Friday, September 22nd, 2017

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு

Published on August 24, 2017-8:29 pm   ·   No Comments

gunaseelanகட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை உறுப்பினர் குணசீலனுக்கு எதிராக கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை நிச்சயமாக – முன்னெடுக்கப்படும் என ரெலோவின் செயலாளர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

தங்கத்துரை, குட்டிமணி, சிறீ சபாரத்தினம் போன்ற தியாகிகளினால் வளர்த்தெடுக்கப்பட்ட ரெலோவில், அரசியல் கட்டாக்காலிகளுக்கு நிச்சயமாக இடமில்லை என்றும் அவர் கூறினார்.
அமைச்சர் பதவிக்கு ரெலோ விந்தனின் பெயரைப் பரிந்துரை செய்திருக்க அந்த இடத்திற்கு ரெலோவின் குணசீலன் அமைச்சராகப் பதவியேற்றிருக்கின்றமை குறித்து ரெலோவின் செயலாளர் நாயகம் சிறிகாந்தாவிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது கட்சியின் முடிவை மீறிய நடவடிக்கை. முதல்வர் அழைத்தார் என்பதற்காக ஓடிச்சென்று கபடத்தனமாக கையேந்தி பதவியைப் பெற முடியாது. கட்சியின் தீர்மானத்தைக் கருத்தில் கொண்டுதான் செயற்பட்டிருக்கவேண்டும்.

நிச்சயமாக இந்தச் செயற்பாடு தொடர்பில் அவருக்கு எதிராகக் கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும். அதனைச் செயலாளர் நாயகம் என்ற முறையில் நான் உறுதியாகக் கூறுகின்றேன்.
இது தியாகிகள் குட்டிமணி, தங்கத்துரை, சிறீ சபாரத்தினம் போன்ற பெருந்தலைவர்களால் உருவாக்கி வளர்க்கப்பட்ட கட்சி. இதில் அரசியல் கட்டாக்காலிகளுக்கு அறவே இடமில்லை. அதனை நான் தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

டெனிஸ்வரனுக்கு ஓர் நீதி குணசீலனுக்கு இன்னொரு நீதியாக அமைய முடியாது. ரெலோ சார்பில் முன்னர் அமைச்சுப் பதவியினை வகித்த பா.டெனீஸ்வரன் மாகாண சபை உறுப்பினர் சிலருடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் கையொப்பமிட்டார் என்ற காரணத்திற்காகவும் பின்னர் முதலமைச்சர் இரண்டாம் முறை நியமித்த விசாரணைக்குழு முன் தோன்ற மறுத்தமை காரணமாகவும் அவர் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது. இவ் ஒழுங்கு நடவடிக்கையின் நிமிர்த்தம் அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கவும் முதலமைச்சரைக்கோரியது. முதலமைச்சரும் கட்சின் ஆலோசனையினைப் பெற்றே நீக்கினார். ஆனால், தற்போது புதிய அமைச்சர் நியமன விடயத்தில் அவ்வாறான ஒழுங்கு பேணப்படவில்லை.

முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை நாம் அமைச்சுப் பதவியினை விட்டு நீக்க முதலமைச்சரைக் கோரியதுடன் கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தியும் உள்ளோம். இந்த இடத்தில் டெனீஸ்வரனுக்கு ஓர் நீதியையும் மற்றையவரான குணசீலனுக்கு இன்னொரு நீதியையும் வழங்க முடியாது.

ஏற்கனவே குணசீலன் மீது எமது கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் வன்னியிலுள்ள சில மாகாண சபை உறுப்பினர்களும் பின்வரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

2013 ஆம் ஆண்டு ரெலோ அதன் கட்சி உறுப்புரிமை படிவத்தினை வழங்கிய போது அதனை நிரப்புவதற்கு குணசீலன் மறுத்திருந்தார். அதற்கான காரணமாக, வடக்கு மாகாண சபை தெரிவு செய்யப்பட்டவுடன் தன்னை அமைச்சராக கட்சி நியமிக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

மன்னார் மாவட்டத்தில் ரெலோ சார்பில் மாகாண சபை உறுப்பினராகத் தெரிவாகிய குணசீலன் அம் மாவட்டத்தில் உள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் முன்னாள் மன்னார் நகர சபை உறுப்பினர் குமரேஸ் என்பவரையே தனது அரசியல் சகாவாக இணைத்துச் செயற்பட்டார்.

குணசீலன் தற்போதும் ஓர் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுப்பினர் போலவே மன்னாரில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். குணசீலன் ரெலோ கட்சியையும் ரெலோ உறுப்பினர்களையும் கண்டு கொள்வதே கிடையாது.

2015 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலத்தில் தமிழர் வாக்குகளே யார் இந்த நாட்டின் ஜனாதிபதி என்பதைத் தீர்மானிக்கப் போகின்றது என்பது எதிர்வு கூறப்பட்டது. இந்நிலையில் வடக்கு மக்கள் மகிந்தவிற்கு வாக்களிக்க மாட்டர் என்பதை மகிந்த தரப்பு முற்கூட்டியே உணர்ந்திருந்தது. எனவே வட மாகாணத்திலுள்ள கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர் எவரையேனும் பயன்படுத்தி மைத்திரிக்குச் செல்லும் வாக்கினை தடுப்பதற்கு மகிந்தவின் சகாக்கள்; பணத்துடன் வடக்கிற்கு படையெடுத்திருந்தனர்.

இவர்கள் வடக்கில் கூட்டமைப்பின் குணசீலன் உள்ளிட்ட நான்கு மாகாண சபை உறுப்பினர்களை அணுகினர். அணுகியவர்கள், கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினராகிய நீங்கள் பகீரங்கமாக பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி மகிந்தவிற்கோ மைத்திரிக்கோ தமிழர்கள் வாக்களிகக்கூடாது எனக் கோரவேண்டும். அப்படிக்கோரும் போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பான உங்கள் கட்சியாலும் உங்களாலும் மகிந்தவிற்கு வடக்கில் அளிக்கப்படுகின்ற வாக்குகளை தடுக்க முடியாது. ஆனாலும் மைத்திரியை ஆதரித்து நிற்கும் உங்களாலும் உங்கள் கட்சியாலும் மைத்திரிக்கு விழும் வாக்கினைத் தடுக்க முடியும். எனவே மகிந்தவுக்கோ மைத்திரிக்கோ தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என நீங்கள் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி பகீரங்கப் படுத்தப்படுத்த வேண்டும்.

மாநாடு நடத்திய உடன் உங்கள் நால்வருக்கும் தலா 50 இலட்சம் விகிதம் இரண்டு கோடி வழங்குவோம். மகிந்த ஜனாதிபதியாகியவுடன் மிகுதி இரண்டு கோடி ரூபா வழங்குவோம் எனப் பேரம் பேசினர். இதை மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் முற்றாக நிராகரித்தனர். ஆனால் குணசீலன் மட்டுமே வவுனியாவில் பகீரங்கமாகப் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தி மைத்திரிக்கும் மகிந்தவுக்கும் தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது எனக் கோரியிருந்தார். இவ்விடயம் தேர்தல் காலத்தில் ஊடகங்களிலும் கட்சிகள் மட்டத்திலும் பரபரப்பாகப் பேசப்பட்டும் எழுதப்பட்டும் வந்த ஒரு முக்கியமான விடயமாகும். நிலைமை இவ்வாறிருக்க நாம் எப்படி இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாதிருக்கும் என்பதையும் எமது கட்சி உறுப்பினர்கள் கேள்வியாக உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் தொடர்ச்சியாக எழுப்பிவருகின்றார்கள்.

மாகாண சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் மோசடி செய்தமை தொடர்பில் குணசீலன் ஏற்கனவே சிக்கலில் மாட்டியிருந்தார். ரூபா பத்து இலட்சத்திற்கு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது என்ற பெயரில்; துவிச்சக்கர வண்டிகள், தையல் இயந்திரம், மடிக் கணினி பேன்றவற்றை கொள்வனவு செய்த குணசீலன் அவற்றினை தன்னுடைய உறவினர்களினதும் அவரது தேர்தல் பிரசாரத்தில் பணியாற்றியோரினதும் பெயர்களில் ‘உதவித் திட்டம்’ எனக் பயனாளிகளைத் தெரிவு செய்து பின்பு அவற்றை அவர்களுக்கு வழங்கி வழங்கியவற்றை மீளச் சேகரித்து மன்னாரிலுள்ள தன்னுடைய உறவினர் ஒருவரின் சைக்கிள் கடையிலும் ஏனைய கடைகளிலும் விற்றபோது பாதிக்கப்பட்டவர்கள் சம்பவத்தினை வெளிப்படுத்தினர். பின்னர் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வடமாகாணத் திணைக்களமும் மாகாண கணக்காய்வுத் திணைக்களமும் நேரடியாகக் களத்தில் இறங்கி விற்கப்பட்ட அவ்வளவு பொருட்களையும் பறிமுதல் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றுக்கு மேலாக, குணசீலன் வைத்தியராக  இருந்தபோது முன்னைய வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் திருமதி யூட் ரஜனி அவர்களால் குற்றமிழைத்தமைக்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டு வைக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேற்கூறப்பட்ட குற்றங்கள், துஸ்பிரயோகங்களுக்காகவே குணசீலனின் பெயரை ரெலோ அமைச்சுப் பதவிக்காக ஆராயவில்லை.

இவ்வாறு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனே இவரை நிராகரித்திருந்த நிலையில் ஏனைய ரெலோ உறுப்பினர்களும் சுகாதார அமைச்சராக பதவியேற்றுள்ள குணசீலனுக்கு எதிராக நடவடிக்கைக்குத் தயாராகியுள்ளனர்.srikantha

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

gunaseelan

ரெலோ உறுப்பினர் குணசீலன் மகிந்த தரப்பிடமிருந்து 2கோடியை பெற்றார் என ரெலோ சிறிகாந்தா குற்றச்சாட்டு [August 24, 2017]

கட்சியின் முடிவை மீறி அமைச்சர் பதவியைப் பொறுப்பேற்ற ரெலோவின் மாகாணசபை ...
Thavarasa

எனது குற்றச்சாட்டுக்களை மறைமுகமாக ஏற்றுக் கொண்டார் முதலமைச்சர்: சி.தவராசா [August 17, 2017]

முதலமைச்சர் நீண்ட உரையினை ஆற்றிய போதும் நான் வினைத்திறன் அற்றவை ...
vicky-1

விக்கியை நம்பியோருக்கு கிடைத்துள்ள ஏமாற்றம்! [August 11, 2017]

வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கைகள் வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளன. விக்னே ...
Nallur Drama Festivals (1)

பன்னிரெண்டு நாடகங்களுடன் நல்லூர் நாடகத்திருவிழா பத்து நாட்கள் நடைபெறகின்றது [August 6, 2017]

நல்லூர் பெரும் திருவழாக்காலத்தில் செயல்திறன் அரங்க இயக்கம் நடத்துகின்ற நல்லூர் ...
Rudrakumar

யதார்த்தத்தை புரியாது செயற்படும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள். – இரா.துரைரத்தினம் [August 6, 2017]

தமிழீழத்திற்கான ஆயுதப்போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்தி வந்த வேளையில் புலம்பெயர் ...
NFGG-8543

கட்சியிலிருந்து அய்யூப் அஸ்மின் நீக்கம்: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவிப்பு [August 6, 2017]

“அய்யூப் அஸ்மின் கட்சியிலிருந்தும், கட்சியின் சகல நடவடிக்கைகளிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுவதோடு, ...
srikantha

முயலுடன் ஓடிக்கொண்டு வேட்டை நாயுடன் வேட்டையில் ஈடுபட முடியாது – விக்கிக்கு சிறிகாந்தா பதில். [August 3, 2017]

பொலீசாரால் குடாநாட்டின் இன்றைய நிலைமையை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்பதில் ...
azmin5

காத்தான்குடி படுகொலை – வடமாகாணசபை உறுப்பினர் அஸ்மீனுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி [August 3, 2017]

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மீன் காத்தான்குடி பள்ளிவாசல் ...
cv

பயிற்சி பெற்றவர்கள் வடக்கிலும் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது – விக்னேஷ்வரன் [August 2, 2017]

இராணுவத்தில் இருந்து ஓடிப்போனவர்கள் தெற்கிலே எவ்வாறு பாரிய குற்றங்களைப் புரிந்தார்களோ ...
raguram

தற்காலச் சூழலில் தமிழ் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் – கலாநிதி எஸ்.ரகுராம் [August 2, 2017]

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ...