Thursday, February 22nd, 2018

புனிதர்களாகவும் நீதிமான்களாகவும் மாறிவிட்ட தமிழ் இயக்கங்கள்.

Published on October 26, 2017-3:23 pm   ·   No Comments

nimalaraj-m1யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராசனின் 17ஆவது ஆண்டு நினைவு தினம் கடந்த 19ஆம் திகதியாகும். யாழ்ப்பாணத்திலோ அல்லது கொழும்பிலோ ஊடக அமைப்புக்கள் எதுவும் அஞ்சலி நிகழ்வு எதனையும் நடத்தியதாக தகவல் இல்லை.

யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ்காங்கிரஷ் கட்சி தனது அலுவலகத்தில் சிறிய அளவில் அஞ்சலி நிகழ்வை நடத்தியிருக்கிறது.

தமிழரசுக்கட்சியும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி துரோகி பட்டங்களை வழங்கி கொண்டிருக்க ஊடகவியலாளர்கள், அப்பாவி பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்த ஈ.பி.டி.பி, புளொட், போன்ற ஆயுதக்குழுக்கள் தியாகிகளாகி விட்டன. படுகொலை செய்யப்பட்ட நிமலராசன், சிவராம், திருச்செல்வம் அகிலன் போன்றவர்கள் மறக்கப்பட்டு விட்டனர். இவர்களை படுகொலை செய்தவர்கள் இன்று உத்தமர்கள் போல மக்கள் முன் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.

நிமலராசன் படுகொலை செய்யப்பட்டு 17வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்ற இக்கொலைக்கு நீதி கிடைக்கவில்லை.

2000ஆம் ஆண்டு யாழ். குடாநாடு இராணுவ முற்றுகைக்குள் இருந்த காலம். இடப்பெயர்வு, இராணுவ நெருக்கடி என மக்கள் இன்னல்களை அனுபவித்து வந்த காலம்.

2000ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஈ.பி.டி.பி யாழ். தீவகப்பகுதியிலும் யாழ். குடாநாட்டிலும் ஆயுதபலத்துடன் செய்த மோசடிகளை சுதந்திரமான தேர்தல் கண்காணிப்பாளர் என்ற ரீதியிலும் ஊடகவியலாளர் என்ற ரீதியிலும் நிமலராசன் ஆதரபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார்.
வாக்களிப்பு நிலையங்களில் நடந்த மோசடிகள் பற்றியும் வாக்களிப்பு நிலையங்களில் ஏனைய கட்சி முகவர்களை அச்சுறுத்தி கலைத்து விட்டு ஈ.பி.டி.பியினர் செய்த தேர்தல் மோசடிகளை நிமலராசன் அம்பலப்படுத்தியிருந்தார்.

தேர்தல் முடிந்து 9ஆவது நாள் ஒகஸ்ட் 19ஆம் திகதி சந்திரிக்கா அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை பதவி ஏற்றுக்கொண்டது. அந்த அமைச்சரவையில் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்றுக்கொண்டதும் தான் யாழ்ப்பாண மக்களுக்கு விடுதலை பெற்று தரப்போவதாகவும் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்யப்போவதாகவும் அவர் அறிவித்தார்.

டக்ளஸ் தேவானந்தா பதவி ஏற்றுக்கொண்டதும் அன்றிரவே தனது அபிவிருத்தி வேலைகளை ஆரம்பித்தார்.

ஓகஸ்ட் 19ஆம் திகதி இரவு 10மணியளவில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் தனது வீட்டில் இருந்த போது ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அனது அறையில் செய்தி ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும் போது மிக நெருக்கமாக வந்து அவரின் நெஞ்சை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததுடன் கிரனட் தாக்குதல்களையும் நடத்தினர்.

இதில் நிமலராசன் கொல்லப்பட்டதுடன் அவரின் தந்தை சங்கரப்பிள்ளை மயில்வாகனம், தாய் லில்லி மயில்வாகனம், நிமலராசனின் சகோதரியின் மகன் 11வயதான ஜெயதாஸ் பிரசன்னா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

நிமலராசனின் வீடு இராணுவத்தினரின் பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்தது. நிமலராசனின் வீட்டிற்கு முன்னால் இராணுவ சாவடி ஒன்றும் இருந்தது. இத்தகைய இராணுவ பாதுகாப்பு நிறைந்த இடத்திலேயே இக்கொலை நடந்தது. இராணுவத்தினரின் அனுசரணை இல்லாமல் ஆயுதத்துடன் அங்கு யாரும் நுழைந்து விட முடியாது. இராணுவத்தினருடன் சேர்ந்து இயங்கும் ஆயுதக்குழுவே இக்கொலையை செய்ததாக தமிழ்நெற் போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

நிமலராசன் பிபிசி தமிழ் மற்றும் சிங்கள சேவைகளுக்கு யாழ்ப்பாண செய்தியாளராக பணியாற்றியதுடன் தமிழ்நெற் இணையத்தளம் மற்றும் வீரகேசரி ராவய ஆகிய பத்திரிகைகளுக்கும் செய்தியாளராக பணியாற்றினார்.

நிமலராசன் சுட்டுக்கொல்லப்படுவதற்கு நான்கு நாட்களுக்கு முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி ஞாயிறு வீரசேகரி வார இதழிலும் ராவய வாரப்பத்திரிகையிலும் நடந்த முடிந்த பொதுத் தேர்தல் பற்றியும் யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் மோசடி பற்றியும் விரிவாக எழுதியிருந்தார். தீவுப்பகுதியில் ஈ.பி.டி.பி எவ்வாறு வாக்கு மோசடியை செய்தது என்பதை விரிவாக எழுதியிருந்தார். அத்தேர்தலில் ஈ.பி.டி.பி யாழ். மாவட்டத்தில் நான்கு உறுப்பினர்களை பெற்றிருந்தது.

சந்திரிக்கா அரசாங்கத்தில் முதல் தடவையாக அமைச்சராக பதவி ஏற்றதும் டக்ளஸ் தேவானந்தா தனது அபிவிருத்தி வேலைகளை அன்றிரவே ஆரம்பித்தார்.

நிமலராசனின் வீட்டில் நடந்த வெடிச்சத்தத்துடன் அபிவிருத்திகள் ஆரம்பமானது.

நிமலராசன் படுகொலை தொடர்பாக ஈ.பி.டி.பியின் முக்கிய உறுப்பினரான நெப்போலியன் உட்பட மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். நெப்போலியன் இலங்கையிலிருந்து தப்பி லண்டனுக்கு சென்ற நிலையில் அவ்வழக்கும் மூடப்பட்டு விட்டது.

நிமலராசன் படுகொலை உட்பட பல படுகொலைகளை செய்ததாக நம்பப்படும் ஈ.பி.டி.பி உறுப்பினர் நெப்போலியன் லண்டனில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு லண்டனில் அடைக்கலம் வழங்கப்பட்டுள்ளது.
தனது ஊடகவியலாளர் ஒருவரை படுகொலை செய்த கொலையாளிக்கு பிரித்தானிய அரசு அடைக்கலம் வழங்கியிருப்பதை கண்டு பி.பி.சி நிறுவனமும் மௌனம் காத்துக் கொண்டது.

ஜனநாயக கட்சிகளான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சியும் அகில இலங்கை தமிழரசுக்கட்சியும் ஒருவரை ஒருவர் துரோகி என குற்றம் சாட்டிக்கொண்டிருக்க ஆயிரக்கணக்கான மக்களை, ஊடகவியலாளர்களை படுகொலை செய்த ஈ.பி.டி.பி போன்ற கட்சிகள் இன்று தியாகிகளாக மாறிவிட்டன. தாங்களே புனிதர்கள் என்றும் மக்களுக்கான விடுதலையை பெற்றுத்தர கூடியவர்கள் தாங்களே என்றும் பறைசாற்ற ஆரம்பித்து விட்டனர்.

ஈ.பி.டி.பியை போலவே மக்கள் விரோத செயல்களிலும் ஈவிரக்கமற்ற படுகொலைகளையும் புரிந்து வந்த புளொட் இயக்கமும் இன்று மக்கள் முன் புனிதர்களாக நடமாடி வருகின்றனர்.

தமிழ் ஊடகத்துறையில் சிறந்த படைத்துறை ஆய்வாளராக திகழ்ந்த டி.சிவராமை புளொட் இயக்கம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் திகதி கொழும்பில் வைத்து கடத்தி சென்று பின்னர் இராணுவ புலனாய்வு பிரிவினருடன் சேர்ந்து படுகொலை செய்தனர். சிவராம் பாவித்த தொலைபேசி சிம் அட்டை புளொட் இயக்க கொழும்பு பொறுப்பாளராக இருந்த பீற்றர் என்பவரின் வாகனத்திலிருந்து பொலிஸார் கைப்பற்றி இருந்தனர்.

புளொட் இயக்க கொழும்பு பொறுப்பாளர் பீற்றர் உட்பட சிலர் கைது செய்யப்பட்ட போதிலும் பின்னர் அவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். சிவராமின் கொலை வழக்கும் பின்னர் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.

வவுனியாவில் புளொட் இயக்க பொறுப்பாளர் மாணிக்கதாசன், மட்டக்களப்பில் புளொட் மோகன், உட்பட புளொட் இயக்கத்தினர் யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் செய்த கொலைகள் எண்ணில் அடங்காதவை, புளொட் இயக்கத்தின் யாழ். மாவட்ட பொறுப்பாளர் சதீஸ் என்று அழைக்கப்படும் தில்லைநாதன் சந்திரமோகன் 1999ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி யாழ். நகரில் வைத்து விடுதலைப்புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். மக்கள் விரோத செயல்களில் இவர் ஈடுபட்டு வந்ததால் இவருக்கு தண்டனை வழங்கப்பட்டதாக விடுதலைப்புலிகள் அப்போது அறிவித்திருந்தனர்.

இதற்கு பழிவாங்கும் முகமாக விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர் என கூறி யாழ். நகரில் கடை ஒன்றில் வேலை செய்யும் இராஜேஸ்வரன் என்ற இளைஞனை 1999 பெப்ரவரி 20ஆம் திகதி வல்லைவெளி பகுதியில் வைத்து புளொட் இயக்கத்தினர் கடத்தி சென்றனர்.

கடத்தி செல்லப்பட்ட இந்த இளைஞரை புளொட் இயக்கத்தினர் நெல்லியடியில் உள்ள அவர்களின் முகாமில் வைத்து சித்திரவதை செய்தனர். பின்னர் அந்த இளைஞரை படுகொலை செய்து தலையை வெட்டி எடுத்து வந்து பெப்ரவரி 22ஆம் திகதி நள்ளிரவு யாழ். நகரில் போட்டனர்.

இந்த படுகொலை யாழ்.நகரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. புளொட் இயக்கத்தினர் பின்னர் யாழ். நகரில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டு வவுனியாவிலேயே தமது தளத்தை அமைத்து கொண்டனர்.

2009ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வன்னியிலிருந்து வரும் அப்பாவி பொதுமக்களை கடத்தி சென்று படுகொலை செய்ததில் பெரும் பங்கு புளொட் இயக்கத்திற்கு உண்டு.

1990 யூலை மாதத்தின் பின்னர் மட்டக்களப்பில் நடந்த கூட்டுப்படுகொலைகளை இராணுவத்தினருடன் சேர்ந்து புளொட் இயக்கத்தினரே செய்தனர் என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிழக்கு பல்கலைக்கழக படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, உட்பட மட்டக்களப்பில் நடந்த பல கூட்டுப்படுகொலைகளில் புளொட் இயக்கத்திற்கு நேரடி தொடர்பு இருப்பதாக மக்கள் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தனர்.

2009ஆம் ஆண்டுவரை மிக மோசமான படுகொலைகளை புரிந்து வந்த புளொட் இயக்கத்திற்கு அங்கீகாரம் ஒன்றை வழங்கி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைத்த பாரிய தவறை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் செய்தார். இதன் மூலம் புளொட் இயக்கம் செய்த அத்தனை படுகொலைகளுக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு சம்பந்தனையும் சார்ந்ததாகும்.

விடுதலைப்புலிகளை மட்டுமல்ல அப்பாவி பொதுமக்களையும் கடத்தி படுகொலை செய்த புளொட் இயக்கம் இன்று தமிழ் கட்சிகளுக்கிடையில் பிணக்குகளை தீர்க்கும் நடுநிலையாளராகவும் புனிதர்களாகவும் மாறியுள்ளது.

அதேபோன்று மக்கள் மத்தியில் புனிதர்களாக வலம் வரும் கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ்.
அந்த இயக்கம் இந்திய இராணுவம் இருந்த காலத்திலும் அதன் பின்னரும் செய்த படுகொலைகள் எண்ணில் அடங்காதவை.

யாழ்ப்பாணம், வவுனியா மட்டக்களப்பு திருகோணமலை என தமிழர் தேசம் எங்கும் இந்த படுகொலைகள் இடம்பெற்றன.

தந்தையை பழிவாங்குவதற்காக ஏதும் அறியாத பாடசாலை மாணவனை கடத்தி சென்று படுகொலை செய்த சம்பவமும் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

1989ஆம் ஆண்டு மே மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.திருச்செல்வத்தை படுகொலை செய்யும் நோக்கத்துடன் அவரின் வீட்டிற்கு ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் சென்றனர். இவர்கள் வருவதை கண்ட திருச்செல்வம் வீட்டின் பின் பக்கத்தால் தப்பி சென்று விடவே வீட்டில் இருந்த அவரின் மகன் அகிலனை கடத்தி சென்றனர். யாழ். சென் ஜோன் கல்லூரியில் மிகத்திறமையான மாணவனாக திகழ்ந்த அகிலனை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் கடத்தி சென்று சித்திரவதை செய்து படுகொலை செய்தனர். thiru

இது போன்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் கடத்தி சென்று படுகொலை செய்திருக்கின்றனர். ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் கடத்தி செல்பவர்களை மலவாசல் ஊடக கொக்கோ கோலா போத்தலை ஏற்றி சித்திரவதை செய்து படுகொலை செய்யும் முறையையும் கையாண்டு வந்தனர்.

அதேபோன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவராகவும் பிரஜைகள் குழு துணைத்தலைவராகவும் இருந்த வணசிங்க மற்றும் மட்டக்களப்பு பிரஜைகள் குழுத்தலைவர் வணபிதா சந்திரா பெர்ணாண்டோ ஆகியோரின் கொலை உட்பட நூற்றுக்கணக்கான கொலைகளை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கமே செய்தது.

தமிழ் மக்களின் அகிம்சை போராட்டங்களில் தன்னை ஆரம்பகாலம் முதல் இணைத்து கொண்ட இலங்கை தமிழர் ஆசிரியர் சங்க தலைவர் வணசிங்கா அவர்களை 1989ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் திகதி மட்டக்களப்பு அரசடியில் அவர் வீட்டில் வைத்து ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் படுகொலை செய்தது.

அதேபோன்று 1988ஆம் ஆண்டு யூன் 6ஆம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவில் உள்ள புனித மரியாள் தேவாலயத்திற்குள் வைத்து மட்டக்களப்பு மறைக்கோட்ட முதல்வரும் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவருமான வணபிதா சந்திரா பெர்னாண்டோ அவர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் சுட்டுக்கொன்றது. இதே தேவாலயத்திற்குள் வைத்து தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கமும் சுட்டுக்கொல்லப்பட்டார். வணபிதா சந்திரா அவர்கள் மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவராக இருந்து ஆற்றிய பணிகள் பல.

ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற இயக்கங்கள் செய்யும் அட்டூழியங்களை அவர் அம்பலப்படுத்தி வந்தார்.
அவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு சில வாரங்களுக்கு முதல் மட்டக்களப்பு நகரில் வைத்து சுகுணா என்ற தமிழ் இளம் பெண்ணையும் ரிபாயா என்ற முஸ்லீம் இளம் பெண்ணையும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் கடத்தி சென்றனர். இவர்களை வாவிக்கரை வீதியில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் வைத்து கூட்டாக பலரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். வணபிதா சந்திரா இவர்களை மீட்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். இந்திய இராணுவ கட்டளை தளபதி ஒருவருடன் தொடர்பு கொண்டதன் பின் சுகுணா என்ற தமிழ் பெண் மீட்கப்பட்டார். ஆனால் ரிபாயா என்ற முஸ்லீம் பெண்ணை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்து விட்டனர்.

இந்த விடயத்தை வணபிதா சந்திரா மனித உரிமைகள் அமைப்புக்கள் மட்டத்திற்கு கொண்டு சென்றார். இதற்கு பழிவாங்குவதற்காகவே ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் வணபிதா சந்திரா அவர்களை படுகொலை செய்தது.
அதேபோன்றுதான் 1989ஆம் ஆண்டு பருத்தித்துறை பிரஜைகள் குழு தலைவராக இருந்த சிவானந்தசுந்தரம் அவர்களை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கம் சுட்டுக்கொன்றது. யாழ்ப்பாணம் அரியாலையில் கூட்டம் ஒன்றில் உரையாற்றி விட்டு பருத்தித்துறை நோக்கி சென்ற போது அவரை ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தினர் சுட்டுக்கொன்றனர்.

அக்காலப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய பிரஜைகள் குழுக்களின் தலைவர்கள் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதேபோன்று ரெலோ இயக்கம் இந்திய இராணுவ காலத்திலும் அதன் பின்னர் சிறிலங்கா இராணுவத்துடனும் சேர்ந்து ஏனைய இயங்களுக்கு எந்த அளவிலும் குறையாத வகையில் கடத்தல்கள் படுகொலைகளை புரிந்தனர்.

மக்களின் குரலாக ஒலித்த மக்கள் தலைவர்களை படுகொலை செய்த சம்பவங்கள் இலகுவில் மறந்து விடக் கூடியவை அல்ல. அந்த கொலைகளை புரிந்தவர்கள் அதற்கு உத்தரவிட்டவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

ஆயிரக்கணக்கான படுகொலைகளை புரிந்தவர்கள், நூற்றுக்கணக்கான மக்கள் காணாமல் போவதற்கு காரணமானவர்கள் இன்று புனிதர்களாகி விட்டனர்.

தமிழரசுக்கட்சி போன்ற ஜனநாயக கட்சிகள் இன்று துரோகிகளாகி விட்டனர்.

( இரா.துரைரத்தினம் )0001

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...