Monday, August 21st, 2017

சிங்க கொடியை தூக்கி தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு களங்கம் ஏற்படுத்திய சம்பந்தன். த.தே. கூட்டமைப்பின் தோற்றம் அங்கம் 32

Published on August 6, 2017-12:17 pm   ·   No Comments

Sampanthanஇறுதி யுத்தம் முடிந்த பின்னர் தமிழ் மக்களின் உறுதியான அரசியல் தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு திகழும் என மக்கள் நம்பினர்.

ஆயுதப்போராட்டம் முடிந்தாலும் தமிழ் மக்களின் உரிமைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத்தரும், தொடர்ச்சியாக தியாகம் அர்ப்பணிப்புடன் செயல்படும் என மக்கள் நம்பினர். இந்த நம்பிக்கையில் 2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் 13ஆசனங்களையும் ஒரு தேசியப்பட்டியல் ஆசனமுமாக 14 ஆசனங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது.

மக்கள் வைத்த நம்பிக்கையை சிதறடிக்கும் வகையில் சிலர் செயற்பட ஆரம்பித்தனர். குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தன்னிச்சையாக செயற்பட ஆரம்பித்தார்.

அவரின் பேச்சும் செயலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஏனையவர்களுக்கு வெறுப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தினாலும் சம்பந்தனின் செயலை யாரும் தட்டிக் கேட்ட முடியாத அளவிற்கு சர்வாதிகாரப் போக்கில் அவர் செயற்பட்டார். சர்வாதிகாரப்போக்கு என்பதை விட தமிழின விரோதப் போக்கில் செயற்பட ஆரம்பித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அவர்களின் தமிழின விரோப் போக்கிற்கு உதாரணமாக 2012ஆம் ஆண்டு மே முதலாம் திகதி நடந்த சம்பவத்தை சொல்ல முடியும்.

மே தினம் என்பது உழைக்கும் மக்களின் உரிமைகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் வென்றெடுப்பதற்காக நடத்தப்படும் நிகழ்வு ஆகும். தமிழ் மக்களை ஒடுக்கி அடிமைப்படுத்தி அவர்களின் உரிமைகளை பறித்திருக்கும் பேரினாவாதிகளுடன் தமிழ் மக்கள் இணைந்து மேதினத்தை அனுஷ்டித்தது கிடையாது.

ஆனால் தமிழ் மக்களை பெருமளவு கொன்றொழித்த ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து மேதின ஊர்வலத்தை யாழ்ப்பாணத்தில் நடத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இணங்கினார். யாழ். நூலகத்தை எரித்து தமிழின அழிப்பை செய்த ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து மேதினத்தை நடத்த வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பலரும் வேண்டுகோள் விடுத்த போதிலும் அதற்கு இணங்க மறுத்த சம்பந்தன் ஐக்கிய தேசியக்கட்சி யாழ்ப்பாணத்தில் நடத்திய மேதின ஊர்வலத்தில் கலந்து கொண்டார். அவர் மட்டுமல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்களும் கலந்து கொண்டனர்.

அந்த மேதினக் கூட்டத்தில் தான் சம்பந்தன் தமிழ் மக்களுக்கு தலைகுனிவையும் கோபத்தையும் ஏற்படுத்திய செயலை செய்தார்.

சிறிலங்காவின் தேசியக் கொடியை தூக்கி பிடித்து தமிழ் மக்களின் நெஞ்சில் நெருப்பை கொட்டினார்.
சிறிலங்காவின் தேசியக் கொடியான வாளுடன் காணப்படும் சிங்கம் சிங்கள பேரினவாதத்தின் அடையாள சின்னமாகும். தமிழ் மக்களை அடக்கி ஆள நினைக்கும் சிங்கள பேரினவாத அடையாள சின்னமான சிங்க கொடியை எரித்ததற்காக எத்தனை இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். எத்தனை இளைஞர்கள் சிறை சென்றனர்.

முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை கொன்றொழித்த சிங்கள இராணுவம் எந்த சிங்க கொடியை வெற்றிக்கழிப்போடு ஏற்றி வைத்ததோ அதே சிங்கள பேரினவாத சிங்க கொடியை ரணில் விக்கிரசிங்காவுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் உயர்த்தி பிடித்திருப்பது கண்டு சிறிலங்காவில் அடக்குமுறைகளுக்குள் வாழும் தமிழ் மக்களும், கல்லறைகளில் வாழும் மாவீரர்களும் கண்ணீர் வடித்தனர்.

தமிழ் மக்களின் சுயகௌரவத்திற்கு இழுக்கு தேடும் வகையில் சம்பந்தன் நடந்து கொண்ட இச்செயல் தமிழ் இனத்தால் வரலாற்றில் மன்னிக்க முடியாததாகும். இந்த ஈனச்செயலை செய்த சம்பந்தன் தமிழ் தேசிய இனத்தின் அரசியல் தலைமையாக உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்க தகுதி உள்ளவரா என்ற கேள்வியையும் உணர்வுள்ள தமிழ் மக்கள் எழுப்பினர்.

சம்பந்தன் ஐயா சிங்க கொடியை விருப்பத்துடன் தூக்கி பிடிக்கவில்லை, ரணில் விக்கிரமசிங்க அக்கொடியை கொடுத்த போது தவிர்க்க முடியாத சூழலில் தான் அச்சம்பவம் நடைபெற்றதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் சம்பந்தனின் செயலுக்கு காரணம் கூறினர்.

எனினும் சம்பந்தனின் செயலினால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது மக்கள் பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்த பிரச்சினை மே மாதம் 10ஆம் திகதி கொழும்பில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எதிரொலித்தது

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டம் ஆரம்பமான போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வது தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது. அந்த விடயம் முடிந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் சிங்க கொடி பிரச்சினையை எழுப்பினார்.

ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா தேசியக்கொடியை பிடித்தது தமிழினத்திற்கு செய்யும் துரோகம், தமிழின தேசவிரோதம் என காரசாரமாக விடயத்தை தொடங்கினார்.

தம்பி அரியம் நீர் என்ன கதைக்கிறீர்… உமக்கு வரலாறு தெரியாது. என்னை சிங்க கொடியை தூக்க கூடாது என்று ஒருவராலும் தடுக்கேலாது.

தேசிய கொடியை நான் தெரியாமல் தூக்கவில்லை. நன்றாக தெரிந்து விருப்பத்தோடுதான் தூக்கினேன். என்னிடம் யாரும் அக்கொடியை திணிக்கவில்லை. சிங்க கொடியை நான் தூக்கினது இதுதான் முதல்தடவையல்ல. நான் தேசியக் கொடிக்கு எதிரானவன் அல்ல. நான் பல தடவை தேசியக் கொடியான சிங்கக் கொடியை திருகோணமலையில் ஏற்றியிருக்கிறேன். நான் நேசிக்கும் ஒரே கொடி சிங்க கொடிதான். இந்த கொடியை வடிவமைத்த குழுவில் தமிழர்களும் இருந்திருக்கிறார்கள்.
அந்த குழுவில் ஜி.ஜி.பொன்னம்பலம், நடேசன் போன்றவர்கள் இருந்தார்கள். அதில் நடேசன் மட்டுமே இந்த கொடியை எதிர்த்தார். ஆனால் ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த கொடியை ஏற்றுக்கொண்டிருந்தார். தமிழரசுக்கட்சி இந்த கொடியை எதிர்க்கவில்லை என சம்பந்தன் தெரிவித்தார்.

சிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது விருப்பத்திற்குரிய கொடி அதனை இனியும் ஏற்றுவேன், அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கு மாவை சேனாதிராசா, அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

சிறிலங்கா கொடியை நீங்கள் தூக்கி பிடித்ததால் நாங்கள் தமிழ் மக்கள் முகத்தில் முழிக்க முடியாமல் இருக்கிறது. மானம் மரியாதை போகிற விடயம். இதனால் தமிழ் மக்கள் எங்கள் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள் என அரியநேத்திரன் சொன்னார்.

நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் தமிழ் மக்கள்தான் எங்கள் பலம் என்று. ஆனால் இன்று தமிழ் மக்களின் மனங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாது நடந்துள்ளீர்கள் என மாவை சேனாதிராசா கோபத்துடன் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சுமந்திரன் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பிடித்திருப்பதோ என்ன பிழை, ஏன் இதை பெரிதாக எடுக்கிறீர்கள் என சொன்னார்.

கொழும்பில் இருக்கும் உங்களுக்கு தெரியாது. இந்த பிரச்சினையின் தாக்கத்தை யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் வந்து பாருங்கள் அப்போது தெரியும் என உறுப்பினர் ஒருவர் சுமத்திரனை பார்த்து கூறினார்.

நாங்கள் இளைஞர்களாக பாடசாலை மாணவர்களாக இருந்த போது இந்த கொடி எங்களுக்கு எதிரானது என தமிழரசுக்கட்சி தலைவர்களான நீங்கள்தான் சொல்லித்தந்தீர்கள். பாடசாலை காலத்தில் நான் இந்த கொடியை எரித்திருக்கிறேன். தமிழ் மக்களை இந்த அரசியல் யாப்போ, இந்த கொடியோ ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த கொடியை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் எங்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த கொடிக்கு பெரிய வரலாறு இருக்கிறது. இந்த கொடியை எரித்ததற்காக சிறை சென்ற இளைஞர்கள் பலர். சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பலர்.   இவ்வாறு நீங்கள் சிறிலங்காவின் தேசியக் கொடியை தூக்கி பிடிப்பதும் அதுதான் என்னுடைய கொடி என்று கூறுவதும் சிங்கள தேசத்திற்கு அடிபணிந்து போவது போல இருக்கிறது என முன்னாள் போராளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

இப்படி நடந்து கொண்டால் தமிழ் மக்களிடமிருந்து நாங்கள் அந்நியப்பட்டு போய்விடுவோம் என்றும் அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், மாவை சேனாதிராசா ஆகியோர் தமது அதிருப்தியை வெளியிட்டனர்.

தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்படவில்லை என்றால் தலைவர்கள் என்ற அந்தஸ்த்திலிருந்து தூக்கி எறியப்பட்டு விடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறிய போது நான் சரி என்று பட்டதை செய்வேன். எனக்கு ஆலோசனை சொல்ல தேவையில்லை. நான் செய்யும் காரியங்களை யாரும் கேள்வி கேட்ககூடாது என சர்வாதிகார தோரணையில் சம்பந்தன் தெரிவித்தார்.

விவாதம் காரசாரமாக போய் கொண்டிருந்த போது குறுக்கிட்ட மாவை சேனாதிராசா சாம் அண்ணன் ( சாம் அண்ணன் என்றுதான் மாவை சேனாதிராசா சம்பந்தனை அழைப்பார்) இந்த பிரச்சினை தொடர்பாக நான் உங்களோடு தனிய கதைக்க வேணும் என சொல்லி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சம்பந்தன் நடந்து கொண்ட விதமும், இறுமாப்பும், மக்களை மதிக்காத தன்மையும் எங்களை வெறுப்படைய வைத்து விட்டது. அவர் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்க தகுதி உடையவராக என நாங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

சம்பந்தன் மக்கள் மத்தியில் சிங்க கொடியை தூக்கி பிடித்த விடயம் தமிழ் மக்களின் உணர்வு சம்பந்தப்பட்ட விடயமாகும். அந்த கொடியை எரித்ததற்காக சம்பந்தனின் தொகுதியான திருகோணமலையில் தமிழ் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதையும் 1972ஆம் ஆண்டுக்கு பின் மட்டக்களப்பு திருகோணமலை, யாழ்ப்பாணம் என தமிழர் பிரதேசங்களில் சிறிலங்கா கொடியை எரித்தார்கள் என குற்றம் சாட்டி மாணவர்கள் இளைஞர்கள் பலரும் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார்கள் என்பதையும் மறந்து சம்பந்தன் செய்த காரியம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பெரும் இழுக்காக அமைந்திருந்தது

தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிர்மாறாக சம்பந்தனின் செயல்கள் அமைந்திருந்தன.

2010ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் பின்னர் மகிந்த அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. அந்த பேச்சுவார்த்தைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராhசா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த பேச்சுக்களுக்கு புறம்பாக ஜனாதிபதி மகிந்த ராசபக்சவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அலரிமாளிகையில் அடிக்கடி சந்தித்து கொண்டனர். அலரிமாளிகையில் விருந்தும் உண்டுகொண்டனர்.

ஆனால் ஜனாதிபதி மகிந்த ராசபக்சவுக்கும் ஆர்.சம்பந்தனுக்கும் இடையில் என்ன பேசப்பட்டது என யாருக்கும் தெரியாது. அந்த சந்திப்புக்கள் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் சம்பந்தன் தனது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரிவிப்பதும் கிடையாது.

சர்வதேச அழுத்தங்களிலிருந்து சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராசபக்சவையும் அவரது அரசையும் காப்பாற்றுவதற்காகவே சம்பந்தன் தனியாக மகிந்த ராசபக்சவை சந்தித்து வருகிறார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளிப்படையாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற குழு கூட்டம் ஒன்றில் மாவை சேனாதிராசாவுக்கும் சம்பந்தனுக்கும் இடையில் வாக்குவாதமும் இடம்பெற்றது.

இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிங்கள நிறுவனம் ஒன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் அரசியல் வட்டாரங்களில் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.
அது தொடர்பாக அடுத்த வாரம் பார்ப்போம் ( தொடரும் )
( இரா.துரைரத்தினம் )Sampanthan

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...
police 3

சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் உதவி தேவை- பொலிஸ் மா அதிபர் [August 1, 2017]

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் பொதுமக்களின் ...