Monday, July 24th, 2017

சம்பந்தனின் சர்வாதிகாரப்போக்கிற்கு மேலும் வழிவகுத்த 2010ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள். த. தே கூ. தோற்றம் அங்கம் – 31

Published on July 13, 2017-8:47 pm   ·   No Comments

sampanthan and mavaiவடக்கு கிழக்கில் தமிழ் வாக்குகள் சிதறிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், கிழக்கு மாகாணத்தில் முக்கியமாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காகவும் பெரும் பிரயத்தனங்களின் மத்தியில் நான்கு கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பில் முதலாவது பிளவு 2004ல் ஆனந்தசங்கரியால் ஏற்படுத்தப்பட்டது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியையும் அதன் உதயசூரியன் சின்னத்தையும் ஆனந்தசங்கரி அபகரித்து சென்றதால் அந்த பிளவு ஏற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியும் தமிழ் மக்களின் அபிமானத்திற்குரிய சின்னமாக விளங்கிய உதயசூரியன் சின்னமும் தமிழ் மக்களின் கைகளை விட்டு சென்ற போதிலும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நம்பிக்கை வைத்திருந்தனர்.

2010ஆம் ஆண்டு புலம்பெயர் தமிழர்களின் தூண்டுதலில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் பிரிந்து சென்று யாழ்ப்பாணத்திலும் குறிப்பாக திருகோணமலையிலும் தனித்து போட்டியிட்டது தமிழ் மக்களின் ஒற்றுமையை சிதைக்கும் நடவடிக்கை என பலரும் கூறிய போதிலும் அதனை கஜேந்திரகுமார் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதேபோன்றதொரு சம்பவம் 1977ஆம் ஆண்டிலும் நடைபெற்றது.

இரு துருவங்களாக இருந்த தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்ற கட்சியை உருவாக்கி 1977ல் போட்டியிட்டன. இலங்கை தமிழர் வரலாற்றில் அத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தமிழீழக் கோரிக்கையை முன்வைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டது. அதனை சர்வஜனவாக்கெடுப்பாகவும் தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்திருந்தது.   ( ஆனால் தமிழீழத்தை தாம் ஒருபோதும் கோரவில்லை என சம்பந்தன் அண்மைக்காலத்தில் கூறிவருகிறார் )

சகல பேதங்களையும் மறந்து தமிழர்கள் தமது ஒற்றுமையின் பலத்தை காட்ட வேண்டும் என கங்கணம் கட்டியிருந்தனர்.

ஜி.ஜி.பொன்னம்பலத்தின் மறைவிற்கு பின்னர் அரசியலுக்கு வந்த குமார் பொன்னம்பலம் தனக்கு யாழ்ப்பாண தொகுதியில் போட்டியிட இடம்தர வேண்டும் என கோரியிருந்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் அங்கம் வகித்த தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் 1970ஆம் ஆண்டு தேர்தலில் எந்தெந்த தொகுதியில் வெற்றி பெற்றனவோ அத்தொகுதிகளில் அக்கட்சியை சேர்ந்தவர்களுக்கு இடமளிப்பதென தமிழர் விடுதலைக்கூட்டணியின் தேர்தல் நடவடிக்கை குழு தீர்மானத்திருந்தது.

1970ஆம் ஆண்டு நல்லூர், கிளிநொச்சி, வட்டுக்கோட்டை தொகுதிகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் வெற்றி பெற்றிருந்தது. அத்தொகுதிகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியி;ட சந்தர்ப்பம் வழங்குவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் குழு அறிவித்த போதிலும் அதனை ஏற்க மறுத்த குமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியே வேண்டும் என அடம்பிடித்தார்.

இதனையடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து வெளியேறிய குமார் பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். தமிழ் மக்கள் தங்கள் ஒற்றுமையின் பலத்தை உலகிற்கு காட்ட வேண்டும் என்றும் சிங்கள தேசத்துடன் இணைந்து வாழமுடியாது தாம் பிரிந்து செல்ல வேண்டும் என்ற அபிலாசையை வெளிப்படுத்தவதற்கான களமாக பார்க்கப்பட்ட 1977 பொதுத்தேர்தலில் குமார் பொன்னம்பலம் தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து பிரிந்து சென்று சுயேட்சையாக போட்டியிட்டதை தமிழ் மக்கள் கவலையுடனும் வெறுப்புடனுமே பார்த்தனர். Kumarகுமார் பொன்னம்பலத்தின் முடிவை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அத்தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டின. தமிழீழ கோரிக்கையை முன்வைத்து போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிராக கடுமையான பிரசாரத்தில் அன்று குமார் பொன்னம்பலம் ஈடுபட்டிருந்தார்.

அதன் பின்னர் குமார் பொன்னம்பலம் இறக்கும் வரை தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு எதிரான பிரசாரங்களிலேயே அவர் ஈடுபட்டிருந்தார். 1977ஆம் ஆண்டு தேர்தல் முடிந்த பின்னர் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியை தன்வசம் எடுத்துக்கொண்ட குமார் பொன்னம்பலம் அதன் பின்னர் 1982ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல், 1989ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தல் ஆகியவற்றில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியிலேயே போட்டியிட்டார்.

தமிழ் அரசியல் கட்சிகள் பிரிந்து நிற்க கூடாது ஒற்றுமையாக ஒரே குடையின் கீழ் இருக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியை குமார் பொன்னம்பலம் பிரித்து எடுத்திருந்தார்.

அதே போன்றுதான் தமிழ் மக்களுக்கு பலமான அரசியல் தலைமை ஒன்றின் அவசியம் கருதி உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியை கஜேந்திரகுமார் பிரித்தெடுத்து 2010ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார்.

யாழ். மாவட்டத்தில் எத்தனை தமிழ் கட்சிகள் போட்டியிட்டாலும் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதிக்காது.

ஆனால் வன்னி திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிட்டால் அது ஏனைய இனங்களுக்கே சாதகமாக அமையும். முக்கியமாக திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை காப்பாற்ற வேண்டுமாக இருந்தால் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து ஒரே சின்னத்தின் கீழ் போட்டியிட்டால் மட்டுமே தமது பிரதிநிதித்தவத்தை காப்பாற்றி கொள்pள முடியும்.

2000ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் இதற்கு சிறந்த உதாரணமாகும். வடக்கு கிழக்கில் தமிழர் தாயகத்தின் தலைநகர் திருகோணமலை என சொல்லிக்கொள்கிறோம். ஆனால் 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஒரு தமிழ் பிரதிநிதியை கூட பெற முடியாமல் போனது. 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லீம்களும் சிங்களவர்களும் மட்டுமே தெரிவு செய்யப்பட்டனர். இதற்கு காரணம் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிட்டமையாகும்.

தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றால் திருகோணமலையில் தமிழ் பிரதிநிதித்துவம் இழக்கும் அபாயம் காணப்பட்ட போதிலும் சம்பந்தனை தோற்கடிக்க வேண்டும் என்ற காரணத்தை கூறி அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் திருகோணமலையில் போட்டியிட்டது. இது கிழக்கு மாகாண மக்களுக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சி மீது வெறுப்பை ஏற்படுத்தியது என சொல்லலாம்.

கிழக்கு மாகாண மக்கள் மட்டுமல்ல யாழ்ப்பாண மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் காங்கிரஷ் வெளியேறியதை விரும்பவில்லை என்பதையே 2010ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின.

யாழ். மாவட்டத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிக்கு ஆகக்குறைந்தது ஒரு ஆசனம் கிடைக்கும் என கருத்துக்கணிப்பாளர்கள் நம்பினர். புலம்பெயர் தமிழர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிதான் அதிகூடிய வாக்குகளை பெற்று 5ஆசனங்களுக்கு மேல் பெறும் என நம்பினர்.

ஆனால் மக்கள் தீர்ப்பு எதிர்மாறாக அமைந்திருந்தது. யாழ். மாவட்டத்தில் பொருளியல் பாடத்தில் பிரபல ஆசிரியராக இருந்த வரதராஜன் அவர்களை தலைமை வேட்பாளராக கொண்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் 6362 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது. வரதராஜன் ஆசிரியரின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக குறைந்தது 2ஆயிரம் வாக்குகள் கிடைத்திருக்கும், மிகுதி 4ஆயிரம் வாக்குகளையே கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், கெனடி விஜயரத்தினம் உட்பட ஏனைய வேட்பாளர்கள் அனைவரும் சேர்ந்து பெற்றிருந்தனர்.

2004ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட செல்வராசா கஜேந்திரன் ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 77 விருப்பு வாக்குகளை பெற்றிருந்தார். பத்மினி சிதம்பரநாதன் 68 239 வாக்குகளையும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் 60768 வாக்குகளையும் பெற்றிருந்தனர். இவ்வளவு பெருந்தொகையான விருப்பு வாக்குகளை பெற்றவர்களால் 6 ஆண்டுகள் கழித்து நடந்த தேர்தலில் 6ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. விடுதலைப்புலிகள் இல்லாத சூழலில் நடைபெற்ற தேர்தல் என்பதாலா, அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

புலம்பெயர் தமிழர்களின் பெரும் ஆதரவும் நிதி உதவியும் இருந்த போதிலும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியால் ஒரு ஆசனத்தை கூட பெற முடியாமல் போய்விட்டது.

2010ஆம் ஆண்டு தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 65119 வாக்குகளை பெற்று 5 ஆசனங்களையும், ஈ.பி.டி.பி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இணைந்து போட்டியிட்டு 47622 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 12624 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 59784 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக்கட்சி 39691 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 33268 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டன. தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனியாக போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியால் 1182 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.

2010ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தன், போன்றவர்கள் சர்வாதிகாரப்போக்கிலும் தன்னிச்சையாகவும் நடந்து கொள்வதற்கு வழி ஏற்படுத்தியது. தாம் எவ்வாறு செயல்பட்டாலும் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பையே தெரிவு செய்வார்கள். அவர்களுக்கு வேறு தெரிவு கிடையாது. எனவே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமே என்ற அகங்காரமும் அவர்களுக்கு ஏற்பட்டது.

2001ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் முதல்தடவையாக நான்கு கட்சிகளும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற பெயரில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் 2002ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. இதன் பின்னர் 2002ஆம் ஆண்டு ஏப்ரலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை கிளிநொச்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். அதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் விடுதலைப்புலிகளின் பணிப்பிற்கமையவே நடைபெற்றது. சம்பந்தனோ மாவை சேனாதிராசாவோ முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக இருக்கவில்லை. அதிகாரம் அனைத்தும் கிளிநொச்சியிலேயே இருந்தது.

நாங்கள் சொல்வதை செய்ய வேண்டியதுதான் அவர்களின் கடமை என ஒரு தடவை விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கூறியிருந்தார்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடியும் வரை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாணயக்கயிறு கிளிநொச்சியிலேயே இருந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் முடிந்து விடுதலைப்புலிகள் இனி இல்லை என்றவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான சம்பந்தன் போன்றவர்கள் தங்கள் சுயரூபத்தை காட்ட முற்பட்டனர்.

இதன் வெளிப்பாடாகவே 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் 2004ல் விடுதலைப்புலிகளின் சிபார்சில் போட்டியிட்டவர்களுக்கு இடமில்லை என சம்பந்தன் அறிவித்தார்.

இந்த அறிவிப்பும் புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகள் சார்பு அமைப்புக்களுக்கு சம்பந்தன் மீது கோபமும் வெறுப்பும் ஏற்பட காரணம் எனலாம்.

இறுதி யுத்தம் முடிந்த பின்னர் தான் நினைத்தவாறு செயற்பட ஆரம்பித்த சம்பந்தன் போன்றவர்களுக்கு 2010ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகள் மேலும் உற்சாகத்தை கொடுத்தது. வாக்களித்த மக்களை மறந்து சர்வாதிகாரப்போக்கில் முடிவுகளை எடுக்க ஆரம்பித்தனர்.
( தொடரும் ) ( இரா.துரைரத்தினம் )sampanthan and mavai

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

mamanges 5

மட்டக்களப்பு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் தேர் உற்சவத்தில் பெருந்தொகையான பக்தர்கள். [July 22, 2017]

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் தேர் ...
North province

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் செயல்திறன் அற்றவர்- வடமாகாண எதிர்கட்சி தலைவர் குற்றச்சாட்டு [July 21, 2017]

அரசினால் தரப்படும் மூலதன செலவினத்திற்கான அற்ப, சொற்ப நிதியை ஏதோ ...
book_french_revolution

பிரெஞ்சுப் புரட்சி நூல் அறிமுக நிகழ்வு [July 20, 2017]

சிந்தனைக்கூடம் - யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவன ஏற்பாட்டில் ...
hisbulla and charls

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிப்பு? [July 20, 2017]

மட்டக்களப்பு மாவட்டத்தில்  உள்ள சில பிரதேச செயலாளர்களின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டு ...
kirupakaran

போலி பொய் செய்தியும் – தொழில்சார் ஊடகத்துறையும் ச. வி. கிருபாகரன், [July 16, 2017]

ஜெனிவாவில் நடாந்து முடிந்த 35வது மனித உரிமை கூட்டத் தொடரில், ...
protest14

சட்டவிரோத மீள்குடியேற்றத்திற்கு எதிராக முல்லைத்தீவில் இளைஞர்கள் பேரணி [July 16, 2017]

இலங்கையின் வட மாகாணத்தில் பரவலாக குறிப்பாக முல்லைத்தீவில் இடம்பெற்றுவருவதாகக் குறிப்பிடப்படும் ...
oddisuddan

காடுகள் அழிக்கப்பட்டு திட்டமிட்ட குடியேற்றம்- இனவிகிதாசாரத்தை பாதிக்கும் அபாயம். [July 15, 2017]

மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் நீதிமன்றத்திற்கு கல் எறிந்து நீதவானுக்கு தொலைபேசியில் ...
OHCHR

SRI LANKA: FULL STATEMENT BY BEN EMMERSON, UN SP ON HUMAN RIGHTS AND COUNTER-TERRORISM [July 14, 2017]

Colombo (14 July 2017), The United Nations Special ...
nalla

அறிவாலயம் நிறுவனத்தினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் கௌரவிப்பு நிகழ்வு. [July 13, 2017]

மட்டக்களப்பு மேற்கு வல்வி வலயத்தில் 2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் ...
saravanapavan 1

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து வருகிறார்கள். [July 13, 2017]

மாற்றுத் தலைமை வேண்டும் என்று குரல் எழுப்பும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை தமிழ் ...