Thursday, October 19th, 2017

முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டதை கண்டித்து சபதம் எடுத்த தலைவர் சிவசிதம்பரம். – த.தே. கூட்டமைப்பின் தோற்றம் அங்கம் 12.

Published on January 24, 2017-10:41 am   ·   No Comments

TNA and Ltte 01நான்கு தமிழ் கட்சிகளும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஓரு குடையின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் பின்னர் முதல் தடவையாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமை பீடத்தை சந்திப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2002 ஏப்ரல் 11ஆம் திகதி வியாழக்கிழமை மாலை கிளிநொச்சியை சென்றடைந்தனர். மறுநாள் வெள்ளிக்கிழமையே சந்திப்பு என அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

தேசியப்பட்டியலில் தெரிவு செய்யப்பட்டிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம் இந்த சந்திப்பிற்கு செல்லவில்லை.

2002 ஏப்ரல் வெள்ளிக்கிழமை மாலை கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. விடுதலைப்புலிகளின் சார்பில் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறை பொறுப்பாளர் எஸ்.பி.தமிழ்செல்வன், புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டுஅம்மான், மட்டக்களப்பு அம்பாறை இராணுவ பொறுப்பாளர் கருணா, மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கரிகாலன், திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் ரூபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆர்.சம்பந்தன், வி.ஆனந்தசங்கரி, ஜோசப் பரராசசிங்கம், மாவை சேனாதிராசா, என்.ரவிராஜ், அ.சந்திரநேரு, அப்பாப்பிள்ளை விநாயகமூர்த்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், எம்.கே.சிவாஜிலிங்கம், ராஜ குகனேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோருடன் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் கலந்து கொண்டார். TNA and Ltte 01

போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாம் பிரவேசித்திருப்பது பற்றியும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது, மற்றும் முன்மொழியப்பட்ட இடைக்கால நிர்வாகம் மற்றும் அதன் இறுதி வடிவம் பற்றியும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு விளக்கி கூறினார்.

தமிழீழ விடுதலைப்புலிகளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஒன்றுபட்ட வேலைத்திட்டத்தின் கீழ் செயல்படுவது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் முஸ்லீம்களையும் இணைத்துக்கொண்டு தீர்வு திட்டத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அன்றிரவு இரவு விருந்தளித்தார்.

மறுநாள் சனிக்கிழமை காலை கிளிநொச்சியிலிருந்து புறப்பட்டு கொழும்பு வந்தடைந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழ விடுதலைப்புலிகளும் ஒன்றுபட்டு வேலை செய்ய வேண்டியதன் தேவை ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்த சந்திப்பின் பின் கொழும்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சந்தித்து கிளிநொச்சி சந்திப்பு எப்படி இருந்தது என கேட்டேன். அவர் சுருக்கமாக சொன்னார். அவர்கள் சில விடயங்களை சொன்னார்கள், நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம், சில உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இனிமேல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகளுக்கான உத்தரவுகள் கிளிநொச்சியிலிருந்துதான் வரும் என சொல்லி சிரித்தார்.

எங்களை கேட்காமல் எந்த முடிவுகளையும் எடுக்க கூடாது என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

இந்த சந்திப்பை தொடர்ந்து அடுத்த வாரம் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்தியகுழு கூட்டம் கொழும்பில் அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் சில உத்தரவுகள் குறித்து ஆனந்தசங்கரி அக் கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது நடவடிக்கைகளுக்கான முடிவுகளை தானே எடுக்க வேண்டும், கட்சியின் தனித்துவத்தையும் சுயாதிபத்தியத்தையும் இழக்க முடியாது என ஆனந்தசங்கரி கூறினார். ஆனந்தசங்கரியின் இக்கருத்தை தமிழர் விடுதலைக் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர்கள் பலரும் ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் அதனை வெளிப்படையாக கூற தயக்கம் காட்டினர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளை வெள்ளிக்கிழமை மாலை சந்தித்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் மறுநாள் சனிக்கிழமை காலை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான குழுவினரை சந்தித்தனர்.

கிளிநொச்சியில் நடைபெற்ற இச்சந்திப்பில் விடுதலைப்புலிகளின் தரப்பில் தலைவர் வே.பிரபாகரன், அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்செல்வன், மற்றும் கருணா, பதுமன் ஆகியோரும் கலந்து கொண்டனர்;.
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்களான நூர்டீன் மன்சூர், ஏ.எல்.எம். அதாவுல்லா, பிரதியமைச்சர்களான பசீர் சேகு தாவுத், முகமட் அப்துல் காதர், சிரேஷ்ட உறுப்பினர் மசூர் மௌலானா, உதுமாலெப்பை ஆகியோர் கலந்து கொண்டனர். prapakaran and hakkem

1990ல் வடபகுதியிலிருந்து முஸ்லீம்களின் வெளியேற்றம், கிழக்கில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள், தமிழ் மக்கள் மீது முஸ்லீம் ஊர்காவல் படையினரின் தாக்குதல்கள் என தமிழ் முஸ்லீம் உறவு சீர்குலைந்திருந்த சூழலில் 12 வருடங்களுக்கு பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சிக்கும் இடையில் சிநேகபூர்வமான சந்திப்பு இடம்பெற்றது.

முஸ்லீம் பிரதிநிதிகள் கிளிநொச்சியில் தங்கியிருந்த நாட்களில் அவர்களுக்கு சமய மார்க்கப்படி உணவு சமைப்பதற்கு என முஸ்லீம் சமயற்காரரர்களும் வன்னிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டது.

வடகிழக்கில் முஸ்லீம் சமூகத்தின் நலன்களை பேணுவது, தமிழ் முஸ்லீம் இனங்களுக்கிடையில் இனநல்லுறவை வளர்ப்பது தொடர்பாகவும், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் அனைவரும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்வது தொடர்பாகவும் இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அன்றைய தினம் மாலை கொழும்பு திரும்பிய ரவூப் ஹக்கீம் இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் வடக்கு கிழக்கில் தமிழ் முஸ்லீம் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு இது வழிசமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் அனைவரும் மீள்குடியேற்றம் செய்வதற்கு இந்த ஒப்பந்தத்தில் இணக்கம் காணப்பட்டிருப்பது முன்னேற்றகரமான விடயம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த பேச்சுக்களின் விளைவாக, முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை கண்டறியப்பட்டுள்ளது, ஹக்கீம் என பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் குழுவில் சென்ற பிரதியமைச்சர் பஷீர் சேகு தாவுத் தனது முன்னைய தலைவர் ஈரோஸ் பாலகுமார், நீதித்துறை பொறுப்பாளர் பரா ஆகியோரை தனிப்பட்ட ரீதியில் சந்தித்தார்.

இதன் பின்னர் பஷீர் சேகு தாவுத் அவர்களை மட்டக்களப்பில் ஒரு முறை சந்தித்த போது கிளிநொச்சி பயணம் எப்படி என கேட்டேன். விடுதலைப்புலிகளின் தலைமையை சந்தித்ததற்கு அப்பால் நான் தனிப்பட்ட ரீதியில் பாலகுமார் அண்ணனை சந்தித்தேன். அது எனக்கு மிகுந்த சந்தோசம் என்றார்.

ஈரோஸ் இயக்கத்தில் சேர்ந்து தமிழீழ விடுதலைக்காக ஆயுதப்போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்ட பஷீர் சேகுதாவுத் ஈரோஸ் இயக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் இணைந்த பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியில் இணைந்து கொண்டார். நான் நேசிக்கும் தலைவர்கள் பாலகுமாரன், அஷ்ரப், இருவரும்தான். அவர்கள் எனது இரு கண்கள் என பஷீர் சேகு தாவுத் சொல்லிக்கொள்வார். அதே நிலைப்பாட்டில் தான் பஷீர் சேகு தாவுத் இப்போதும் இருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு 2002 மே 11ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்றது.

இந்த சந்திப்புக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உபதலைவர் ஆனந்தசங்கரி செல்லவில்லை.
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆர்.சம்பந்தன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

போர் நிறுத்த உடன்படிக்கையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் தமிழ்செல்வன் வலியுறுத்தினார். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குமாறும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கினால் தான் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என்றும் தமிழ்செல்வம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளிடம் வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து மே 24ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும், வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் முன்வைத்தனர்.

விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து சாதகமாக தாம் பரீசீலிப்பதாகவும், விடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சுக்கள் ஆரம்பமான பின் அதில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துவது குறித்து பேசி முடிவெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு உறுதி அளித்தார்.

2002 யூன் 5ஆம் திகதி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு துக்க தினமாக அமைந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் எம்.சிவசிதம்பரம் அவர்கள் கொழும்பில் காலமானார்.

இலங்கையில் ஆளுமைமிக்க தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த சிவசிதம்பரம் அவர்கள் 1989ஆம் ஆண்டு யூலை 13ஆம் திகதி கொழும்பில் வைத்து விடுதலைப்புலிகளின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த பின்னர் மிகவும் நொந்த நிலையிலேயே காணப்பட்டார்.

1956ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் பருத்தித்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டதன் மூலம் அவர் அரசியலுக்கு பிரவேசித்தார். அதன் பின்னர் 1958ஆம் ஆண்டு ஜி.ஜி.பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியில் இணைந்து கொண்டார். 1960ஆம் ஆண்டு உடுப்பிட்டி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி பாராளுமன்றம் சென்றார். அவர் 1968ஆம் ஆண்டு தொடக்கம் 1970ஆம் ஆண்டுவரை பிரதி சபாநாயகராகவும் பதவி வகித்தார். 1972ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டார்.

1977ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அகில இலங்கை ரீதியில் ஆகக் கூடிய வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர் என்ற வரலாற்று பெருமையையும் அவர் பெற்றுக்கொண்டார். 1978ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூடடணியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.

1989 யூலை 13ஆம் திகதி கொழும்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் தங்கியிருந்த வீட்டிற்கு அவர்களுடன் பேசச்சென்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், முன்னாள் யாழ். நாடாளுமன்ற உறுப்பினர் வி.யோகேஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். சிவசிதம்பரம் அவர்கள் நெஞ்சில் குண்டுபாய்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

அதன் பின்னர் 1990ஆம் ஆண்டு வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட போது அதனை கண்டித்த சிவசிதம்பரம் அவர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் வரை தான் யாழ்ப்பாணம் செல்லப் போவதில்லை என சபதம் எடுத்தார்.

அந்த சபதத்தை தமிழ் மக்களால் நேசிக்கப்பட்ட பெருந்தலைவர்களில் ஒருவரான சிவசிதம்பரம் அவர்கள் தான் இறக்கும் வரை கடைப்பிடித்தார்.
( தொடரும் ) – இரா.துரைரத்தினம்.0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...