Friday, September 22nd, 2017

தமிழீழம் கிடைத்தால் கிழக்கை சேர்ந்தவர் ஜனாதிபதியாக முடியுமா? கிழக்கு மாணவனின் கேள்வி. த. தே. கூட்டமைப்பின் தோற்றம் -அங்கம் 16.

Published on February 20, 2017-11:45 am   ·   No Comments

EUSL Main Entrence 4கிழக்கு பல்கலைக்கழகம் பொங்குதமிழ் போன்ற எழுச்சிகளுக்கு களம் அமைத்து கொடுத்தது மட்டுமன்றி மட்டக்களப்பின் பாரம்பரிய கலாசாரம் மற்றும் கலைவடிவங்களுக்கு மீண்டும் புத்துயிர் கொடுக்கும் களமாகவும் விளங்கி வருகிறது.   மட்டக்களப்பு மக்களின் வாழ்வியலுடன் அது துன்பமோ மகிழ்ச்சியோ இரண்டற கலந்த வரலாறு கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உண்டு.

1990ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பித்த வேளையில் மட்டக்களப்பு தொடக்கம் வாழைச்சேனை வரையான சுமார் 60ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் தங்கள் உயிர்களை காப்பாற்றிக் கொள்ள அடைக்கலம் புகுந்த இடமும் இந்த கிழக்கு பல்கலைக்கழகம் தான்.

கிழக்கு பல்கலைக்கழகம் 60ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை கொண்ட அகதிமுகாமாக மாறியது. அந்த மக்களுக்கு உணவு தொடக்கம் அனைத்து வசதிகளையும் வழங்குவதில் பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ரி.ஜெயசிங்கம், ( தற்போது உபவேந்தராக இருப்பவர்) வைத்தியகலாநிதி சிவலிங்கம், ஆகியோர் இரவு பகலாக உழைத்தனர்.

இராணுவம் அந்த முகாமை சுற்றிவளைத்த போது அந்த மக்களுக்கு பாதுகாப்பு அரணாக நின்றவர்கள் இந்த மூவரும் தான். 05.09.1990 அன்று கொம்மாதுறை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரும், மட்டக்களப்பு நகரில் இருந்த முனாஸ் தலைமையிலான இராணுவ புலனாய்வு பிரிவினரும், மோகன் தலைமையிலான புளொட் இயக்கத்தினரும், மஜீத் தலைமையிலான முஸ்லீம் ஊர்காவல் படையினரும் அகதி முகாமை சுற்றிவளைத்தனர்.

அங்கிருந்த 60ஆயிரம் மக்களில் 15க்கும் 45வயதிற்கும் இடைப்பட்ட இளம் ஆண்கள் 158பேரை தேர்ந்தெடுத்து பஸ்களில் ஏற்றிச் சென்று நாவலடி இராணுவ முகாமில் வைத்து படுகொலை செய்தனர்.
கிழக்கு பல்கலைக்கழக அகதி முகாமில் தாங்கள் யாரையும் கைது செய்யவில்லை என இராணுவத்தினர் மறுத்திருந்தனர். ஆனால் அகதி முகாமிற்கு வந்து அப்பாவி பொதுமக்களை கைது செய்து சென்றது யார் என்ற விபரங்களை ஆதாரங்களுடன் பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி த.ஜெயசிங்கம், கலாநிதி சிவலிங்கம் ஆகியோர் 1994ல் நடைபெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தனர்.   கல்வி நடவடிக்கைகளில் மட்டுமன்றி மட்டக்களப்பின் சமூக நலனிலும் கிழக்கு பல்கலைக்கழகம் அக்கறையுடன் செயற்பட்டது.

1981ஆம் ஆண்டு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலய கட்டிடத்தில் மிகக்குறைந்த வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியை கிழக்கு பல்கலைக்கழகம் என்ற அந்தஸ்த்திற்கு உயர்த்துவதற்கு உழைத்தவர்களில் பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ரவீந்திரநாத், கலாநிதி ஜெயசிங்கம், முக்கியமானவர்களாகும்.jeyasingam-a-1

ஓற்றுமையாக இருந்த கிழக்கு பல்கலைக்கழகம் என்ற தேன் கூட்டில் 1995ஆம் ஆண்டு நடந்த உபவேந்தர் தெரிவுடன் பிரதேசவாதம் என்ற முதலாவது கல் வீசப்பட்டது. ஆரம்பத்தில் சிறிது சிறிதாக புகைந்து கொண்டிருந்த பிரதேசவாத தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

பேராசிரியர் சந்தானம் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து மட்டக்களப்பு பல்கலைக்கழக பேரவை மூவரின் பெயர்களை சிபார்சு செய்திருந்தது. பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ரவீந்திரநாத், கலாநிதி ரகுராகவன் ஆகியோரின் பெயர்களை கிழக்கு பல்கலைக்கழக பேரவை சிபார்சு செய்திருந்தது.

மட்டக்களப்பை சேர்ந்த பேராசிரியர் இராஜேந்திரம் அவர்களை உபவேந்தராக நியமிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் மட்டக்களப்பை சேர்ந்த கலாநிதி சித்திரலேகா மௌனகுரு, கலாநிதி யுவி தங்கராசா, கலாநிதி திருச்செல்வம் உட்பட சிலர் இருந்தனர்.

ஆனால் கிழக்கு பல்கலைக்கழக பேரவையின் முடிவு இவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பல்கலைக்கழக பேரவையால் சிபார்சு செய்யப்பட்டவர்கள் மூவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள், மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரை கூட இந்த பட்டியலில் சேர்க்கவில்லை என இவர்கள் போர்க்கொடி தூக்கினர்.

பல்கலைக்கழக பேரவையின் இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும் என கிழக்கு பல்கலைக்கழக மாணவர் பேரவை பெரிய அளவில் வெகுஜன போராட்டத்தை ஆரம்பித்திருந்தது. இந்த பிரச்சினை கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் மட்டுமல்லாது மட்டக்களப்பு எங்கும் பரவியது.

மட்டக்களப்பில் உள்ள பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களை பகிஷ்கரித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு எங்கும் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இந்த துண்டுபிரசுரங்கள் சிலவற்றில் படுமோசமான பிரதேசவாதமும் காணப்பட்டது.

கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்கமும் இந்த பிரச்சினையால் இரண்டாக பிளவு பட்டிருந்தது. கிழக்கு பல்கலைக்கழக ஆசிரிய சங்க தலைவர் செந்தில்மோகன் பல்கலைக்கழக பேரவையின் தீர்மானத்திற்கு ஆதரவாக செயற்பட்டார். ஆனால் செயலாளர் கெனடி விஜயரத்தினம் பேரவை தனது முடிவை மீளப்பெற்று தகுதியானவர்களை உள்வாங்க வேண்டும் என கோரியிருந்தார்.
மாணவர்களின் போராட்டங்களால் கிழக்கு பல்கலைக்கழகம் இயங்கமுடியாத நிலைக்கு சென்றிருந்தது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்ற பிரதேசவாதம் தலைதூக்கி இருந்தது.

மட்டக்களப்பு பொது அமைப்புக்களும் உபவேந்தர் தெரிவில் மட்டக்களப்பை சேர்ந்த பேராசிரியர் இராசேந்திரம் சேர்க்கப்படாமை குறித்து கண்டங்களை தெரிவித்திருந்தன.
கிழக்கு பல்கலைக்கழக பிரச்சினையாக அன்றி மட்டக்களப்பின் முக்கிய பிரச்சினை ஒன்றாக இது மாறியிருந்தது.

இந்நிலையில் யுவி தங்கராசா, திருச்செல்வம், மகேஸ்வரன் போன்ற விரிவுரையாளர்கள் நேரடியாக விடுதலைப்புலிகளிடம் இந்த பிரச்சினையை எடுத்து சென்றனர்.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கரிகாலன் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு வந்து கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்த கூட்டத்தில் பேராசிரியர் மனோ சபாரத்தினம் அவர்களை கடும் தொனியில் எச்சரித்தார். கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்படும் குழப்பங்களுக்கு நீங்கள் தான் காரணம் என அறிகிறோம். இனிமேலும் அவ்வாறு நடந்தால் நாம் கடுமையான நடவடிக்கை எடுப்போம் என எச்சரித்திருந்தார்.  கிழக்கு பல்கலைக்கழக விடயங்களில் விடுதலைப்புலிகள் நேரடியாக தலையிடும் சம்பவங்கள் தீவிரமடைந்தன.

கிழக்கு பல்கலைக்கழக பேரவை ஏற்கனவே எடுத்த தீர்மானத்தை இரத்து செய்து மீண்டும் மூவரின் பெயரை அறிவித்திருந்தது. பேராசிரியர் இராசேந்திரம், பேராசிரியர் மனோ சபாரத்தினம், கலாநிதி ரவீந்திரநாத் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உபவேந்தராக பேராசிரியர் இராசேந்திரம் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார்.

Prof._Rajenrdamமட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் முதல் தடவையாக கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உபவேந்தராக வருகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்புடன் பேராசிரியர் இராசேந்திரம் பதவியை ஏற்றுக்கொண்டார். ஆனால் மட்டக்களப்பு மக்களும், கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் எதிர்பார்த்தது போல அவரின் சேவை அமைந்ததா என்பது விமர்சனத்திற்கு உரியது.  ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பிரதேசவாதம் என்ற நச்சுவிதை தாராளமாக வளர்ந்தது

கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட இந்த மோதல், யாழ்ப்பாண மட்டக்களப்பு பிரதேச மோதல் அல்ல. யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மேட்டுக்குடிகளுக்கும், மட்டக்களப்பில் உள்ள தமிழ் மேட்டுக்குடிகளுக்கும் இடையில் பதவி மற்றும் சுகபோகங்களுக்கான மோதலே யாழ்ப்பாண மட்டக்களப்பு பிரதேச மோதலாக சித்தரிக்கப்பட்டது

உண்மையில் மட்டக்களப்பில் உள்ள பாமரமக்கள் இராசேந்திரத்திற்கு உபவேந்தர் பதவி வழங்க வேண்டும் என்றோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள பாமர மக்கள் மனோ சபாரத்தினத்திற்கு உபவேந்தர் பதவி வழங்க வேண்டும் என்றோ போராடவில்லை. இரு தரப்பிலும் உள்ள மேட்டுக்குடிகளே தங்கள் பதவி சுகபோகங்களுக்காக பிரதேசவாத நச்சுவிதையை பல்கலைக்கழகத்தில் விதைத்தனர்.

பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல அதுவரை காலமும் பிரதேசவாத சிந்தனைகள் எதுவும் இன்றி தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள்ளும் பிளவுகளையும் பிரதேசவாதத்தையும் இந்த மேட்டுக்குடி சிந்தனை வாதிகளும், கிழக்கு பல்கலைக்கழகத்தில் தங்களை புத்திஜீவிகளென அறிவித்து கொண்டவர்களுமே வளர்த்தனர்.

கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குள் பிளவையும் பிரதேசவாதத்தையும் உருவாக்குவதற்கு கிழக்கு பல்கலைக்கழகமும் பிரதான காரணியாக இருந்தது

வழமையாக ஒவ்வொரு பல்கலைக்கழகத்திற்கும் ஓரு ஆசிரியர் சங்கம் தான் இருக்கும். ஆனால் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே இருந்த ஆசிரியர் சங்கத்திலிருந்து சிலர் பிரிந்து ஐக்கிய ஆசிரியர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினர். அந்த அமைப்பை யுவி தங்கராசா, திருச்செல்வம், வர்ணகுலசிங்கம் போன்றவர்களே உருவாக்கினர்.  இந்த இருதரப்பும் விடுதலைப்புலிகளிடம் சென்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதிலேயே ஈடுபட்டிருந்தனர்.

 வன்னியில் உள்ள விடுதலைப்புலிகளின் தலைமையின்  நேரடி கண்காணிப்பில் இயங்கிய மனோ மாஸ்ரர் அற்புதன் மாஸ்ரர் ஆகியோரிடம் மனோ சபாரத்தினம், ரவீந்திரநாத் போன்றவர்கள் சென்று முறைப்பாடு செய்வதும், கரிகாலன் விசு போன்றவர்களிடம் யுவி தங்கராசா, திருச்செல்வம், வர்ணகுலசிங்கம் போன்றவர்கள் சென்று முறைப்பாடு செய்வதும் வழக்கமான செயல்களாகின.
கிழக்கில் உள்ளவர்கள் ஓரங்கட்டப்படுகிறோம் என்ற பிரசாரம் கிழக்கு பல்கலைக்கழகத்தில் பலமட்டங்களிலும் வளர்ந்து வந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் பொங்குதமிழ் நிகழ்ச்சியை நடத்தியதை தொடர்ந்து கிழக்கு பல்கலைக்கழக சமூகமும் பொங்குதமிழ் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது

இது தொடர்பாக கிழக்கு பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது பொங்குதமிழ் நிகழ்ச்சியை எவ்வாறு ஏற்பாடு செய்வது என்பது தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

அந்த வேளையில் பொங்குதமிழ் என்ற பெயரில் தான் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா என்ற கேள்வி எழுப்பபட்டது

பொங்குதமிழ் என்பது யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் வைத்த பெயர். அதேபெயரில் ஏன் கிழக்கில் நடத்த வேண்டும், கிழக்கின் எழுச்சி என்ற பெயரில் தனித்துவமாக நாம் நடத்தலாமே என கலாநிதி சித்திரலேகா மௌனகுரு, பாலசுகுமார் போன்றவர்கள் கருத்து தெரிவித்தனர். இவ்வாறு வடக்கிலிருந்து கிழக்கு பிரிந்து தனித்துவமாக நிற்கவேண்டும் என்ற போக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்த சிலரிடம் மேலோங்கி காணப்பட்டது.

இந்நேரத்தில் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும், யாழ்ப்பாணத்தில் இரண்டாவது தடவையாக பொங்கு தமிழ் நிகழ்ச்சி நடைபெற்ற போது கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்கள் மற்றும் சில விரிவுரையாளர்களும் தனியாக பேருந்து ஒழுங்கு செய்து அங்கு சென்றிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் பொங்குதமிழ் நிகழ்ச்சி முடிந்த பின் கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து சென்றவர்கள் உடனான ஓரு சந்திப்பை விடுதலைப்புலிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

கிளிநொச்சியில் உள்ள தூயவன் அரசஅறிவியல் கல்லூரி மண்டபத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. வுpடுதலைப்புலிகளின் அரசியல்துறை துணைப்பொறுப்பாளர் சோ.தங்கன் உட்பட விடுதலைப்புலிகளின் துறைசார் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அந்த சந்திப்பில் மாணவர்கள் சிலர் கேள்விகளை எழுப்பினர். விருத்தாசலம் என்ற மாணவன் கேள்வி ஒன்றை எழுப்பினான்.  தமிழீழம் கிடைத்தால் கிழக்கை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்வீர்களா? அல்லது தலைமை என்பது வடக்கின் கையில் தான் இருக்குமா? தமிழீழத்திலும் கிழக்கை புறக்கணிக்கும் செயல்கள் தொடருமா?

இந்த கேள்வி தனி ஒரு விருத்தாசலம் என்ற மாணவனிடமிருந்து வந்த கேள்வியாக பார்க்க முடியாது. கிழக்கில் உள்ள பெரும்பாலானவர்களின் அடிமனங்களில் எழுந்து கொண்டிருக்கும் கேள்விதான் அது.

இந்த சந்தேகங்களை காலம் காலமாக இருந்து வரும் தமிழ் தலைமைகள் தீர்க்க தவறியதே யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்ற பிரதேசவாதத்தை வைத்து சிலர் பிழைப்பு நடத்த முற்படுகின்றனர்.
இந்த துயரத்தின் உச்ச கட்டத்தை 2004ல் கருணா பிளவின் போது மட்டக்களப்பில் காணமுடிந்தது. ( தொடரும் )

( இரா.துரைரத்தினம்)0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...