Monday, September 25th, 2017

தங்கள் நிலங்களை சிங்களவர்கள் மட்டுமன்றி முஸ்லீம்களும் அபகரிக்கிறார்கள்- தமிழர்களிடம் மேலோங்கிவரும் அச்சம் – இரா.துரைரத்தினம்.

Published on August 8, 2016-1:22 pm   ·   No Comments

pillaiyarவடக்கு கிழக்கு தமிழர்களின் பூர்வீக தாயகம் என்பதை சிதைத்து அது தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல இனமக்களுக்கும் சொந்தமான பிரதேசம் என்பதை நிலைநாட்டுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்றல்ல 1956ஆம் ஆண்டு தொடக்கம் பல முனை வேலைத்திட்டங்களை செய்து வருகிறது.

கல்லோயா மதுறுஓயா போன்ற நீர்ப்பாசனத்திட்டங்கள் ஊடாக வடகிழக்கில் சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டதும் தமிழ் கிராமங்கள் சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டதும் கடந்த கால வரலாறு.

அரசாங்கத்தின் நிதிஉதவிகளுடன் கூடிய குடியேற்றத்திட்டங்களில் முன்னர் சிங்களவர்களே குடியேற்றப்பட்டனர்.

திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் என்ற தமிழ் கிராமம் தம்பலகமுவ என்ற சிங்கள கிராமமாக மாற்றப்பட்டதும் பன்குளம் மொறவேவ சிங்கள கிராமமாக மாற்றப்பட்டதும் முல்லைத்தீவு மணலாறு தமிழ் கிராமம் வெலிஓய சிங்கள கிராமமாக மாற்றப்பட்டதும் கடந்த கால வரலாறுகள்.

தம்பலகாமம் கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தி வெளியேற்றிய பின்னர் கடந்த 30வருடகாலத்தில் அக்கிராமம் இன்று முற்றாக சிங்கள கிராமமாக மாற்றப்பட்டுள்ளது.

தம்பலகாமம் கிராமத்தில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 1986ஆம் ஆண்டு யூன் மாதம் 20ஆம் திகதி விமானப்படையினரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல் பிரதானமான தாக்குதலாக கருதப்படுகிறது. இதனால் அக்கிராமத்தில் இருந்த தமிழ் மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்கு சென்றனர். இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் இருபத்தைந்துக்கும் மேற்பட்டவர்கள் பொற்கேணி அரசி ஆலையில் தஞ்சமடைந்திருந்தனர். அந்த அரிசி ஆலை அகதி முகாமுக்கு வந்த இராணுவத்தினர் அனைவரையும் கைது செய்து கொண்டு சென்றனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரையும் உள்பந்தை கிராமத்தின் சமுனைஆறு என்னுமிடத்தில் வைத்து சுட்டுக்கொன்றனர். இதனையடுத்தே தம்பலகாமம் தமிழ் கிராமத்திலிருந்து தமிழ் மக்கள் வெளியேறினர். அவர்களின் வீடுகள் காணிகளை அபகரித்து சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இன்று தம்பலகாமம் முற்றுமுழுதாக சிங்கள கிராமமாக மாற்றப்பட்டிருக்கிறது. பெயரும் தம்பலகமுவ என மாற்றப்பட்டுள்ளது.

இது போன்று திருகோணமலையில் நூற்றுக்கணக்கான தமிழ் கிராமங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம் எங்கும் பரந்து வாழ்ந்த தமிழர்கள் இன்று திருகோணமலை நகரிலும் மூதூரின் ஒருபகுதியிலும் வெருகலிலுமே வாழ்கின்றனர். குச்சவெளி, கிண்ணியா, தம்பலகமுவ ( தம்பலகாமம்) மொறவேவ ( பன்குளம் ) கோமரன்கடுவெல, கந்தளாய், பதவிசிரிபுர, சேருவெல, ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் முற்றாக சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டுள்ளது.

 முற்றுமுழுதாக சிங்கள கிராமமாக மாற்றப்பட்டிருக்கும் ஒன்று மணலாறு ஆகும். திருகோணமலை முல்லைத்தீவு மாவட்ட எல்லையில் இருக்கும் மணலாறு தென்னமரவாடி கிராமத்தில் 1984ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் திகதி சிறிலங்கா இராணுவத்தினரும் ஆயுதம் தாங்கிய சிங்களவர்களும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட 15பேர் கொல்லப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட குடும்பங்களை விரட்டி அடித்தனர். இதனை தொடர்ந்து மணலாறு கிராமத்தில் இருந்த தமிழர்கள் மீது தொடர்ச்சியாக இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இதனால் தமிழ் மக்கள் முற்றாக வெளியேறினர். இதனையடுத்து அப்பிரதேசம் அனுராதபுர மாவட்ட நிர்வாகத்துடன் இணைக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டன. மணலாறு என்ற தமிழ் கிராமம் வெலிஓயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்று முற்று முழுதாக சிங்கள பிரதேசமாக மாற்றப்பட்டிருக்கிறது.

தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு அரசாங்கத்தின் உதவியுடன் அக்கிராமங்களில் சிங்கள குடியேற்றங்கள் செய்யப்பட்டு சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டது போல வடக்கு கிழக்கில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு அரசாங்கத்தின் உதவியுடன் முஸ்லீம் குடியேற்றங்கள் செய்யப்படுவதை தமிழ் மக்கள் அச்சத்துடனேயே நோக்குகின்றனர்.

வடக்கில் எவ்வாறு காடுகள் அழிக்கப்பட்டு வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் குடியேற்றப்படுகிறார்களோ அது போன்றே கிழக்கிலும் தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களில் திட்டமிட்ட முஸ்லீம் கிராமங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

வாகரை பிரதேச செயலகப்பிரிவில் காரைமுனை என்ற தமிழ் கிராமத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு அமைச்சர் அமிர்அலியின் உதவியுடன் முஸ்லீம் மக்கள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். வடக்கில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் திட்டமிடலில் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் நடைபெறுவதை போலவே கிழக்கில் அவரின் கட்சியை சேர்ந்த அமைச்சர் அமிர்அலியின் வழிகாட்டலில் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

வாகரை பிரதேச செயலக பிரிவில் ரிதிதென்ன பகுதியில் முஸ்லீம் குடியேற்றங்கள் நடைபெற்று வந்த நிலையில் வாகரைக்கும் ரிதிதென்னக்கும் இடையில் உள்ள காட்டுப்பகுதியான காரைமுனையிலும் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த குடியேற்றங்களின் தொடர்;ச்சியாகவே ரிதிதென்ன கிராமத்தில் இருந்த வரலாற்று தொன்மை வாய்ந்த விநாயகர் ஆலயம் தீவைக்கப்பட்டுள்ளது

1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கு வாழ்ந்த தமிழ் மக்களால் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதுத. 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட கலவரங்களை தொடர்ந்து அங்கிருந்த தமிழ் மக்கள் வெளியேறினர். இதனையடுத்து ஓட்டமாவடியை சேர்ந்த முஸ்லீம்கள் அங்கு குடியேற்றப்பட்டனர்.

ஆலயத்தை சுற்றி முஸ்லீம் குடியேற்றங்கள் காணப்படுவதால் அங்கு தமிழ் மக்கள் செல்ல முடியாத சூழல் காணப்படுவதாகவும் ஆலயம் பராமரிப்பு மற்றும் பூசைகள் இன்றி காணப்படுவதாகவும் அங்கிருந்து வெளியேறிய மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையிலேயே இந்த ஆலயத்திற்கு தீவைக்கப்பட்டுள்ளது இந்த ஆலயத்திற்கு யார் தீவைத்திருப்பார்கள் என ஊகிக்க முடிந்தாலும் சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் கிடையாது
அதேபோன்றுதான் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம் கிராமங்களுக்கு அருகில் இருக்கும் தமிழ் கிராமங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான அபாயத்தில் இருக்கும் கிராமங்களில் ஒன்றுதான் ஆரையம்பதி கிராமமாகும். இந்த கிராமம் பறிபோவதை தடுக்க வேண்டுமாக இருந்தால் இந்த பகுதியின் ஆலயங்கள் பணபலம் மிக்க தமிழர்கள் முன்வர வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் பறிபோய்விட்டன. சம்மாந்துறை தமிழ்குறிச்சி, மீனோடைக்கட்டு, திராய்க்கேணி, பல கிராமங்கள் பறிபோய்விட்டன. இவ்வாறான ஒரு அபாயம் தமது கிராமத்திற்கும் வந்த வேளையில் காரைதீவு கிராமமக்கள் ஒன்று சேர்ந்து தடுத்துள்ளனர்.

காரைதீவை சுற்றி முஸ்லீம் கிராமங்களே உள்ளன. இந்நிலையில் காரைதீவு கிராமத்தின் எல்லையில் இருந்த தமிழ் மக்களின் காணிகளை பெரும்விலை கொடுத்து வாங்குவதற்கு முஸ்லீம்கள் முற்பட்டனர். இதனை தடுக்கும் முகமாக காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாகம் காரைதீவு கிராமத்தை சுற்றி எல்லையில் இருக்கும் தமிழர்களின் காணிகளை விலை கொடுத்து வாங்கி அவர்களையே குடியமர்த்தி இருக்கிறது. தற்போது காரைதீவு கிராம எல்லைக்காணிகளை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. இதனால் காரைதீவு கிராமம் காப்பாற்றப்பட்டிருக்கிறது.

இலங்கையில் தமிழ் கிராமங்களுக்கு முன்மாதிரியாக காரைதீவு கிராமம் விளங்குகிறது. இந்த வரலாற்று பெருமை மிக்க சம்பவம் பற்றி தனியாக எழுத வேண்டும்.

அதேபோன்று ஆரையம்பதி கிராம எல்லைகளை ஆலய நிர்வாகங்களோ அல்லது ஆரையம்பதி கிராம அமைப்புக்களோ வாங்கி வெளியார் ஆக்கிரமிக்காமல் தடுக்காவிட்டால் எ எதிர்காலத்தில் ஆரையம்பதி என்றொரு தமிழ் கிராமம் இருந்தது என்ற வரலாறே அழிந்து போய்விடும்.

காத்தான்குடியை சுற்றியுள்ள தமிழ் கிராமங்கள் பறிபோய் வருகிறது. மட்டக்களப்பு கல்லடி பூநொச்சிமுனை என்பது பரம்பரிய தமிழ் கிராமங்களாகும். ஆனால் இன்று மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா இசைநடன கல்லூரி, இராமகிருஷ்ண மிசன் போன்ற நிறுவனங்கள் இருக்கும் பின்பகுதி கடற்கரை ஓரமாக திட்டமிட்ட காணி அபகரிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனின் பின்பகுதி தற்போது முஸ்லீம் பிரதேசமாக மாறிவிட்டது.

அதேபோன்று ஆரையம்பதி கடற்கரை பகுதி முற்றாக அபகரிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆரையம்பதிக்கு கடற்கரை கிடையாது. அங்கிருந்த நரசிம்மர் ஆலயத்தை சுற்றி முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டுள்ளனர். ஆரையம்பதியின் மேற்கே காத்தான்குடியும், கிழக்கே பாலமுனையும் உள்ளன. ஆரையம்பதி கடற்கரை அண்டிய காணிகளில் முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டு தற்போது பாலமுனையும் காத்தான்குடியும் இணைக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி தமிழ் கிராமம் கடற்கரை பிரதேசத்தை பறிகொடுத்து விட்டது. ஆரையம்பதி கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் கடற்கரையிலேயே நடைபெற்று வந்தது. அந்த ஆலய தீர்த்தோற்சவம் கூட எதிர்காலத்தில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஆரையம்பதியின் எல்லையில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான காணி ஒன்று முஸ்லீம்களுக்கு விற்கப்பட்டது தொடர்பாக அக்கிராமத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக கடந்த 3ஆம் திகதி புதன்கிழமை மாலை ஆரையம்பதி கந்தசுவாமி ஆலய முன்றலில் கூட்டம் ஒன்றும் நடைபெற்றது.

தமிழர்களின் காணிகளை அபகரிக்கும் பின்னணியில் முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

 ஆரையம்பதியில் தமிழர்களுக்கு சொந்தமான 6ஏக்கர் காணியும் பாலமுனை சந்தியில் இருக்கும் 4 ஏக்கர் காணியும் முஸ்லீம்களுக்கு சொந்தமான நிறுவனம் ஒன்றிற்கு விற்கப்பட்டுள்ளது. அரபுநாடுகளிலிருந்து பெருமளவு நிதியை பெற்று தமிழ் கிராமங்களில் காணிகள் கொள்வனவு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றங்களால் தமிழர்களின் குடிசன பரம்பலில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் சமகாலத்தில் குறிப்பாக 1990களின் பின்னர் கிழக்கில் உள்ள தமிழ் கிராமங்கள் முஸ்லீம்களால் பறிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வந்த பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டை வெட்டுவான், செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், அட்டைப்பள்ளம், சவளக்கடை, திராய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை வாழைச்சேனை, பூநொச்சிமுனை, ஆரையம்பதி, செங்கலடி ஏறாவூர் வாகரை என தமிழ் கிராமங்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு அக்கிராமங்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது.

கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது அமைச்சர் ஹிஸ்புல்லா தான் எவ்வாறு தமிழர்களின் காணிகளை எடுத்து முஸ்லீம்களுக்கு வழங்கினேன், முஸ்லீம் பிரதேசமாக மாற்றினேன் என்பதை தெளிவாக குறிப்பிட்டார். மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் என்ற பலத்தை வைத்துக்கொண்டு வாழைச்சேனை காளிஅம்மன் ஆலயத்தின் காணியை சுவீகரித்து அதில் ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்கான சந்தையும் இறைச்சிக்கடையும் அமைத்ததாகவும் அதற்கான நிதியை தானே ஓதுக்கியதாகும் குறிப்பிட்டிருந்தார். அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் காணப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் 1990களின் பின் ஏராளமான சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு அதில் இறைச்சிகடைகளும் குடியிருப்புக்களும் அமைக்கப்பட்டிருக்கிறது. சைவ ஆலயங்கள் இருந்த சுவடுகளே அழிக்கப்பட்டு விட்டது.

அம்பாறை மாவட்டத்தில் மீனோடைக்கட்டு என்ற பாரம்பரிய தமிழ் கிராமம் முற்றாக பறிபோய் விட்டது. கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் மீனோடைக்கட்டு தமிழ் வித்தியாலயம் என காணப்பட்ட பாடசாலை இன்று முஸ்லீம் பாடசாலையாக காணப்படுகிறது. மீனோடைக்கட்டு பிள்ளையார் கோவில் முற்றாக இடிக்கப்பட்டு அந்த இடத்தில் இறைச்சிக்கடையுடன் கூடிய வியாபார நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஓட்டமாவடி பிள்ளையார் கோவில், கரைவாகு காளிகோவில், முற்றாக அழிக்கப்பட்டு இறைச்சிக்கடைகள் கட்டப்பட்டிருக்கிறது. சம்மாந்துறை காளிகோவில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோவில், என கிழக்கு மாகாணத்தில் இருந்த பல சைவக்கோவில்கள் இருந்த இடம்தெரியாமல் இடிக்கப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு கலவரத்தில் தென்னிலங்கையில் சில சைவ ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டன. ( பெரும்பாலான ஆலயங்களுக்கு சேதங்கள் ஏற்படவில்லை ) ஆனால் ஆலயங்கள் முற்றாக அழிக்கப்படவில்லை, அவை இடித்தளிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்படவும் இல்லை,
ஆனால் கிழக்கில் 1990களின் பின் பல சைவ ஆலயங்கள் முற்றாக அழிக்கப்பட்டு அவை பள்ளிவாசல்களாகவும் சந்தைகளாகவும் குடியிருப்புக்களாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.
தமிழர்களையும் முஸ்லீம்களையும் நிரந்தரமாக பிரித்து பகையை வளர்ப்பதற்காக அரசாங்கமும் இந்த ஆக்கிரமிப்புக்களுக்கு உறுதுணையாக நிற்கிறது.

வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லீம் இனங்களுக்கிடையில் ஒற்றுமையும் நல்லிணக்கவும் புரிந்துணர்வும் ஏற்படும் பட்டசத்திலேயே நிரந்தர அமைதியுடன் கூடிய தீர்வை எட்டமுடியும். தங்கள் நிலங்களை சிங்களவர்கள் மட்டுமல்ல முஸ்லீம்களும் ஆக்கிரமிக்கிறார்கள், தங்கள் கலாசார சமய மற்றும் வாழ்விடங்கள் பறிக்கப்படுகிறது என்ற அச்சம் மேலோங்கினால் வடகிழக்கில் தமிழர்கள் மட்டுமல்ல முஸ்லீம்களும் நிம்மதியாக வாழமுடியாது.pillaiyar

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...