Monday, November 20th, 2017

புலம்பெயர் தமிழர்களின் அழுத்தத்தால் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஷ். த. தே. கூ. தோற்றம் அங்கம் – 29

Published on June 20, 2017-9:32 am   ·   No Comments

Prof-Raveendranகிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் தம்பையா, ஊடகவியலாளர் நடேசன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்புக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது.  பொலனறுவை வெலிக்கந்தை பிரதேசத்தில் முகாமிட்டிருந்த பிள்ளையான் குழு கடத்தல்கள் கொலைகளில் ஈடுபட்டிருந்தது.

கிளிநொச்சியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு அரியநாயகம், விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை அரசியல்துறை பொறுப்பாளர் கௌசல்யன் உட்பட நான்கு பேர் வெலிக்கந்தை புனானை என்னுமிடத்தில் வைத்து 2005 பெப்ரவரி 7ஆம் திகதி அன்று பிள்ளையான் குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

2006 ஜனவரி 30ஆம் திகதி மட்டக்களப்பிலிருந்து வவுனியாவுக்கு பயிற்சி ஒன்றிற்காக சென்ற தமிழர் புனர்வாழ்வு கழக ஊழியர்களை வெலிக்கந்தையில் வைத்து பிள்ளையான் குழு கடத்தி சென்றது. இவர்கள் வெலிக்கந்தையில் அவர்களின் முகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். கடத்தப்பட்டவர்களில் டோசினி என்ற பெண்ணை பிள்ளையான்குழுவினர் விடுதலை செய்திருந்தனர்.
மிகுதி பேரை அவர்கள் சித்திரவதை செய்த பின்னர் படுகொலை செய்தனர். கடத்தப்பட்ட பெண்களை பிள்ளையான் குழு தங்கள் முகாமில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர் என்றும் விடுதலையான பெண்ணின் மூலம் தெரியவந்தது.

தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் வடக்கு கிழக்கு மாகாண பணிப்பாளர் காசிநாதர் கணேசலிங்கம், தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் மட்டக்களப்பு அலுவலக பிரதம கணக்காளர் தனுஷ்கோடி பிறேமினி , கணக்காளர்களான சண்முகநாதன் சுஜேந்திரன், கே.ரவீந்திரன், தம்பிராசா வசந்தராசா, சாரதி கதிர்காமர் தங்கராசா ஆகியோர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத் அவர்களை பதவி விலகுமாறு பிள்ளையான் குழு அச்சுறுத்தல் விடுத்து வந்தது. missing_tro_staffers
அந்நேரத்தில் கிழக்கு பல்கலைக்கழக கலைப்பிரிவு பீடாதிபதியாக இருந்த பால சுகுமார் அவர்களை இராணுவத்தினருடன் சேர்ந்திருந்த பிள்ளையான் குழு கடத்தி சென்று அவர்களின் முகாமில் சிறைவைத்திருந்தனர்.

பேராசிரியர் ரவீந்திரநாத் உபவேந்தர் பதவியிலிருந்து விலக வில்லை என்றால் பாலசுமாரை சுடப்போவதாக எச்சரித்தனர். இதனையடுத்து பேராசிரியர் ரவீந்திரநாத் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு தனது இராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார். இதனையடுத்து பாலசுமாரை பிள்ளையான் குழு விடுதலை செய்தது. பிள்ளையான் குழுவால் விடுவிக்கப்பட்ட பாலசுமார் பின்னர் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் குடியேறினார்.

பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களின் இராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஏற்றுக்கொள்ள மறுத்திருந்தது. அவரை தொடர்ந்து உபவேந்தராக பணியாற்றுமாறு பணித்திருந்தது.
பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களை இராஜினாமா செய்ய வைக்கும் முயற்சி பலனளிக்காததால் பிள்ளையான் குழு 2006 டிசம்பர் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் வேளையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கு வெளியே வைத்து கடத்தி சென்றனர்.

மாநாடு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு வெளியே வந்த பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களை பிள்ளையான் குழு கடத்தி சென்று சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். அவரின் சடலத்தை என்ன செய்தனர் என்பது இன்றுவரை தெரியாது.

இந்த கடத்தலுக்கு கிழக்கு பல்கலைக்கழகத்தில் உள்ளவர்களே தகவல்களை வழங்கியதாகவும் அவரின் சாரதியும் பிள்ளையான் குழுவுக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களை பிள்ளையான் குழுவே கடத்தி சென்று படுகொலை செய்தது என்பதை மகிந்த ராசபக்ச அரசாங்கம் அறிந்திருந்த போதிலும் இக்கடத்;தல் பற்றி எந்தவித விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை.

இராணுவத்தினருடன் சேர்ந்து பிள்ளையான் குழு மட்டக்களப்பில் கடத்தல்கள் கொலை கொள்ளைகளில் ஈடுபட்டதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்புக்கு வர முடியாது கொழும்பிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இக்காலப்பகுதியில் 2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த நான்கு கட்சிகளை சேர்ந்தவர்கள் 50வீதமானவர்கள் தான். ஏனையவர்கள் விடுதலைப்புலிகளின் சிபார்சில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட மறுத்தே வந்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற குழு கூட்டங்களில் செல்வராசா கஜேந்திரன் போன்றவர்கள் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு அவர்கள் கட்டுப்பட மறுத்து வந்தனர். இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உட்பூசல்கள் அதிகரித்திருந்தன.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கிளிநொச்சியிலேயே தங்கியிருந்தார். தமிழரசுக்கட்சி தலைவர் சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா ஆகியோர் தொடர்பாக தொடர்ச்சியாக முறைப்பாடுகளை செய்து வந்ததால் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் தலைமைக்கும் இடையில் கூட விரிசல்கள் தோன்றியிருந்தது.

இராணுவம் வன்னியில் கைவைத்தால் 50ஆயிரம் இராணுவத்தினரின் சவப்பெட்டிகளை தென்னிலங்கைக்கு அனுப்புவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நாடாளுமன்றத்தில் சவால் விட்டார்.

மாவிலாற்றில் தொடங்கிய போர் வாகரை மற்றும் படுவான்கரை பிரதேசம் வரை நீண்டு அப்பிதேசம் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்ததை அடுத்து சிறிலங்கா இராணுவம் வன்னியை கைப்பற்றும் முகமாக மன்னாரிலிருந்து தாக்குதல்களை ஆரம்பித்தது. மன்னார் பூநகரி பாதை கைப்பற்றப்பட்டு கிளிநொச்சியும் இராணுவத்தின் கையில் வீழ்ந்ததை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டில் சென்று தங்கியிருந்தனர்.

கிளிநொச்சி இராணுவத்தினரிடம் வீழ்ந்ததை அடுத்து தாக்குதல்களை நிறுத்துமாறு இந்தியா ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை கோரியிருந்தார்.

22பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக டில்லிக்கு சென்று இந்திய பிரதமரை நேரடியாக சந்தித்து யுத்தத்தை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்குமாறும் விடுதலைப்புலிகள் கோரியிருந்தனர். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த முயற்சிகளில் பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தமிழ்நாட்டில் சில ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட போதிலும் அது பெரிய அளவில் தமிழ்நாட்டிலோ அல்லது டில்லிக்கோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

2009 மே 18ல் யுத்தம் முடிவடைந்த பின்னர் வன்னியில் இருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனகரத்தினம் இராணுவத்தினரின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிலிருந்து திரும்பி கொழும்பில் தங்கியிருந்தனர். வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிசோர் சிவநாதன் போன்றவர்கள் அரச ஆதரவாளர்களாக மாறினர்.
இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மேலும் விரிசல்கள் ஏற்பட்டது.

2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு கட்டுப்பாடாமல் நடந்தவர்களுக்கும் விடுதலைப்புலிகளின் சிபார்சில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இணைக்கப்பட்டவர்களுக்கும் 2010 பொதுத்தேர்தலில் தமது கட்சியின் போட்டியிட அனுமதி இல்லை என அறிவித்தார்.

2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரிப்பதற்காக நான்கு கட்சிகளும் கொழும்பில் கூடிய போது இந்த அறிவிப்பை சம்பந்தன் வெளியிட்டார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2004ல் வெற்றிபெற்ற கனகசபை 2010 தேர்தலில் போட்டியிடுவதில்லை என ஒதுங்கியிருந்தார். ஜெயானந்தமூர்த்தி லண்டனில் தங்கியிருந்தார். தங்கேஸ்வரிக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் இல்லை என சம்பந்தன் அறிவித்தார். மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தமிழரசுக்கட்சியில் அங்கத்துவம் பெற்று கட்சித்தலைமைக்கு விசுவாசமாக செயல்பட்டதால் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில் அரியநேத்திரனின் பெயர் சேர்க்கப்பட்டது.

வவுனியா மாவட்டத்தில் கிசோர் சிவநாதனுக்கும் இடம்வழங்கப்படவில்லை. இதனை அடுத்து அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டார்.

2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்ற செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்சபை கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். கட்சியின் தலைமைக்கு கட்டுப்பாடாத செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இடமில்லை என சம்பந்தன் உறுதியாக தெரிவித்திருந்தார்.

வெளிநாடுகளில் இருந்த விடுதலைப்புலிகள் ஆதரவு அமைப்புக்களும் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு வேட்பாளர் பட்டியிலில் இடம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். அக்கால கட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளராக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களின் வழிநடத்தலுக்கு அமையவே செயல்பட்டு வந்தார்.

யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சார்பில் தனக்கும் செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், ஆகியோருக்கும் இடம்வழங்கப்பட வேண்டும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தினார்.

ஆனால் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் சார்பில் அ.விநாயகமூர்த்தி, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கே தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் பட்டியலில் இடம்தர முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்சபை அறிவித்திருந்தது.

செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை என்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுமாறு அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் செயலாளர் க ஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனியாக போட்டியிடுமாறும் அவை அழுத்தம் கொடுத்தன. தனியாக போட்டியிட்டால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடித்து அதிக ஆசனங்களை பெற முடியும் என்ற நம்பிக்கையையும் ஊட்டினர்.

2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற செல்வராசா க ஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனியாக போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்கள் என வெளிநாடுகளில் உள்ள தமிழர் தரப்பு நம்பியது. 25ஆயிரம் வாக்குகளை பெற்றால் நாடாளுமன்ற உறுப்பினராக வரமுடியும். ஓ ரு இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்ற க ஜேந்திரன், பத்மினி போன்றவர்களால் தலா 25ஆயிரம் வாக்குகளை பெறுவது கஷ்டமான காரியமல்ல என்றும் அவர்கள் திடமாக நம்பினர்.

இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தனியாக தேர்தலில் போட்டியிடுவது என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் தீர்மானித்ததுத ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்வதற்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் தலைவர் விநாயகமூர்த்தி விரும்பவில்லை என்றாலும் அக்கட்சியின் அதிகாரம் க ஜேந்திரகுமாரிடமே இருந்ததால் அவர் பிரிந்து செல்வது என்ற முடிவை மாற்றுவதற்கு மறுத்திருந்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்த ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் பிரிந்து செல்வதை தடுப்பதற்காக சமரச முயற்சிகளில் ஈடுபட்ட போதிலும் வெளிநாடுகளில் உள்ள சில தமிழர் தரப்பின் அழுத்தம் காரணமாக தனது முடிவை மாற்ற கஜேந்திரகுமார் மறுத்து விட்டார்.

2001ஆம் ஆண்டு கொழும்பில் வடிவேற்கரசன் வீட்டில் ஒப்பந்தம் செய்த நான்கு கட்சிகளில் 2004ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி வெளியேறியது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட முதலாவது பிளவாகும்.

2010ஆம் ஆண்டில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது. இது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்பட்ட இரண்டாவது பிளவாகும். ( தொடரும் )
( இரா.துரைரத்தினம் )Prof-Raveendran

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Gopu

மூத்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் காலமானார். [November 15, 2017]

கோபு என்றும் எஸ்.எம்.ஜி என்றும் தமிழ் பத்திகை உலகில் நன்கு ...
thanda

மட்டக்களப்பில் காத்தான்குடி பெண்ணுடன் இருந்த ஏழு இளைஞர்கள் கைது [November 13, 2017]

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவு தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ...
death

நீதிபதிக்கு கடிதம் எழுதிவிட்டு யாழில் ஒரே குடுபத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை [October 27, 2017]

கடன் பிரச்சினை  காரணமாக இன்று(27)   அரியாலைப் பகுதியைச் சேர்ந்த இளம் ...
nimalaraj-m1

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள். [October 26, 2017]

யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு ...
swiss 02

சுவிஸ் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையரின் இறுதி கிரிகைகள் பெலிஞ்சோனாவில் நடைபெற்றது. [October 21, 2017]

சுவிட்சர்லாந்து திச்சினோ மாநிலத்தில் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சுப்பிரமணியம் கரன் ( ...
vadama 3

போராலும் சுனாமியாலும் பாதிக்கப்பட்ட வடமராட்சிகிழக்கு கல்வியில் முன்னேற்றமடைந்து வருகிறது- வலயக்கல்விப்பணிப்பாளர் பாராட்டு. [October 19, 2017]

வடமராட்சி கிழக்கில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் ...
batti

மட்டக்களப்பில் புதிய உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆராய்வு! [October 17, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய நகரசபை உள்ளூராட்சி சபைகளை ஏற்படுத்த தமிழ்தேசிய ...
sampanthan

தேசிய தீபாவளி நிகழ்ச்சியில் பேசாமல் போன ஜனாதிபதி. [October 16, 2017]

பிரதமர் அலுவலகமும் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் ...
kattankudy

குழு மோதலில் ஏழு பேர் காயம். [October 16, 2017]

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில், இரு குழுக்களிடையில் ...
agri

புத்தூரில் விவசாயிகளுக்கு உணவு பயிர்கன்றுகள், பழமரக்கன்றுகள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு. [October 14, 2017]

விளைச்சல் பெருகிட ஒருமித்து எழுவோம்' தேசிய உணவு உற்பத்திப் புரட்சி ...