Thursday, February 22nd, 2018

பிரதான அரசியல் கட்சிகளின் எதிர்கால அரசியலை நிர்ணயிக்க போகும் உள்ளுராட்சி சபை தேர்தல்கள்

Published on February 8, 2018-9:40 pm   ·   No Comments

TNAதென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி பிரதான கட்சிகள் தமது எதிர்கால தேசிய அரசியக்கான ஆதரவு தளம் எப்படி இருக்கிறது என நாடி பிடித்துப்பார்க்கும் தேர்தலாக உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் அமைந்துள்ளது.

இலங்கையின் வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு இம்முறை உள்ளுராட்சி தேர்தலுக்கான பிரசாரங்கள் அமைந்துள்ளன.

இது தேசிய அளவில் ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தலோ அல்லது மாகாண ஆட்சியை கைப்பற்றுவதற்கான தேர்தலோ அல்ல. மாகாணசபைகளுக்கு கீழ் இயங்கும் உள்ளுராட்சி சபைகளை நி;ர்வாகிப்பதற்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் தேர்தலாக இருந்த போலும் என்றும் இல்லாத அளவிற்கு பாரிய அளவில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு சில காரணங்கள் இருக்கலாம்.

சுமார் 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வட்டார முறையில் தேர்தல் இடம்பெறுவதும் இத்தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

இப்போது 50வயதிற்கு உட்பட்டவர்கள் உள்ளுராட்சி தேர்தல் ஒன்றில் வட்டார ரீதியாக வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு வாக்களித்த சந்தர்ப்பம் கிடைத்திருக்காது.

முன்னர் வட்டார ரீதியான தேர்தல் நடைபெற்ற காலத்தில் பிரதேசசபை முறை இருந்ததில்லை. கிராமசபைகள், பட்டிணசபைகள், நகரசபைகள், மாநகரசபைகள் தான் இருந்தன.

பின்னர் 1978ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு திருத்தத்தில் விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதுடன் கிராமசபைகள், பட்டணசபைகள் பிரதேசசபைகளாக மாற்றப்பட்டன.
வட்டாரரீதியான தேர்தல்கள் நடைபெற்ற போது கிராமசபைகள், பட்டிணசபைகளுக்கு அரசியல் கட்சிகள் போட்டியிடுவதில்லை. ஒவ்வொரு வட்டாரத்திலிருந்தும் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தமது சபைகளுக்கான தலைவர் உபதலைவர்களை தெரிவு செய்து கொள்வார்கள். அரசியல் கட்சிகளின் ஆதிக்கமோ தலையீடுகளோ இந்த சபைகளில் இருந்தது கிடையாது. சில மாநகரசபைகளுக்கான தேர்தல்களில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்திய சம்பவங்கள் உண்டு.

1978ஆம் ஆண்டின் பின்னர் விகிதாசார ரீதியான தேர்தல்களே பாராளுமன்ற மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கு நடத்தப்பட்டன.

விகிதாசார தேர்தல் முறையால் விருப்பு வாக்கை பெறுவதற்காக ஒரே கட்சியை சேர்ந்தவர்களுக்கிடையே மோதல்கள் ஏற்பட்ட சம்பவங்களும் உண்டு.

விருப்பு வாக்குமுறை ஒழிக்கப்பட்டு நடத்தப்படும் முதலாவது தேர்தலாக இந்த உள்ளுராட்சி தேர்தல் அமைந்திருக்கிறது வட்டாரரீதியான தெரிவும் விகிதாசார ரீதியான தெரிவும் கலந்த கலப்பு தேர்தல் முறையில் இம்முறை உள்ளுராட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.

1978ம் ஆண்டு விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முதல் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு நடந்த வட்டார ரீதியான தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்பட்டனர். அது போன்று புதிய கலப்பு முறை தேர்தலிலும் அந்த வாக்களிப்பு நிலையத்திலேயே வாக்குகள் எண்ணப்பட்டு அந்த வட்டாரத்தில் வெற்றி பெற்ற கட்சி அல்லது சுயேச்சைக்குழு நியமித்தவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

முன்னர் வட்டாரரீதியான தேர்தல்களில் அரசியல் கட்சிகள் போட்டியிடாததால் வட்டாரத்தில் போட்டியிடுபவரின் பெயரும் அவரின் சின்னமுமே வாக்குசீட்டில் இருக்கும். ஆனால் இம்முறை அரசியல் கட்சிகள் சுயேச்சைக்குழுக்களின் பெயர்களும் அவர்களுக்கான சின்னங்களுமே இருக்கும். அவ்வட்டாரத்தில் போட்டியிடுபவர்களின் பெயர்கள் வாக்காளர்களுக்கு வாக்காளர் அட்டையுடன் அனுப்பபட்டிருக்கிறது.

இது இலங்கையில் ஆட்சி மாற்றதை ஏற்படுத்தப்போகும் தேசிய மட்ட தேர்தல் இல்லையாயினும் இலங்கையில் உள்ள அனைத்து சபைகளுக்கும் சமகாலத்தில் தேர்தல் நடைபெறுவதால் அரசியல் கட்சிகள் தேசிய மட்டத்தில் தமது பலத்தை நாடி பிடித்து பார்க்கும் தேர்தலாக இது அமைந்திருக்கிறது.

இலங்கையின் தென்பகுதியில் இப்போது பிரதான கட்சிகளாக விளங்கும் ஜனாதிபதி தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சி, பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி, முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் தமது எதிர்கால அரசியல் எவ்வாறு அமையும் என்பதை நாடி பிடித்து பார்க்கும் தேர்தலாக இதனை பார்க்கின்றனர்

அதேபோன்று வடக்கு கிழக்கில் கடந்த கால தேர்தல்களில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவு ஏற்பட்டு ஆனந்தசங்கரி சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இணைந்து உதயசூரியன் சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

தமிழ் மக்கள் பேரவையின் பிரதான கட்சியாக இருந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் சில பொது அமைப்புக்களையும் இணைத்துக்கொண்டு சைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் புதிய கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த மூன்று அணிகளும் இத்தேர்தலை ஒரு பரீட்சைக்களமாகவே பார்க்கின்றனர்.

வடக்கு கிழக்கில் முஸ்லீம் பிரதேசங்களிலும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் கிழக்கில் றிசாத் பதியுதீனின் சிறிலங்கா மக்கள் காங்கிரஷ் கட்சியின் பிரவேசம், சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்துள்ள ஹிஸ்புல்லா போன்றவர்கள் தமக்கான ஆதரவு தளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் கருத்து கணிப்பாகவும் இத்தேர்தல் அமைந்துள்ளது.

இதுவரை காலமும் உள்ளுராட்சி சபை தேர்தல் பிரசாரங்களில் ஜனாதிபதி பிரதமர் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டது கிடையாது. ஆனால் இம்முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஆகியோர் நேரடியாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மூன்று வருடங்களாக கூட்டாட்சி நடத்தி வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தன்னை ஜனாதிபதியாக்குவதற்கு காரணமாக இருந்த ஐக்கிய தேசியக்கட்சி மீது கடும் கண்டனங்களை தெரிவிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஐக்கிய தேசியக்கட்சியோ அல்லது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுனவோ வெற்றி பெற்றால் நாட்டின் நிலைமை மோசமடையும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா எச்சரித்திருக்கிறார். நாட்டில் உறுதியான ஆட்சியை நிலைநாட்டை தன்னை பலப்படுத்த வேண்டும் என்றும் அதற்காக தனது தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

ஐக்கிய தேசியக்கட்சியும், மைத்திரிபால சிறிசேனா தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் இணைந்து கூட்டாட்;சி நடத்தினாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கும் ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையே முறுகல் நிலை அண்மைக்காலத்தில் அதிகரித்து வந்திருக்கிறது. அண்மையில் மத்தியவங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் இந்த முறுகல் மேலும் அதிகரித்துள்ளது. மகிந்த ராசபக்ச அணியுடன் இருக்கும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவு வழங்கினால் ஐக்கிய தேசியக்கட்சியை வெளியேற்றி விட்டு தன்னால் தனித்து ஆட்சி அமைக்க முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதன் உச்சக்கட்டமாகத்தான் அண்மைய நாட்களில் நாடெங்கும் உள்ளுராட்சி சபை தேர்தல் பிரசாரங்களில் முழு மூச்சுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஈடுபட்டுவருகிறார். ஐக்கிய தேசியக்கட்சியையும் மகிந்த தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவையும் தோற்கடிக்க வேண்டும் என கோரி வருகிறார்.

தென்னிலங்கையில் தனக்கான ஆதரவு தளம் எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வதற்கு இத்தேர்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பயன்படுத்துவார் என்றே நம்பபடுகிறது. இதனால் தான் அவர் என்றுமில்லாத அளவிற்கு தேர்தல் பிரசாரங்களில் தென்னிலங்கையில் மட்டுமல்ல மட்டக்களப்பு யாழ்ப்பாணம் திருகோணமலை என பறந்து செல்கிறார். தனது கட்சிக்கான ஆதரவு தளம் அதிகரித்திருந்தால் பாராளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பையும் அவர் விடுக்கலாம் என்றே அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவு பட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தலைமையில் ஒரு அணியும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச தலைமையில் ஒரு அணியுமாக தேர்தல் களத்தில் நிற்பதால் ஐக்கிய தேசியக்கட்சிக்கான ஆதரவு தளம் எவ்வாறு இருக்கிறது என்பதை கணித்து கொள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி முற்பட்டிக்கிறது.

கடந்த பொதுத்தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் போட்டியிட்ட மகிந்த ராசபக்ச தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை ஆரம்பித்து தாமரை மொட்டில் நாடு தழுவிய ரீதியில் போட்டியிடுகிறார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தனக்கான ஆதரவு தளம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு எதிர்கால அரசியலை தொடர இத்தேர்தல் மகிந்தவுக்கு வழி சமைக்கலாம். சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி புதிய கட்சியில் மகிந்த ராசபக்ச சந்திக்கும் முதலாவது தேர்தல் இதுவாகும்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராசபக்ச தென்னிலங்கையில் கணிசமான ஆதரவை பெற்றிருந்தார். தமிழ் மற்றும் முஸ்லீம்களின் வாக்குகளாலேயே அவர் தோல்வியடைந்திருந்தார். தென்னிலங்கையில் இருந்த இந்த ஆதரவு தளத்திற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சி, மற்றும் பதவியில் இருந்த ஜனாதிபதி போன்றவையும் காரணங்களாக இருந்தன.

இப்போது அவர் சிறிலங்கா சுதந்திரக்கட்சியிலும் இல்லை, ஜனாதிபதி பதவியும் இல்லை, முன்னாள் ஜனாதிபதி என்ற ஆதரவு தளம் மட்டுமே உள்ளது. இந்நிலையில் தனது எதிர்கால அரசியல் நடவடிக்கைக்கு அத்திவாரமாகவும் ஆதரவு தளத்தை கணிப்பிடவும் அவருக்கு இத்தேர்தல் பயன்படலாம்.

தென்னிலங்கையில் எதிர்கால தேசிய அரசியலை நிர்ணயிக்க போகும் தேர்தலாக உள்ளுராட்சி தேர்தல் கணிக்கப்படும் சமகாலத்தில் வடக்கு கிழக்கிலும் பாரம்பரிய தமிழ் முஸ்லீம் கட்சிகளின் இருப்பு தக்க வைக்கப்படுமா என்ற கேள்விக்கும் இந்த உள்ளுராட்சி தேர்தல் விடைபகிரலாம்.

வடக்கு கிழக்கில் முஸ்லீம் மக்களிடம் பலமான கட்சியாக இருந்த சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியின் தலைமை மீது அவநம்பிக்கை கொண்ட நிலையில் அக்கட்சியின் தவிசாளராக இருந்த பசீர் சேகுதாவுத் தலைமையிலான ஒரு குழு வெளியேறி புதிய அணியை அமைத்திருக்கிறது. அதே நேரம் மன்னாரை சேர்ந்த றிசாத் பதியுதீன் தலைமையிலான சிறிலங்கா மக்கள் காங்கிரஷ் என்ற கட்சி கிழக்கிலும் கால் ஊன்றி வருகிறது. மட்டக்களப்பு காத்தான்குடியை பொறுத்தவரை ஹிஸ்புல்லாவுக்கான ஆதரவு தளமும் காணப்படுகிறது

இந்நிலையில் கிழக்கில் முஸ்லீம் பிரதேசங்களில் பல இடங்களில் மும்முனை போட்டி காணப்படுகிறது. எதிர்வரும் மாகாண மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் தமக்கான ஆதரவு தளம் எப்படி இருக்கிறது என்பதை கண்டறிய அவர்கள் இதை பயன்படுத்துகின்றனர்

வடக்கு கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் என்றும் இல்லாத அளவிற்கு கடும் போட்டி நிலவுகிறது. இதை ஒரு தேசிய மட்ட தேர்தல் அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்து தமிழ் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே பாராளுமன்ற மற்றும் மாகாணசபை தேர்தல்களில் வெற்றி பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பு இத்தேர்தலில் பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. என்றும் இல்லாத அளவிற்கு விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்கொண்டுள்ளது.

ஏற்கனவே நான்கு கட்சிகளாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி வெளியேறி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிடுகிறது. வவுனியா மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் சில பிரதேசசபைகளின் வட்டாரங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு சவாலாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னம் திகழ்கிறது.

கடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளில் ஒன்றான கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் சில பொது அமைப்புக்களையும் இணைத்துக் கொண்டு சைக்கிள் சின்னத்தில் தமிழ் தேசிய பேரவை என்ற பெயரில் போட்டியிடுகிறது.
பொதுவாகவே கிழக்கின் அரசியல் தளம் என்பது வேறு. வடக்கின் அரசியல் தளம் என்பது வேறு.

தமிழ் மக்கள் பிரிந்து நின்றால்; அது வேறு இனத்தவர்களுக்கும் பேரினவாத கட்சிகளான ஐக்கிய தேசியக்கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு வாய்ப்பாக அமைந்துவிடும் என்ற எண்ணம் கிழக்கு தமிழ் மக்களிடம் காணப்படுகிறது.

ஆனால் வடக்கில் நிலமை அவ்வாறு இல்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் போன்றவர்கள் மீதுள்ள அதிருப்தி இத்தேர்தலில் பிரதிபலிக்கலாம் என கருதப்படுகிறது.

பொதுத்தேர்தலை போல பிரசார கூட்டங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தி வருகிறது. இந்த கூட்டங்களில் சம்பந்தன் போன்றவர்கள் கலந்து கொள்வதும் அதனை ஒட்டி பிரசார கூட்டங்களுக்கு வரும் மக்களிடம் நடத்தப்படும் சோதனைகளும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த பொதுத்தேர்தலுக்கு பின்னர் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற்று ஆளும் கட்சிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கி வருவதை தமிழ் மக்கள் ஏற்றுக்கிறார்களா என கணிப்பிடுவதற்கும் இத்தேர்தல் வாய்ப்பாக அமையும்

தென்னிலங்கையிலும் சரி வடக்கு கிழக்கிலும் சரி பிரதான கட்சிகள் தமது எதிர்கால தேசிய அரசியக்கான ஆதரவு தளம் எப்படி இருக்கிறது என நாடி பிடித்துப்பார்க்கும் தேர்தலாக உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் அமைந்துள்ளது.

(இரா.துரைரத்தினம் )TNA

Readers Comments (0)

Comments are closed.

செய்திகள்

sumanthiran

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக பிரித்தானியாவின் ஏற்பாட்டில் ஜெனிவாவில் கூட்டம். [February 18, 2018]

சிறிலங்கா விவகாரம் தொடர்பாக 26 நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட ...
saravanapavan

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வராக தியாகராசா சரவணபவன் தெரிவு [February 17, 2018]

மட்டக்களப்பு மாநகர முதல்வராக தியாகராசா சரவணபவன் நியமிப்பதென தமிழ் தேசியக் ...
20180212_091158

ல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிராந்திய அலுவலகத்தின் மீது குண்டுத் தாக்குதல். [February 12, 2018]

காத்தான்குடி கடற்கரை வீதி (CM காசிம் லேன்)  அமைந்துள்ள நல்லாட்சிக்கான ...
mahinda

தென்னிலங்கையில் மகிந்த ராசபக்சவின் கட்சி அமோக வெற்றி [February 10, 2018]

நடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின், சிறிலங்கா பொதுஜன முன்னணி ...
election

சாவகச்சேரி பருத்தித்துறை நகரசபைகளை தமிழ் காங்கிரஷ் கைப்பற்றி உள்ளது. [February 10, 2018]

சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதிக ...
jaffna mc

யாழ். மாநகரசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

யாழ். மாநகர சபையின் மொத்தமுள்ள 27 வட்டாரங்களில், 14 வட்டாரங்களை ...
valvetti

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி [February 10, 2018]

வல்வெட்டித்துறை நகரசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது. வல்வெட்டித்துறை ...
TNA

வவுனியா மாவட்டத்தில் அனைத்து சபைகளையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி; உள்ளது. [February 10, 2018]

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளுராட்சி சபைகளையும் தமிழ் தேசியக் ...
Batticaloa MC

மட்டக்களப்பு மாநகரசபை தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி [February 10, 2018]

20 வட்டாரங்களைக்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் - 17 வட்டாரங்களில் தமிழ் ...
manthai

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை பிரதேசபையின் உத்தியோகபூர்வ முடிவு [February 10, 2018]

முல்லைத்தீவு மாந்தை பிரதேசசபையில் தமிழரசுக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் உத்தியோகபூர்வ ...