Tuesday, September 19th, 2017

கருணா குழு காடுகளில் வீசிவிட்டு சென்ற ஆயுதங்கள் பாதாள குழுக்கள் மற்றும் முஸ்லீம்களின் கைகளுக்கு சென்றது. த.தே. கூட்டமைப்பின் தோற்றம் அங்கம்- 24

Published on April 19, 2017-3:31 pm   ·   No Comments

verukalதமிழ் கட்சிகள் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் போட்டியிட்ட காலத்தில் ஆகக் கூடிய ஆசனங்களை பெற்றது 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஆகும். அதற்கு முதல் எந்த காலத்திலும் 22ஆசனங்களை தமிழ் கட்சி ஒன்று பெற்ற வரலாறு கிடையாது.

அத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 105 ஆசனங்களையும், ஐக்கிய தேசியக்கட்சி 82 ஆசனங்களையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 22 ஆசனங்களையும் பெற்றிருந்தது. பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு விளங்கியது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணா பிரிந்து சென்ற பின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமையின் கீழ் இயங்குவார்களா அல்லது கருணாவின் கட்டளையின் கீழ் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார்களா என்ற கேள்வி எழுந்திருந்தது.

எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான முதலாவது கூட்டம் கொழும்பில் ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற்றது. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்களான கனகசபை, தங்கேஸ்வரி, இராசநாயகம், ஜெயானந்தமூர்த்தி, பத்மநாதன் ஆகியோருடன் ஏனைய தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமனுக்கு ஆயுதம் தாங்கிய கருணா குழுவினரே பாதுகாப்பு வழங்கி வந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்ற போது தங்கேஸ்வரிக்கு பாதுகாப்பு வழங்கி வந்த ஆயுதம் தாங்கிய கருணாகுழு உறுப்பினர்கள் பின் வரிசையில் நின்றனர்.

இக்கூட்டம் நிறைவடைவதற்கு முதலே தங்கேஸ்வரிக்கு பாதுகாப்பு வழங்கி வந்த கருணா குழுவினர் அவரை அழைத்து சென்றனர். தன்னால் சுதந்திரமாக செயற்பட முடியாமல் இருப்பதாக சம்பந்தனிடம் முறையிட்ட தங்கேஸ்வரி அழுதவாறு கருணாகுழுவினருடன் வெளியேறி சென்றார்.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கூட்டாக ஒரு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர்.
தமது உரிமைகளை மீட்டுக்கொள்வதற்காக 50வருடங்களாக போராடிவரும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற தாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்றும், போர் நிறுத்த உடன்படிக்கையை கடைப்பிடித்து சமாதான பேச்சுக்கள் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

தேர்தல் முடிந்ததன் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் மட்டக்களப்பு அம்பாறை பிரதேசங்களில் நிறைகொண்டிருந்த கருணா குழுவுக்கு எதிரான நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். வன்னியிலிருந்து ரமேஷ் தலைமையிலான ஜெயந்தன் படையணி வெருகல் ஆற்றுக்கு அப்பால் வந்து தரையிறங்கியிருந்தனர்.

கதிரவெளியில் கருணாகுழு நிலைகொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை நடந்த கருணா குழு தரப்பில் காயமடைந்த பலர் வாழைச்சேனை, மட்டக்களப்பு வைத்தியசாலைகளுக்கு கொண்டுவரப்பட்டனர். இத்தாக்குதலில் கருணாகுழுவின் தாக்குதல் அணிக்கு தலைமை தாங்கிய ஜெயம் உட்பட பலர் காயமடைந்தனர்.

தமிழர் வரலாற்றில் ஒரு கறுப்பு தினமாகவும் தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் மிகவும் துர்ப்பாக்கிய நிகழ்வாகவும் இது அமைந்திருந்தது.   12ஆம் திகதி திங்கட்கிழமை மாலை கதிரவெளி பகுதியிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன் என்னிடம் தொடர்பு கொண்டு நாளை காலையில் கதிரவெளிக்கு வாருங்கள், சரணடைந்த போராளிகளை அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்க இருக்கிறோம் என தெரிவித்தார்.

இத்தகவலை மட்டக்களப்பில் இருந்த சக பத்திரிகையாளர்களுக்கு நான் அறிவித்தேன். செவ்வாய்க்கிழமை 13ஆம் திகதி காலையில் மட்டக்களப்பிலிருந்து நடேசன், உதயகுமார், தவராசா, நிராஷ் N;டவிட், வேதநாயகம், சந்திரபிரகாஷ், ஆகியோர் வாகரை ஊடாக கதிரவெளிக்கு சென்றோம். வீதியின் இரு மரங்கிலும் இரத்த கறைகள் காணப்பட்டன. மிகக்கடுமையான சண்டை நடைபெற்றிருப்பதற்கான அடையாளங்களாக இரத்த கறைகளும், இரத்த கறைபடிந்த கிளிந்த உடைகளும் காணப்பட்டன. சடலங்கள் அனைத்தையும் அவர்கள் அப்புறப்படுத்தியிருந்தனர்.

தமது பிள்ளைகள் உயிருடன் இருக்கிறார்களா என அறிந்து கொள்வதற்காக பெருந்தொகையான பெற்றோர் கவலை தோய்ந்த முகத்துடன் கதிரவெளியை நோக்கி சென்று கொண்டிருந்தனர். வாகரையிலிருந்து கதிரவெளி செல்லும் வழியில் தேவாலயம் ஒன்றில் கேணல் ரமேஷை சந்தித்தோம். அண்ணை நாங்கள் வந்து விட்டோம் என்றார். verukal

கருணாவை தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து விலக்குவதாக அறிவித்த பத்திரிகையாளர் மகாநாட்டிற்கு நாங்கள் சென்ற போது அங்கு எம்மை சந்தித்த ரமேஷ் நாங்கள் விரைவில் மட்டக்களப்புக்கு வருவோம் என தெரிவித்திருந்தார். அந்த நேரத்தில் ஒரு மாத காலத்தில் அவர்களின் நடவடிக்கைகள் நிறைவேறும் என நாம் எண்ணவில்லை.

தாம் வந்திருக்கிறோம், ஆயுதங்களை கீழே போட்டு சரணடையுங்கள் என தாம் ஒலிபெருக்கியில் அறிவித்த போது கருணா தரப்பில் இருந்த பல போராளிகள் அதனை ஏற்றுக்கொண்டதாக ரமேஷ் தெரிவித்தார்.
நாம் கதிரவெளி மகாவித்தியாலயத்தில் சரணடைந்த போராளிகள் வைக்கப்பட்டிருந்த இடத்தை சென்றடைந்தோம். அங்கு மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன், தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் ( மார்ஷல் ) உட்பட பலரும் நின்றனர். சரணடைந்த சுமார் 400க்கு மேற்பட்ட ஆண், பெண் போராளிகள் இருத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களின் பெற்றோர்களும் சமூகமளித்திருந்தனர். சில பெற்றோர் தமது பிள்ளைகள் அங்கு இல்லாததால் அவர்கள் இறந்திருப்பார்களோ என கதறி அழுதனர்.

இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடந்த மோதல்களில் ஏற்பட்ட இழப்புக்களையும் மரணங்களையும் பார்த்திருக்கிறோம், விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய இயங்கங்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களில் ஏற்பட்ட இழப்புக்கள் மரணங்களை பார்த்திருக்கிறோம், ஆனால் ஒரே இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கிடையில் நடந்த சகோதர யுத்தத்தை அன்றுதான் பார்த்தோம்.

அந்த பிரதேசம் எங்கும் இரத்தவாடையும் அழுகுரல்களுமே கேட்டன. இதே போன்றதொரு அவலத்தை நான் 1990ஆம் ஆண்டு பார்த்திருக்கிறேன். இந்திய இராணுவத்துடன் இருந்த ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் ஈ.என்.டி.எல்.எவ் இயக்கங்கள் தமிழ் தேசிய இராணுவம் என்ற பெயரில் அமைத்த படைக்கு வலுக்கட்டாயமாக இளைஞர்களை பிடித்து சென்று பயிற்சி அளித்து ஆயுதங்களையும் வழங்கியிருந்தார்கள்.

இந்திய இராணுவம் மட்டக்களப்பை விட்டு வெளியேறியதை அடுத்து ஈ.பி.ஆர்.எல்.எவ், மற்றும் ஈ.என்.டி.எல்.எவ் இயக்கத்தின் முக்கியமானவர்கள் அனைவரும் இந்திய இராணுவத்துடன் வெளியேறிவிட்டனர். கட்டாய பயிற்சி அளிக்கப்பட்டு ஆயுதங்கள் வழங்கப்பட்ட தமிழ் தேசிய இராணுவமே மட்டக்களப்பு நகரில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் மட்டக்களப்புக்குள் பிரவேசித்த தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்களுடன் நிலைகொண்டிருந்த தமிழ் தேசிய இராணுவத்தினர் மீதே தாக்குதல் நடத்தினர். இவர்களுக்கிடையிலான மோதல் மட்டக்களப்பு முகத்துவார வீதியிலேயே நடைபெற்றது இரவு வேளையிலேயே இத்தாக்குதல்கள் நடைபெற்றது தமிழீழ விடுதலைப்புலிகள் நகருக்குள் வந்து விட்டார்கள் என விடிந்ததும் மக்கள் பேசிக்கொண்டனர். தாக்குதல்கள் நடைபெற்ற முகத்துவார வீதியை சென்று பார்த்த போது மட்டக்களப்பு அரசடி சந்தியிலிருந்து அமிர்தகழி முகத்தவாரம் வரைக்கும் வீதியின் இருபக்கமும் சடலங்களும் இரத்த வெள்ளமுமே காணப்பட்டது. தமிழர்களை தமிழர்கள் கொன்றொழித்த கொடூரமான சம்பவம் அது.

வாகரை தொடக்கம் கதிரவெளி வெருகல் வரையான வீதியில் காணப்பட்ட இரத்த வெள்ளம் 1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு முகத்துவார வீதியில் கண்ட காட்சியையே நினைவு படுத்தியது. இந்த இரு சம்பவங்களும் அநியாயமாக தமிழர்களை தமிழர்கள் கொன்றொழித்த சம்பவமாகும். ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் தமிழ் தேசிய இராணுவம் என்ற பெயரில் கட்டாய ஆட்சேர்ப்பு செய்ததை போலவே 2002ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்த காலத்தில் மட்டக்களப்பில் கருணா தலைமையிலான விடுதலைப்புலிகள் வீட்டுக்கொரு பிள்ளை கட்டாயம் தரவேண்டும் என ஆட்சேர்ப்பை செய்தனர். இந்த கட்டாய ஆட்சேர்ப்பில் சேர்க்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்ட பலர் வெருகல் படுகொலையில் கொல்லப்பட்டனர்.

கருணா குழுவுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களால் கதிரவெளி, மாங்கேணி, வெருகல் ஆகிய பிரதேசங்களிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 4ஆயிரம் மக்கள் மாங்கேணி மற்றும் மூதூர் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தனர். verukal 1

தமிழீழ விடுதலைப்புலிகள் வெருகல் ஊடாக ரமேஷ் தலைமையில் பிரவேசித்த அதேவேளை ரமணன் தலைமையில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு தென்பகுதி ஊடக பிரவேசித்தனர். இதனால் மட்டக்களப்பில் தங்கியிருப்பது ஆபத்து என உணர்ந்த கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் அவருடன் இருந்த சில முக்கிய போராளிகளும் கரடியனாற்றில் இருந்து ஏப்ரல் 13ஆம் திகதி இரவு இராணுவ பாதுகாப்புடன் மட்டக்களப்பை விட்டு வெளியேறினர். ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அலிசாகிர் மௌலானாவே இராணுவத்துடன் பேசி கருணாவை பாதுகாப்பாக கொழும்புக்கு அழைத்து சென்றார். கருணாவுடன் சுமார் 2ஆயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள் இருந்தனர். அவர்கள் தாம் வைத்திருந்த ஆயுதங்களை எறிந்து விட்டு தமது வீடுகளுக்கு சென்றனர். கருணா தரப்பிடம் இருந்த பெருந்தொகையான ஆயுதங்களை சிலர் எடுத்து முஸ்லீம்கள் உட்பட சிலருக்கு விற்பனை செய்தனர். காடுகளில் அநாதரவாக வீசப்பட்டிருந்த ஆயுதங்களில் பெரும்பாலானவை பொதுமக்களால் எடுத்து செல்லப்பட்டு காத்தான்குடி ஏறாவூர் ஒட்டமாவடி போன்ற பிரதேசங்களில் உள்ள முஸ்லீம் மக்களுக்கு விற்பனை செய்தனர். பெருந்தொகையான ஆயுதங்கள் தென்னிலங்கையில் உள்ள பாதாள உலக குழுகளின் கைகளுக்கும் சென்றனர். நவீன ரக துப்பாக்கிகள் கூட 200ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட்டன.

அதனையடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்;டின் கீழ் கொக்கட்டிச்சோலை, கரடியனாறு உட்பட்ட பிரதேசங்கள் வந்தன. இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் அரசியல்துறை அலுவலகங்களை திறந்தனர்.

42 நாட்களாக கருணா தரப்பின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய தமிழ்அலை பத்திரிகை மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது

கருணா தலைமையிலான ஓருகுழு வெளியேறிய போதும் பிள்ளையான் தலைமையில் ஆயுதம் தாங்கிய குழு மட்டக்களப்பில் இராணுவ முகாம்களில் இருந்தனர். கருணாவின் வெளியேற்றத்துடன் இந்த பிரச்சினை தீர்ந்து என எண்ணியிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கிய பிள்ளையான் தலைமையிலான கருணாகுழுவினலேயே பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டது. இதன் பின்னரே மட்டக்களப்பு நகரம் கொலைக்களமாகியது. (தொடரும் )

( இரா.துரைரத்தினம் )

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...