Tuesday, November 21st, 2017

காடழிப்பு உட்பட சட்டவிரோத குற்றசாட்டிற்கு உள்ளானவரை வடமாகாண மீள்குடியேற்ற செயலணியில் நியமித்ததேன்? – இரா.துரைரத்தினம்

Published on July 31, 2016-9:14 am   ·   No Comments

Risathமகிந்த ராசபக்ச யுத்த காலத்தில் தமிழ் மக்களை அழித்தது மட்டுமன்றி யுத்தம் முடிந்த பின்னும் திட்டமிட்டு அடக்கி வடகிழக்கில் வெளிமாகாணத்தவர்களை குடியேற்றி வந்ததாலேயே தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனாவிற்கு வாக்களித்து ஆட்சி அதிகாரத்தை மாற்றி அமைத்தனர்.
ஆனால் தமிழ் மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்த மைத்திரிபால சிறிசேனா அரசும் தமிழ் மக்களுக்கு மகிந்த அரசு எதை செய்ததோ அதையே செய்து வருகிறது.

அண்மையில் வடமாகாண மீள்குடியேற்ற செயலணியின் நியமனத்தின் போது அரசாங்கம் நடந்து கொண்ட முறை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

வடமாகாணத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது உலகறிந்த உண்மை. இந்த செயலணியில் வடமாகாணசபையோ அல்லது வடமாகாணத்தில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களோ நியமிக்கப்படவில்லை.

அமைச்சர் றிசாத் பதியுதீன், கண்டி மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் காசிம், கொழும்பை சேர்ந்த தேசியபட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சுவாமிநாதன் ஆகியோரை கொண்ட மீள்குடியேற்ற செயலணி அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த செயலணியில் நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் சுவாமிநாதனுக்கு வடமாகாணம் பற்றிய அறிதல் மிகக்குறைவே. வடமாகாணத்தில் குடியேற்றப்படுபவர்கள் சிங்களவர்களா முஸ்லீம்களா தமிழர்களா என்ற அக்கறையும் அவருக்கு கிடையாது.

வடமாகாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட கட்டமைப்பான வடமாகாணசபை இயங்கி கொண்டிருக்கும் வேளையில் அச்சபையை புறக்கணித்து தமிழ் மக்கள் சந்தேகம் கொள்ளும் வகையில் அமைச்சர் றிச்சாத் பதியுதீனை உள்ளடக்கிய செயலணி நியமிக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த றிசாத் பதியுதீன் தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து வருகிறார் என்றும் ஏன் வில்பத்து வனபரிபாலனசபைக்கு சொந்தமான காடுகளை அழித்து அதில் சட்டவிரோதமான குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறார் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அமைச்சர் றிசாத் பதியுதீன் மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் சர்வாதிகாரப்போக்கில் செயல்பட்டவர் என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. மன்னார் மாவட்ட நீதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து தொடக்கம் அவரை இடமாற்றவேண்டும் என நீதிச்சேவை ஆணைக்குழு செயலாளருக்கு அழுத்தம் கொடுத்தது வரை பல குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானர். மகிந்த ராசபக்சவின் செல்லப்பிள்ளையாக திகழ்ந்தால் நீதிபதியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் வெறும் மன்னிப்பு கோரியதுடன் தண்டனையிலிருந்து தப்பிக்கொண்டார்.

இவ்வாறு நீதிபதியையே அச்சுறுத்தி சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட ஒருவர் நல்லாட்சி என்று தனக்கு நாமம் சூட்டிக்கொண்ட மைத்திரி ஆட்சியிலும் அமைச்சு பதவியை பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு எதிரான செயல்களிலேயே ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே அமைச்சர் றிசாத் பதியுதீன் மீது மீள்குடியேற்ற விடயங்களிலும் சட்டவிரோத காடு அழிப்பு விடயங்களிலும் குற்றசாட்டுக்கள் உள்ளன. இந்நிலையில் வடமாகாண தமிழ் பிரதிநிதிகளை புறக்கணித்து விட்டு வடமாகாண மீள்குடியேற்ற செயலணி நியமிக்கப்பட்டிருக்கிறது.

வில்பத்து வில்பத்து காட்டை அழித்து அமைச்சர் றிசாத் பதியுதீன் சட்டவிரோதமாக முஸ்லீகளை அங்கு குடியேற்றிய போது சிங்கள அமைப்புக்கள் கிளர்ந்தெழுந்து அதனை தடுக்க முற்பட்டன.
வில்பத்து தொடக்கம் முல்லைத்தீவு வரை காடுகளை அழித்து அங்கு திட்டமிட்டவகையில் முஸ்லீம்களை குடியேற்றி வருகிறார் என்றும் அண்மைக்காலத்தில் ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகியிருந்தன. அதேபோன்று வடக்கிலும் காடுகளை அழித்து திட்டமிட்ட குடியேற்றங்களை செய்வதற்காக வடமாகாண மீள்குடியேற்ற செயலணி தமிழர்களை புறக்கணித்து அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த திட்டமிட்ட குடியேற்றத்திற்கு சில காரணங்கள் உண்டு. வடக்கில் காடுகளை அழித்து குடியேற்றப்படுபவர்கள் வெளிமாகாணங்களை சேர்ந்த முஸ்லீம், சிங்கள குடும்பங்கள் ஆகும். தென்மாகாணங்களில் உள்ள சிங்களவர்களையும் புத்தளம் போன்ற வெளிமாகாணங்களில் உள்ள முஸ்லீம்களையும் குடியேற்றுவதன் மூலம் வடமாகாணத்தில் சிங்கள முஸ்லீம் சனத்தொகையை அதிகரிப்பதே முக்கிய நோக்கமாகும்.

ஏற்கனவே முல்லைத்தீவு முள்ளியவளையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு வெளிமாட்ட முஸ்லீகள் குடியேற்றப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு நகருக்கு அண்மித்ததும், வன்னியின் கலாசார பூமியென அடையாளப்படுத்தப்படுவதுமான முள்ளியவளையிலேயே இந்த காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

வில்பத்து போன்று அரசுக்கு சொந்தமான இயற்கைக் காட்டை, வனவள திணைக்களம், சுற்றாடல் அபிவிருத்தி திணைக்களம், காணி திணைக்களம் என எந்தவிதத் தரப்பினரிடமிருந்தும் அனுமதி பெறாது சட்டவிரோதமான முறையில் அழித்து குடியிருப்புக்களையும், பல ஏக்கர் தோட்டங்களும் அமைக்கப்பட்டிருக்கிறது.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் மன்னாரிலிருந்து முல்லைத்தீவு வரை இந்த சட்டவிரோத காடு அழிப்பும் குடியேற்றங்களும் இடம்பெறுவதை கூகிள் காணொளியில் காணமுடிகிறது என தெரிவித்திருந்தார்.

வில்பத்துக்காடழிப்புக்கும், குடியேற்றத்துக்கும் பக்கபலமாக இருந்த அமைச்சர் றிசாத் பதியுதீன் தான் தமிழர்களின் பூர்வீக கிராமமான முள்ளியவளையில் காடுகளை அழித்து முஸ்லீம்களை குடியேற்றி வருகிறார் என வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

முள்ளியவளையிலிருந்து குமுழமுனை செல்லும் வீதியில், குமாரபுரம் என்னும் பகுதியின் கிழக்கு எல்லையில் இருந்துதான் இந்தக் காடழிப்பு இடம்பெறுகின்றது. முள்ளியவளையின் எல்லைக் கிராமமாக இருந்த கற்பூரபுல்வெளி கடந்து, வன்னியன்மேடு காடு அழிக்கப்பட்டு அங்கு குடியேற்றம் நடந்து வருகிறது.

இதுவரை சுமார் 1200ஏக்கர் காடுகள் ( 3கிலோமீற்றர் தூரம் ) அழிக்கப்பட்டு புத்தளம் உட்பட வடமாகாணத்திற்கு வெளியில் உள்ள முஸ்லீம்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சிலர் நிரந்தர வீடுகளை அமைத்துக்கொண்டிருக்கிறார்கள். 25 ஏக்கர், 30 ஏக்கர் என சிலர் பிரித்து பெரியளவு தோட்டங்களையும் செய்யத் தொடங்கியிருக்கின்றனர். தென்னை, வாழை, மா என நிரந்தரப் பயிர்களும் நடுகைசெய்யப்பட்டிருக்கின்றன. கிணறுகளும், கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன.
தற்போது இந்த காடு அழிப்பு வன்னியன்மேட்டின் மறுகரையில் இருக்கின்ற உப்புமாவெளி, தங்கபுரம் கிராமங்களின் எல்லை வரை சென்றுள்ளது.

அமைச்சர் என்ற அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதிகாரிகளை மிரட்டியே இத்திட்டமிட்ட குடியேற்றங்கள் நடைபெறுகின்றன. இதை தடுக்க முற்பட்டால் இடமாற்றம் பழிவாங்கல்களை தாம் சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் அதிகாரிகளும் மௌனமாக இருக்கின்றனர்.

சட்டவிரோதமாகக் காடழிக்கும்போதும், காணி தொடர்பான சட்டங்களை மீறி காணியைக் கையகப்படுத்தும்போதும் அரச அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பதே வழமை. ஆனால் இந்த விடயத்தில் முல்லைத்தீவு கச்சேரி, கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் தம்மால் நடவடிக்கை எடுக்க முடியாதென்கின்றனர்.

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிக்குள் நடக்கும் சட்டவிரோத காணி பிடிப்பு நடவடிக்கைகளை எதிர்த்தால், அதனை உரிய இ,டங்களுக்கு அறிவித்தால் தமக்கு உடனடி இடம்மாற்றம் கிடைக்கும் என்பதை அனுபவ ரீதியாகச் சொல்கின்றனர். இந்த சட்டவிரோத காணி பிடிப்பு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்தனர் என்பதற்காக, போர் முடிந்து இதுவரையான 7 ஆண்டுகளுக்குள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றிய பிரதேச செயலாளர்கள் 6 இடம்மாற்றப்பட்டிருக்கிறார்கள். தற்போது பிரதேசசெயலாளராக இருப்பவர் அமைச்சரின் கைபொம்மை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990 ஆண்டு 1032 குடும்பங்கள் இடம்பெயர்ந்து சென்றனர் என வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான பிரஜைகளின் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2010 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றம் செய்யப்படும்போது 1032 குடும்பங்கள் சொந்த காணிகளை வைத்திருப்பதற்கான உறுதியுடன் இருந்தனர். அவர்கள் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குள் வருகின்ற கிச்சிராபுரம், நிராவிப்பிட்டி, தணியூற்று, முள்ளியவளை, வண்ணாங்குளம் பகுதிகளில் உள்ள தமது காணிகளில் குடியேறினர்.

ஆனால் மீளக்குடியேற்றம் செய்யப்படும்போது கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மட்டும் 1455 குடும்பங்கள் காணியற்றவர்களாகப் பதிவு செய்து, அவர்களுக்கு காணி வழங்குவதற்கான காணி கச்சேரியும் நடத்தப்பட்டுள்ளது. அவ்வாறு காணி கோரிய 1455 குடும்பங்களில் 902 பேருக்கு காணி வழங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

1990ல் வெளியேறிய முஸ்லீம் குடும்பங்களின் எண்ணிக்கை 1032. தற்போது கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் மட்டும் 2935 முஸ்லீம் குடும்பங்கள் தமக்கு காணி வேண்டும் என பதிவு செய்துள்ளனர். 1990ல் வெளியேறும் போது ஆயிரம் குடும்பமாக எண்ணிக்கை 25 வருடங்களில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இது தவிர தற்போது சுமார் 10ஆயிரம் குடும்பங்களை குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிமாவட்டத்தவர்களை குடியமர்த்தி வடமாகாணத்தில் தமிழ் மக்களின் சனத்தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்துடனேயே வடமாகாண மீள்குடியேற்ற செயலணி உருவாக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் தமிழர்களாக இருப்பினும், சிங்களவர்களாக இருப்பினும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நிரந்தரமாக வசிக்க இடம்மாறிப் போகும்போது சில நடைமுறைகள் அதிகாரிகளினால் கடைபிடிக்கப்படும். உதாரணமாகப் புத்தளத்திலிருந்து தமிழ் குடும்பமொன்று முல்லைத்தீவுக்கு நிரந்தரமாகக் குடியேறுவதாயின், புத்தளத்தில் அந்தக் குடும்பம் வசித்த பகுதிக்குரிய கிராம சேவையாளர் அவர்களுக்கு அங்கு எந்தவித சொத்துக்களும், காணிகளும் இல்லையெனவும், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, தொழில் உள்ளிட்டவைகளையும் உறுதிசெய்யவேண்டும். அதனைப் புத்தளத்தின் அந்தக் குடும்பம் வசித்த பிரதேசத்துக்குரிய பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தி, புத்தளம் மாவட்ட அரச அதிபரும் உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்திய பத்திரத்தை முல்லைத்தீவு அரச அதிபர் செயலகத்தில் ஒப்படைத்தாலே புத்தளத்திலிருந்து வந்த தமிழ் குடும்பத்திற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியமர்வதற்கும், அரச பதிவுகளில் இடம்பெறுவதற்கும் அனுமதியளிக்கப்படும். இதுவே இலங்கையில் இருக்கின்ற பொதுவான நடைமுறை.
ஆனால் முல்லைத்தீவு வவுனியா மன்னார் மாவட்டங்களில் குடியேற்றப்படும் முஸ்லிம் குடும்பங்கள் இந்த நடைமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ரிசாட் பதியுதீனால் உருவாக்கப்பட்ட இடம்பெயர்ந்த வடக்கு முஸ்லிம்களுக்கான செயலகம் கையெழுத்திட்டு அனுப்பும் விண்ணப்பப் படிவத்தை மீள்குடியேற விரும்பும் பகுதிகளில் உள்ள அரச அலுவலகங்களில் ஒப்படைத்தால் அதனை வைத்துக்கொண்டு பதிவினை மேற்கொள்ள வேண்டியதுதான். எந்த அதிகாரியும் விளக்கம் கேட்க முடியாது. அந்த விண்ணப்பத்தில் குடும்பத் தலைவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விடயங்ளே குறிக்கப்பட்டிருக்கும்.
இந்த நடைமுறையால் புத்தளத்தை அல்லது மாவனெல்லையை பூர்வீகமாக கொண்ட முஸ்லீம் குடும்பம் விரும்பினால் வடமாகாணத்தில் மிக இலகுவாக காணி ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும். இவ்வாறுதான் சமுர்த்தி நிவாரணம் உட்பட பல நிவாரணங்களை பாதிக்கப்படாத வெளிமாவட்ட முஸ்லீம்கள் பெற்று வருகிறார்கள் என முல்லைத்தீவில் உள்ள தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சமுர்த்திக்கும் வேற நிவாரணங்களுக்கும் புத்தளத்தில இருந்து பஸ்ஸில் வந்து செல்வார்கள். அவர்களுக்கு வீட்டு திட்டங்களும் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் பூர்வீகமாக வாழும் தமிழ் மக்களுக்கு வீட்டு திட்டங்கள் வழங்கப்படவில்லை.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களுக்குச் சொந்தமான 18 ஆயிரம் ஏக்கர் காடுகளை சட்டத்தை மீறி வெட்டி அபகரித்துள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது, சுற்றுச் சூழல் சங்கங்கள் நான்கினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் கடந்த வருடத்தில் குற்றம் சாட்டியிருந்தனர்.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள பாதுகாக்கப்பட்ட 14 காடுகளில் மரங்களை வெட்டினாரெனவும் சுற்றுச் சூழல் நீதிக்கான மையம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை, இலங்கை சுற்றுச் சூழல் காங்கிரஸ், இயற்கைக்கான பௌத்த அமைப்பு ஆகியன ரிஷாத் மீது குற்றம்சாட்டியுள்ளன.

இந்நடவடிக்கையானது சுற்றுச் சூழல் சட்டத்தை மீறி காடுகள் வெட்டப்பட்டுள்ளதையே எடுத்தியம்புவதாக, சுற்றுச் சூழல் நிதிக்கான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே கூறினார். மீள்குடியேற்றத்துக்காக மடுப்பகுதியில் கூடுதல் நிலங்களை விடுவிக்க வேண்டுமென அதிகாரிகளை அமைச்சர் ரிஷாத் நிர்ப்பந்தித்து வருகிறாரெனவும் அவர் குற்றம் சாட்டினார்.

உள்நாட்டில் இடம்பெயந்தோரை மீளக் குடியமர்த்தும் அலுவல்கள் 2012ஆம் ஆண்டில் முடிந்த பின்னரும், மீளக் குடியமர்த்தலுக்காகவென காடுகள் ஏன் அழிக்கப்படுகின்றன எனவும் விதானகே கேள்வியெழுப்பினார்.

பெரியமடு, கல்லாறு, கருங்காலிபுரம் ஆகிய இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டதாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை பணிப்பாளர் சஞ்ஜீவ சணிகர சுட்டிக்காட்டினார்.
மேலும் வில்பத்து விலங்குகள் சரணாலயத்தின் வழியே 100 கிலோமீற்றர் வீதி அமைக்கப்பட்டதாகவும் இதுவே மாங்குளத்திலும் நடந்துள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

முஸ்லீம் நாடுகளிலிருந்து மீள்குடியேற்றத்திற்காகவும் வீடமைப்பு திட்டங்களுக்காகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் உட்பட முஸ்லீம் அமைச்சர்களும் முஸ்லீம் அமைப்புக்களும் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் வடகிழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்தியா வீட்டுத்திட்டத்தை வழங்கியது. இந்த இந்திய வீட்டுத் திட்டத்திற்கான பயனாளிகள் தெரிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கடந்த வருடத்தில் வவுனியாவில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறிய கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்படாது அமைச்சர் றிசாத் பதியுதீனின் சிபாரிசில் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தது.

வவுனியா அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு வழங்கியிருந்தது. பயனாளிகள் தெரிவு முறையாக நடத்தப்பட்டு வீட்டுத்திட்டம் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் தலையீட்டினால் பயனாளிகளின் பட்டியல் திருத்தப்பட்டு பல்வேறு குழறுபடிகளை ஏற்படுத்தப்பட்டிருப்பதாக அந்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற விடயத்திலும் சட்டவிரோத காடளிப்பு விடயத்திலும் பகிரங்கமாக பொது அமைப்புக்களால் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஒருவரை வடமாகாண மீள்குடியேற்ற செயலணிக்கு நியமித்திருப்பது சட்டவிரோத காடு அழிப்புகள் அதிகரிப்பதற்கும் மோசடிகள் இடம்பெறுவதற்கும் தகுதி அற்றவர்கள் நிவாரணம் பெறுவதற்குமே வழிவகுக்கும்.

அதுவும் வடமாகாண தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்து உருவாக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்ற செயலணி வடமாகாண சனத்தொகையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வெளிமாகாண சிங்கள முஸ்லீம்களை குடியேற்றும் திட்டமிட்ட செயல் என தமிழ் மக்கள் அச்சம் கொள்வதை நிராகரிக்க முடியாது.

வடமாகாண மீள்குடியேற்ற செயலணி வடக்கில் சிங்கள முஸ்லீம் குடியேற்றங்களை குடியேற்றுவதற்காகவே உருவாக்கப்பட்டிருக்கிறது என்ற வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டிற்கு அரசாங்க தரப்பில் உள்ளவர்கள் என்ன பதிலை சொல்லப்போகிறார்கள்?

– இரா.துரைரத்தினம். T.Thanthi 31.07.2016

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

NFGG

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமை சபை அதிகாரிகளை காத்தான்குடி ரஹ்மான் சந்தித்தார். [November 21, 2017]

ஜெனிவாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் ...
Sampanthan

தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு நீங்கள் காட்டிய நல்லெண்ணம் என்ன? – மனோ கேள்வி [November 21, 2017]

சிறிலங்காவின் தேசிய கொடியை தூக்கி ஆட்டிய சம்பந்தனுக்கு அரசாங்கம் காட்டிய ...
UN Geneva

தமிழர்கள் ஜெனிவாவை நம்பி இருக்க கூடாது [November 21, 2017]

நீதிக்கான போராட்டத் தடத்தில் ஜெனீவா (ஐ.நா மனித உரிமைச்சபை) ஒரு ...
Rajathurai former MP

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியத்துடன் மேலதிகமாக 10ஆயிரம் ரூபா [November 21, 2017]

இலங்கையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக, 10 ...
Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...