Monday, June 26th, 2017

மட்டக்களப்பு ஊடகத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்திய நடேசனின் மரணம். தமிழ் தேசியக் சுட்டமைப்பின் தோற்றம் அங்கம் 27

Published on June 6, 2017-11:22 am   ·   No Comments

Nadesan_Funeral_June3_5_26150_435தமிழ் மக்களுக்கு உறுதியான அரசியல் தலைமை ஒன்று உருவாக வேண்டும் என உழைத்த தம்மையா, சிவராம், நடேசன் போன்ற புத்திஜீவிகளின் உயிர் பறிக்கப்பட்டது இதே ஏப்ரல் மே மாதங்களில் தான். 13 வருடங்களுக்கு முதல் நடேசன் 2004 மே 31ஆம் திகதி மட்டக்களப்பில் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மண்ணைவிட்டு வெளியேறிய நான் கடந்த வாரம் மட்டக்களப்புக்கு சென்றிருந்தேன்.

தமிழ் ஊடகவியலாளர்களிடையே ஒன்றுமையும் பலமும் இருக்க வேண்டும் என உழைத்த நடேசன், சிவராம் போன்றவர்களின் கனவுகள் இன்று சிதைக்கப்பட்டு ஏட்டிக்கு போட்டியாக பல ஊடக அமைப்புக்கள்,
மட்டக்களப்பில் உள்ள பத்திரிகையாளர்கள் அனைவரையும் ஒன்றாக சந்திக்க வேண்டும் என்ற விருப்பமும் நிறைவேறாத நிலையிலேயே அங்கிருந்து திரும்பி வந்தேன்.

நடேசன் படுகொலை செய்யப்பட்டு 13ஆண்டுகள் கடந்து விட்டன. நடேசனின் மரணம் என்பது வெறும் தனிமனிதர் ஒருவரின் கொலையாகவோ அல்லது இழப்பாகவோ கருத முடியாது.
நடேசனின் மரணத்திற்கு முன்னரான மட்டக்களப்பின் ஊடகத்துறையையும் அக்கொலைக்கு பின்னரான ஊடகத்துறையையும் ஆராயும் ஒருவர் இதனை நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.
சிங்கள பேரினவாதம் செய்த சூழ்ச்சியின் விளைவாக தமிழ் தேசிய விடுதலைப்போராட்டத்தில் மிகப்பெரிய பிளவு மட்டக்களப்பில் உருவான போது அந்த சதியை தகர்த்து மக்களை தமிழ் தேசிய விடுதலையின் பக்கம் நிறுத்த வேண்டும் என நடேசனும் சிவராமும் உழைத்தனர். அதற்காகவே தங்கள் உயிரையும் விலையாக கொடுத்தனர்.

வடக்கு கிழக்கு என்ற பிரதேசவாதத்தை உருவாக்கி தமிழ் தேசிய விடுதலையையும் ஒற்றுமையையும் சிதைப்பதற்கு தடையாக இருந்த மட்டக்களப்பு ஊடகத்துறையை முடக்க வேண்டும் அல்லது அழிக்க வேண்டும் என்ற சதியின் விளைவாகவே அதற்கு முதல் பலியானவர்தான் நடேசன்.

சிங்கள பேரினவாத அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவோ அல்லது அரசுடன் ஒட்டிக்கொண்டிருப்பவர்களுக்கு எதிராகவோ யாரும் வாய்திறக்க கூடாது, ஏனைய பிரதேசங்களை விட பலமிக்கதாக விளங்கிய மட்டக்களப்பு ஊடகத்துறையை மௌனிக்க செய்வதற்காக 2004ஆம் ஆண்டு மே 31ஆம் திகதி ( அன்று ஒரு திங்கட்கிழமை) நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டான்.
மட்டக்களப்பு எல்லை வீதியில் நடேசனின் உடல் வீழ்ந்து கிடந்த அந்த கணத்துடன் மட்டக்களப்பின் ஊடகத்துறை மௌனிக்கப்பட்டு விட்டது. தமிழ் தேசிய விடுதலைக்காக செயற்பட்ட பத்திரிகையாளர்கள் வெளியேற்றப்பட்ட நாளும் அதுதான்.

தமிழ் தேசிய விடுதலைக்கு ஆதரவாக செயற்பட்டு வந்த விரிவுரையாளர் தம்பையா மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டு சரியாக ஒரு வாரத்தில் நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நடேசன் மீது எனக்கு பிடித்த ஒரு குணம். அவன் கோபத்தை மனதில் வைத்திருப்பதில்லை. அதற்கு பல உதாரணங்களை சொல்லலாம்.
இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் மட்டக்களப்புக்கு வந்த நடேசனை விடுதலைப்புலிகள் கைது செய்து வைத்தியசாலை வீதியில் இருந்த விடுதலைப்புலிகளின் தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருந்தனர்.
50ஆயிரம் ரூபாவை நடேசன் குடும்பத்தினரிடமிருந்து விடுதலைப்புலிகள் பெற்ற பின்னரே அவரை விடுதலை செய்திருந்தனர். நடேசன் 50ஆயிரம் ரூபாவை கொடுக்க முடியாத கஷ்டநிலையிலேயே இருந்தான். பின்னர் அவனின் அக்கா நெல்லியடியிலிருந்து வந்து 50ஆயிரம் ரூபா பணத்தை கொடுத்தே நடேசனை விடுதலைப்புலிகளின் சிறையிலிருந்து மீட்டெடுத்திருந்தார்.

தன்னை தடுத்து வைத்திருந்தது. தன்னிடம் 50ஆயிரம் ரூபாவை பெற்றது போன்ற செயல்களை மனதில் வைத்துக்கொள்ளாமல் பிற்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளனாகவே செயற்பட்டது அவனின் மன்னிக்கும் மறக்கும் பண்பை வெளிப்படுத்தியிருந்தது. அவன் அடிக்கடி சொல்லும் ஒரு விடயம் விடுதலைப்புலிகள் என்பதை விட விடுதலைப்போராட்டத்தை நான் நேசிக்கிறேன் என சொல்வான்.
ஊடகத்துறை நடேசனின் முழுநேர தொழிலாக இல்லாத போதிலும் தனது அலுவலக நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் எல்லாம் அவனின் சிந்தனை, நடவடிக்கை அனைத்தும் தனது ஊடக தொழில் பற்றியதாகத்தான் இருக்கும்.

செய்திகள், கட்டுரைகள் என அவன் இறக்கும் வரை எழுதிக்கொண்டிருந்தான். அவன் இறப்பதற்கு முதல்நாள் வீரகேசரியில் எழுதிய ஒரு கட்டுரையே அவனை கொலைகாரர்கள் சுட்டுக்கொல்வதற்கு காரணம் என சிலர் சொன்னதை கேட்டிருக்கிறேன். என்னைப்பொறுத்தவரை நடேசனை கொல்ல வேண்டும் என அவர்கள் திடீரென எடுத்த முடிவாக இருக்க முடியாது. நீண்டநாள் அவர்கள் போட்ட திட்டத்தையே நிறைவேற்றியிருந்தார்கள்.Nadesan_Funeral_June3_5_26150_435

ஓயாமல் எழுதிக்கொண்டிருந்த ஒரு பேனா இன்று ஓய்ந்து விட்டது. நடேசனின் மரணத்துடன் மட்டக்களப்பின் ஊடகத்துறையும் மரணித்து விட்டதாகவே நான் கருதுகிறேன். நடேசனின் மரணத்தின் பின் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கமும் ஸ்தம்பித்து விட்டது. அப்போது பணியாற்றிக்கொண்டிருந்த தமிழ் பத்திரிகையாளர்களும் வெளியேற்றப்பட்டு விட்டனர்.

2004 மே 31ஆம் திகதி. நடேசன் படுகொலை செய்யப்பட்ட நாள். தான் வாழ்ந்த சமூகத்தின் நீதிக்காக , அரசியல் சமூக விடுதலைக்காக குரல் கொடுத்த பத்திரிகையாளன் ஒருவனுக்கு அதற்கு பரிசாக நடுவீதியில் சுட்டு வீழ்த்தப்பட்ட நாள்.

கிழக்கு பல்கலைக்கழக பொருளியல்துறை தலைவர் தம்பையாவின் படுகொலை பற்றி அந்த கொலை நடந்த அடுத்த ஞாயிறு வீரகேசரியில் நடேசன் எழுதிய கட்டுரை வெளியாகியிருந்தது. மிக காரசாரமானதும், துணிச்சலோடு பல விடயங்களையும் சொல்லிய கட்டுரையாக அது அமைந்திருந்தது.

அந்த கட்டுரையில் பல கேள்விகள் எழுப்பபட்டிருந்தது.

இந்த சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றிய தம்மையாவின் படுகொலையை வெறும் செய்தியாக பார்த்து விட்டு மௌனமாக இருக்க போகிறோமா?

இத்தகைய கொலைகளுக்கு எதிராக வெகுஜனரீதியாக திரண்டெழுந்து இதை தடுக்கவில்லை என்றால் ஒரு தம்பையாவை போன்ற பல கல்விமான்களை, அறிஞர்களை, சமூக பணியாளர்களை இழக்க வேண்டி வரும். அந்த இழப்புக்களை பார்த்து வெறும் கண்ணீரை விடும் சமூகமாக இருக்கப்போகிறதா அல்லது அராஜகவாதிகளுக்கெதிராக தங்கள் சக்தியை காட்டப்போகிறார்களா? என கேள்வி எழுப்பியிருந்த நடேசன் கட்டுரையின் இறுதியில் அராஜகவாதிகளின் அடுத்த இலக்கு யார் என்ற கேள்வியுடன் முடித்திருந்தார்.

அடுத்த இலக்கு தன் மீதுதான் என்பதை தெரிந்து கொண்டுதான் இதை எழுதினாரா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால் தம்பையாவின் படுகொலையை ஒத்த கொலைகள் தொடரப்போகிறது என்ற ஆரூடத்தை அக்கட்டுரை சொல்லியிருந்தது.. ஆனால் அந்த கட்டுரை வெளிவந்த அடுத்த நாளே தங்களின் அடுத்த இலக்கு யார் என்பதை கொலையாளிகள் வெளிப்படுத்தி விட்டார்கள்.
விரிவுரையாளர் தம்பையாவின் படுகொலையை அடுத்து சில தினங்கள் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த நான் மே 30ஆம் திகதி ஞாயிறு இரவு வீடு திரும்பியிருந்தேன்.

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து நடேசனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இன்று ஞாயிறு வீரகேசரியில் என்ர கட்டுரை பார்த்தியா என கேட்டான். இல்லை என்றேன்.
இந்த படுகொலைகளையும், அராஜகங்களையும் எத்தனை நாட்களுக்கு இந்த சமூகம் பொறுத்துக் கொண்டிருக்க போகுது. தம்பையாவின் படுகொலை பற்றி காரசாரமான கட்டுரை ஒன்று எழுதியிருக்கிறேன். வாசித்து பார் என சொன்னான்.

2004 மே 31 திங்கட்கிழமை. சரியாக தம்பையா சுட்டுக்கொல்லப்பட்டு ஒருவாரம். அப்போதுதான் அந்த அதிர்ச்சி தகவல் வந்தது.

நடேசன் பணியாற்றிய அலுவலகத்திலிருந்து தான் ஒருவர் பேசினார். நடேசனை சுட்டுவிட்டார்கள். அவரின் மனைவிக்கு அறிவித்து விட்டோம். எங்கள் அலுவலகத்திலிருந்து சற்று தள்ளித்தான் இச்சம்பவம் நடந்திருக்கிறது என்றும் தாங்கள் அந்த இடத்திற்கு போகவில்லை என்றும் சொன்னார்கள். அந்த தகவலை சொல்லிவிட்டு அவர் தொலைபேசியை வைத்த மறுகணம் மீண்டும் தொலைபேசி மணி அடித்தது. மறுமுனையில் சூரியன் எப்.எம் வானொலியிலிருந்து குருபரன் பேசினார். நடேசனை சுட்டுவிட்டார்கள். நாங்கள் பிறேங்கிங் நியூஸ் இப்ப போட்டிருக்கிறம் என்றார். என்னால் நம்பமுடியாமல் இருக்கிறது. காயங்களுடனாவது தப்பி விட வேண்டும் என மனதிற்குள் எண்ணிய எனக்கு குருபரனே பதில் சொன்னார்.

ஆள் முடிஞ்சுதாம். அவரின்ர அலுவலகத்திற்கு போற றோட்டிலை தான் பொடி கிடக்காம் என குருபரன் சொன்னார்.

அலுவலகத்திற்கு புறப்பட்ட மனைவிக்கு விடயத்தை சொல்லிவிட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு செல்வதற்கு புறப்பட்ட போது அச்சத்தால் அங்கு போவது ஆபத்தில்லையா என என்னை தடுத்தார்கள். இப்படியான விடயங்களில் தடுத்தாலும் நான் கேட்பதில்லை என அவர்களுக்கு தெரியும். அவர்களின் பேச்சை கேட்கும் நிலையிலும் அப்போது நான் இருக்கவில்லை. உடனடியாக மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு எல்லை வீதிக்கு சென்றேன்.

சம்பவம் நடைபெறுவதற்கு முன் தாண்டவன்வெளி திருமலை வீதியில் பத்திரிகையாளர் உதயகுமாருடன் பேசிக்கொண்டிருந்து விட்டு அலுவகத்தை நோக்கி சென்ற போதுதான் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. நடேசன் தன் அலுவலகத்திற்கு ஒருபாதையால் தினமும் செல்வது கிடையாது. அன்று எல்லைவீதி வழியாக நடேசன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது நேர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே கைத்துப்பாக்கியால் நடேசன் மீது சுட்டிருக்கின்றனர். நான் போனபோது இரத்தம் கொப்பளித்தவாறு நடேசனின் உடல் வீதி ஓரத்தில் கிடந்தது. மோட்;டார் சைக்கிள் விழுந்து கிடந்தது.  இராணுவத்தினரும் பொலிஸாரும் நின்றனர். தூரத்தில் பலர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அந்த நேரத்தில் சடலத்திற்கு அருகில் வர பலரும் அஞ்சினார்கள். அந்த நேரத்தில் அங்கு வந்த தினக்குரல் பத்திரிகையாளர் சந்திரபிரகாஷ் அண்ணன் இங்கு நிற்கவேண்டாம். சுட்ட ஆக்களும் இங்கதான் நிக்கிறாங்கள். நீங்கள் நிற்பது ஆபத்து போய்விடுங்கள் என சொன்னான்.

அங்கு வந்த பொலிஸார் சுடப்பட்டவரை தெரியுமா என்று கேட்டனர். தெரியும், அவர் எங்கள் சக பத்திரிகையாளர் என கூறிய போது சடலத்தை அடையாளம் காட்டி பொறுப்பேற்க முடியுமா என கேட்டனர். நான் ஆம் என்றேன்.

எனக்கு ஏற்கனவே தெரிந்த பறங்கி இனத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு முன்னால்தான் இச்சம்பவம் நடந்தது. அவர் வீட்டில் நின்று அவதானித்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று நடந்த சம்பவத்தை கேட்டேன். சொல்வதற்கு தயங்கினார்கள். அந்த வீட்டுக்கார வயோதிபர் என்னுடன் நெருங்கிய பழக்கம் என்பதால் தனியாக அழைத்து சென்று சில தகவல்களை சொன்னார்.

இருதயபுரம் இராணுவ முகாமில் இருக்கும் தமிழ் குழுவை சேர்ந்த இருவர் தான் மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டார்கள். அவர்கள் சுட்டு விட்டு திருமலை வீதிப்பக்கம் சென்று விட்டு சில நிமிடங்களில் திரும்பி வந்து இறந்து விட்டரா என பார்த்து சென்றனர் என கூறினார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் சற்று உயரமானவர், பின்னால் இருந்து துப்பாக்கி பிரயோகம் செய்தவர் குள்ள உருவம் கொண்டவர். அவருக்கு இயக்கத்தில் இருப்பவர்களை பெரும்பாலும் தெரியும். அவரின் மகனும் முன்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்.

என்னிடம் காவல்துறையினரும், பின்னர் மரணவிசாரணை நடத்திய நீதிபதியும் வாக்குமூலங்களை எடுத்தனர். அப்போது கொலையாளி இருவரின் பெயர்களையும் அவர்களிடம் கொடுத்திருந்தேன். ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீதிபதி சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை பார்த்து விட்டு வைத்தியசாலைக்கு கொண்டுவருமாறு சொன்னார். அந்த நேரத்தில் கொலையாளிகளுக்கு பயந்து எமக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. அப்போது ரெலோ இயக்க மாவட்ட பொறுப்பாளராக இருந்த அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். வான் ஒன்றை ரெலோ பிரசன்னாவே ஏற்பாடு செய்தார். சடலத்தை தூக்கி வானில் ஏற்ற வேண்டும். நான் ஒருபக்கம், பிரசன்னா மறுபக்கம் தூக்கினார். நடேசன் மிக உயரமானவர். எங்களால் தூக்க முடியாது கஷ்டப்பட்டோம். உதவிக்கு வருமாறு சற்று தூரத்தில் தள்ளி நின்றவர்களை அழைத்தோம். யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. இறுதியில் அங்கு நின்ற தமிழ் பொலிஸ்காரர் ஒருவரே வானில் சடலத்தை ஏற்ற உதவினார். சில தமிழ் பத்திரிகையாளர்களும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு எதிரே ஆஞ்சநேயர் மரக்காலை மதில் ஓரம் நின்றிருந்தனர்.

இச்சம்பவத்தை அறிந்த மட்டக்களப்பு தமிழ் பத்திரிகையாளர்கள் அனைவரும் அச்சத்தால் உறைந்து போய் இருந்தார்கள். வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு போனதும் அங்கு தவராசா வந்து சேர்ந்தான். மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

அந்த நேரத்திலிருந்து சடலத்தை யாழ்ப்பாணம் கரவெட்டிக்கு கொண்டு சென்று தகனம் செய்யும் வரை என்னுடன் கூட இருந்த ஒரேஒரு மட்டக்களப்பு பத்திரிகையாளர் தவராசா மட்டும் தான். சடலத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு செல்வதே நல்லது என நடேசனின் குடும்பத்தினருக்க கூறிய போது அவர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர்.

அன்றிரவு தமிழ்செல்வம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், வவுனியாவில் வைத்து தாங்கள் சடலத்தை பொறுப்பெடுத்து யாழ்ப்பாணம் வரை ஊர்வலமாக கொண்டு செல்வதென்று தீர்மானித்திருப்பதாகவும் சொன்னார்.

இந்த விடயத்தை நான் நடேசனின் குடும்பத்திற்கு கூறவில்லை. சடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு செல்வதற்கு முதல் காலையில் நடேசனின் மட்டக்களப்பு வீட்டில் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்த வந்த மட்டக்களப்பு அன்பர் ஒருவர் என்னிடம் சொன்னார். நடேசனோ அல்லது நீங்களோ யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியாது. இன்றுதான் தெரிந்து கொண்டேன் என சொன்னார். விடுதலைப்புலிகளின் நகரப்பொறுப்பாளர் சேனாதி தலைமையிலான சிலர் அஞ்சலி செலுத்தி விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை போர்த்தி சென்றார்கள்.

நெல்லியடியிலிருந்து வந்திருந்த நடேசனின் அக்கா அந்த கொடியை தூக்கி எறிந்து பிரச்சினை ஏற்படுத்தினார். புலிக்கொடியுடன் சடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு போக மாட்டோம் என கூறினார். இச்சம்பவத்தின் பின்னால் ஒரு கதை இருந்தது. (தொடரும் )

(இரா.துரைரத்தினம்)Nadesan_Funeral_June3_6

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

ravikaran

வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் 6 மில்லியன் ரூபா நிதி மோசடி: மக்கள் குற்றச்சாட்டு [June 24, 2017]

வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ...
jakanathan 03

ஈழத்து மூத்த பல்துறைக்கலைஞர் திருமதி பாராசத்தி ஜெகநாதன் அவர்களின் சிறப்பு நேர்காணல் [June 23, 2017]

ஈழத்து  மூத்த பல்துறைக்கலைஞரும் சிறந்த நெறியாளரும் ஓய்வுனிலை ஆசிரியருமான திருமதி ...
MUPO

குந்தி சேத்திரத்தின் குரல் மு.பொ.வின் கவிதை நூல் வெளியீடு [June 23, 2017]

சிந்தனைக்கூடம் யாழ்ப்பாணம் எனும் ஆய்வு, அபிவிருத்திக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் வரும் ...
brussel

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி! [June 20, 2017]

பிரசெல்சில் தற்கொலை தாக்குதல் முயற்சி!   குண்டுப்பட்டியணிந்த தாக்குதலாளி சுட்டுக்கொலை! பெல்ஜியத் ...
kiru

வடமாகாண சபைக்கு ஒர் திறந்த மடல்! ச. வி. கிருபாகரன், பிரான்ஸ் [June 20, 2017]

இலங்கைதீவில் தமிழீழத்தை நோக்கிய முதலாவதுகட்ட ஆயுத போராட்டத்திற்கு கிடைத்த ஆறுதல் ...
Prof-Raveendran

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29 [June 20, 2017]

கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை ...
cv

விடுப்பில் செல்லுமாறு அமைச்சர்களை வற்புறுத்த மாட்டேன். – சி.வி. [June 19, 2017]

குற்றம் சுமத்தப்படாத இரு அமைச்சர்கள் இருவரையும் கட்டாய விடுமுறையில் செல்லுமாறு ...
Selvakumaran

மாகாணசபை முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் கட்சி செயலாளருக்கு உண்டு- சட்டவல்லுனர் செல்வகுமாரன். [June 18, 2017]

மாகாணசபை உறுப்பினர் ஒருவர் தமது கட்சிக்கு எதிராக செயற்படுகிறார் என்ற ...
DSC_0285

ஊடகத்துறையில் 50அகவை காணும் குகநாதனுக்கு நவயுக நக்கீரன் என்ற பட்டமளித்து கௌரவிப்பு. [June 18, 2017]

இலங்கையின் தமிழ் பத்திரிகை உலகில் மூத்த ஊடகவியலாளரும் உதயன் பத்திரிகையின் ...
januar

முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஏன் கையெழுத்திட்டோம்? மாகாணசபை உறுப்பினர் ஜனூபர் விளக்கம் [June 16, 2017]

முதலமைச்சரின் மக்கள் நலன் செயற்பாடுகளில் 40மாதங்களாக எந்தவிதமான முன்னேற்றங்களும் இல்லாத ...