Thursday, February 22nd, 2018

வடக்கு கிழக்கில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு- கேள்விக்குறியாகி வரும் தமிழர்களின் இருப்பு.

Published on January 29, 2018-1:31 pm   ·   No Comments

Amparaiமுல்லைத்தீவு ஒட்டிசுட்டான் கூழாமுறிப்பு பகுதியில் 1100 ஏக்கர் காட்டுபகுதி அழிக்கப்பட்டு அங்கு 700 முஸ்லிம் குடும்பங்களை குடியேற்றும் திட்டதுக்குரிய ஆரம்ப வேலைகள் அங்கு நடைபெற்று வருகின்றன.

முல்லைத்தீவில் நடைபெறும் காடழிப்பு நடவடிக்கை இது முதல் சம்பவம் அல்ல. கடந்த சில மாதங்களுக்கு முதல் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் வழங்கிய செவ்வி ஒன்றில் மன்னாரிலிருந்து நேராக முல்லைத்தீவு வரை காடுகள் அழிக்கப்பட்டு வருவதை கூகிள் படத்தில் காணலாம் என தெரிவித்திருந்தார்.

இந்த காடுகள் இரு நோக்கத்திற்காக அழிக்கப்படுகிறது. முல்லைத்தீவு காட்டிலேயே முதிரை, தேக்கு, வேம்பு உட்பட பெறுமதியான மரங்கள் காணப்படுகின்றன. இந்த மரங்கள் நாளுக்கு நாள் தறிக்கப்பட்டு வவுனியா ஊடாக தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மரக்கடத்தல்காரர்களுக்கு படையினரும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.

சில சந்தர்ப்பங்களில் இந்த மரக்கடத்தல்கள் வவுனியா பொலிஸ் காவலரணில் பிடிபடுவதுண்டு. ஆனாலும் மரக்கடத்தல்கள் தினமும் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளது. இந்த மரக்கடத்தலின் பின்னணியில் அமைச்சர் ஒருவர் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.

வடமாகாணத்தில் காட்டு வளம் உள்ள பகுதி முல்லைத்தீவு மாவட்டமாகும். முல்லைத்தீவின் காடுகள் அழிப்பதால் அப்பகுதியில் விவசாயம் முற்றாக பாதிக்கப்பட்டு அப்பிரதேசம் பாலைவனமாக மாறும் அபாயம் காணப்படுகிறது.

இந்த காடழிப்பின் இன்னொரு நோக்கம் முஸ்லீம் சிங்கள குடியேற்றமாகும்.
வடக்கில் குறிப்பாக வன்னி மாவட்டத்தில் முஸ்லீம் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி இனவிகிதாசார ரீதியில் சனத்தொகை பரம்பலை அதிகரித்தால் வன்னி மாவட்டத்தில் தனது அரசியல் இருப்பை தக்க வைத்துக்கொள்ளலாம் என்ற நோக்கிலும் அமைச்சர் றிசாத் பதியுதீன் இந்த குடியேற்றங்களை செய்து வருகிறார்.

அமைச்சர் றிசாத் பதியுதீனின் ஏற்ட்டில் வடக்கில் முஸ்லிம்களின் சனத்தொகையை அதிகரிக்கும் நோக்குடன் புத்தளம் போன்ற வெளிமாவட்டங்களிலிருக்கும் முஸ்லீம்களை முல்லைத்தீவில் குடியேற்றும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

அமைச்சர் றிசாத் பதியுதீன் வன்னியில் காடுகளை அழித்து முஸ்லீம்களை குடியேற்றுவது இது முதல் சம்பவம் அல்ல. யுத்தம் முடிவடைந்த பின்னர் 7வருடங்களுக்கு மேலாக காடழிப்பும் குடியேற்றங்களும் நடைபெற்று வருகின்றன.

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள வனவிலங்கு சரணாலயங்களுக்குச் சொந்தமான 18 ஆயிரம் ஏக்கர் காடுகளை சட்டத்தை மீறி வெட்டி அபகரித்துள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது, சுற்றுச் சூழல் சங்கங்கள் நான்கினைச் சேர்ந்த முக்கியஸ்தர்கள் ஏற்கனவே குற்றம் சாட்டியிருந்தன.

அமைச்சர் றிசாத் பதியுதீன் வன்னி மாவட்டத்தில் தான் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்காக புத்தளத்தில் உள்ள முஸ்லீம்களை சட்டவிரோதமாக வன்னியில் குடியேற்றி வருகிறார்.

இதற்காக மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள பாதுகாக்கப்பட்ட 14 காடுகளில் மரங்களை வெட்டினாரெனவும் சுற்றுச் சூழல் நீதிக்கான மையம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை, இலங்கை சுற்றுச் சூழல் காங்கிரஸ், இயற்கைக்கான பௌத்த அமைப்பு ஆகியன ஏற்கனவே ரிஷாத் மீது குற்றம்சாட்டியுள்ளன.

இந்நடவடிக்கையானது சுற்றுச் சூழல் சட்டத்தை மீறி காடுகள் வெட்டப்பட்டுள்ளதையே எடுத்தியம்புவதாக, சுற்றுச் சூழல் நிதிக்கான மையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே கூறினார். மீள்குடியேற்றத்துக்காக மடுப்பகுதியில் கூடுதல் நிலங்களை விடுவிக்க வேண்டுமென அதிகாரிகளை அமைச்சர் ரிஷாத் நிர்ப்பந்தித்து வருகிறாரெனவும் அவர் குற்றம் சாட்டினார்.

உள்நாட்டில் இடம்பெயந்தோரை மீளக் குடியமர்த்தும் அலுவல்கள் 2012ஆம் ஆண்டில் முடிந்த பின்னரும், மீளக் குடியமர்த்தலுக்காகவென காடுகள் ஏன் அழிக்கப்படுகின்றன எனவும் விதானகே கேள்வியெழுப்பினார்.
பெரியமடு, கல்லாறு, கருங்காலிபுரம் ஆகிய இடங்களில் காடுகள் அழிக்கப்பட்டதாக சுற்றுச் சூழல் பாதுகாப்பு அறக்கட்டளை பணிப்பாளர் சஞ்ஜீவ சணிகர சுட்டிக்காட்டினார்.

மேலும் வில்பத்து விலங்குகள் சரணாலயத்தின் வழியே 100 கிலோமீற்றர் வீதி அமைக்கப்பட்டதாகவும் இதுவே மாங்குளத்திலும் நடந்துள்ளதெனவும் அவர் மேலும் கூறினார்.

ஏற்கனவே ஒட்டிசுட்டானில் அரச காணிகளில் முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். தற்போது மீண்டும் 1100 ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டு 700 முஸ்லீம் குடும்பங்களை குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த திட்டமிடப்பட்ட குடியேற்ற திட்டங்களை அமைச்சர் ரிசாத் பதியுதீன் வடமாகாண சபைக்கு தெரியாமலும் அதன் ஆலோசனை பெறாமலும், ஒட்டுசுட்டானிற்கு எதுவித சம்பந்தமும் இல்லாத முஸ்லிம்களை குடியேற்றும் வகையில் நெறிப்படுத்தி வருகின்றார்.

தனக்கு இருக்கும் அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அங்குள்ள அரச அதிகாரிகளை அச்சுறுத்தி திட்டமிட்ட குடியேற்றங்களை அமைச்சர் றிசாத் பதியுதீன் மேற்கொண்டு வருகிறார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காடுகள் அழிக்கப்பட்டு முஸ்லீம் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் சமகாலத்தில் முல்லைத்தீவு கரையோரப்பகுதிகளில் சிங்கள குடியேற்றமும் செய்யப்படுகிறது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் காணிகளில் குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களுக்காக ஹிபுல் ஓயா எனற பெயரில் பாரிய நீர்ப்பாசனத்திட்டம் ஒன்றை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்கள் வயல்கள் குளங்களை அபகரித்து இத்திட்டத்தை மேற்கொள்ளவும் மேலும் ஒரு தொகுதி சிங்களவர்களை அங்கு குடியேற்றவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த காலங்களில் கல்லோயா மதுறோயா போன்ற நீர்ப்பாசனத்திட்டங்களின் மூலமே கிழக்கில் பெருந்தொகையான சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ் கிராமங்கள் சிங்கள கிராமங்களாக மாற்றப்பட்டன.

அதேபோன்ற ஒரு திட்டத்தையே முல்லைத்தீவு மாவட்டத்திலும் அரசாங்கம் மேற்கொள்ள உள்ளது.
வவுனியா வடக்கு பகுதியில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த நிலங்களை அபகரித்து சிங்களவர்களை குடியேற்றப்பட்டிருக்கிறது. இப்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சொந்தமான சூரியனாறு, பெரியாறு போன்ற ஆறுகளை வழிமறித்து ஹிபுல் ஓயா என்ற பெயரில் பாரிய நீர்ப்பாசனத்திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்டத்திற்காக இராமன்குளம், கொட்டோடைக்குளம், வெள்ளான்குளம், ஓயாமடுக்குளம் ஆகிய குளங்கள் மூடப்பட்டுள்ளதுடன் தமிழ் மக்களால் இந்த குளங்களில் நீர்ப்பாசனம் பெற்று செய்கை பண்ணப்பட்ட பெருமளவு வயல்களும் அபகரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் பிரதான இலக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்கள் வவுனியா வடக்கு பகுதியின் எல்லைக்கி;ராமங்களில் தமிழ் மக்களுக்கு சொந்தமான பூர்வீக நிலங்களை அபகரித்து சிங்களவர்களை குடியேற்றுவதாகும். இதற்காகவே ஹிபுல் ஓயா நீர்ப்பாசத்திட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்த பகுதியில் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் யுத்தம் முடிவடைந்த பின்னர் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டனர். இவர்கக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச காணி ஆவணங்களையும் வழங்கியிருந்தார்.
மயிலங்குளம் கிராமத்தில் ஏற்கனவே குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காகவும் இனி குடியேற்றப்பட இருக்கும் மக்களுக்காகவுமே இந்த நீர்ப்பாசனத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

மகிந்த ராசபக்ச ஆட்சிக்காலத்தில் மட்டுமல்ல தற்போதைய அரசாங்க காலத்திலும் முல்லைத்தீவு மாவடடத்தில் வேகமாக சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் மூலம் சிங்களவர்களுக்கான தனியான பிரதேசசபை, தனியான தொகுதி என்பன கூட உருவாக்கப்படலாம்.

1948ஆம் ஆண்டு கல்லோயா திட்டத்தின் வடக்கு கிழக்கை இணைக்கும் பகுதி துண்டாடப்பட்டு சிங்கள குடியேற்;றங்கள் மேற்கொள்ளப்பட்டது. 1959ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் சிங்கள குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டு அம்பாறை தனி சிங்கள தொகுதி உருவாக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டு தமிழர் தாயகத்தின் தலைநகர் என சொல்லப்படும் திருகோணமலை மாவட்டத்தில் சேருவில தனிச்சிங்களவர்கள் வாழும் தொகுதி உருவாக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகவே வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள முஸ்லீம் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஹிபுல் ஓயா நீர்ப்பாசனத்திட்டத்தின் ஊடாக வன்னியில் தனியான சிங்கள தொகுதி ஒன்று உருவாக்கப்படலாம்.
இதுவரை முல்லைத்தீவில் 3336 குடும்பங்களை சேர்ந்த 11189 சிங்களவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

வடக்கில் சிங்கள முஸ்லீம் குடியேங்கள் மேற்கொளப்படுவதை போன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய நில பிரதேசங்கள் முஸ்லிம் தரப்புகளால் சட்டவிரோதமாக கையக்கப்படுத்தபடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழர் பிரதேசங்களில் உள்ள நிலங்கள் அபகரிப்பதற்கு சில தமிழ் அரச அதிகாரிகளும் இலஞ்சம் பெற்றுக்கொண்டு துணை போகின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சரணபாலபுரம் பிரதேசத்துடன் இணைந்த பழமையான கண்டக்குழிக்குளம் தற்போது முஸ்லிம்களால் சட்ட விரோதமாக அபகரிக்கப்பட்டுள்ளது.

சரணபாலபுரத்தை பதூர் நகராகவும், கண்டக்குளிக்குளத்தை பதூர் குளமாகவும் பெயர் மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இக்குளம் ஆரம்பகாலத்தில் தர்மரத்தினம் வன்னியனாரின் குடும்ப பராமரிப்பிலேயே இருந்து வந்தது. இவர்களின் பெயரிலேயே அந்த பிரதேச நிலங்கள் இருந்தன. தர்மரத்தினம் வன்னியனார் என்பவர் ஊடகவியலாளர் சிவராமின் பேரனாகும்.

தர்மரத்தினம் வன்னியனார் இறந்த பின்னர் இக்குளமும் அவருக்கு சொந்தமான நிலங்களும் கவனிப்பார் அற்று காணப்பட்டது.

இக்குளமானது 70 ஏக்கர் விவசாய காணியின் நீர் பாய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது இக்குளம் இருந்தஇடம் தெரியாத அளவிற்கு பற்றைகள் அழிக்கப்பட்டு மண்ணிட்டு நிரப்பப்பட்டு சட்டவிரோத கட்டடங்கள் கட்டப்படுகின்றது, தர்மரத்தினம் வன்னியனார் குடும்பத்திற்கு சொந்தமான இந்த காணியில் தற்போது முஸ்லீம்களால் அரிசி ஆலை ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இந்த பிரதேசம் முழுவதும் இப்போது முஸ்லீம்களுக்கு சொந்தமாகி உள்ளது.

2009ஆம் ஆண்டுக்கு பின்னர் போலியான உறுதி இலக்கமிட்டு சட்டவிரோதமான வகையில் பெருந்தொகை பணத்தை பெற்றுக்கொண்டு முஸ்லிம்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

இந்த குளமும் அதனை அண்டிய வயல் நிலங்களும், மேட்டு நிலங்களும் தர்மரத்தினம் வன்னியனார் குடும்பத்திற்கு சொந்தமானதாகும். அக்குடும்பத்தில் இருந்த வாரிசுகளில் ஒருவரான சிவராம் இறந்த பின்னர் இதற்கு உரிமை கோருவதற்கு யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட சில தமிழ் அதிகாரிகள் கள்ள உறுதி முடித்து அந்நிலங்களை முஸ்லீம்களுக்கு விற்றுள்ளனர்.

வடக்கிலும் கிழக்கிலும் அதிகரித்து வரும் இந்த காணி அபகரிப்புக்கள் எதிர்காலத்தில் தமிழர்களின் இருப்பை முற்றாக கேள்விக்குறியாக்கி விடும்.

( இரா.துரைரத்தினம் )p06 (3)AmparaiAmparai. 1

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...