Wednesday, January 17th, 2018

தமது கட்டளைகளை ஏற்க மறுத்த சம்பந்தன் தரப்பிற்கு பதிலடி கொடுக்க நினைத்த புலம்பெயர் தரப்பினர். த.தே.கூ. தோற்றம் – அங்கம் 30

Published on June 28, 2017-6:21 pm   ·   No Comments

ACTCதமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி பிரிந்து சென்றது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பாரிய வீழ்ச்சியாக அமையும் என புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்கள் பெரிதும் நம்பின.

2004ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட செல்வராசா கஜேந்திரன் ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 77 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். பத்மினி சிதம்பரநாதன் 68 239 வாக்குகளையும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 60768 வாக்குகளையும் பெற்றிருந்தனர். சுரேஷ் பிரேமச்சந்திரன் 45 783 வாக்குகளையும் கிட்ணன் சிவநேசன் 43730 வாக்குகளையும் நடராசா ரவிராஜ் 42963 வாக்குகளையும் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் 42191 வாக்குகளையும் மாவை சேனாதிராசா 38779 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.

2004 பொதுத்தேர்தலில் ஆகக்கூடிய விருப்பு வாக்குகளை பெற்றிருந்த செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் 2010ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து போட்டியிட முன்வந்ததால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வியடையும் என்றும், யாழ்.மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியே முதலாவது இடத்திற்கு வரும் என்றும் ஒரு தரப்பு நம்பியது.

செல்வராசா கஜேந்திரன், ஒரு இலட்சத்து 12ஆயிரம் விருப்பு வாக்குகளை 2004ஆம் ஆண்டு பெற்றிருந்தார். அதில் அரைவாசி வாக்குகளை பெற்றாலே 5 ஆசனங்களை தமது கட்சி பெறும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் நம்பியது. இந்த நம்பிக்கையை வெளிநாடுகளில் இருந்த புலம்பெயர் தமிழர்களே கஜேந்திரகுமாருக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்கும் ஊட்டினர்.
அந்த நம்பிக்கையில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று தனியாக போட்டியிடுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினருக்கு உள்ளுர் இருந்த ஒரு சிலரும், வெளிநாடுகளில் இருந்த விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்களும் வலியுறுத்தி வந்தன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியை பிரித்தெடுப்பதற்கு வெளிநாடுகளில் இருந்த தமிழர் தரப்பே முக்கிய பங்காற்றியது. இதற்கு ஒரு காரணமும் இருந்தது.

2009ஆம் ஆண்டு மே மாதம் வரை விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. போர் முடிந்த பின்னரும் வெளிநாடுகளில் இருந்த விடுதலைப்புலிகள் சார்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமது கட்டளைப்படி நடக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதத்தின் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான சம்பந்தனும் அவரை சார்ந்தோரும் வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு கட்டுப்படாது சுயமாக இயங்க தொடங்கினர். இதனால் தமது கட்டளைப்படி நடக்க கூடிய தரப்பை பிரித்தெடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு பாடம் கற்பிக்க முற்பட்டனர். இதன் விளைவாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி பிரித்தெடுக்கப்பட்டு தனியாக போட்டியிட வைக்கப்பட்டனர்.

2009ஆம் ஆண்டுவரை வெளிநாடுகளில் இருந்த தமிழர் தரப்பினர் உள்ளுர் தேர்தல்களில் நேரடியாக தலையிட்டது கிடையாது. 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்திற்கு பிறகு வெளிநாடுகளில் இருந்த விடுதலைப்புலிகள் அமைப்புக்கள் உட்பட தமிழ் அமைப்புக்கள் 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நேரடியாக தலையிட்டன.

தமிழ் மக்களின் அரசியல் தலைமையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயற்பட்டன.
2010 தேர்தலில் வெளிநாடுகளில் தமிழர் தரப்பினர் இரண்டு தரப்பாக பிரிந்து நின்று செயற்பட்டனர்.

கனடிய தமிழ் கொங்கிரஷ் போன்ற அமைப்புக்கள் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்கின. ஏனைய தமிழர் அமைப்புக்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்கு ஆதரவை வழங்கின.
அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் யாழ்.மாவட்டத்திலும், திருகோணமலை மாவட்டத்திலும் போட்டியிட்டது. வடக்கு கிழக்கில் ஏனைய மாவட்டங்களான வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அக்கட்சி போட்டியிடவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்பை எஸ்.எம்.எஸ் கட்சி என வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியினரும் கேலியாக கூறிவந்தனர்.
எஸ்.எம்.எஸ் என்பது மூன்று பேரை குறிப்பதாகும். சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய மூன்று பேரின் முதல் எழுத்துக்களை வைத்து எஸ்.எம்.எஸ் கட்சி என அவர்கள் அழைத்தனர். சம்பந்தன், மாவை, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகிய மூன்று பேரே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இயக்குகின்றனர் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
26 பெப்ரவரி 2010 அன்று யாழ். மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் தனது வேட்பாளர் பட்டியலை சமர்ப்பித்தது.

யாழ். குடாநாட்டில் பிரபல பொருளியல் ஆசிரியரான எஸ் வரதராஜனை தலைமை வேட்பாளராக கொண்டு அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் வேட்பாளர் பட்டியலை யாழ். மாவட்டத்தில் சமர்ப்பித்தது. வரதராஜன் யாழ். மாவட்டத்தில் பொருளியல் கற்பிப்பதில் பிரபல்யமாக திகழ்ந்தவர். அவருக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருந்தனர். இதனால் பெருமளவு வாக்கு அவருக்கு கிடைக்கும் என்ற காரணத்தால் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் வரதராஜன் அவர்களை தலைமை வேட்பாளராக நிறுத்தியது.

இவருடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக ஆங்கில விரிவுரையாளர் விஜயரத்தினம் ஜோன் மனோகரன் கெனடி, கே.திருலோகமூர்த்தி, சாந்தன் தீபன், நடேசு துரைராசா, விஸ்வலிங்கம் மணிவண்ணன், பிரான்ஸிஸ் வின்சென்ட் டி போல், செல்லத்துரை சுப்பிரமணியம் ஆகியோர் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர். ACTC

திருகோணமலை மாவட்டத்திலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் வேட்பாளர் பட்டியலை சமர்ப்பித்திருந்தது. சண்முகராசா கௌரி முகுந்தன் தலைமையில் திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் வேட்பாளர்களை நிறுத்தியது.

யாழ். மாவட்டத்தில் மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரையும், திருகோணமலை மாவட்டத்தில் சம்பந்தனையும் தோற்படிப்பதே தமது இலக்கு என அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் தனது பிரசாரத்தை நடத்தி வந்தது. எஸ்.எம்.எஸ் குழுவை தோற்கடிப்போம் என யாழ்ப்பாணம் திருகோணமலை மாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் பிரசாரம் செய்து வந்தனர்.
என்றும் இல்லாத அளவிற்கு வெளிநாடுகளில் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இத்தேர்தல் சூடு பிடித்திருந்தது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் மட்டக்களப்பு அம்பாறை வன்னி மாவட்டங்களில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அம்மாவட்டங்களில் அவர்களுக்கு வேட்பாளர்கள் கிடைக்காததால் யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மட்டும் அவர்கள் போட்டியிட்டனர்.

யாழ். மாவட்டத்தில் மாவை சேனாதிராசா தலைமையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 24 பெப்ரவரி 2010 அன்று வேட்புமனுவை தாக்கல் செய்தது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றாலும் குமார் பொன்னம்பலத்தின் மரணத்தின் பின்னர் அக்கட்சியின் தலைவராக இருந்த அ.விநாயகமூர்த்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செல்லாது அக்கட்சியிலேயே போட்டியிட்டார். 2004ஆம் ஆண்டு அ.விநாயகமூர்த்திக்கு யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை. விடுதலைப்புலிகள் அவரை வவுனியா மாவட்ட வேட்பாளர் பட்டியலில் இணைத்திருந்தனர். இதனால் 2004ல் அவர் வெற்றி பெற முடியாமல் போயிருந்தது. 2010ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் யாழ். மாவட்டத்தில் அவர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டார்.

ரெலோ இயக்கத்தை சேர்ந்த சிவாஜிலிங்கம், என்.சிறிகாந்தா ஆகியோருக்கும் 2010ல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்கப்படவில்லை. யுத்தம் முடிந்த பின் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளரான சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முடிவெடுத்திருந்தனர். இந்த முடிவை ரெலோ இயக்கத்தை சேர்ந்த சிவாஜிலிங்கம், என். சிறிகாந்தா ஆகியோர் கடுமையாக எதிர்த்தனர்.

செல்வராசா கஜேந்திரன் போன்றவர்களும் இதனை எதிர்த்தனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்சபையில் பொது எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென முடிவெடுத்த பின்னர் அதற்கு எதிராக செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதுவும் சம்பந்தனுக்கு கஜேந்திரன் மீது கோபம் வர காரணமாகும். கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு கஜேந்திரன், சிவாஜிலிங்கம் போன்றவர்கள் கட்டுப்படுவதில்லை எனவே அவர்களுக்கு வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க முடியாது என சம்பந்தன் தெரிவித்திருந்தார்.

சிவாஜிலிங்கம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டிருந்தார் என குற்றம் சாட்டி ரெலோ இயக்கம் அவரை கட்சியிலிருந்து நீக்கியிருந்தது. அவருக்கு ஆதரவாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் சட்டத்தரணி என். சிறிகாந்தாவையும் ரெலோ இயக்கம் இடைநிறுத்தியிருந்தது.

இதனால் சிவாஜிலிங்கமும், சட்டத்தரணி என்.சிறிகாந்தாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்தும் விலக்கப்பட்டிருந்தனர். இதனையடுத்து 2010ஆம் ஆண்டு சட்டத்தரணி என்.சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் யாழ். மாவட்டத்தில் சுயேச்சையாக போட்டியிட்டனர்.

இந்த வேளையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மிகப்பெரிய தவறு ஒன்றையும் சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியான ரெலோ இயக்கம் தமது கட்சியின் கட்டுப்பாட்டையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவையும் மீறி செயற்பட்டார்கள் என குற்றம் சாட்டி ரெலோவின் சிரேஷ்ட உறுப்பினர்களான சட்டத்தரணி என்.சிறிகாந்தா, மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை ரெலோ தலைமைப்பீடம் தமது கட்சியிலிருந்து நீக்கியிருந்தது.

இதன் பின்னர் வல்வெட்டித்துறை நகரசபை தேர்தல் அறிவிக்கப்பட்ட போது ரெலோ இயக்கம் விலக்கி வைத்திருந்த சிவாஜிலிங்கத்தை தமிழரசுக்கட்சி ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டு வந்தார் மாவை சேனாதிராசா. இது ஓரு கட்சி தலைவர் என்ற ரீதியில் அவர் செய்த மகா தவறாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சி தனது உறுப்பினர் ஒருவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையாக நிறுத்தி வைத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் மற்றொரு கட்சி தனது கட்சி சார்பில் அவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியிலில் இணைப்பது தவறாகும். அத்தவறை மாவை சேனாதிராசா செய்தார்.

மக்கள் மத்தியில் அறவே செல்வாக்கற்ற குலநாயகம் என்பவரின் ஆலோசனைப்படி சிவாஜிலிங்கத்தை தமிழரசுக்கட்சி ஊடாக வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் மாவை சேனாதிராசா நிறுத்தினார்.
சிவாஜிலிங்கம் வல்வெட்டித்துறை நகரசபை தலைவரானால் இரண்டு வருடங்களுக்கு தனக்கு நகரசபை தலைவர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குலநாயகம் இத்திட்டத்தை தீட்டினார்.

எனினும் வல்வெட்டித்துறை நகரசபை தேர்தலில் கல்விமான் என்.அனந்தராசா கூடிய விருப்புவாக்குகளை பெற்றார். ஆனால் தனக்கே நகரசபை தலைவர் பதவி தரவேண்டும், இல்லையேல் வல்வெட்டித்துறை நகரசபையை இயங்க விடமாட்டேன் என சிவாஜிலிங்கம் அறிவித்தார்.

சொன்னது போலவே தனக்கு நகரசபை தலைவர் பதவி தரவில்லை என்பதற்காக குழப்பங்களை விளைவித்து நகரசபையை தொடர்ந்து இயக்க முடியாமல் செய்தார். இதனை அடுத்து வல்வெட்டித்துறை நகரசபை அதன் பதவி காலம் முடிவடைவதற்கு முதலே கலைக்கப்பட்டது

2010 ஆண்டு பொதுத்தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் சவாலாகவே இருந்தது

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், மற்றும் ரெலோ இயக்கத்தை சேர்ந்த சிவாஜிலிங்கம், சிறிகாந்தா ஆகியோர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக கடுமையான தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர். வெளிநாடுகளிலிருந்தும் பெருந்தொகையான நிதி தேர்தல் பரப்புரைகளுக்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்கு வழங்கப்பட்டுத
தேர்தல் திணைக்களத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி என்ற பெயரில் தமது கட்சியை பதிவு செய்து வைத்திருந்தாலும் அவர்கள் தமது பழைய கட்சிக்கு பதிலாக புதிய கட்சி ஒன்றை அறிமுகப்படுத்தினர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற பெயரில் தமது புதிய கட்சிக்கு பெயரி;ட்டிருந்தனர்.

எஸ்எம்.எம் கட்சியை தோற்கடிப்போம் என வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் சிலர் சன்னதமாடினர். அவர்களுக்கு பேரிடியாகவே 2010ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் அமைந்தன. ( தொடரும் )

( இரா.துரைரத்தினம் )Tamilarasu

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

kennady

நண்பன் கெனடியின் மரணம்- அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. – இரா.துரைரத்தினம். [January 11, 2018]

எனது மிகநெருங்கிய நண்பனும் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளரும், எத்தோப்பிய ...
vavuniya

மகாறம்பைக்குளத்தில் பெண் ஒருவர் கொலை- பெண்ணின் காதலனும் சடலமாக மீட்பு [January 9, 2018]

வவுனியா மகாறம்பைக்குளம் பொலிஸ் காவலரனுக்கு பின்புறம் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து இன்று ...
srinesan 3

ஊடகவியலாளர்கள் கல்விமான்களை வேட்டையாடியவர்கள் வாக்கு கேட்கின்றனர். [January 8, 2018]

புத்திஜீவிகள் ஊடகவியலாளர்கள் கல்விமான்களை படுகொலை செய்தவர்கள் இன்று வாக்கு கேட்கின்றனர். ...
ananda

ஆனந்தசங்கரி- சுரேஷ் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்- வேசம் கலைந்தது. [January 5, 2018]

ஆனந்தசங்கரி மற்றும் ஈ.பி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் கூட்டணியான ...
raveendran

பொதுமக்களை பொலிஸார் அச்சுறுத்தினால் உடன் அறிவியுங்கள்- பொலிஸ் ஆணைக்குழு அறிவிப்பு [January 5, 2018]

பொதுமக்களை தாக்குதல், அடித்தல் துன்புறுத்தல் மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துதல் ...
uthayakuma

யாழ் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபைகளுக்கான சூரியன், சைக்கிள் கட்சிகளுக்கு நடந்த அவலம். [December 21, 2017]

யாழ்ப்பாண மாநகரசபைக்கென தமிழர் விடுதலைக் கூட்டணி சமர்ப்பித்த வேட்புமனு உரிய ...
sritharan

கிளிநொச்சி மாவட்டத்தில் பங்களாகிக்கட்சிகளை ஒதுக்கவில்லை – சிறிதரன் விளக்கம். [December 21, 2017]

கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்குமான தேர்தல் வேட்பாளர் பட்டியலில் ...
ananthy 1

அனந்தி வந்தபோது எழுந்து நிற்காமல் மேலும் கீழும் பார்த்த வயதான காவலாளியின் வேலை பறிபோனது! [December 17, 2017]

வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரனிற்கு எழுந்து மரியாதை செய்யாத வயதான காவலாளி ...
DSC02631

முனைப்பினால் 34 பேருக்கு வாழ்வாதார உதவிகள் [December 11, 2017]

முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களின் வாழக்கைதரத்தினை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ்  இவ்வாண்டு (2017) 34 பேருக்குவாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் அத்திட்டங்கள் ஊடாகபயனாளிகள் நாளாந்த வருமானத்தைப்பெற்று வருவதாக முனைப்பின்சிறிலங்காநிறுவனத்தின் செயலாளர் இ.குகநாதன் தெரிவித்தார்.   மட்டக்களப்பிலுள்ள தெரிவு செய்யப்பட்ட  சில குடும்பங்களுக்கு  வாழ்வாதரஉபகரணங்கள்  வழங்கும் நிகழ்வு  (9.12.2017) சனிக்கிழமை மாலை மட்டக்களப்பு கச்சேரியில்வைத்து வழங்கி வைக்கப்பட்டது. முனைப்பின் சிறிலங்காநிறுவனத்தலைவர் மா.சசிகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில்  பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் கலந்து கொண்டுபயனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கி வைத்தார். சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் இந்த வாழ்வாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த வைபவத்தில்;  மட்டக்களப்பு மாவட்ட செயலக கணக்காளர் நேசராசா மற்றும்மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் மற்றும்சுவிட்சர்லாந்து முனைப்பு நிறுவனத்தின்  நிறைவேற்றுப்பணிப்பாளர்மாணிக்கப்போடி.குமாரசுவாமி உட்பட முனைப்பு சிறிலங்கா நிறுவனத்தின்  பொருளாளர்அரசரெத்தினம்  தயானந்தரவி , உப செயலாளர் எல் தேவஅதிரன்  உட்பட பலமுக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
UNO GENEVA

69வது வருடத்தை கொண்டாடும் சர்வதேச மனித உரிமை பிரகடனம் . [December 10, 2017]

மனித உரிமைகளின் வரவிலக்கணம், அடிப்படைகளை கிறேக்கர், உரோம காலத்தில் உருவானதாக ...