Thursday, October 19th, 2017

1986ஆம் ஆண்டின் பின் பரம எதிரிகளாக செயல்பட்ட விடுதலைப்புலிகளை சந்தித்த ரெலோ தலைவர்.

Published on December 11, 2016-12:18 pm   ·   No Comments

selvanதமிழ் தேசிய கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 06

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும், தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என செயற்பட்ட சிவராம் விடுதலைப்புலிகளை சந்திக்கும் போதெல்லாம் இது தொடர்பாக வலியுறுத்தி வந்தார்.

இந்த வேளையில் சிவராமின் அரசியல் வாழ்க்கை பற்றியும் பிற்காலத்தில் அவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் உள்ள உறவு பற்றி கூறுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
சிவராம் ஆரம்பகாலத்தில் ஒரு இலக்கியவாதியாகவே அறிமுகமானார்.

1981ஆம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பில் அப்போது பிரபலமாக இருந்த இலக்கிய அமைப்பான வாசகர் வட்டத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகவே நான் முதலில் சிவராமை சந்தித்தேன்.
மட்டக்களப்பில் மட்டுமல்ல வடகிழக்கில் இலக்கிய புரட்சி ஒன்றை ஆரோக்கியமான இலக்கிய விமர்சனங்களை செய்யும் அமைப்பான மட்டக்களப்பு வாசகர் வட்டத்தை மறைந்த ஆனந்தனும் சிவராமுமே உருவாக்கினர். ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் புகழ்ச்சிதான் விமர்சனம் என்ற நிலையை மாற்றி சரியான திறனாய்வை முன்வைத்து இலக்கிய புரட்சி ஒன்றை செய்த அமைப்பாக வாசகர் வட்டத்தை வழிநடத்திய பெருமை சிவராமையும் ஆனந்தனையுமே சாரும். அந்த இருவரும் இன்று எம்மிடம் இல்லை. இருவருமே கொடிய துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகிவிட்டனர்.
சிவராமை பலரும் அரசியல் ஆய்வாளராகத்தான் அறிந்திருக்கிறார்கள். அவருக்கு அரசியலை விட தமிழ் இலக்கியத்திலும் ஆழமான பார்வை இருந்து வந்தது. மட்டக்களப்பு மக்கள் அவரின் இலக்கிய பேச்சை கேட்பதற்கென்று பெருந்தொகையானோர் கூடுவதுண்டு.

மட்டக்களப்பில் மிகப்பிரபல்யம் வாய்ந்த தர்மரத்தினம் வன்னியனார் குடும்பத்தில் பிறந்த சிவராம் சிறுவயதில் மிகுந்த செல்வசெழிப்பில் வாழ்ந்தவர். அவரது பாட்டனார் தர்மரத்தினம் வன்னியனார் செனட்டராக இருந்தவர். ஆரையம்பதியிலிருந்து அக்கரைப்பற்று ஒலுவில் என பல பிரதேசங்களில் அவர்களுக்கு இருந்த காணி பூமியை கணக்கு பார்த்தால் இன்னும் பத்து தலைமுறைக்கு காணும் என சொல்வார்கள். ஆனால் அவற்றை எல்லாம் துறந்து ஒரு ஒட்டாண்டியாக வாழ்ந்தவர்தான் சிவராம்.

சிவராமின் பாட்டனாருக்கு படுவான்கரை பகுதியிலும் காணி இருந்ததை ஒரு சந்தர்ப்பத்தில் அறிந்து கொண்டேன். 2000ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் நாள் தரவையில் நடந்த மாவீரர் நாளுக்கு செல்வதற்காக அம்பிலாந்துறை துறையூடாக நானும் சிவராமும், மனோ இராசசிங்கமும், ( தினக்கதிர் பத்திரிகை நிறுவன உரிமையாளர்) கலாநிதி சி.ராகுராமும் ( தற்போது கிழக்கு பல்கலைக்கழக திருமலை வளாக தொடர்பாடல் கற்கைகள் துறையின் தலைவராக இருப்பவர் ) சென்றோம். அப்போது துறையடி சோதனை சாவடியில் இருந்த விசேட அதிரடிப்படையினர் சிவராமை தடுத்து விசாரித்தனர். சிவராமின் அடையாள அட்டையில் வதிவிடம் கொழும்பு என இருந்தது.

தனக்கு படுவான்கரையில் வயல் இருப்பதாகவும் அதனை பார்ப்பதற்காக செல்வதாகவும் சிவராம் கூறினார். அப்படியானால் அங்கு வயல் இருப்பதற்கான ஆதாரத்தை பட்டிப்பளை பிரதேச செயலாளரிடமிருந்து பெற்று வர வேண்டும் என்ற நிபந்தனையுடன் படுவான்கரைக்கு செல்ல அனுமதித்தனர்.

கொக்கட்டிச்சோலைக்கு சென்று அங்கிருந்து தரவையில் நடந்த மாவீரர் நாள் நிகழ்வுக்கு சென்றோம். அன்றிரவு நாங்கள் நால்வரும் குடும்பிமலை அடிவாரத்தில் அடர்ந்த காட்டின் மத்தியில் இருந்த விடுதலைப்புலிகளின் பண்ணையிலேயே தங்கினோம். அந்த முகாமுக்கு விசு பொறுப்பாக இருந்தார்.

மறுநாள் காலையில் பண்ணையில் ஆட்டிறச்சி கறியுடன் சாப்பாடு. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சிவராம் சொன்னான். நல்லா சாப்பிடுங்கடா, எஸ்.ரி.எவ் அடிக்கும் போது எல்.ரி.ரி.ஈ என்ன சாப்பாடு தந்தாங்கள் என கேட்டு கேட்டு அடிப்பாங்கள், அப்ப எல்லாம் வெளியில வரும் என சொல்லி சிரித்தான்.

அடுத்த நாள் பட்டிப்பளை பிரதேச செயலாளராக இருந்த உதயகுமாரிடம் சிவராமுக்கு பட்டிப்பளையில் காணி இருந்ததற்கான ஆதார கடிதம் வாங்கி கொண்டே திரும்பினோம். சிவராமுக்கு படுவான்கரைப்பகுதியிலும் காணிகள் இருந்ததை அப்போது தான் நாம் அறிந்து கொண்டோம்.

1982ஆம் ஆண்டளவில் சிவராம் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி சென்ற பின் விடுமுறை நாட்களில் மட்டும் மட்டக்களப்பில் காணமுடிந்தது.  சிவராம் ஆரம்பகாலத்தில் இலக்கியதுறையிலும் தமிழ் இலக்கணத்தை கற்பதிலும் ஆர்வம் காட்டி வந்தார். இதற்காக மகாவித்துவான் எவ்.எக்ஸ்.சி. நடராசாவுடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொண்டார். தற்கால இலக்கியங்களை மட்டமல்ல பழம்தமிழ் இலக்கியங்களை கற்பதில் கூட மிகுந்த ஆர்வம் காட்டிவந்தார். வடமொழியை சேர்க்காது தமிழை எழுத வேண்டும் என்பதில் கண்டிப்பான போக்கை கொண்டவர் சிவராம்.

1983களின் பின் சிவராமுக்கு அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. பின்னர் சிவராம் புளொட் இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக கேள்விப்பட்டேன்.  அப்போது நல்ல இலக்கிய விமர்சகனை இழந்து விட்டோமே என்ற ஆதங்கம் என்மனதில் எழுந்தது.sivaram-1

அதன் பின் சுமார் ஆறு வருடங்கள் கழித்து யாழ்ப்பாணத்தில் சிவராமை சந்தித்தேன். அப்போது நான் முரசொலி பத்திரிகையின் உதவி ஆசிரியராக பணியாற்றினேன். 1989ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்ற வேளையில் முரசொலி அலுவலகத்திற்கு வந்த சிவராம் தான் யாழ்ப்பாணத்தில் புளொட் அரசியல் பிரிவின் சார்பில் தலைமை வேட்பாளராக போட்டியிடுவதாக கூறினார். அப்போது சிவராம் புளொட் இயக்கத்தின் அரசியல் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளராக இருந்தார்.

சிவராமின் தந்தை வழி மட்டக்களப்பாக இருந்தாலும் அவரின் தாய் வழி பருத்தித்துறையை சேர்ந்தவர்களாகும். பருத்தித்துறை கொட்டடி அம்மன் கோவில் தமது தாய்வழி பாட்டனாரின் கோவில் என சொல்லிக்கொள்வார்.

1989ஆம் ஆண்டு தேர்தலின் பின் சிவராம் புளொட் அரசியல் பிரிவிலிருந்து விலகிவிட்டதாக கேள்விப்பட்டேன். மீண்டும் 1991ல் மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள வித்துவான் எவ்.எக்ஸ்.சி.நடராசா அவர்களின் வீட்டில் சிவராமை எதிர்பாராத விதமாக சந்தித்தேன் எஸ்ஆராக அல்ல தராக்கியாக….

ஒரு இலக்கியகாரனாக…. போராளியாக…. அரசியல்வாதியாக…. நான் சந்தித்த சிவராமை இப்போது ஊடகத்துறை நண்பனாக பார்த்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சி.
அதன் பின்னர் நாம் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம்.

1994ஆம் ஆண்டு கிளாலி ஊடாக பி.பி.சி தமிழ் சேவையின் நிகழ்ச்சி பொறுப்பாளராக இருந்த ஆனந்தி சூரியப்பிரகாசம் சிவராமை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து சென்றார். யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர்களை சந்தித்தார். அது தான் சிவராமுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான முதல் சந்திப்பாகும். யாழ்ப்பாணத்திற்கு சென்ற போது கொஞ்சம் பயத்துடன் தான் சென்றேன். ஆனந்தி அக்கா பயப்படாத வா என அழைத்ததால் தான் சென்றேன். அங்கு சென்ற பின்னர் விடுதலைப்புலிகள் பற்றி தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டதாக சிவராம் கூறினார்.

யாழ்ப்பாணத்திற்கு சென்று விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களை சந்தித்து விட்டு மட்டக்களப்புக்கு வந்த சிவராமில் ஒரு உற்சாகம் தெரிந்தது. ஆயுதப்போராட்டத்தின் மூலமே தமிழர்களுக்கான சுதந்திர நாட்டை மீட்க முடியும் என்ற நம்பிக்கையோடு புளொட் இயக்கத்திற்கு சென்று ஆயுதப்பயிற்சி பெற்ற போதும் பின்னர் அந்த இயக்கத்தில் நம்பிக்கை இழந்து அதிலிருந்து விலகி ஊடகவியலாளராக பயணித்துக்கொண்டிருந்த சிவராம் மீண்டும் ஆயுதப்போராட்டத்தின் நம்பிக்கை கொண்டவராக காணப்பட்டார்.

அதுவரை காலமும் ஐலண்ட் பத்திரிகையில் எழுதி வந்த சிவராம் பின்னர் அப்பத்திரிகையில் எழுதுவதை நிறுத்தி சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கும் மிற்வீக் மிரருக்கும் எழுத ஆரம்பித்திருந்தார்.
அதன் பின் ஐலண்ட் பத்திரிகையில் எழுதிய அவரின் கட்டுரைகளுக்கும் பின்னர் சண்டே ரைம்ஸ், மிக்வீக்மிரர் பத்திரிகைளில் எழுதிய கட்டுரைகளில் மாறுதல்கள் தெரிந்தன.

அப்போது மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த விடிவானம் வாரப்பத்திரிகைகளின் ஆசிரியராக நான் இருந்தபோது சிவராம் கொழும்பிலிருந்து மட்டக்களப்பிற்கு வந்தால் அப்பத்திரிகை அலுவலகத்திலேயே அதிக நேரத்தை கழிப்பார். மட்டக்களப்புக்கு வரும் ஒவ்வொரு தடவையும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான படுவான்கரைக்கு சிவராமும் நானும் செல்வது வழக்கமாகும். அரசியல் பிரிவை சேர்ந்த கரிகாலன், விசு, துரை மற்றும் புலனாய்வு பிரிவை சேர்ந்த சங்கர், அற்புதன் என அனைவருடனும் நெருங்கிய தொடர்பை பேணி வந்தார். சில வேளைகளில் நாங்கள் படுவான்கரைக்கு செல்லும் போது இராணுவத்தினரிடம் மாட்டிக்கொண்டதும் உண்டு.  அக்காலப்பகுதியில் தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணம் சிவராமிடம் இருக்கவில்லை.

1994ஆம் ஆண்டுகளின் பின் மட்டக்களப்பில் ஊடகத்துறையில் ஒரு மாற்றம் ஏற்பட்ட காலம் என்றும் சொல்லலாம். அந்த மாற்றத்திற்கு காரணமானவர்களில் சிவராமும் ஒருவர். ஊடகவியலாளர்களுக்கான ஒரு அமைப்பாக மட்டும் செயற்பட்டு வந்த கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை மட்டக்களப்பின் அரசியல் சமூக விடயங்கள் பக்கம் திசை திருப்பியவர் சிவராமாகும்.

ஆயுதப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளை மக்களை அரசியல்மயப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும் அடிக்கடி கூறிவந்தார். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தொடர்ச்சியாக அரசியல் கருத்தரங்குகளை நடத்துவதற்கு உற்சாகம் கொடுத்து வந்தார். மட்டக்களப்பில் வாசகர் வட்டம் எவ்வாறு இலக்கிய மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்ததோ அதேபோல சிவராமின் பங்களிப்புடன் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் குறிப்பிட்ட அளவு அரசியல் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதில் முக்கிய பங்குவகித்தது எனலாம்.

1998ஆம் ஆண்டில் வீரகேசரி ஊடகவியலாளர்களான மாணிக்கவாசகம், ஸ்ரீகஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபோது அவர்களின் விடுதலைக்காக சட்டநடவடிக்கை எடுப்பது உட்பட அவர்களின் விடுதலைக்காக தமிழ் ஊடகவியலாளர்கள் தேசிய மட்டத்தில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் உணரப்பட்டது. அதனைத்தொடர்ந்து இலங்கை முழுவதிலும் உள்ள தமிழ் ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் உருவாக்கப்பட்டது. இந்த உருவாக்கத்தில் கூட சிவராமே முக்கியமாக இருந்தார்.

தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்று இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வந்த சிவராம் 2000ஆம் ஆண்டில் நவக்கிரகங்களாக இருந்த தமிழ் கட்சிகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி தமிழ் தேசியக்கூட்டமைப்பை உருவாக்குவதில் சிவராமே மூலகர்த்தாவாக இருந்தார். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் அவருக்கு பக்கபலமாக இருந்து பயணித்தாலும் கடினமான அந்த பயணத்தின் சாரதியாக இருந்தவர் சிவராம் தான்.

ஆங்கில ஊடகத்துறையின் மூலமே சிவராம் தன்னை ஊடகவியலாளராக அறிமுகப்படுத்திக்கொண்டு சுமார் பல ஆண்டுகளாக ஆங்கிலப்பத்திரிகையில் எழுதி வந்தாலும் பிற்காலத்தில் ஆங்கிலப்பத்திரிகைகளில் எழுதுவதை நிறுத்திக்கொண்டார்.

எவ்வளவுதான் தமிழ் மக்களின் பக்க நியாயத்தன்மைகளை தென்னிலங்கை சிங்களவர்களுக்கு சொல்லி வந்தாலும் அவர்கள் தமிழ் மக்களின் நியாயத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற சலிப்பின் காரணமாகவே தான் ஆங்கிலப்பத்திரிகைகளுக்கு எழுதுவதை நிறுத்தி விட்டு தனது மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ் பத்திரிகைகளில் எழுத தொடங்கியிருப்பதாக இறுதிக்காலத்தில் சிவராம் சொல்லியிருந்தார்.

மட்டக்களப்பில் மக்களை அரசியல்மயப்படுத்த வேண்டும் அவர்கள் மத்தியில் தமது விடுதலைபற்றிய சரியான பார்வை இருக்க வேண்டும் என்பதில் சிவராம் உறுதியாக இருந்தார்.
இந்த விடயத்தில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் வாளைச்சேனை முதல் கல்லாறுவரை 2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் கருத்தரங்களை நடத்தி வந்தது. இந்த கருத்தரங்குகளில் என்னுடன் நடேசன், தவராசா, ஜெயானந்தமூர்த்தி, தம்பையா, கெனடி, செல்வேந்திரன், ஆகியோருடன் அனைத்து கருத்தரங்களிலும் சிவராமும் கலந்து கொண்டார்.

பகுத்தறிவு கொள்கையில் ஈடுபாடு கொண்டிருந்த சிவராம் எந்த ஒரு இனமும் விடுதலை பெற வேண்டுமாக இருந்தால் அந்த இனம் அரசியல் தெளிவுள்ள சமூகமாக உறுதியான அரசியல் தலைமையை கொண்டதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொண்டவராக திகழ்ந்தார்.

தென் கரோலினா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மார்க் விதாகர் கூறியிருப்பது போல சிவராமிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் பல உண்டு.

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் சமகாலத்தில் விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய தமிழ் இயக்கங்களுக்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளையும் களையும் நோக்குடன் ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்க தலைவர்களை அழைத்து சென்று விடுதலைப்புலிகளின் தலைவர்களை சந்திக்க வைப்பதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டன.

இக்காலப்பகுதியில் வன்னிப்பகுதியில் கடும் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அத்துடன் சமாதான ஒப்பந்தத்திற்கு முதல் சண்டை நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில் சிவராமுக்கோ அல்லது மட்டக்களப்பில் இருந்த ஊடகவியலாளருக்கோ வன்னிக்கு செல்வதற்கோ அல்லது தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கோ முடியாமல் இருந்தது. விடுதலைப்புலிகளுடனான எமது அனைத்து தொடர்புகளும் மட்டக்களப்பு படுவான்கரைப்பகுதியில் இருந்த விடுதலைப்புலிகளுடனேயே இருந்தது.

விடுதலைப்புலிகளுடனான சந்திப்புக்கள் அதற்கான நாட்கள் பற்றி கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் பொருளாளராக இருந்த அரியநேத்திரன் ( பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ) ஊடாகவே மேற்கொள்வது வழக்கம்.

அரியநேத்திரன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான அம்பிலாந்துறையை சேர்ந்தவர். இதனால் அவர் படுவான்கரைக்கு சென்று வருவது வழமை. இதனால் சில வேளைகளில் அறிக்கைகள் செய்திகள் தகவல்கள் கூட அரியநேத்திரனிடமே அரசியல் பிரிவினர் கொடுத்து விடுவது வழக்கமாகும்.

முதலில் ரெலோ தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த செல்வம் அடைக்கலநாதனை அழைத்து செல்வதென முடிவு செய்யப்பட்டது.
1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி ரெலோவின் தலைவர் சிறிசபாரத்தினம் விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் ரெலோவும் விடுதலைப்புலிகளும் பரம எதிரிகளாக செயல்பட்டனர். ஒருவரை ஒருவர் அழிப்பதில் கங்கணம் கட்டி செயல்பட்டு வந்தனர். 1987ஆம் ஆண்டின் பின்னர் இந்திய இராணுவத்துடன் இணைந்து செயல்பட்ட ரெலோ இயக்கம் இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினருடன் நெருக்கமாக செயற்பட்டனர். விடுதலைப்புலிகளை அழிப்பதில் இராணுவத்திற்கு உதவி வந்தனர்.

1998ஆம் ஆண்டுகளின் பின்னர் ரெலோ சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்குவதை குறைத்து கொண்டனர். ஆனால் மட்டக்களப்பில் குறிப்பாக ஆரையம்பதியில் விசேட அதிரடிப்படையினருடன் ரெலோ இயக்கம் சேர்ந்து இயங்கி வந்தது.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதில்லை என்ற முடிவுக்கு ரெலோ வந்த பின்னர் 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் பின் விடுதலைப்புலிகளை ரெலோ இயக்க தலைவர் சந்தித்த முக்கிய நிகழ்வு 2001ஆம் ஆண்டு இடம்பெற்றது.

கீரியும் பாம்புமாக இருந்த விடுதலைப்புலிகளும் ரெலோவும் 15 ஆண்டுகளின் பின்னர் முதல் தடவையாக மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் சந்தித்து கொண்டனர்.
அச்சந்திப்பு பற்றி அடுத்த வாரம் பார்ப்போம் ( தொடரும் )

-இரா.துரைரத்தினம்.0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...