Thursday, January 18th, 2018

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு கட்டுப்பட மறுத்த சில உறுப்பினர்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம் – அங்கம் 25

Published on May 22, 2017-10:24 am   ·   No Comments


TNA and LTTE
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கருணா குழுவுக்கும் இடையில் வெருகல் மற்றும் கதிரவெளிப்பகுதியில் நடந்த சண்டையில் கருணா தரப்பில் இருந்த 1500 போராளிகள் தம்மிடம் சரணடைந்ததாகவும் இவர்களில் பெண் போராளிகள் மற்றும் 18வயதிற்கு குறைந்த போராளிகள் 269பேரை தாம் யுனிசேவ் முன்னிலையில் பெற்றோரிடம் கையளித்ததாக ஏப்ரல் 13ஆம் திகதி கதிரவெளியில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பொறுப்பாளர் கௌசல்யன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

கருணா மட்டக்களப்பை விட்டு வெளியேறி கொழும்புக்கு சென்றதை அடுத்து கருணா தரப்புடன் இருந்த சில முக்கிய தளபதிகள் சிலர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் இணைய விருப்பம் தெரிவித்தனர். இவர்களில் கருணாவினால் மட்டக்களப்பு அம்பாறை அரசியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட விசு என்று அழைக்கப்படும் சின்னத்தம்பி கோபாலன் முக்கியமானவராகும். கிரானை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் புளொட் இயக்கத்தில் இருந்த போதும் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவர். 2000ஆம் ஆண்டளவில் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்தவர்.
திருமலை மட்டக்களப்பு ஆயர் கலாநிதி கிங்ஸ்ஸி சுவாம்பிள்ளை ஊடாக விசு தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சரணடைந்தார். அது போல துரை, தாத்தா போன்றவர்களும் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சரணடைந்தனர்.

ஆனால் பின்னர் இவர்களுக்கு என்ன நடந்தது என தெரியாது. இவர்களுக்கு என்ன நடந்தது என தமிழீழ விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
கருணாவும் சில தளபதிகளும் மட்டக்களப்பை விட்டு வெளியேறிய போதிலும் பிள்ளையான் தலைமையில் ஒரு குழு இராணுவ புலனாய்வு பிரிவினருடன் இணைந்து செயற்பட்டனர். இவர்கள் மட்டக்களப்பு பற்பொடி கொம்பனி இராணுவ முகாம் , மற்றும் இருதயபுரம் முகாம் ஆகியவற்றில் தங்கியிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீதும் தமிழீழ ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் புதியதாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22பேரையும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் 2004 ஏப்ரல் 20ஆம் திகதி கிளிநொச்சியில் சந்தித்தார்.

இந்த சந்திப்புக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த அதேவேளை பா.அரியநேத்திரனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இக்கூட்டம் நடைபெறுவதற்கு முதல் நாள் கிளிநொச்சியிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடகத்துறை பொறுப்பாளர் தயாமாஸ்ரர் என்னுடன் தொடர்பு கொண்டு நாளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சந்திப்பு நடைபெற உள்ளது. அரியநேத்திரனையும் அழைத்து வாருங்கள் என சொன்னார். இத்தகவலை நான் அரியநேத்திரனிடம் தெரிவித்து வான் ஒன்றில் 19ஆம் திகதி இரவு கிளிநொச்சிக்கு புறப்பட்டோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கனகசபை, தங்கேஸ்வரி, ஜெயானந்தமூர்த்தி, கிங்ஸ்லி இராசநாயகம் ஆகிய நான்கு பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். ஐந்தாவதாக பாக்கியசெல்வம் அரியநேத்திரன் வந்திருந்தார். கருணாவின் பிளவு ஏற்பட்ட போது கிங்ஸ்லி இராசநாயகமும், ராசன் சத்தியமூர்த்தியும் கருணாவை தீவிரமாக ஆதரித்தனர். தேர்தல் முடிந்த பின் இவர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வார்கள் என பரவலாக பேசப்பட்டது. இதனாலோ என்னவோ கிங்ஸ்லி இராசநாயகத்தை இராஜினாமா செய்ய வைத்து விட்டு ஐந்தாவது இடத்திற்கு வந்திருந்த அரியநேத்திரன் நியமிப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருந்தனர்.

நாம் கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக பிரிவு அலுவலகத்தை சென்றடைந்த போது அங்கு கிங்ஸ்லி இராசநாயகமும் அவரின் மகளும் நின்றனர். அவர் கவலை தோய்ந்த முகத்துடன் காணப்பட்டார்.

மட்டக்களப்பை சேர்ந்த கிங்ஸ்லி இராசநாயகம் மக்கள் வங்கியின் யாழ். பிராந்திய முகாமையாளராக பணியாற்றியவர். நீண்டகாலமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக இருந்தவர். பின்னர் தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் இணைந்து பணியாற்றினார். மட்டக்களப்பில் அவர் இருந்த காலத்தில் அவருடன் பழகும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடகபிரிவு அலுவலகத்திலிருந்து கூட்டம் நடைபெற்ற அரசியல்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுடன் அரியநேத்திரனை அழைத்து சென்றனர். ஆனால் அக்கூட்டத்திற்கு கிங்ஸ்லி இராசநாயகம் அனுமதிக்கப்படவில்லை. அவர் தயாமாஸ்ரரின் அலுவலகத்திலேயே கவலையோடு நின்றார். அதன் பின்னர் அவரிடமிருந்து இராஜினாமா கடிதம் வாங்கிவிட்டு அனுப்பியதாக பின்னர் அறிந்து கொண்டேன்.

2001ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை 2002ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளி தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சந்தித்திருந்தார். அதன் பின்னர் 2004ல் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் கிளிநொச்சியில் உள்ள அரசியல்துறை தலைமையகத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பில் தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன், புலனாய்வு பொறுப்பாளர் பொட்டுஅம்மான், மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன், கேணல் பானு, கேணல் துர்க்கா, கேணல் விதுசா, தமிழீழ காவல்துறை பொறுப்பாளர் பா.நடேசன், நிதிப்பொறுப்பாளர் தமிழேந்தி, மற்றும் திருகோணமலை, வவுனியா, யாழ்ப்பாண மாவட்டங்களின் அரசியல்துறை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ் மக்கள் இத்தேர்தலில் தமிழ் தேசியத்திற்காகவே வாக்களித்துள்ளனர். இதனை மனதில் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட வேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். கருணா தரப்பின் பிடியில் இருந்த 42 நாட்களும் மட்டக்களப்பு மக்கள் பெரும் துயரங்களை அனுபவித்தனர். சில கசப்பான சம்பவங்களும் இடம்பெற்றன. இதற்காக மட்டக்களப்பு மக்கள் சார்பில் நான் மன்னிப்பு கோருகிறேன். கருணாவின் பிடியிலிருந்து மட்டக்களப்பை மீட்பதற்காக நடைபெற்ற மோதல்களில் கருணா தரப்பில் இருந்தவர்களும் கொல்லப்பட்டனர். அந்த போராளிகளையும் தமிழீழ விடுதலைக்காகவே பெற்றோர் அனுப்பி வைத்தனர். எனவே இந்த மோதல்களில் கொல்லப்பட்ட கருணா தரப்பு போராளிகளையும் மாவீரர்களாக அறிவித்து அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அரியநேத்திரன் கோரிக்கை விடுத்தார்.

அப்போது குறுக்கிட்ட யாழ்.நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைவருக்கு நீங்கள் ஆலோசனை வழங்கத்தேவையில்லை என தெரிவித்தார். செல்வராசா கஜேந்திரனின் கூற்றை மறுதலிக்கும் வகையில் அவரின் பேச்சை இடைநிறுத்திய பிரபாகரன் அவர்கள் இக்கோரிக்கையை முன்வைப்பதற்கு அரியநேத்திரன் அவர்களுக்கு உரிமை உண்டு. இம்மோதலில் கொல்லப்பட்டவர்களையும் மாவீரர்கள் பட்டியலில் இணைப்பது பற்றி நாம் ஆலோசிப்போம் என தெரிவித்தார்.

2004ஆம் ஆண்டு தேர்தலில் நான்கு கட்சிகளின் சார்பில் மட்டுமன்றி விடுதலைப்புலிகளின் சார்பிலும் சிலர் போட்டியிட்டனர். கஜேந்திரன் போன்றவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு கட்டுப்படாமல் செயற்பட்டனர். இது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு நெருக்கடியாக அமைந்தது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த அதேதினம் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் பி.சந்திரசேகரம், மேல்மாகாண மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஆகியோரையும் சந்தித்தார்.

ஏப்ரல் 22ஆம் திகதி பாராளுமன்றம் கூடிய போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 21 பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் சத்தியபிரமாணம் செய்து கொண்டனர். கிங்ஸ்லி இராசநாயகம் தேர்தல் ஆணையாளருக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தார். எனினும் கிங்ஸ்லி இராசநாயகத்தின் இராஜினாமா அவரால் சுயமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும் சில தரப்பின் அழுத்தங்களின் மத்தியிலேயே அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என சபாநாயகர் அறிவித்தார். கிங்ஸ்லி இராசநாயகம் நேரில் வந்து இராஜினாமா கடிதத்தை தந்தால் மட்டுமே தாம் அதை ஏற்றுக்கொள்ள முடியும் என சபாநாயகர் அறிவித்திருந்தார். இதனையடுத்து கிங்ஸ்லி இராசநாயகத்தை சபாநாயகரிடம் நேரடியாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அழைத்து சென்று பதவி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார்.

இதன் பின்னர் தேர்தல் ஆணையாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்தாவது இடத்திற்கு வந்திருந்த பாக்கியசெல்வம் அரியநேத்திரன் அவர்களின் பெயரை வர்த்தமானியில் பிரசுரித்து சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தரவை அடுத்து தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த கிங்ஸ்லி இராசநாயகத்தை 2004 ஒக்டோபர் 19ஆம் திகதி இனந்தெரியாத ஆயுததாரிகள் சுட்டுக்கொன்றனர்.

மட்டக்களப்பு புறநகர் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த கிங்ஸ்லி இராசநாயகத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் சுட்டுக்கொன்றார்கள் என கருணா தரப்பு குற்றம் சாட்டிய அதேவேளை மட்டக்களப்பில் இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்ட பிள்ளையான் தலைமையிலான ஆயுதக்குழுவே அவரை சுட்டுக்கொன்றதாகவும் சிலர் பேசிக்கொண்டனர்.
மட்டக்களப்பு கல்லாற்றை பிறப்பிடமாக கொண்ட கிங்ஸ்லி இராசநாயகம் மக்கள் வங்கியின் பிராந்திய முகாமையாளர் என்ற உயர் பதவியில் இருந்தவர். தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக தனது பதவியை விட்டு தமிழர் புனர்வாழ்வு கழகத்தில் இணைந்து வேலை செய்தார். சில காலம் கிளிநொச்சியில் இருந்த இராசநாயகம் 2002ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மட்டக்களப்பு பொறுப்பாளராக பணியாற்றினார்.

இது போன்று பல கொலைகள் மட்டக்களப்பில் நடைபெற்றன. யார் இதனை செய்கிறார்கள் என தெரியாத நிலையில் வகைதொகையற்ற கொலைகள் இடம்பெற்றன.

ஏப்ரல் 26ஆம் திகதி மட்டக்களப்பு வவுணதீவு இராணுவ முகாமுக்கு அருகில் விடுதலைப்புலிகளின் 7 போராளிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். வவுணதீவு இராணுவ முகாமில் இருந்த தமிழ் ஆயுதக்குழுவே இக்கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இவர்களை பிடித்து கைகளை பின்னால் கட்டி வைத்தே கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் என மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன் அப்போது குற்றம் சாட்டியிருந்தார்.
மே முதலாம் திகதி கிரான் பொண்டுகள்சேனை என்ற இடத்தில் வைத்து விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மே 3ஆம் திகதி ஆரையம்பதியில் கருணா குழு ஆதரவாளர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மே 6ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த இருவர் மட்டக்களப்பு தண்ணாமுனையில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மட்டக்களப்பை விட்டு கருணா வெளியேறிய போது மக்கள் பெரும் நிம்மதியடைந்தனர். இனிமோதல்கள் இடம்பெறாது என நம்பினர். ஆனால் யார் யாரை சுடுகிறார்கள் என தெரியாது தினசரி துப்பாக்கி சூடுகள் நடந்தன. மட்டக்களப்பு பிரதேசம் கொலைக்களமாக மாறியது. ( தொடரும் )

( இரா.துரைரத்தினம் )TNA and LTTE

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...