிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பங்கீட்டு அடிப்படையில் அவர்களை ஏற்று குடியேற்ற வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் அங்கத்துவ நாடுகளை வலியுறுத்தி வருகிறது.

இதுவும் பிரித்தானியாவுக்கு பெரும் நெருக்கடியாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து வருடாந்தம் பெருந்தொகையானவர்கள் பிரித்தானியாவில் குடியேறிவரும் சமகாலத்தில் ஏனைய கண்டங்களிலிருந்து ஐரோப்பாவிற்குள் வரும் அகதிகளையும் ஏற்றுக்கொள்வது என்பது பிரித்தானியாவுக்கு நெருக்கடியான நிலையாகும்.

இதனாலேயே ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என்ற நெருக்கடி பிரித்தானியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

சில கட்டுப்பாடுகளை விதித்து கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் அங்கத்துவ நாடாக இருக்க வேண்டும் என பிரித்தானிய அமைச்சரவை உடன்பட்டாலும் அமைச்சரவையில் இருக்கும் சிலர் பிரித்தானியா வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டை கொண்டுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டும் என்பதை திருப்திப்படுத்தும் அளவுக்கு இணக்கப்பாடு எட்டப்படவில்லை என்று அவரது அமைச்சரவையில் உள்ள பல உறுப்பினர்களும் கருதுவதால் அவர்கள், பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து வந்து குடியேறுவோருக்கு பிரிட்டனின் சமூக நலத்திட்டங்களை மட்டுப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டாலும் குடியேற்றங்களை கட்டுப்படுத்த முடியாது என்பதே யதார்த்தமாகும்.

மறுசீரமைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதை ஆதரித்து, பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் பிரசாரம் செய்து வருகிறார்.
தொழிற்கட்சி, கிறீன் கட்சி, லிபரல் ஜனநாயக கட்சி, ஸ்கொட்டிச் தேசிய கட்சி ஆகியன ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக கூடாது என பிரசாரம் செய்து வருகின்றனர்.

டொமொக்கிறட்டிவ் ஜனநாயக கட்சி, ஐக்கிய இராச்சிய சுதந்திரக்கட்சி, உட்பட சில கட்சிகள் விலக வேண்டும் என பிரசாரம் செய்து வருகின்றன. கொன்சவேர்டிவ் கட்சி நடுநிலை வகித்து வருகிறது.

எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலக வேண்டும் என்ற முடிவையே பெரும்பாலான மக்கள் ஆதரிக்கின்றனர் என அண்மையில் வெளியான கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக வேண்டும் என 49வீதமான மக்களும், விலக கூடாது என 45வீதமான மக்களும் தெரிவித்துள்ளனர். 6வீதமான மக்கள் தெரியாது என கருத்து தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானிய தொடர்ந்தும் நீடிப்பதற்கு வாக்காளர்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில் தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

நீல் கெனெக், டொனி பிளயர், கோடன் பிரவுண்,எட் மிலிபாண்ட் மற்றும் முன்னாள் பதில் தலைவர்களான ஹரியட் ஹாமன், மற்றும் மார்கிரட் பெக்கேட்ஸ் ஆகியோர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தொழிலாளர்கள் வீட்டில் இருந்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற நேரிடும் என அவர்கள் கூறியுள்ளனர். பிரித்தானியா வெளியேறும் பட்சத்தில் தொழிலாளர்களின் உரிமைகள் தீயிட்டு கொழுத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தொழிற்கட்சிக்குள் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரித்தானியா வெளியேற வேண்டும் என பிரசாரம் செய்து வருகின்றனர்.

பெரிய கட்சிகள் பிரித்தானியா விலகக்கூடாது என பிரசாரம் செய்தாலும் அண்மைக்காலத்தில் மக்கள் மத்தியில் எழுச்சி பெற்று வரும் ஐக்கிய இராச்சிய சுதந்திர கட்சி விலக வேண்டும் என பிரசாரம் செய்து வருகிறது.

பிரித்தானிய மக்களுக்கு உலக பொருளாதாரத்தில் ஐரோப்பிய செல்வாக்கு நலிவடைவதைப் பற்றி அக்கறை கொள்வதைக் காட்டிலும் அதிகம் உள்நாட்டு பிரச்சினை பெரிதாக உள்ளது என அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய சட்டங்களால் பிரித்தானியா கட்டுப்படுத்தப்படுகிறது. அந்தச் சட்டங்கள் காரணமாக வசதி குறைந்த ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் பிரித்தானியாவில் குடியேறி உதவிகளை பெற்று வருகிறார்கள். ஐரோப்பியாவில் குடியேறும் மத்திய கிழக்கைச் சேர்ந்த அகதிகள் பிரித்தானியாவின் சனத்தொகை பரம்பலை மாற்றியமைக்கிறார்கள், பிரித்தானியா வருடாந்தம் அங்கத்துவக் கட்டணமாகச் செலுத்தும் 7.2 பில்லியன் பவுண்களுக்கு ஈடாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வருமதி திரும்பக் கிடைப்பதில்லை என அக்கட்சி வாதிட்டு வருகிறது.

தனது சொந்த கன்சர்வேட்டிவ் கட்சியில் இருந்து பொதுசன வாக்கெடுப்புக்கான அழைப்புகள் அதிகரித்தமையினாலேயே பிரதமர் டேவிட் கமரூன், தான் 2015 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் அத்தகைய ஒன்றை நடத்துவதாக வாக்குறுதி வழங்கினார்.

கிழக்கு ஐரோப்பாவில் உள்ள முன்னாள் கம்யுனிச நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அவசரமாக அங்கத்துவம் வழங்கத் தொடங்கியது முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரச்சினைகள் ஆரம்பமாகின. புதிய அங்கத்தவர்களை ஏற்றுக்கொள்வதற்கு வசதியாக கடுமையான சட்டங்கள் மாற்றியமைக்கப்பட்டன.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தன்னை இணைத்து கொள்ள வேண்டும் என துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஐரோப்பாவிற்கு வரும் அகதிகளை கட்டுப்படுத்த வேண்டுமாக இருந்தால் தன்னை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்து கொள்ள வேண்டும் என துருக்கி நிபந்தனை விதித்து வருகிறது.

ஆனால் துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதற்கு பிரித்தானியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அகதிகளை கட்டுப்படுத்துவதற்கு துருக்கியின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு அந்நாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்து கொண்டால் துருக்கியில் உள்ள பெருந்தொகையானோர் பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளில் குடியேறுவார்கள். இது மிகப்பெரிய தலையிடியாக மாறிவிடும் என பிரித்தானியா எச்சரித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் 494 மில்லியன் மொத்த சனத்தொகையில் ஜேர்மனி 80 மில்லியன் மக்கள் தொகையை கொண்டுள்ளது. பிரான்ஸ் 65 மில்லியன் மக்கள் தொகையையும் பிரித்தானியா 60 மில்லியன் மக்கள் தொகையையும் கொண்டுள்ளது.

ஐரோப்பாவின் பலமான சக்தியாக விளங்கும் ஐரோப்பிய ஒன்றியத்தை தாங்கி நிற்கும் மிகப்பெரிய தூண்களில் ஒன்றாக பிரித்தானியா விளங்கி வருகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவின் வெளியேற்றம் ஒட்டுமொத்த ஐரோப்பிய சமூகத்திற்கும் பெரும் பாதிப்பை உருவாக்கி விடும் என்பதை மறுக்க முடியாது. ஐரோப்பிய நாடுகளில் குடியுரிமை பெற்று பிரித்தானியாவில் குடியேறலாம் என்ற ஆசிய நாட்டவர்களின் கனவுகளும் தகர்க்கப்பட்டு விடும்.T.Thanthi 19.06.2016 P6
EU Britain

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...