Thursday, October 19th, 2017

ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பிரயோகங்களுக்கு துணை போன வடமாகாண முதலமைச்சர்.

Published on June 12, 2017-10:56 am   ·   No Comments

vickiஇலங்கையில் உள்ள மாகாணசபைகளில் வடமாகாணசபையே முன் உதாரணமாக திகழ வேண்டும். ஏனெனில் தம்மை தாமே நிர்வாகிக்க கூடிய அதிகாரம் கொண்ட நிர்வாக கட்டமைப்பு தேவை என போராடியவர்கள் வடக்கு கிழக்கு மக்கள் தான்.

இதனால் தான் வடகிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத்திற்கு நடந்த தேர்தலில் தமிழ் மக்கள் என்றுமில்லாத அளவிற்கு முன்வந்து வாக்களித்திருந்தார்கள். பொதுத்தேர்தல்களில் இல்லாத ஆர்வத்தை வடமாகாணசபை தேர்தலின் போது அம்மக்கள் காட்டியிருந்தார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நான்கு கட்சிகளும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவை முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்த போது அதை எல்லாம் தாண்டி வடமாகாண சபையை நிர்வாகிக்க கூடிய ஆளுமை மிக்க ஒருவராக ஓய்வுபெற்ற நீதியமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருப்பார் என்ற பெருநம்பிக்கையோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் செயல்பட்டார்.

பளிச்சென்ற வெள்ளைவேட்டி சட்டை, சால்வை, திருநீற்றுப்பூச்சு, பொட்டு அணிந்து நேர்மை தூய்மை, இறைபக்தி என்பனவற்றின் வடிவமாக காட்சி அளித்த நீதியரசர் விக்னேஸ்வரன் வடமாகாணசபையின் முதலமைச்சராக பதவி ஏற்ற போது வடமாகாண மக்களுக்கு மட்டுமல்ல வடகிழக்கு மாகாண தமிழ் மக்களின் தலைவனாக அவர் மக்கள் மனங்களில் உயர்ந்து நின்றார்.

சம்பந்தன் அவர்களின் முடிவை மாகாணசபை தேர்தலின் போது வடமாகாண மக்கள் ஏற்று வாக்களித்திருந்தார்கள். தமிழர் அரசு மலர்ந்தது என யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த பத்திரிகை ஒன்று தலைப்பு செய்தியும் வெளியிட்டிருந்தது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் பதவி ஏற்பு வைபவம் நடைபெற்ற போது முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு கிரீடம் அணிவிக்கப்பட்டு வேல் ஒன்றும் அளிக்கப்பட்டது. தமிழ் மக்களை காக்க வந்த அவதாரமாகவே அன்று நீதியரசர் விக்னேஸ்வரனை மக்கள் பார்த்தனர்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை மட்டுமல்ல போரினால் பாதிக்கப்பட்ட வடமாகாணத்தை கட்டி எழுப்புவார், ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை நடத்துவார் என மக்கள் எதிர்பார்த்தனர்.

ஆளும் கட்சி உறுப்பினர்கள் 30பேரை கொண்ட வடமாகாணசபையின் நிர்வாகத்தை தனது அனுபவத்தின் மூலம் மிகச்சிறப்பாக நடத்துவார் என்ற நம்பிக்கை தென்னிலங்கையிலும் காணப்பட்டது.
நீதித்துறையில் நீண்டகால அனுபவம் கொண்ட ஒருவர் அதுவும் தென்னிலங்கை மக்களின் மனஉணர்வுகளை புரிந்து கொண்டு 70 ஆண்டுகளுக்கு மேலாக தென்னிலங்கையில் வாழ்ந்த ஒருவர் தமிழ் அரசியல்துறைக்கு வருவது ஆரோக்கியமான ஒன்று என வரவேற்றனர். முறிந்து போன வடக்கு கிழக்கு உறவை விக்னேஸ்வரன் போன்றவர்கள் கட்டி எழுப்புவார்கள் என அவர்கள் நம்பினர்.

ஆனால் வடமாகாணசபை இயங்க ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் 300க்கு மேற்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றியதை தவிர வேறு எதனையும் சாதித்ததாக தெரியவில்லை.
உருவத்தில் சாந்தமும் அமைதியும் நிறைந்தவராக தோற்றமளித்தாலும் அரசியலுக்கு வந்து சில காலங்களிலேயே முரண்பாடுகளை பல தரப்பிலும் வளர்த்துக்கொண்டார்.

அரசியலுக்கு வந்து இரு வருடங்களிலேயே தன்னை அரசியலுக்கு கொண்டு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் முரண்பட்டுக்கொண்டு 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் வீட்டிற்கு வெளியே வந்து வாக்களியுங்கள் என பகிரங்கமாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் மக்கள் அதனை நிராகரித்து விட்டனர்.

வடமாகாணசபை என்பது நிர்வாக கட்டமைப்பை கொண்டது. அந்த நிர்வாக கட்டமைப்பை சரியாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு முதலமைச்சரை சார்ந்ததாகும். அரசியல் கட்சி ஒன்றின் ஊடாக தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டாலும் அதன் பின்னர் நிர்வாக கட்டமைப்பின் தலைவர் என்ற நிலையில் இருந்து வடமாகாணசபை நிர்வாகத்தை வழிநடத்த வேண்டியதே அவரின் கடமையாக இருந்தது. அதை விடுத்து அரசியல்வாதியாக மாறி தமிழ் மக்கள் பேரவைக்கு தலைமை தாங்க சென்ற போதே அவரின் பெயருக்கு களங்கம் ஏற்பட ஆரம்பித்தது.

அவர் தலைமை தாங்கிய தமிழ் மக்கள் பேரவையும் பொதுநலன் கொண்டு ஆரம்பிக்கப்படவில்லை என்பதையும் சிலரின் தேவைகருதியே ஆரம்பிக்கப்பட்டது என்பதையும் மக்கள் புரிந்து கொண்டனர். அந்த பேரவை எழுக தமிழ் என சில நிகழ்ச்சிகளை நடத்தியதோடு முடங்கி விட்டது. தமிழ் மக்கள் பேரவை ஆரம்பித்த போது அது ஒரு அரசியல் கட்சியாக மாறும் என்ற நம்பிக்கையுடனேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணித்தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்கள் அதில் இணைந்தனர். ஆனால் தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாக ஒரு போதும் மாறாது என அதன் இணைத்தலைவரான விக்னேஸ்வரன் அறிவித்ததால் கஜேந்திரகுமார், மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் போன்றவர்களின் நம்பிக்கையும் தளர்ந்து போனது.

வடமாகாணசபை மீதும் அதன் முதலமைச்சர் மற்றம் அமைச்சர்கள் மீதும் மக்கள் மாகாணசபை நிர்வாகம் ஆரம்பமாகிய சில காலங்களிலேயே நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர்.

அதன் உச்சக்கட்டமாக வடமாகாண அமைச்சர்கள் மீது ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரித்த விசாரணைக்குழுவின் அறிக்கை அமைந்திருக்கிறது. குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அல்ல. ஆளும் கட்சி உறுப்பினர்களே இந்த குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருந்தனர்.

இந்த குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் மூவரை நியமித்திருந்தார்;. இருவர் முன்னாள் நீதியரசர்கள், மற்றவர் முன்னாள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபராக இருந்த இலங்கை நிர்வாக சேவையில் நீண்ட அனுபவம் கொண்டவர். வடமாகாணசபை முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் மிகவும் பாராட்ட கூடிய ஒரு விடயத்தை நீதியரசர் விக்னேஸ்வரன் செய்திருக்கிறார் என்றால் அது இந்த விசாரணைக்குழுவை நியமித்தது தான்.

விசாரணைகுழு அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்து சில நடவடிக்கைகளை எடுக்குமாறு பரிந்துரை செய்து ஒரு வாரகாலம் கடந்து விட்ட போதிலும் அந்த பரிந்துரைகளை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறது.

விசாரணைக்குழு அறிக்கையில் சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம், மீன்பிடித்துறை அமைச்சர் பி.டெனீஸ்வரன் ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஆதரமற்றவை என கூறப்பட்டிருக்கிறது. எனவே அவர்கள் இந்த குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

விவசாய அமைச்சர் பி.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராசா ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களை உடனடியாக பதவி விலக்க வேண்டும் என முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு விசாரணைக்குழு பரிந்துரை செய்திருக்கிறது.

இன்னொரு விடயத்திற்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். வழமையாக ஜனாதிபதி ஆணைக்குழுவோ வேறு விசாரணைக்குழுக்களோ அறிக்கைகளை சமர்ப்பித்தால் அவை வெளிப்படுத்தப்படுவது மிகக்குறைவாகும். ஆனால் தான் நியமித்த விசாரணைக்குழுவின் அறிக்கையை அவர் வடமாகாணசபைக்கு சமர்ப்பித்ததுடன் எதிர்வரும் 14ஆம் திகதி மாகாணசபை உறுப்பினர்களின் கருத்துக்களை பெறுவதற்கும் விடேச அமர்வு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் தான் குற்றமற்றவர், இந்த குற்றங்களுடன் தனக்கு தொடர்பில்லை என்று காட்டுவதற்காக இந்நடவடிக்கைகளை எடுத்தாலும் இக்குற்றங்கள் அனைத்தும் அவருக்கு தெரியாமல் நடந்தது என கூற முடியாது.

கல்வி அமைச்சர் த.குருகுலராசா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஆசிரிய இடமாற்றங்கள் பழிவாங்கல்கள் மற்றும் நியமனங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்தமை, வடமாகாண வலயத்தில் ஆசிரியர் மகாநாடு என்ற பெயரில் பெருமளவு நிதியை செலவழித்து வீண்விரயம் செய்தமை போன்றவை முக்கியமானவையாகும். இந்த குற்றச்சாட்டுக்களில் கல்வி அமைச்சர் குருகுலராசா குற்றவாளியாக காணப்பட்டிருக்கிறார்.

விவசாய அமைச்சர் பொ.ஜங்கரநேசன் மீது ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம், என பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. இவை அனைத்திலும் அவர் குற்றம் இழைத்தார் என்பதற்கான ஆதாரங்களும் சாட்சிகளும் உள்ளன என விசாரணைக்குழு தெரிவித்திருக்கிறது. மாகாணசபைக்கு இருக்கும் அதிகாரத்தையும் மீறி சில அதிகார துஷ்பிரயோகங்களை செய்தார் என்றும் விசாரணைக்குழு சுட்டிக்காட்டியிருக்கிறது.

• கண்காட்சி உழவர் விழா என்ற பெயரில் பல விழாக்களை நடத்தி பெருந்தொகையான நிதியை வீண்விரயம் செய்தமை,
• பெட்ரா பவர் நிறுவனத்திடமிருந்து பெற்ற 40மில்லியன் ரூபாவை மோசடி செய்தமை,
• பாத்தீனியம் என்ற பெயரில் மாகாண நிதியை மோசடி செய்தமை,
• நொதேர்ண் பவர் மின் உற்பத்தி நிறுவனம் சுன்னகத்தில் செயற்பட்ட போது அதனது கழிவு எண்ணெய் குடிநீரில் கலந்த விடயத்திற்கு ஆய்வுக்குழு ஒன்றை நியமித்து அக்குழுவின் அறிக்கை மூலம் நிறுவனத்திற்கு சாதகமான அறிக்கையை வெளியிட்டு உண்மைகளை மறைத்தமை, அந்நிறுவனத்தை காப்பாற்றியமை,
• யாழ்.பால் பண்ணை கூட்டுறவு சங்க தலைவரை காரணம் இன்றி பதவி நீக்கம் செய்து விட்டு அந்த இடத்திற்கு தனது உறவினரை நியமித்து அதிகார துஷ்பிரயோகம் செய்தமை,
• வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவரை நியாயமான காரணங்கள் இன்றி பதவி நீக்கம் செய்ததன் மூலம் அதிகார துஷ்பிரயோகம் செய்தமை,

போன்ற 10க்கு மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் மீது சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றசாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.

ஏனைய நிதி விரயங்கள், மோசடிகள் என்பனவற்றை விட யாழ். குடாநாட்டின் குடிநீரை மாசுபடுத்தி மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நொதேர்ண் பவர் நிறுவனத்தை காப்பாற்ற எடுத்த நடவடிக்கையே பெரும் குற்றமாகும். இத்தகைய ஒருவரை ஏன் தொடர்ந்து மாகாண அமைச்சராக வைத்திருக்கிறார் என்பதற்கு முதலமைச்சர் தான் பதிலளிக்க வேண்டும்.

நீர்வழங்கல் வடிகாலமைப்பு மாகாணசபை அதிகாரத்திற்கு உட்பட்டதல்ல. வடமாகாண விவசாய அமைச்சு தனக்கு சட்டபூர்வமாக அதிகாரமளிக்கப்படாதும், நிர்வாக ரீதியாக தொடர்பு அற்ற இவ்விடயத்தில் தலையிட்டு தன்னிச்சையாக ஒரு குழுவை அமைத்து பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனத்திற்கு சாதகமான அறிக்கையை அக்குழுவின் மூலம் பெற்று அந்நிறுவனத்தை பாராட்டும் வகையிலேயே அமைச்சர் ஜங்கரநேசன் செயற்பட்டிருக்கிறார் என விசாரணைக்குழு தெளிவாக தெரிவித்திருக்கிறது.

கழிவு ஒயில் கலந்திருக்கிறது என மத்திய அரசு அறிக்கை வெளியிட்ட போது அதனை மறுத்து முரண்பட்டு கொண்டமை போன்ற செயல்கள் பாதிப்பை ஏற்படுத்திய நிறுவனத்திற்கும் ஜங்கரநேசனிற்கும் இடையிலான உறவு பற்றி சந்தேகத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.

அதேபோன்று வடமராட்சி கிழக்கில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தால் தமது பிரதேசத்திற்கு பாதிப்பு என எதிர்ப்பு தெரிவித்த வடமராட்சி கிழக்கு கடற்றொழில் கூட்டுறவு சங்க தலைவரை எந்த வித நியாயமான காரணமும் இன்றி பதவி நீக்கம் செய்து விட்டு கடற்தொழிலுடன் சம்பந்தப்படாத பிரதேச செயலாளரை தலைவராக நியமித்தமையும் மிக மோசமான அதிகார துஷ்பிரயோகமாகும்.

விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் புரிந்த அதிகார துஷ்பிரயோகங்கள், மோசடிகள், நிதி வீண்விரயங்கள் அனைத்திற்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பொறுப்பாளி என்பதை அவர் மறுக்க முடியாது.
ஜங்கரநேசன் மீது ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட போது அவரை காப்பாற்றும் வகையில் விக்னேஸ்வரன் செயற்பட்டார் என்பதற்கு ஆதாரமாக ஒரு விடயத்தை குறிப்பிட முடியும். கிளிநொச்சியில் நடந்த விழா ஒன்றில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊழல் மோசடிகள், அதிகார துஷ்பிரயோகங்களை புரிந்த ஜங்கரநேசனை பாராட்டும் வகையில் அவரை ஊக்குவிக்கும் வகையிலேயே பேசியிருந்தார்.
விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் பனங்காட்டு நரி, இந்த கூச்சல் குழப்பங்களுக்கு எல்லாம் அச்சமாட்டார் என விக்னேஸ்வரன் தெரிவித்திருந்தார்.

கண்காட்சி, உழவர் விழா போன்ற பணவிரயம் செய்யப்பட்ட விழாக்களில் பிரதம விருந்தினராக முதலமைச்சர் விக்னேஸ்வரனே கலந்து கொண்டார். நோதேர்ண் பவர் விடயம், பெட்ரா பவர் நிறுவன நிதி மோசடி, யாழ். பால் பண்ணை கூட்டுறவாளர் சங்க தலைவர், வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆகியோரை பதவி நீக்கம் செய்தமை உட்பட சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு தெரிந்தே நடந்தது இந்த விடயங்கள் அனைத்தும் முதலமைச்சரின் சம்மதத்துடனேயே நடைபெற்றதாக விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் விசாரணைக்குழுவிலும் விளக்கமறித்துள்ளார்.

அதேபோன்று கல்வி அமைச்சரின் அதிகார துஷ்பிரயோகங்கள், நிதி விரயங்கள் அனைத்தும் முதலமைச்சருக்கு தெரிந்தே நடந்திருக்கின்றன.
விசாரணைக்குழு பரிந்துரைத்தவாறு இரு அமைச்சர்களையும் பதவியிலிருந்து நீக்காது மாகாண சபை உறுப்பினர்களின் கருத்தை பெற வேண்டும் என காலத்தை இழுத்தடிப்பது குற்றவாளிகளை காப்பாற்றும் நடவடிக்கையாகும்.

13ஆவது திருத்த சட்டத்தின் கீழ் மாகாண அமைச்சர்களை நியமித்தல். அவர்களை பதவி நீக்கம் செய்தல் போன்ற அதிகாரங்கள் முழுமையாக முதலமைச்சருக்கே உண்டு. இதில் சம்பந்தப்பட்ட ஆளும் கட்சியோ அல்லது மாகாணசபையோ தலையிட முடியாது.

தனக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தாது மாகாணசபை உறுப்பினர்களின் தலையில் பொறுப்பை சுமத்துவது தன்னை காப்பாற்றிக்கொள்ளவா என்ற சந்தேகமும் எழுகிறது.
அமைச்சர்கள் அதிகார துஷ்பிரயோகங்கள், நிதி விரயங்கள், மோசடிகள் செய்த போது முதலமைச்சர் அதனை பார்த்துக்கொண்டிருந்தார். அல்லது அந்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தார். நொதேர்ண் பவர் நிறுவன விடயத்தில் அவர் உடந்தையாக இருந்தார் என்பதை மறுக்க முடியாது.

கூட்டு பொறுப்பு என்ற வகையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த குற்றங்களிலிருந்து தப்பி விட முடியாது. அவர் மாகாணசபைக்கு மட்டுமல்ல, அவரை தெரிவு செய்த மக்களுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டும்.    ( இரா.துரைரத்தினம் )vicki

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...
valvai

தீருவில் பூங்காவில் மர நடுகைத் திட்டம் ஆரம்பம்…! [October 14, 2017]

தீருவிலில் அமைந்துள்ள பூங்கா வுக்கான நில மீட்பு பயங்கரவாதத் தடுப்புப் ...
president

என்னை பலவீனமாக்கினால் மீண்டும் பேய்கள் உருவாகும்- ஜனாதிபதி [October 14, 2017]

தேசிய தமிழ் தின விழாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி யாழ்.இந்துக் ...
maruthankerny hospital 3

மருதங்கேணி வைத்தியசாலைக்கு சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அன்பளிப்பு [October 7, 2017]

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியம் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு நோயாளர்களின் ...
img42

ஆன்மீகவாதி கணேசகுமாருக்கு ʺமுருகசிரோன்மணிʺ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு [September 23, 2017]

செங்காளன் சென்மாரக்கிறெத்தன் அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் தலைவர் ஆன்மீகவாதி ...
vada 8

சுவிஸ் வடமராட்சி கிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வறிய மக்களுக்கும் மாணவர்களுக்குமான உதவிகள். [September 23, 2017]

சுவிஸ் வடமராட்சிகிழக்கு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வடமராட்சி கிழக்கில் சுனாமியாலும் யுத்தத்தாலும் ...
gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...