Monday, September 25th, 2017

வடமாகாணசபையில் சிவாஜியால் பகடைக்காயாக்கப்பட்ட அனந்தி சசிதரன்.

Published on October 29, 2016-2:00 pm   ·   No Comments

north-1வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டன் ஹரோவில் தமிழர்கள் மத்தியில் உரையாற்றுகையில் வடமாகாணசபையில் தான் முதலமைச்சராக பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்ற இவ்வேளையில் மாகாணசபையில் எதிர்நோக்கி வரும் நெருக்கடிகள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையில் இருக்கும் மாகாணசபைகளில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் தான் விவாதங்கள் நடைபெறும். குழப்பங்கள் நடைபெறும். ஆனால் வடமாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் தான் பிரச்சினையும் குழப்பங்களும் ஏற்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தார்.

வடமாகாணசபையை எதிர்க்கட்சி குழப்புவதில்லை, ஆளும் கட்சியை சேர்ந்த ஒரு சிலர்தான் குழப்புகிறார்கள் என சுட்டிக்காட்டினார். வடமாகாணசபையை குழப்ப வேண்டும் என கங்கணம் கட்டி நிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் என அவர் சுட்டிக்கட்டியது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தவிசாளர் சிவஞானம் ஆகியோருக்கு ஆதரவாக செயல்படும் உறுப்பினர்களைத்தான் என்பதை அவரின் உரையில் தெளிவாக தெரிந்தது.

லண்டனில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் பெரும்பகுதி தான் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் மோதல்கள் குழப்பங்கள் முரண்பாடுகளை வெளிப்படுத்துவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடாக தனது தலைமையில் ஆரம்பித்திருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் செயல்பாடுகள் பற்றியதாகவும் இருந்தது.
இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் லண்டனில் உள்ள விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்கள் என்றாலும் தங்களை அவர்கள் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை, லண்டனில் உள்ள தமிழ் பொதுமக்கள் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக அறிவித்திருந்தார்கள்.

விடுதலைப்புலிகள் அமைப்பை சேர்ந்தவர்களும் அதன் ஆதரவாளர்களும் நிறைந்திருந்த அந்த மண்டபத்தில் விடுதலைப்புலிகளின் போக்கை கண்டித்த முதலமைச்சர் விக்னேஸ்வரனின் துணிச்சல் பாராட்டத்தக்கதாகும்.

எமது ஆயுததாரிகள் அதிகாரபலத்துடன் இருந்த வேளையிலும் மக்கள் வாய்திறக்க முடியாத நிலையிலேயே இருந்தனர். இயக்கங்கள் கூறியதே சட்டமாக இருந்தது, ஆகவே வன்முறையற்ற வாக்குவாதம் தவிர்ந்த சூழலை நாங்கள் உருவாக்குவோம்’ என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய போது மண்டபத்தில் இருந்தவர்கள் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உரைக்கு அடிக்கடி கைத்தட்டி ஆரவாரம் செய்து கொண்டிருந்தவர்கள் ஆயுததாரிகள் பற்றி கூறிய போது மௌனமாக இருந்தனர்.

விக்னேஸ்வரன் விடுதலைப்புலிகள் பற்றி விமர்சனம் செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் இன்று புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் இல்லை.
2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மறைந்து விட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் இலங்கையில் தமது அரசியலை முன்னெடுக்க ஒருவரை தேடிய போதுதான் 2010ல் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிடைத்தார். ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளால் தீவிரமாக ஆதரிக்கப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் 2010 மற்றும் 2015 ஆகிய இரண்டு பொதுத்தேர்தல்களிலும் தோல்வியடைந்ததும் அவருக்கு மாற்றீடாக ஒரு தலைமையை தேட ஆரம்பித்தனர். அந்த தேடலின் விளைவாகவே தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டதும் அதன் தலைவராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதும் அனைவரும் அறிந்த விடயம்.

இப்போது புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு இருக்கும் ஒரேஒரு கொழுகொம்பு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான். அதனால் தான் விடுதலைப்புலிகள் பற்றி விமர்சனங்களை முன்வைத்த போதும் அவர்கள் மௌனமாக இருந்தனர்.

இந்நிலையில் தான் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் லண்டன் உரையில் குறிப்பிட்டது போன்று வடமாகாணசபையை ஆளும் கட்சியினரே குழப்பி வருகின்றனர், அவர்களே தனக்கு நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர் என்பதை உறுதிப்படுத்துவது போல கடந்த வியாழக்கிழமை வடமாகாணசபையில் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

பிரித்தானியாவுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வந்திருக்கும் இவ்வேளையில் அவர் இல்லாத நிலையில் அவசர அவசரமாக வடமாகாணசபையின் பிரதி தவிசாளர் தெரிவு இடம்பெற்றிருக்கிறது.

வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்டனி ஜெகனாதன் கடந்த மாதம் முதலாம் திகதி மரணமடைந்தார். இந்த நிலையில் அவருடைய இடத்திற்கு புதிதாக ஒருவர் நியமிக்கும் விடயத்திலேயே வடமாகாணசபையின் ஆளும் கட்சிக்குள் அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்குள் மோதல்கள் ஏற்பட்டிருந்தது.

தற்போது பதில் முதலமைச்சராக இருக்கும் வடமாகாண கல்வி கலாசார அமைச்சர் குருகுலராசாவுக்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் லண்டனிலிருந்து அவசரமாக கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

‘தற்போது தான் வெளிநாட்டில் இருப்பதாகவும், தான் வரும்வரை பிரதி அவைத்தலைவரை நியமிக்க வேண்டாம், நான் வந்தவுடன் தெரிவு செய்கின்றேன்’ எனக் அந்த கடிதத்தில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

அந்த கடிதத்தை பதில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் சபை தவிசாளர் சி.வி.கே.சிவஞானத்திடம் கையளித்திருந்தார். பிரதி தவிசாளரை எப்போது தெரிவு செய்வது என தீர்மானிக்கும் அதிகாரம் தனக்கே உண்டு என்றும் இதில் முதலமைச்சர் தலையிட முடியாது என்றும் சிவஞானம் முதலமைச்சரின் கடிதத்திற்கு பதிலளித்திருந்தார். இதனால் முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாட்டிற்கு வருவதற்கு முதல் இந்த தெரிவை நடத்தி முடிக்க வேண்டும் என தவிசாளர் சிவஞானம் இந்நடவடிக்கைகயை எடுத்திருந்தார்.

வடமாகாணசபையில் முதலமைச்சர் கூறியது போல ஆளும் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் தான் பிளவும் மோதலும் உள்ளது போல வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் தவிசாளர் சி.வி.கே.சிவஞானத்திற்கும் இடையிலும் அதிகார போட்டி நிலவிவருகிறது.

வடமாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரன் இருந்தாலும் வடமாகாணசபையின் தவிசாளர் என்ற வகையில் சபையில் அதிகாரம் மிக்கவர்தானே என்பதை தவிசாளர் சிவஞானம் சபை உறுப்பினர்களுக்கும் முதலமைச்சருக்கும் காட்டி வந்திருக்கிறார்.

அதன் ஒரு கட்டமாகவே வடமாகாண சபையில் பிரதி தவிசாளர் தெரிவும் இடம்பெற்றிருக்கிறது.
வடமாகாணசபை கடந்த வியாழக்கிழமை கூடிய உடன் பிரதி தவிசாளரை தெரிவு செய்ய வேண்டும் என தவிசாளர் சிவஞானம் அறிவித்த உடன் அதனை நிறுத்தி வைக்குமாறு சிலரும் இல்லை உடனடியாக தெரிவு செய்ய வேண்டும் என்று சிலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

எனினும் தெரிவு உடனடியாக இடம்பெற வேண்டும் என தவிசாளர் உறுதியாக இருந்ததால் இருவரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன.

ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த கமலேஸ்வரன், இவரை வடமாகாணசபை உறுப்பினர் இம்மானுவேல் அனோல்ட்ட பிரேரித்திருந்தார்.   மற்றவர் யாழ்.மாவட்ட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன்,

அனந்தி சசிதரனின் பெயரை வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் பிரேரித்து அவருக்கு ஆதரவு தேடி மாகாணசபை உறுப்பினர்கள் மத்தியில் பிரசாரம் செய்தார்.

வடமாகாணசபையில் ஆளும் கட்சிக்குள் இரு பிரிவுகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு ஆதரவான தமிழரசுக்கட்சியை சேர்ந்த தரப்பு. அனோல்ட், சயந்தன், தவிசாளர் சிவஞானம் இந்த தரப்பில் உள்ளனர்.

மற்றைய தரப்பு வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவான தரப்பு. இதில் சிவாஜிலிங்கம், அனந்தி, உட்பட சிலர் உள்ளனர்.

இந்நிலையில் மாகாணசபையில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இரண்டு தரப்பாக பிரிந்து நின்று மோதிக்கொண்டனர்.

முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து மாகாணசபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சி.சிவமோகன் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருந்தார். அவரின் இடத்திற்கு கமலேஸ்வரன் தெரிவாகியிருந்தார்.

வடமாகாணசபை அமைக்கப்பட்ட போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் ஒரு அமைச்சு பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருந்தது. ஆனால் மன்னார், வவுனியா, கிளிநொச்சி, , யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட டெனீஸ்வரன், சத்தியலிங்கம், குருகுலராசா, ஐங்கரநேசன் ஆகியோர் அமைச்சர்களாக தெரிவு செய்யப்பட்டனர். முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தெரிவான எவருக்கும் அமைச்சு பதவி வழங்கப்படவில்லை, வடமாகாணத்தில் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதால் அம்மாவட்டத்தை புனரமைப்பு செய்ய அம்மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒருவருக்கு மாகாண அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.

ஆனால் அமைச்சு பதவி வழங்கப்படவில்லை. இந்நிலையிலேயே பிரதி தவிசாளர் பதவி அன்ரனி ஜெகநாதனுக்கு வழங்கப்பட்டது. பிரதி தவிசாளர் பதவி என்பது எந்த அதிகாரமும் அற்ற பதவியாகும். அதனால் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு எந்த நன்மையும் கிடைத்ததில்லை.

இருந்த போதிலும் முன்னர் பிரதிதவிசாளராக இருந்தவர் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு பதிலாக நியமிக்கப்படுபவரும் முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது

இவை எல்லாவற்றிற்கும் அப்பால் அங்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தரப்பா நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தவிசாளர் சிவஞானம் ஆகியோரைக்கொண்ட தமிழரசுக்கட்சி தரப்பா என்ற மோதலே மேலோங்கியிருந்தது

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாடு திரும்பி பின் இத்தெரிவை நடத்தினால் முதலமைச்சரின் தரப்பு வெற்றிபெற்றுவிடும் என்ற அச்சம் எதிர்தரப்பு மத்தியில் காணப்பட்டது
இந்நிலையில் கமலேஸ்வரன் 18 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அனந்தி சசிதரன் 13 வாக்குகளை மட்டும் பெற்று தோல்வியடைந்தார்.

லண்டனிலிருந்து இருந்து கொண்டு எழுத்துமூலம் முதலமைச்சர் அறிவுறுத்தல் விடுத்த போதிலும் அது மீறப்பட்டு தெரிவு நடந்தேறியது,

முன்னர் வடமாகாணசபை பிரதி தவிசாளராக இருந்த அன்ரனி ஜெனநாதன் கடந்த மூன்று வருடகாலத்தில் அரைநாள் மட்டுமே தான் தவிசாளர் ஆசனத்தில் இருந்து சபையை நடத்த சந்தர்ப்பம் கிடைத்ததாக இறப்பதற்கு முன்னர் வெளிப்படையாக கூறி கவலைப்பட்டிருந்தார்.

வடமாகாணசபை இதுவரை 64 அமர்வுகளை நடத்தியிருக்கிறது. இதில் அரைநாள் மட்டுமே சபையை நடத்த பிரதி தவிசாளருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கிறது.
அன்ரனி ஜெயநாதன் தவிசாளர் ஆசனத்தில் அமர்ந்து சபையை நடத்துவதற்கு இடமளிக்காத வகையிலேயே தவிசாளர் சிவஞானம் கடந்த மூன்று வருடகாலத்தில் செயல்பட்டிருக்கிறார்.

வடமாகாணசபையில் அண்மைக்காலமாக முதல்வர் அணியா அல்லது தவிசாளர் அணியா என்ற மோதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

பொருளாதார அபிவிருத்தி மையம் மாங்குளத்திலா, ஓமந்தையிலா என்ற ஏட்டிக்கு போட்டியில் முதல்வர் அணி முன்னிலை பெற்றதால், பிரதி தவிசாளர் பதவியும் தமிழ் மக்கள் பேரவை ஆதரவாளர் வசம் போகலாம் இருக்க வேண்டும் என்பதில் சிவஞானம் அணியினர் உறுதியாக இருந்தனர்.

38 உறுப்பினர்கள் கொண்ட வடமாகாணசபையில் அன்றைய தினம் 32பேர் மட்டுமே சமூகமளித்திருந்தனர். ஈ.பி.டி.பியை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் தவராசா கூட்டத்திற்கு சமூகமளிக்கவில்லை. ஈ.பி.டி.பி உறுப்பினர் தவநாதன் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அது உள்கட்சி மோதல், ஆளும் கட்சியினரே மோதிக்கொள்கிறார்கள் இதில் நாம் ஏன் தலையிட வேண்டும் என அவர் ஒதுக்கிக்கொண்டார்.

வடமாகாணசபையின் ஆளும் கட்சியினரின் அமளிதுமளியில் கதாநாயகனாக நின்றவர் சிவாஜிலிங்கம் தான். முன்னர் ஒருமுறை செங்கோலை பறித்து உடைத்ததால் அந்த செங்கோலை திருத்த வடமாகாணசபைக்கு பெரும் செலவு ஏற்பட்டிருந்தது . கடந்த வியாழக்கிழமை நடந்த இந்த கலவரத்திலும் சிவாஸிலிங்கம் செங்கோலை பறிப்பதற்கு ஓடிய போது அங்கு நின்ற காவலர்களால் தடுக்கப்பட்டார்.

உண்மையில் இந்த போட்டிகள், கயிறு இழுத்தல்களில் பகடக்காயாக்கப்பட்டவர் அனந்தி சசிதரன் தான்.

வடமாகாண முதலமைச்சர் சபையிலும் நாட்டிலும் இல்லாததால் இழுபறி என்றாலும் ஒரே நாளில் பிரதி தவிசாளர் தெரிவு இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. முதல்வர் சபையில் இருந்திருந்தால் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையா மாங்குளமா என இழுபறிப்படுவது போல, இரணைமடு தண்ணீரா, வடமராட்சி கிழக்கு தண்ணீரா, என திண்டாடுவது போல பிரதி தவிசாளர் தெரிவும் இழுபறியாக சென்றிருக்கும்.

வடமாகாண பிரதி தவிசாளர் தெரிவில் நடந்த அமளி துமளிகளை பார்த்துக்கொண்டிருந்த வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் பின்வருமாறு கூறினார்.

அதிகாரமே இல்லாத வடமாகாணசபை பிரதி தவிசாளர் பதவிக்கு ஒருவரை தெரிவு செய்வதற்கே ஆளும் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இத்தனை மோதல் என்றால் தமிழீழத்தையே இவர்கள் கையில் கொடுத்து ஆளச்சொன்னால் எப்படி இருக்கும்?
( இரா.துரைரத்தினம் )p06

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...