Friday, November 17th, 2017

ஊடகவியலாளர்கள் விரிவுரையாளர்களை படுகொலை செய்தவர்களே கிழக்கில் ஆட்சி அமைத்த அவலம். -த.தே.கூ. தோற்றம் அங்கம் 28

Published on June 12, 2017-10:31 am   ·   No Comments

nadesan_22வடகிழக்கு மாகாணசபையில் ஊடகத்துறை உதவி பணிப்பாளராக இருந்த நடேசன் வடகிழக்கு மாகாண முதலமைச்சரும் அவரின் சகாக்களும் இந்தியாவுக்கு கப்பல் ஏறிய போது அவர்களுடன் செல்லாது நடேசன் மட்டக்களப்பிற்கு வந்திருந்தார். அப்போது நடேசனை விடுதலைப்புலிகள் பிடித்து வைத்தியசாலை வீதியில் உள்ள அவர்களின் முகாமில் அடைத்து வைத்திருந்தனர். விடுதலை செய்வதாக இருந்தால் 50ஆயிரம் ரூபா தரவேண்டும் என விடுதலைப்புலிகள் கோரியிருந்தனர். நடேசனிடம் அப்போது 50ஆயிரம் ரூபா பணம் இருக்கவில்லை. நெல்லியடியில் இருந்த நடேசனின் அக்காவே 50ஆயிரம் ரூபா பணத்தை வழங்கி நடேசனை மீட்டிருந்தார்.

அதனால் தான் நடேசனின் உடலுக்கு புலிக்கொடியை போர்த்திய போது அவரின் அக்கா எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

மறுநாள் காலையில் நடேசனின் குடும்பம், ஒரு வாகனத்திலும் நான் தவராசா, உதயகுமார் புகைப்படப்பிடிப்பாளர் ஜெயா, மற்றொரு வாகனத்திலும் சடலம் இன்னொரு வாகனத்திலுமாக யாழ்ப்பாணம் புறப்பட்டோம். நாங்கள் புறப்பட்டு சில மணி நேரத்தில் மன்னம்பிட்டியை கடந்து சென்று கொண்டிருக்கும் போது தினக்குரல் அலுவலகத்திலிருந்தும், சக்தி தொலைக்காட்சியிலிருந்தும் தொலைபேசி எடுத்தார்கள். நடேசனின் சடலத்தை யாழ்ப்பாணம் கொண்டு போகவிடாது இராணுவம் தடுத்து வைத்திருக்கிறதாமே, புலிக்கொடியுடன் சடலத்தை கொண்டு சென்றதால் நீங்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறீர்கள் என தகவல் வந்திருக்கிறது என கேட்டார்கள்.

பிழையான தகவல் ஒன்றை யாரோ கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள். பின்னர் அந்த பொய் தகவலை பரப்பியவர்கள் கருணாகுழு என அறிந்து கொண்டேன்.
வவுனியா எல்லையில் வைத்து புலித்தேவன் தலைமையில் வந்த விடுதலைப்புலிகள் பூதவுடலை கையேற்றார்கள். பெரிய அளவில் வவுனியாவிலும் கிளிநொச்சியிலும் அஞ்சலி நிகழ்ச்சிகளை விடுதலைப்புலிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்பதை நடேசனின் அக்கா முதல் அவர்களின் குடும்பத்தினர் அறிந்து கொண்டனர். மட்டக்களப்பில் புலிக்கொடியை தூக்கி எறிந்த நடேசனின் அக்கா வன்னியில் மௌனமாக இருந்தார்.

வவுனியா எல்லையில் விடுதலைப்புலிகள் நடேசனின் பூதவுடலை பொறுப்பேற்றதும் எங்களுடன் கூட வந்த ஊடகவியலாளர் உதயகுமார் தான் தொடர்ந்து வரவிரும்பவில்லை என கூறி மட்டக்களப்புக்கு திரும்பி சென்று விட்டார். எனக்கு கவலையாக போய்விட்டது. அப்போது தவராசா சொன்னான். அண்ணன் நான் கடைசி வரைக்கும் உங்களுடன் வருவேன். வருவது வரட்டும் என துணிச்சலுடன் யாழ்ப்பாணம் வந்தான்.
மறுநாள் கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் அடுத்த நாள் நெல்லியடியில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நடேசன் படித்த நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. கொழும்பிலிருந்து சுதந்திர ஊடக அமைப்பை சேர்ந்த சுனந்த தேசப்பிரிய உட்பட சிங்கள ஊடகவியலாளர்களும் வந்திருந்தனர். அந்த அஞ்சலி கூட்டத்திற்கு நான் தலைமை தாங்கினேன்.

நெல்லியடி சுடலையில் தகனம் செய்யப்பட்ட பின் சுனந்த தேசப்பிரிய என்னை சந்தித்து மட்டக்களப்புக்கு செல்ல வேண்டாம் என ஆலோசனை கூறினார். கொழும்புக்கு வருமாறும் மாற்று ஏற்பாடு ஒன்றை செய்வதாகவும் கூறினார்.  மட்டக்களப்புக்கு திரும்பி சென்ற தவராசா அங்கு தொடர்ந்து இருப்பது ஆபத்து என்பதை உணர்ந்து கொண்டு கொழும்புக்கு வந்து சேர்ந்தார்.

கொழும்பில் நாங்கள் தங்கியிருந்த போது சிங்கள ஊடகவியலாளர்களான சுனந்த தேசப்பிரிய, புத்திக, விக்ரர் ஐவன், ஆகியோரும், பல வழிகளில் உதவி செய்தனர். கொழும்பில் தங்கியிருக்கும் போது நிதி நெருக்கடிக்குள் நாங்கள் இருப்போம் என்பதை நாங்கள் சொல்லாமலே உணர்ந்து கொண்ட லண்டனில் இருந்த நண்பர் சீவகன் பூபாலரத்தினம் தனது சொந்தப்பணத்தில் எமக்கு செலவுக்கு காசு அனுப்பியிருந்தார். அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம். இப்போது அப்பணம் சிறு தொகையாக இருக்கலாம். ஆனால் அச்சூழலில் அதன் பெறுமதி எல்லை கடந்தது.

பிபிசி சந்தேசிய சிங்கள சேவையில் பணியாற்றும் பண்டார அதற்கு மேல் ஒரு படி சென்று கொழும்பிலிருந்து சுவிஸிற்கு வருவதற்கான பயணசீட்டுக்குரிய பணம் தொடக்கம் லண்டனில் இருக்கும் சர்வதேச நிறுவனம் ஒன்றின் ஊடாக துரிதமாக செய்தார்.

விக்ரர் ஐவன், சுனந்த தேசப்பிரியா ஆகியோர் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்துடன் பேசி விண்ணப்பத்தை கொடுத்து 18 நாட்களில் அகதி தஞ்ச கோரிக்கை ஏற்றுக்கொண்டு விசாவை வழங்கியிருந்தார்கள்.

சுவிஸ் தூதரகத்திற்கு வழங்குவதற்கான சகல கடிதங்களையும் தயாரித்து தந்தது சிவராம் தான். நடேசனின் மரணம், அதன் பின் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் எல்லாமே கணப்பொழுதில் நடந்து முடிந்து விட்டன.

நடேசன் கொல்லப்பட்டு 13 ஆண்டுகள் கடந்து விட்டன. இன்று அவன் பணியாற்றிய ஊடகங்களும் மறந்து விட்டன. அவனின் நண்பர்களும் மறந்து விட்டார்கள். நடேசனின் படத்தை போட்டு வியாபாரம் நடத்தும் இணையத்தளங்களுக்கும் நடேசன் பற்றி எதுவும் தெரியாது.

உயிர் ஆபத்திலிருந்து தப்புவதற்கான ஒரு வழியாக வெளிநாட்டில் ( சுவிஸில் ) தஞ்சமடைவதே எமக்கு தெரிந்த ஒரே வழியாக அப்போது தெரிந்தது.

நடேசன் சுட்டுக்கொல்லப்பட்ட போது ஐரோப்பிய நாடு ஒன்றில் தங்கியிருந்த சிவராம் அடுத்த வாரம் கொழும்புக்கு திரும்பியிருந்தார். அவரின் கல்கிசை வீட்டில் வைத்து சுவிஸ்தூதரகத்திற்கு வழங்குவதற்கான விண்ணப்பத்தை சிவராமே தயாரித்தார்.

நடேசனை கொன்றவர்கள், தம்பையாவை கொன்றவர்கள் பேராசிரியர் ரவீந்திரநாத்தை கொன்றவர்கள் இன்று மட்டக்களப்பிலே கிழக்கு மாகாணத்திலே அரசியல்வாதிகளாக வலம் வருகிறார்கள்.
கொலைகாரர்களை பாதுகாத்து பதவி வழங்கும் சாதனை இலங்கையில் மட்டும்தான் நிகழ்ந்திருக்கிறது.

யாழ். குடாநாட்டுடனான தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்ட போது வவுனியா மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களே கொழும்புடனும், சர்வதேசத்துடனும் தொடர்பாடல்களை கொண்டிருந்தது. இதன் விளைவாக மேற்குலக நாடுகளில் இயங்கிய தமிழ் ஊடகங்களுக்கான பிரதான செய்தியாளர்களாக மட்டக்களப்பு மற்றும் வவுனியாவில் இருந்தவர்களே செயற்பட்டனர்.

1980களில் சுகுணம் யோசப் என்றழைக்கப்பட்ட பி.ஜோசப் ( பிற்பட்ட காலத்தில் அவர் ஜோசப் பரராசசிங்கம் என அழைக்கப்பட்டார்) வீ.சு.கதிர்காமத்தம்பி, போன்றோர் மட்டக்களப்பில் ஊடகத்துறையை ஆட்சி செய்தனர். அதன் பின்னர் 1990களின் பின்னர் மட்டக்களப்பில் தமிழ் ஊடகத்துறையில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதை யாரும் மறுக்க முடியாது.  அந்த மறுமலர்ச்சியின் முக்கிய பங்குதாரர்களாக சிவராம், நடேசன் போன்றவர்களையே நான் பார்க்கிறேன்.

நடேசனோ அல்லது சிவராமோ விடுதலைப்புலிகள் இயக்கத்தை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தவர்கள் அல்ல. ஆனால் தமிழ் மக்களின் நியாயமான விடுதலைப்போராட்டத்தையும் அதனை முன்னெடுத்த காரணத்தால் விடுதலைப்புலிகளையும் ஆதரித்தார்கள். அதற்காக விடுதலைப்புலிகளின் அனைத்து செயற்பாடுகளையும் ஆதரித்தவர்கள் அல்ல.

1990ஆம் ஆண்டு நடுப்பகுதியில் நடேசன் மீண்டும் ஆசிரிய தொழிலுக்கு திரும்பினான். மட்டக்களப்பு இந்து கல்லூரியில் ஆசிரியராக பணியாற்ற தொடங்கினார்.   அக்காலத்தில் வீரகேசரி மட்டக்களப்பு செய்தியாளருக்கான வெற்றிடம் காணப்பட்டது. வீரகேசரியின் மட்டக்களப்பு செய்தியாளராக இருந்த நித்தியானந்தன் புளொட் மோகனால் சுடப்பட்டு படுகாயமடைந்ததை தொடர்ந்து அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார். இதனால் ஏற்பட்ட வெற்றிடம் நிரப்பபடாமல் இருந்தது.

பின்னர் 1991ஆம் ஆண்டு வீரகேசரியில் அப்போது செய்தி ஆசிரியராக பணியாற்றிய நடராசாவுடன் இருந்த நட்பு காரணமாக நடேசன் வீரகேசரியின் மட்டக்களப்பு செய்தியாளராக சேர்ந்து கொண்டார். சமகாலத்தில் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

சுமார் ஆறுமாதம் வீரகேசரியில் மட்டக்களப்பு செய்தியாளராக பணியாற்றிய நடேசனை அந்நிறுவனம் திடீரென நிறுத்தி விட்டது. நடேசனை உடனடியாக நீக்குமாறு விடுதலைப்புலிகள் வீரகேசரி நிறுவனத்திற்கு கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் நிறுத்தப்பட்டார்.

அப்போது செழியன் பேரின்பநாயகமும், நானும் மட்டக்களப்பில் நடேசனுடன் செய்தியாளர்களாக இருந்தோம். மட்டக்களப்பு வாவிக்கரை ஓரம் காந்தி சிலைக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு சிகரட் பற்றவைத்த வாறு நடேசன் கவலை தோய்ந்த முகத்தோடு சொன்னான்.

என்னிடம் 50ஆயிரம் ரூபா பணத்தை வாங்கினார்கள். அது போதாது என்று இப்போது எனது குடும்பத்திற்கு மாதாமாதம் வரும் ஒரு சிறுதொகையை கூட நிறுத்தி விட்டார்கள். ஏன் இப்படி எல்லாம் பழிவாங்குகிறார்கள் என அவர்களிடம் கேள் என நடேசன் என்னைப்பார்த்து சொன்னான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததை அன்றுதான் முதல்தடவையாக பார்த்தேன்.

அதன் பின்னர் 1992ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் மீண்டும் வீரகேசரி மட்டக்களப்பு செய்தியாளராக நியமிக்கப்பட்டார்.

அக்காலப்பகுதியில் தான் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை மீண்டும் புனரமைத்து அதன் செயற்பாடுகளுக்கு புத்துயிர் கொடுத்தோம். கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட போது அதன் முதலாவது தலைவராக ஜோசப் ( ஜோசப் பரராசசிங்கம்) செயலாளராக நாகராசா ( இப்போது ஒஸ்ரேலியாவில் இருக்கிறார்) தெரிவு செய்யப்பட்டிருந்தனர். நான் உபசெயலாளராக நியமிக்கப்பட்டேன்.

அதன் பின்னர் வந்த நெருக்கடிகளால் அச்சங்கம் செயலிழந்திருந்தது. மீண்டும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தை புனரமைத்து செயற்பட வேண்டும் என்று ஆர்வம் காட்டியவர் நடேசன் தான். அதன் விளைவாக கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மீண்டும் இயங்க ஆரம்பித்தது. அதன் தலைவராக செழியன் பேரின்பநாயகம் ( மட்டக்களப்பு மாநகர முதல்வராக இருந்தவர்) செயலாளராக நானும், பொருளாளராக நடேசனும் தெரிவு செய்யப்பட்டோம்.

செழியன் பேரின்பநாயகம் பின்னர் மாநகர முதல்வராக தெரிவு செய்யப்பட்டதும் அதன் பின்னர் பேசுவதற்கு என அழைத்த விடுதலைப்புலிகள் கல்முனையில் வீடு ஒன்றில் வைத்து செழியனை சுட்டுக்கொன்றதும் பழைய கதைகள்.

ஊடகவியலாளர் சங்கத்திற்கு ஊடகவியலாளர்களின் நலன்கள் மட்டுமல்ல தாம் சார்ந்திருக்கின்ற சமூகத்தின் நலன்களும் அவசியமாகும். அதன் விளைவாகவே கிழக்கு மாகாண மக்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வு கருத்தரங்குகள் தொடக்கம் பல்வேறு செயற்பாடுகளில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஈடுபட ஆரம்பித்தது.

1994ஆம் ஆண்டில் சந்திரிக்கா பதவிக்கு வந்த சமாதான காலத்திலேயே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த படுவான்கரைக்கு அடிக்கடி செல்ல ஆரம்பித்தோம்;. இதன் பின்னர் விடுதலைப்புலிகளுக்கும் நடேசனுக்கும் இடையில் நெருக்கம் ஆரம்பமானது.

அதன் பின்னர் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவராக நான் தெரிவு செய்யப்பட்டேன். நடேசன் உபதலைவராக தெரிவானார். செயலாளராக சண். தவராசாவும், உபதலைவர்களின் ஒருவராக ஜெயானந்தமூர்த்தியும், பொருளாளராக அரியநேத்திரனும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இந்த காலம் மட்டக்களப்பு ஊடகத்துறை வரலாற்றில் ஒரு பொற்காலம் எனலாம். இராணுவத்தினராலும் புலனாய்வு பிரிவினராலும் அவர்களுடன் சேர்ந்திருந்த ஒட்டுக்குழுக்களான புளொட் போன்ற குழுக்களாலும் அச்சுறுத்தல் இருந்த போதிலும் துணிச்சலுடன் செயற்பட்ட காலம் அது.

ஆயுதப்போராட்டம் மட்டும் விடுதலையை தந்து விடாது. மக்கள் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கில் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் மாதாந்தம் அரசியல் கருத்தரங்களை நடத்தியது. இதனை நானும் தவராசாவும் செயற்படுத்தினாலும் அதன் செயலுருவாக்கத்தில் மூல வேர்களாக இருந்தவர்கள் நடேசனும் சிவராமும் தான். அவர்களின் ஆலோசனைகள் திட்டமிடல்களே கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் தமிழ் அரசியல் பரப்பில் திடமாக கால் பதிக்க முடிந்தது.

நடேசன் மரணித்த 2004 மே 31ஆம் திகதியுடன் இவை அனைத்தும் முடங்கி விட்டது என்றே நான் கருதுகிறேன்.

இந்த 13 ஆண்டுகளில் எத்தனையோ மாற்றங்கள்… அதிலும் குறிப்பாக மட்டக்களப்பு தமிழ் ஊடகத்துறை பெரும் அவலத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. ( தொடரும் )

(இரா.துரைரத்தினம் )nadesan_22nadesan_27

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...